திரைவிமர்சனம்

தமிழில் வெளியாகி வெற்றிபெறாத படங்களில் ஒன்று ‘சிலந்தி. ஆதிராஜன் என்பவர் இயக்கிய அந்தப் படத்தில் 20 வயது இளைஞனை ‘ஒய்ட் காலர் ஜாப்’ என்று சொல்லக்கூடிய உயர் தட்டு வேலையில் இருக்கும் ஐந்து பெண்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துவிடுவார்கள். இந்தச் சம்பவம்தான் அந்தக் கதையின் மையம்.

அதேபோல இயக்குநர் சாமி, எல்லை மீறிய முறைகேடான உறவுகளை தனது சர்ச்சைக்குரிய படங்களின் மூலம் காட்சிப்படுத்தியவர். இவர்களுக்கும் முன்பு தமிழில் சர்ச்சைக்குரிய பாலியல் கதைகளை சமூகக் கண்ணோட்டத்துடன் தந்தவர் கே. பாலசந்தர். கணவன் வெளியே சென்றிருக்கும் தருணத்தில், வீட்டுக்கு வரும் முன்னாள் காதலனின் மன அழுத்தத்தைப் போக்கிட அவனுடன் உறவுகொள்ளும் கதாநாயகியை மீக சமீபத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் பார்த்தோம்.

இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ‘தாராள பிரபு’ படத்தில் பாலியல் உலகின் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கக் கூடிய ஆண்மைக்குறைவையும் அதனால் பிள்ளைப்பேறு பெறமுடியாத பெற்றோர்களுக்கு வரமாக அமைந்திருக்கும் ‘விந்து தானம்’ என்ற அறிவியல் அதிசயத்தையும் கதைக் களம் ஆக்கியிருக்கிறார்கள்.

சைவ உணவு மட்டுமே சாப்பிடும் ஆச்சாரமான குடும்பம் நாயகன் ஹரீஷ் கல்யாணுடையது. பாசமான அம்மா, நவீனமாக சிந்திக்கும் பாட்டியும் இவரது உலகம். இயற்கை அங்காடியும் அழகு நிலையமும் நடத்துகிறார்கள். ஹரீஷ் கால்பாந்து விளையாட்டு வீரராக இருக்கிறார். ‘ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்’ வேலைக்குச் சென்றுவிடலாம் என்ற கனவில் இருக்கும் இவரைத் துரத்துகிறார் கருத்தரிப்பு மையம் நடத்தும் டாக்டர் விவேக். அழகும் ஆரோக்கியமும் ஒருசேரக் கலந்த ஹரீஷை விந்து தானம் செய்யுபடி சந்துபொந்தெல்லாம் அவரைத் துரத்துகிறார். முதலில் மறுக்கும் ஹரீஷ் புரிந்துகொண்டபின் விந்துதானம் செய்யத் தொடங்குகிறார்.

இதற்கிடையில் தான்யாவைக் கண்டவுடன் அவர் மீது காதல் கொள்ளும் ஹரீஷ், விவாகரத்தான அந்தப் பெண்ணின் மனதை வெல்கிறார். திருமணத்துக்கு முன் தான் ஒரு விந்துக் கொடையாளர் என்பதைச் சொல்லிவிடலாம் என்றால் அதற்கான சூழ்நிலை அமையவில்லை. அது  மனைவிக்குத் தெரிய வரும்போது, அவரது வாழ்க்கையே அந்தரத்தில் தொங்குகிறது. ஹாரீஷ் பிரச்சனையிலிருந்து எப்படி விடுபட்டார் என்பதே மிச்சக் கதை.

அறிவியல் வளர்ச்சியை ஆமோதிக்கும் சமூகம், மனதளவில் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் விந்துதானம் என்ற கத்திமேல் நடக்கும் விஷயத்தை, மறுமணம், கருமுட்டை உற்பத்தி இல்லாத பெண்மை, குழந்தை தத்தெடுப்பு ஆகிய ஒன்றுக்கொன்று தொடர்புடைய அம்சங்களையும் மிக அழகாக இணைத்துக்கொண்ட திரைக்கதை நாம் எதிர்பார்த்த பாதையில் பயணித்தாலும் மனதை மொத்தமாக அள்ளிக்கொள்கிறது. அதற்கு முக்கியமான காரணம், நாயகன் - நாயகி ஆகிய இரு குடும்பத்தார் பற்றிய அசலான சித்தரிப்பு. உறவுகளுக்குத் தரும் முக்கியத்துவம், வழிகாட்டல், அவர்கள் மீதான அக்கறை என நமது குடும்பங்களை நினைவூட்டும் விதமாகச் சித்தரித்துள்ள இயக்குநரின் திறமையால் இது சாத்தியமாகி இருக்கிறது.

நடிகர் ஹரீஷ் கல்யாண் திறமையான கால்பந்து விளையாட்டு வீரராக, தன்னை விடாமல் தேடி வரும் டாக்டர் விவேக்கைக் கண்டு விலகி ஓடுவது, பின்னர் தனது பயிற்சியாளருக்குக் குழந்தை இல்லாததால் அவர் சந்தித்த துயரங்களை எண்ணிப்பார்த்து விந்து தானம் செய்ய சம்மதிப்பது, காதலியிடம் தனது தான விவகாரத்தை சொல்வதா வேண்டாமா எனத் தவித்து மறுகுவது என இயல்பான நடிப்பில் ஸ்கோர் செய்துவிடுகிறார்.

’வெள்ளைப் பூக்கள்’ படத்துக்குப்பின் விவேக்குக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்ட படம். டைமிங் நகைச்சுவை, வில்லத்தனம் இரண்டும் சரியான கலவையில் அமைந்த குணச்சித்திரக் கதாபாத்திரம். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் விவேக்.

நாயகி தான்யா ஹோப் அழகும் நளினமும் மிக்கவராக இருக்கிறார். குறைவாகப்பேசி நிறைவாக நடித்திருக்கிறார். தனக்கு குழந்தை பெறும் தகுதியை உடல் கொண்டிருக்கிறது என்பதை உணரும் கட்டத்தில் அவர் காட்டும் அசுர நடிப்பு அபாரம்.

விந்துதானம் பற்றிய விழிப்புணர்வைப் பிரச்சாரம் ஏதுவுமின்றி அழுத்தமான குடும்பப் பிண்ணியில் சுவாரசியம் குன்றாமல் சித்தரிக்கப்படும் இப்படம் 18 வயதைக் கடந்த பார்வையாளர்களுக்கு மட்டுமே ஏற்றது.

அந்தரத்தில் தொங்குது விந்து தந்தவனின் காதல் !

-4தமிழ் மீடியா விமர்சனக் குழு

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.