திரைவிமர்சனம்

ஐம்பதுகள் தொடங்கி 75 வரை தமிழில் இரண்டு சினிமாக்களே இருந்தன. ஒன்று எம்.ஜி.ஆர் படம். இன்னொன்று சிவாஜி படம். இவர்களன்றி ஜெமினிகணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், சிவக்குமார் போன்றோரும் சூரியன், நிலா இருக்கும் வானத்தில் நட்சத்திரங்கள்போல் மின்னினார்கள்.

இவர்களை சினிமாவில் காதலிக்க, கல்யாணம் செய்துகொள்ள, இவர்களுக்கு பிள்ளை பெற்றுக்கொடுக்க, இவர்களுக்காக உயிர்விட சில கதாநாயகிகளும் இருந்தார்கள். இந்நிலையில்தான், ஆந்திராவிலிருந்து வந்த சரசவாணிதேவி ரெட்டி என்கிற அப்பாவிப்பெண், மெல்ல மெல்ல வளர்ந்து, சாவித்திரியாகி சரித்திரம் படைத்தார்.

ஆண்களே ஆண்ட சினிமாவில் தன் அபார நடிப்பால், வெகுளித்தனமான முகபாவத்தால், வெள்ளை உள்ளத்தால் நடிகையர் திலகமாக உயர்ந்தார். இவரது biofiction ஆன ‘நடிகையர் திலகம்’ ரிலீசானபோது பார்க்க வாய்ப்பில்லை.

க்வாரண்டைன் காலத்தில் என்ன செய்வது? என்று, வெறும் நியூஸ் சேனல்களே இருந்த டிவியில், ஸீ திரை சப்ஸ்க்ரைப் செய்தேன். இன்று நடிகையர் திலகம். சின்னப் பெண் கீர்த்தி சுரேஷ். தன் சிறிய தோளில் அளவற்ற திறமையைச் சுமந்திருக்கும் படம். வானில் தோன்றி நட்சத்திரமாக மிளிர்ந்து, பின் ஏரிநட்சத்திரமாக மண்ணில் விழுந்த சாவித்திரியை கண் முன் கொண்டுவந்திருந்தார் கீர்த்தி!

இது சாவித்திரியைப் பற்றிய கதைதான். அதே வேளை சினிமா எனும் மாய உலகில், விட்டில்களாக சில காலம் ஒளிர்ந்து, பின் மறையும் எல்லா நடிகையரின் கதைகளையும் ஞாபகம் கூறும் படம்!

திடீரென்று வரும் அபரிமிதமான புகழ், செல்வம், இதன் பொருட்டு மொய்க்கும் சொந்தங்கள். உண்மையான அன்பைத்தேடி ஒதுங்கிய நிழலும், வேறுயாருடைய மரத்திலிருந்தோ, மதிற்சுவர் தாண்டி வெளியே வந்த
ஒரு கிளை! என்பதை அறியும்போது வாழ்க்கை புரியத் தொடங்குகிறது. புரியும்போது அவர்கள் வானம் அந்திமப் பருவத்துக்கு வந்துவிடுகிறது. உலகத்தை தன் அளப்பறிய நடிப்பாற்றலால் கொள்ளை
கொண்ட சாவித்திரியின் இறுதி நாட்கள் அவலச்சுவை கூடியவை.மிக நீண்ட அந்தப் பொழுதுகளில், இரவோ பகலோ எதுவுமே இல்லை. ஞாபகமே இல்லாத பறக்க முடியாத ஒரு பறவைக்குள் பாரமாக கனத்தது உயிர். அதன் வலியை உணரவும் முடியவில்லை அவரால்!

சாவித்ரிக்கும் ஜெமினிக்கும் இடையேயான காதல் தொடக்கத்தில் தேனைப் போல இனிக்கிறது. பிறகு மதுவைப்போல கசக்கிறது. அன்பு இருந்த ஆண் மனதுக்குள் ஈகோ. இந்திய சமூகத்தில் மனைவியாகவும் நடிகையாகவும் வெற்றியடைவது கடினம். சாவித்திரியின் வாழ்வு இன்னும் பல முகங்கள் கொண்டது. Biofiction என்பதால் அவரது இமேஜை பாதுகாக்கும் புனைவு படத்தில் அதிகமாக இருக்கிறது. அவர் குடிக்கத் தொடங்குவதற்குக் கூட ஜெமினிதான் காரணம் என்பதுபோல் காட்டியிருக்கிறார்கள். சாவித்திரிக்கு இன்னும் நிறைய கலைத்துறை நட்புகள் இருந்தன. அவை மௌனப்படுத்தப் பட்டிருக்கின்றன. யதார்த்தமாக தொடங்கிய படம் சிறிது சிறிதாக சாவித்திரியைப் புனிதப்படுத்தத் தொடங்கவிடுகிறது.

இருப்பினும் இப்படத்தில் காலம் ஒரு எழிலுறு ஓவியமாக நம்முன் காட்சி தருகிறது. ரங்காராவ் சம்மந்தப்பட்ட காட்சிகள் கிளாசிக்! அதுவும் சாவித்திரி அறிமுகமாகும் காட்சி காவியம். கிளிசரின் இல்லாமல் இடது கண்ணில் இரண்டே இரண்டு சொட்டு கண்ணீர்! என்பது அவரது ஒட்டுமொத்த ஆளுமையைக் காட்டிவிடுகிறது. சாவித்திரியின் முழுமையான பயோபிக்ஷன் என்று இதை சொல்ல முடியாது. ஜெமினியுடன் அவர் காதல், அது தரும் காயம், என காதலின் உன்னதத்தை, அவலத்தை பேசுகிற படமாக இது மாறிவிடுகிறது. 'நடிகையர் திலகம்' சாவிதித்ரியின் வாழ்வை அவரது மகள் விஜய சாமுண்டீஸ்வரியின் நோக்கில் எடுக்கப்பட்ட படம் எனும் மனக்குறை ஜெமினியின் இன்னொரு மனைவியான பாப்ஜியின் மகள்களுக்கிருக்கிறது.

அதில் தங்களது தந்தையின் சித்திரம் மங்கிய வண்ணங்களால் வரையப்பட்டதாகக் கருதுகிறார்கள். உலகத்தில் யாரெல்லாம் காதலுக்காக நினைவு கூறப்படுகிறார்களோ அவர்கள் அனைவரிடமும் காதலின் வடுக்களே எஞ்சி நிற்கின்றன. காதல் என்பது பனியின் துளிகளை மகுடமாய்ச் சுமக்கும் ரோஜா இல்லை. அது சூரியனின் தணலில் எரியும் மலர். சூறைக் காற்றில் முறிந்து விழாத ஆலவிருட்சம். பெருமழையில் கறைந்துவிடாத கற்பாறை.

அது முத்தங்களை மட்டும் தருவதில்லை. காயங்களையும் தருகிறது. அது நதியைப்போல் அழைக்கிறது. இறங்கிய பிறகு தெரிகிறது. மறுகரையில்லாத சமுத்திரமது. நிம்மதியை அமைதியை இழப்போம் எனத் தெரிந்து ஏன் மனிதர்கள் காதலிக்கிறார்கள்? வலியில்லாத இதயம், துயரில்லாத மனம் பிணங்களுக்கே சொந்தமானவை!

காதலே மனித குலத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. போர்கள் மூள்வதற்கு காரணமான காதலே, காவியங்களும் இதிகாசங்களும் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. பாலின சமத்துவமில்லாத திரைத்துறையில், காதல் காரணமாக அழிவது பெரும்பாலும் பெண்களாகவே இருந்திருக்கிறார்கள். சாவித்திரி, ஷோபா, சில்க் ஸ்மிதா என இந்தத் துயரம் தொடர்கிறது!

கட்டுரையாளர், கவிஞர் ஆர்.கரிகாலன்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது