திரைவிமர்சனம்

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இவர் முதுபெரும் நடிகர், (கமலின் விருமாண்டியில் பெரிய கருப்புக் கோவிலில் பூசாரியாக நடித்திருந்தவர்) கடந்த சில ஆண்டுகளுக்கும் முன் மறைந்த பெரிய கருப்புத் தேவரின் மகன். ‘அறம்’ படத்தின் இணை இயக்குநர். அந்தப் பெருமையையும் இந்தப் படத்தில் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

வானம் பார்த்த பூமியான ராமநாதபுரத்தின் கருவேலங்காட்டு கிராமம் ஒன்றில் நாயகன் ரணசிங்கமும், நாயகி அரியநாச்சியும் வசிக்கிறார்கள். அரியநாச்சியின் காதலை ஏற்று ரணசிங்கத்துக்கு வாக்கப்பட்டு வரும்போதே ஒரு தள்ளு வண்டியையும் சீதனமாக எடுத்துக் கொண்டு வருகிறாள். அந்த வண்டி வேறு எதற்கும் அல்ல; 5 மையில்களுக்கு அப்பால் இருக்கும் ஆழ்குழாய் கிணற்றில் தனது வண்டியை வரிசையில் போட்டு வைத்து, தன்முறை வந்ததும் ஐந்து குடங்களில் குடிநீரைப் பிடித்து அந்த வண்டியில் வரிசையாக அடுக்கி வைத்து கொதிக்கும் வெயிலில் இழுத்துக்கொண்டு வருவதற்குத்தான். தண்ணீர் பிரச்சினை அந்த கிராமத்துக்கு மட்டுமே உரியதல்ல; கிட்டத்தட்ட அந்த மாவட்டத்துக்கே உரியது. வெயில் தான் அந்த மாவட்டத்தின் கச்சாப்பொருள். அதை சோலார் மின்சாரமாக கார்ப்பரேட்டுகள் அறுவடை செய்ய, சோலார் தகடுகளை அன்றாடம் கழுவுவதற்காக இருக்கும் கொஞ்சத் தண்ணீரையும் உரிந்து எடுக்கிறார்கள். உள்ளூர் அரசியல்வாதிகள் விலைபோய்விடுகிறார்கள்.

அரசியல்வாதிகளோடும் ஊழல் அதிகாரிகளோடும் மல்லுக்கட்ட முடியாமல் கிராம மக்களையும் நண்பர்களையும் திரட்டிப் போராடுகிறார் விவரம் தெரிந்த இளைஞரான ரணசிங்கம். ஒரு கட்டத்தில் போராட்டத்துக்கு தோள்கொடுத்த நண்பர்கள் சுயநலம் காரணமாக விலகிச் சென்றுவிட, அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பகையைச் சம்பாதித்துக் கொள்ளும் ரணசிங்கம் மனம் நொந்துபோகிறார். மனைவியின் அறிவுரையை ஏற்று அரபு தேசத்துக்கு வேலைக்குச் செல்கிறார். கணவன் மனம் நிறைய அன்புடனும் பை நிறைய உழைத்துச் சேர்த்த பணத்துடனும் வருவான் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேலையில், அவன் விபத்தொன்றில் எதிர்பாராமல் இறந்த செய்தி வந்துசேர துடித்துப்போகிறாள் அரியநாச்சி. அதன்பிறகு கணவன் உடலை தன் சொந்த ஊருக்கு கொண்டுவர, தேசத்தின் தலைநகர் டெல்லிவரை செல்லும் அவள், தன போராட்டத்தில் வெற்றிபெற்றாளா இல்லையா என்பது கதை.

முதல் பிரச்சினை குடிநீர் பஞ்சம், இரண்டாவது பிரச்சினை, வெளிநாடுகளுக்குச் சென்று வேலைசெய்யும் தமிழகத் தொழிலாளர்கள், அங்கே இறந்துவிட்டால் அவர்களது உடலை எடுத்துவருவதில் மண்டிக்கிடக்கும் தடைகள். இந்த இரண்டையும் இணைத்த விதமும் ‘சிஸ்டம் சரியில்லாததால்’ ஒரு பிரச்சினையின் தாக்கம் மற்றொரு பிரச்சினையின் மீது எப்படி கருப்பு நிழலாக படர்ந்துவிடுகிறது என்பதையும் தொய்வில்லாத திரைக்கதை மூலம் தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் 3 மணிநேரம் என்ற நீளம் 2 மணிநேரப் படம் கடந்துமே அயர்ச்சியை உருவாக்கிவிடுகிறது. என்றாலும் போகிற போக்கில் ஆதார் அட்டையை அரசியல் நையாண்டி செய்து, தமிழகத்துக்குள் குவிந்துவரும் வட இந்தியத் தொழிலாளர்கள் பிரச்சினை என கோடிகாட்டிச் செல்வதையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இயக்குநர் கைகொண்ட இரண்டு பிரச்சினைகளின் தீவிரத்தையும் தனது அழுத்தமான ‘குண்டூசி’ வசனங்கள் மூலம் நறுக் நறுக்கென்று எடுத்துக் காட்டியிருக்கிறார் சண்முகம் முத்துசாமி. உதாரணத்துக்கு ஒரு வசனம், ‘சாதி மத அரசியலைத் தாண்டி, இனிமே தண்ணியையும் காத்தையும் வைச்சுத்தான் இங்க அரசியலே நடக்கப்போகுது’.

கணவன் இனி இல்லை என்று தெரிந்தபிறகு தனக்குப் போராடக் கற்றுக்கொடுத்த கணவனின் சட்டையை அணிந்துகொண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் கணவனின் உடலுக்காகப் போராடுவது மிரட்டல். ஒரு விளிம்புநிலை குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், அவள் தன் உரிமைக்காக ஒரு போராளியாக முகிழ்க்கும் தருணம், மின்னலாகவும் இடியாகவும் அவள் வெடிக்கும் தருணம் என ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புத்திறனை முழுக்க முழுக்கப் பயன்படுத்திக்கொள்ளும் எண்ணத்துடன் அவர் ஏற்றிருக்கும் அரியநாச்சி கதாபாத்திரத்தை படைத்திருக்கிறார் இயக்குநர் விருமாணடி. ‘கனா’ படத்தில் கிடைகாமல்போன தேசியவிருது இந்தப் படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைக்கலாம். ஏனென்றால், படத்தைத் தூணாகக் தாங்கி நிறுத்திவிடுகிறார்.

சற்றே நீண்ட கௌரவக் கதாபாத்திரத்தில் ரணசிங்கமாக விஜய்சேதுபதியின் நடிப்பு ரணகளம். தனக்கே உரிய பாணியில் காதல், நகைச்சுவை, கருத்துச் சொல்லல் என வழக்கமான முத்திரையைப் பதித்துவிடுகிறார். ஒரேமாதிரியான தோற்றத்தில் வந்தாலும் இது தன்னை ரணசிங்கமாக அவர் தெரிய வைத்துவிடுவதில்தான் அவரது நடிப்புத்திறமை பளிச்சிடுகிறது. ஆனால் கௌரவக் கதாபாத்திரத்துக்கான காட்சிகளை அதிகரித்திருப்பது செயற்கையாகவும் திணிப்பாகவும் துருத்தித் தெரிகிறது. 3 மணி நேரம் என்பதில், இதுபோன்ற நீட்டிக்கப்பட்ட காட்சிகளை நீக்கி 2.30 மணிநேரம் ஆக்கினால் படம் இன்னும் விறுவிறுப்பாகவும் அயர்ச்சியை தவிர்க்கும் விதமாகவும் அமைந்திருக்கும்.

ஐஸ்வர்யா ராஜேஷ் - விஜய்சேதுபதி எனும் இரண்டு நட்சத்திரங்களுக்கு அப்பால் திறமையான நடிகர்களின் பட்டியலில் வேல.ராமமூர்த்தி, ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து பூ ராமு, முனிஸ்காந்த், அருண்ராஜா காமராஜ் அகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். ஆனால், ரங்காராஜ் பாண்டே, நமோ நாராயணா இருவரும் தங்களது போன படங்களில் செய்த அதே வேலையை இதிலும் செய்வது எரிச்சலூட்டுகிறது. இவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் மசாலா சினிமா பார்க்கும் உணர்வு வந்துவிடுகிறது.

ஜிப்ரானின் இசை படத்துக்கு பெரிதாக வலுசேர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை உறுத்தவில்லை. ஆனால் ராமநாதபுரம் எனும் பொட்டல் காட்டினை கண் முன் கொண்டுவந்து காட்டிய ஏகாமபரத்தின் ஒளிப்பதிவுக்கு ஒரு ‘ஓ...’ மற்றும் ‘ஓஹோ..’ போடலாம்.

இரண்டு பிரச்சினைகளை திறமையாக இணைக்கும் திரைக்கதையில் ஊடகங்கள் மீதான மலிவான பார்வை, தன்னார்வ அமைப்புகள் மற்றும் மனித உரிமை தொடர்பான அமைப்புகள் பற்றிய விடுபடல்கள் என குறைகள் இருந்தாலும் இன்றைக்கு பேச வேண்டியப் பிரச்சினையை துடிப்பான இரண்டு கதாபாத்திரங்கள் வழியாக உருப்படியாகப் பேசியிருப்பதால் க/பெ.ரணசிங்கத்தை ஒரு முறைக் கண்டு கொதிக்கலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

- 4தமிழ்மீடியா விமர்சனக் குழு

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.