திரைவிமர்சனம்

முன்குறிப்பு: ஒரு சிறு ‘ஸ்பாய்லர்’ கூட இல்லாத விமர்சனம் இது.

தமிழ் சினிமா எத்தனையோ வெற்றிபெற்ற மனிதர்களின் கதைகளை ‘பயோபிக்’ ஆகக் கொடுத்திருக்கிறது. பயோபிக் படங்களுக்கு எழுதப்படும் திரைக்கதையைப் பொறுத்து அவை சுவராசிய சினிமாவாகவோ அல்லது வெறும் ஆவணப்படத் தன்மையுடன் சுருங்கியோ போய்விடுவதுண்டு.

மாறாக பயோபிக்கின் மையக் கதாபாத்திரமான வாழும் அல்லது வாழ்ந்து மறைந்த நாயகன்/ நாயகியின் நிஜ வாழ்க்கையே அதிக திருப்பங்கள் கொண்டதாக இருந்தால் மட்டுமே திரைக்கதையும் சுவாரசியமானதாக அமைக்க முடியும்.

அந்த வகையில் கடந்தசில ஆண்டுகளில் வெளியான பயோபிக் திரைப்படங்களில் கிரிக்கெட் ஆட்டக்காரர் தோணியின் சினிமாவும் நடிகையர் திலகம் சாவித்திரி கணேசனின் சினிமாவும் சுவாரஸ்யம் குறையாத பயோபிக் திரைப்படங்கள் என உறுதியாகக் கூறமுடியும். அந்த வரிசையில் தற்போது ‘சூரரைப் போற்று’ படத்தையும் தயக்கமின்றிச் சேர்த்துக் கொள்ளலாம்.

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மேல்கோட் என்ற சிற்றூரில் பிறந்து வளர்ந்த தமிழர், கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத் என்கிற ஜி.ஆர்.கோபிநாத். இந்திய ராணுவத்தின் விமானப் படையில் 20 வயதில் சேர்ந்த இவர், இந்தியா - பங்களா தேஷ் போரிலும் பங்குபெற்று, தனது 28-வது வயதில் ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அதன்பின்னர், பட்டுப்பூச்சி வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத் துணைத்தொழில்களில் ஈடுபட்டு சிறந்த முதல் தலைமுறைத் தொழில்முனைவருக்கான மத்திய அரசின் விருதுபெற்றவர்.

ஒருகட்டத்தில் விமான சேவை என்பது ஏழைகளுக்கு எட்டாக் கனியாக இருப்பதைக் கண்டு, ‘டெக்கான் ஏர்ஸ்’ என்ற தனியார் உள்நாட்டு விமான சேவையைத் தொடங்கினார். மிக மலிவானக் கட்டணத்தில் பல லட்சம் சாமானிய மக்களை பறக்க வைத்து, உலக விமான சேவை வரலாற்றில் தனிப்பெரும் சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். கார்ப்பரேட் முதலைகளின் கடும்போட்டிக்கு நடுவே, பெரும் சதிகளுக்கு நடுவே, 20 பேர் பயணிக்கும் சிறு விமானங்களை உள்நாட்டு விமான சேவைக்குப் பயன்படுத்தி, டெக்கான் விமான சேவையின் பெயரை ஏழைகள் உலகின் எந்த நாடுகளிலெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் எதிரொலிக்க வைத்தவர். அவரது வாழ்க்கையின் சில முக்கியமான பகுதிகளை தாக்கமாகக் கொண்டு, சுவாரசியமான கற்பனைச் சம்பவங்களையும் இணைத்து உருவாகியிருக்கிறது ‘சூரரைப் போற்று’.

மதுரை, சோழவந்தான் அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில் மக்களின் பிரச்சினைகளுக்காக அரசுக்கு மனு எழுதிப்போட்டே தன் வாழ்க்கையைக் கரைத்த பள்ளியாசிரியரின் மகன்தான் கதையின் நாயகன் மாறன். சோழவந்தான் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிற்க வைப்பதற்காக மக்களுடன் ரயில் மறியல் போராட்டம் செய்யும் துடிப்பான இளைஞனான மாறன், இந்திய விமானப் படையில் சேர்ந்து பணியாற்றி வெளியே வந்ததும், சாமானியர்களுக்கான விமான சேவை நிறுவனத்தை ‘வென்சர் கேபிடல்’ முதலீட்டுடன் தொடங்குவதற்காகப் போராடுகிறார்.

அவரது கனவுக்குக் கைகொடுக்க அவருடம் ராணுவத்தில் சேவையாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ‘பேச் மேட்’ நண்பர்களும் பெற்ற தாயும் கட்டிய மனைவியும் ஊர்க்காரர்களும் முன்வருகிறார்கள். இப்படியொரு மலிவுவிலை விமான சேவை வந்தால், பணக்காரர்களிடம் விமானக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிக்க முடியாது என்பதை அறிந்திருக்கும் விமான சேவை நிறுவனம் ஒன்றில் முதலாளி, மாறனின் கனவைச் சிதைக்க தனது அத்தனை அதிகாரங்களையும் பயன்படுத்துகிறார். அந்தச் சதிகளிலிருந்து மாறனால் மீண்டெழுந்து வானில் பறக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை.

தனக்குப் பார்த்திருக்கும் பெண்ணை, மாப்பிள்ளை பையனும் அவனது வீட்டாரும் போய் பார்ப்பதுதான் வழக்கம். அந்த வழக்கத்தை உடைத்து நொறுக்கிவிட்டு, தனக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையைக் காண பெற்றொருடனும் உடன்பிறந்தானுடனும் கிளம்பிச் செல்கிறாள் நாயகி பொம்மி (அபர்னா முரளி). மாப்பிள்ளையின் ஊரில் போய் இறங்கினால் எதிரே ஒரு சவ ஊர்வலம். தன்னைப் பெண் பார்க்க வராத மாறன், அந்த சவ ஊர்வலத்தில் ‘மரணக் குத்து’ ஆடிக்கொண்டு வருவதைப் பார்த்து ரசிக்கிறாள் பொம்மி. இப்படி ரகளையாகத் தொடங்கும் படம், கச்சிமான இடைவெட்டுகள் வழியாக விரியும் பிளாஷ் - பேக் காட்சிகளில் மாறனின் ராணுவ சேவை, கிராமத்து வாழ்க்கை ஆகியவை நம்மை கூர்ந்து கவனிக்க வைக்கின்றன.

முன்பின்னாக பின்னப்பட்ட திரைக்கதையின் திருப்பக் கண்ணிகள், இருக்கையிலிருந்து நாம் எழுந்து செல்ல கடைசிவரை வாய்ப்பு வழங்கவில்லை. குறிப்பாக, நாயகன் - நாயகி இடையிலான பற்றுக்கோட்டுக்கான காரணம் இன்றைய இளைஞர்கள் கைகொள்ள வேண்டிய லட்சியவாதமாக இருக்கிறது. மனங்களைப் பறிமாறிக்கொண்ட இரண்டுபேருக்குமே உயர்ந்த லட்சியங்கள் இருக்கமுடியும் என்று சித்தரித்தமைக்காகவே இயக்குநர் சுதா கொங்கராவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

புரட்டகானிஸ்ட் மாறனின் கனவு, ஒரு எப்படிப்பட்டப் புள்ளியிலிருந்து உருத்திரள்கிறது என்பதையும், அதை சித்தரித்து காட்டிய விதத்திலும் இந்தப் படம் மிக உயர்வான ஒரு இடத்தை ரசிகர்களின் மனதில் பெற்றுக்கொள்ளும். கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் விமான சேவை நிறுவனங்களின் ஏகபோகம் மீது பெரும் விவாதங்களை முன்வைத்திருக்கிறது இந்தப் படம்.

விமான சேவையைக் கதைக் களமாக் கொள்ளும் ஒரு திரைக்கதையில் கிராமம், மாநகரம் ஆகியவற்றின் வாழ்க்கையைப் பொருத்தி, விமானங்களையும் விமான ஓடு பாதைகளையும், விமானம் இயங்கு முறைகளையும் விமானத் தொழில் சார்ந்த விவரங்களையும் கதையில் வெகு இலகுவாகப் பார்வையாளன் புரிந்து மகிழும் வண்ணம் காட்சிகளாகக் கையாண்டிருப்பது இயக்குநர் சுதா கொங்கராவின் ஆளுமையைக் காட்டுகிறது.

மாறனாக நடித்திருக்கும் சூர்யா, எந்தவொரு இடத்திலும் சூர்யா என்ற எண்ணமே நமக்கு ஏற்படுத்தாமல் கதாபாத்திரமாக நம்ப வைத்துவிடும் நடிப்பை வழங்கியிருக்கிறார். கையறு நிலையில் தாயின் காலைப் பிடித்து கதறும்போதும், விமான நிலைய காத்திருப்பாளர் பகுதியில் தனது முகவரியை ஒரு துண்டுக் காகித்தில் பதறிக்கொண்டே எழுதியபடி பிச்சையெடுக்காத குறையாக கெஞ்சும்போதும் நமது கண்களை குழமாக்கி விடுகிறார். நந்தா கிளைமாக்ஸ் காட்சியில் பார்த்த சூர்யாவை ஒரு காட்சியில் இயக்குநர் நினைவூட்டும்போது அவரது நடிப்பு தனித்துவம் மிக்கது என்பதை உணர வாய்ப்பாக அமைகிறது.

மிக முக்கியமாக மாபெரும் ஆக்‌ஷன் கதையமைப்பைக் கொண்ட இந்த படத்தில் கதாநாயகன் மாறனுக்கு ஒரு சண்டைக் காட்சி கூட கிடையாது. அதுதான் இந்தப் படத்தின் தரத்தை இன்னும் உயர்த்திவிடுகிறது.

சற்றுப் பூசினாற்போன்ற கதாநாயகிகளை தமிழ் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். அபர்னா முரளியும் அப்படியொரு தோற்றத்தில் ஆனால், தமிழ் மண்ணுக்கே உரிய அழகுடன் அள்ளுகிறார். சூர்யாவின் கதாபாத்திரத்துக்கு சற்றும் குறைவில்லாத முழுமையும் அவரது கதாபாத்திரத்தை எழுதியிருப்பதில் நாம் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் சுதா கொங்கரா ஒரு பெண் இயக்குநர்.

பொம்மி என்கிற கதாபாத்திரப் பெயர் அவ்வளவு பொருத்தம். கார்ப்பரேட் உலகால் மாறுகால் மாறு கை வாங்கப்படும் ஒரு மதுரை வீரனைக் காதலித்தவள் என்பதைச் சொல்வதற்கான பெயராக அது இருக்கிறது. இப்படியொரு கதாபாத்திரப் பெயரைச் சூட்டியதற்காக மட்டுமல்ல, பொம்மிக்கு தேவையான இடங்களில் மதுரைப் பேச்சு வழக்கின் சாயலைப் பயன்படுத்தியிருப்பதும் பொம்மியின் அழகுக்கு அழகு சேர்த்திருக்கிறது.

மாறனின் தந்தையாக வரும் ‘பூ’ ராம், தாயாக வரும் ஊர்வசி இருவரும் நடிப்பில் வியக்க வைக்கிறார்கள்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சுயேச்சை எம்.எல்.ஏ கருணாஸுக்கு ரகளையான ரீ ஓபனிங்... “வாங்க வாங்க.. வாங்கம்மா.. வாங்க.. ஒரு லூஸு வாங்கினால் இன்னொரு லூஸு இலவசம்...என்று ‘பன்ச்’ ஆக கேக் வியாபார விளம்பர அறிவிப்பு செய்யும்போது அற்புதமான சூழ்நிலை நகைச்சுவையை ரசிக்க முடிகிறது. கன்னட சூப்பர் ஸ்டார் மோகன் பாபுவை ஒரு ஈகோ ஆபீசராகச் சித்தரித்துள்ள விதத்தில் புதுமை இல்லை என்றாலும் திரைக்கதையின் சுவாரசியத்துக்கு முட்டுக்கொடுக்க உதவியிருக்கிறது.

போதிய அளவுக்கு கற்பனை கலக்கபட்ட ஒரு பயோபிக் கதையின் வில்லனையும் அவன் சாமானியன் ஒருவனி பெருங்கனவை உடைத்தெறியச் செய்யும் சூழ்ச்சிகளையும் தனது வெகு இயல்பான நடிப்பால் நமக்கு அவர் கடுங்கோபம் உருவாக செய்துவிடுகிறார் கார்பரேட் அதிபராக நடித்திருக்கும் பரேஷ் ராவல். மக்களுக்கு மலிவு விலை வானூர்திப் பயணம் பற்றி நம்பிக்கையை மக்கள் மனதிலிருந்து உடைத்தெறியும் இவரது தொலைக்காட்சிப் பேட்டியும், கழிவறையைப் பயன்படுத்தும் ஊழியனை வேலையை விட்டு அனுப்பும் காட்சியும் இவரது உறைந்துபோன கதாபாத்திர குணாதிசயத்தைக் காண ரகளையான இடங்கள்.

படத்தின் மிக உயர்வான ரசிக்கத் தக்க அம்சங்களில், கதை, திரைக்கதை, நட்சத்திரத் தேர்வு, கலை இயக்கம், ஒளிப்பதிவும் ஆகிவற்றுடன் மக்களின் இசையை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியிருப்பதைக் கூறவேண்டும். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாட்டார் இசைத்தொகுப்பிலிருந்து முன்னோர் வகுத்த மெட்டுகளைப் பயன்படுத்தி சிறப்பாக பாடல்களை அமைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

படத்தில் குறையாகத் தெரிவது சில காட்சிகளை இயக்குநர் பாலா இயக்கியது போன்ற சாயலுடன் இருப்பது. சுதா கொங்கரா தனது சினிமா குருவின் பாதிப்பிலிருந்து முழுமையாக வெளியே வரவேண்டும் என்பதையே இந்தக் காட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. தொடக்காட்சியான ரயில் பயணத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது சகதி அள்ளி வீசியிருப்பது சுதா கொங்கரா போன்ற ஆளுமை வெளிப்படும் இயக்குநர்கள் செய்யக் கூடிய மலிவு அல்ல.

இவைபோன்ற சிறு சிறு குறைகளை மீறி, சரியான கால அளவில் மிக விறுவிறுப்பாகச் செல்லும் படத்தில், முதல் தலைமுறை தொழில்முனைவோர் கடும் தொழில் போட்டிகளும் காழ்புணர்ச்சியும் நிறைந்த கார்பரேட் உலகில் விலைபோகும் அதிகார வர்க்கத்தின் பின்னணியில் எப்படியெல்லாம் நசுங்கி எழ வேண்டியிருக்கும் என்பதை உணர்வுப்பூர்வமான காதல் கதையுடன் காட்டிய விதத்தில் சூரரைப் போற்று படத்தை பலமுறைப் பார்த்து போற்றலாம்.

பின்குறிப்பு: திரையரங்கில் வெளியாகியிருந்தால் இந்தப் படம் குறைந்தது 100 நாட்கள் ஓடியிருக்கும் தகுதியைக் கொண்டிருப்பதால், இம்முறை தீபாவளியின் அசலான கொண்டாட்டத்துக்கான படமாக சூரரைப் போற்று மாறிவிடுகிறது.

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.