திரைவிமர்சனம்

கண்ணுக்கு மையிட்டு, வெற்றிலைப் பாக்குப் போட்டுச் சுண்ணாம்பால் உதடுகள் ரத்தவண்ணம் பூசிக்கொள்வதைக் கைக் கண்ணாடியில் கண்டு ரசிக்கும் சத்தார் ஒரு திருநம்பி. அவன், தனது பால்ய நண்பனும் பட்டதாரியுமான சரவணன் (சாந்தனு) மீது காதல் கொள்கிறான். ஆனால், சத்தார், ஆணின் உடைகள் அணிந்து, குணங்களின் அடிப்படையில் ஒரு பெண்ணாக வலம் வருவதை அவனது தாயையும் நண்பனையும் சகோதரியையும் தவிர ஊர் ரசிக்கவில்லை.

சத்தாரை ஒரு காமப் பொருளாக பார்க்கும் வயது வந்த ஆண்களோ, அவனை துன்புறித்திக் கிளர்ச்சி அடையமுடியுமா என்று பார்க்கிறார்கள். அப்படியொருமுறை துரத்தி வருகையில் குறுக்கே வந்து காப்பாற்றுகிறான் சரவணன். அவனிடம் துரத்தி வந்த ஆண்கள்; “இவ்வளவு நாளா பொம்பள மாதிரி பண்ணிகிட்டு இருக்கான். அது ஏண்டான்னு கேட்டியா?” என்கிறார்கள் துரத்தி வந்து துன்புறுத்தும் சில கிராமத்து ஆண்களிடம் “நாம் என்னத்துக்கு ஆம்பளமாதிரி நடந்துகிறோம் என்று என்னைக்காச்சும் அவன் கேட்டிருக்கானா?’ என்று சத்தாரின் உரிமைக்காக நிற்கிறான் சரவணன். ‘பாருடா சத்தார் புருஷன் வந்துட்டான்” என்கிறார்கள்.

இப்படித்தான் கால காலமாக திருநம்பிகள் இந்தியா முழுமைவதுமே கொடுமைபடுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். திருநம்பிகளுக்கே இந்த நிலை என்றால் திருநங்களின் நிலை எப்படி இருந்திருக்கும்.. சத்தார் போகுமிடங்களிலெல்லாம் புறக்கணிக்கப்படுகிறான்.. பெண்கள் கூட சத்தாரைத் தொட்டுப் பேசாதே என்கிறார்கள். அப்படிப்பட்ட சத்தாருக்கு ஒரு கனவு...

சிறிது சிறிதாக பணம் சேர்த்து மும்பை நகருக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து தனது பிறவி ஆண் உறுப்பை, பெண் உறுப்பாக மாற்றிக் கொண்டு ஒரு பெண்ணாக மாறிவிடுவது மட்டும்மல்ல; சரவணனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதும் அவனது விருப்பமாக இருக்கிறது. ஆனா சத்தாரின் விருப்பத்துக்கு நடுவே சலசலக்கும் நீரோடைபோல, தளைகளையெல்லாம் உடைதெறியத் துடிக்கும் ஒரு காதலும் அந்த ஊரும் குறுக்கே வருகின்றன. அந்தக் காதல் யார், யாருடன் தொடர்புகொண்டது? அந்தக் காதலின் ஊடாட்டத்தில் திருநம்பி சத்தாரும், சரவணனும் என்னாவாகிறார்கள் என்பதுதான் ‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜியில் இடம்பெற்றிருக்கும் ‘தங்கம்’ என்ற படத்தின் கதை.

‘தங்கம்’ என்ற படத்தின் தலைப்பே உங்களுக்கு ஆயிரம் கதைகள் சொல்கிறது அல்லவா? அந்தத் தலைப்புக்கு உரிய கதாபாத்திரம்தான் படத்தின் உயிர்நாடி. காடம்பாளையம் என்ற கோவை மாவட்ட கற்பனை கிராமம் ஒன்றில் கதை நடப்பதுபோலச் சித்தரித்தாலும் அசலான கிராமத்து வாழ்க்கையைக் காட்டுகிறார் இயக்குநர்.

மூன்றாம் பாலினத்தவரின் காதலை தமிழ்த் திரையுலகம் இதுவரை கொச்சைபடுத்தியே வந்திருக்கிறது. முதல் முறையாக அதை நேர்செய்திருக்கிறார் சுதா கொங்கரா. பாலியன் வன்கொடுமைகளுக்கு பெண், ஆண் மட்டுமல்ல, மூன்றாம் பாலினமும் விதிவிலக்கல்ல என்பதை பதிவு செய்தவிதமும் நன்று.

கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவை இயல்பூக்கத்துடன், மிகையின்றி சித்தரித்தால் மட்டுமே இதுபோன்ற சவாலான கதைகளை பார்வையாளரின் மனதுக்குள் முழுமையாகக் கடத்த முடியும். அதன் பலனாக பார்வையாளரின் மனதில் மாற்றங்களை விதைக்கமுடியும். அதைச் சிறப்பாக செய்திருக்கிறது சுதா கொங்கராவின் இயக்கம்.

ஷான் கருப்பசாமியின் கதைதான் அடித்தளம் என்பதால் அவரைப் பாராட்டாலாம்.

சத்தாராக நடித்திருக்கும் ஜெயராமின் மகன் காளிதாஸின் நடிப்பு, அவரை ஒரு தொழில்முறை நடிகராக நிரூபிக்க உதவியிருக்கிறது. ஒரு திருநம்பியின் கதாலையும் தவிப்புகளையும் தியாக உணர்ச்சியையும் அவர் தனது நடிப்பின் நவரசங்கள் வழியாகவும் திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார். சரவணனாக நடித்திருக்கும் சாந்தனுவின் நடிப்பையும் சாய்ராவாக நடித்திருக்கும் பாவானி ஸ்ரீயின் நடிப்பையும் குறை சொல்லமுடியாது.

படத்தில் இடம்பெற்றிருக்கும் ’கண்ணே மவராசன்’ துணை வேணுண்டா’ பாடல், படத்தின் டைட்டில் அனிமெஷன் மூலம் பெண்மையின் மகத்துவம் பேசும் ’கண்ணே கண்மணியே’’ பாடல், ‘எங்கே மவராசன் மறைந்தாயடா?’ பாடல் என ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மூன்று பாடல்களையுமே உயர்ந்த திரை அனுபவத்தைச் சாத்தியப்படுத்தும் மாயத்தைச் செய்துவிடுகின்றன.

பாவக் கதைகளில் ‘தங்கம்’ தனித்து ஜொலிக்கிறது!

-4தமிழ்மீடியா விமர்சனக் குழு

இவற்றையும் பார்வையிடுங்கள்

நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.