திரைவிமர்சனம்

கதைக்களத்தையும் கதாபாத்திரங்களையும் பகடி செய்வதன் மூலம் எத்தனை சிரியஸான உள்ளடக்கத்தையும் மெல்லுணர்வுடன் தரமுடியும் என்பதை லத்தின் அமெரிக்க இயக்குநர்கள் நிரூபித்திருக்கிறாகள். தமிழ் மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் ஒருசிலருக்கே இந்தக் கலை வசப்பட்டிருக்கிறது.

தமிழில் கார்த்திக் சுப்ராஜ், இப்போது விக்னேஷ் சிவன். இவரது அறிமுகப்படமான ‘போடா போடி’யில் இந்த ஒரினாலிட்டியை துளியும் பார்க்கமுடியாது. ஆனால். ‘நானும் ரவுடிதான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படங்களில் காணமுடியும். இப்போது பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘லவ் பன்ரென்ன விட்ரனும்’ குறும்படத்தில் முழு வீச்சில் தனது ஸ்டைலை பயன்படுத்தியிருக்கிறார்.

சாதி மீதான பற்றுதல் நோய்க் கூறு சாதி ஆணவப் படுகொலைகள். தமிழ்நாட்டின் தற்காலப் பிரச்சனைகளில் மிக முக்கியமான பிரச்சனையும் கூட. இதைப் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும் மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களின் மனதில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் படமாக வெளிவந்தது. ஆனால், ஓடிடி திரையில் படைப்பாளிக்கு கிடைக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை பயன்படுத்தி அந்தப் படத்தை முந்தும் விதமாக பல படங்களைக் கொடுத்திருக்க முடியும். ஆனால், அதை யாரும் இதுவரை செய்யவில்லை என்பதுதான் சோகம்.

விக்னேஷ் சிவன், அதே கதைக் களத்தை எடுத்தாண்டிருக்கும் ‘லவ் பன்ரென்ன விட்ரனும்’ குறும்படத்தில் ஆதிக்க சாதி மனோபவத்தையும் சாதி ஆணவனத்தையும் பகடி செய்த விதம் நுட்பமும் நகைச்சுவையும் கூடிய ஒன்று.

சாதியை வைத்தே அரசியல் பிழைக்கும் சாதிக்கட்சி ஒன்றின் வட்டாரத் தலைவர் பதம் குமார். அவருக்கு இரட்டையர்களாகப் பிறந்த மகள்கள் இருவர். இருவருமே காதலிக்கிறார்கள். சாதிமாறிக் காதலித்தால் அவர்களை தந்திரமாக சாதி ஆணவக் கொலைகளைச் செய்யும் இந்த சாதித் தலைவர், தனது சொந்த மகள்களின் காதலில் சாதியும் சமூக அந்தஸ்தும் குறுக்கே வந்தால் என்ன செய்வார் என்பதை எதிர்பாராத முடிவுடன் நறுகென்று நகைச்சுவையும் பகடியும் இழையோடத் தந்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

பதம்குமாரின் கண்ணசைவுகளைக் கண்டு படுகொலைகளை பக்கோடா சாப்பிடுவதுபோல் செய்யும் நரிக்குட்டி இந்தக் குறும்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அதகளம் செய்திருக்கிறார். பிறவியிலேயே உயரம் குறைந்த நடிகரான அவரை ‘ சாதிப்பற்றுக்கு’ குறியீடு ஆக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன். சாதிப் பற்றும் திமிரும் ஆது தொடர்பான சாதிச் செருக்கும் மனித உணர்வுகளில் எத்தனை கீழானது என்பதை அவரது உயரம் வழியாக எடுத்துக் காட்டுகிறார். அதைவிடச் சிறப்பாக மனிதன் குரங்காக இருந்தபோது அவனிடம் இல்லாத ஜாதி, சிந்திக்கத் தொடங்கியதும் எப்படி படிநிலைச் சமூகத்தின் முக்கிய அங்கமானது என்பதை எடுத்துக் கூற நினைத்தாரோ என்னவோ... சாதி மீதான உணர்வு மனிதனை விலங்கைப் போல் மாற்றிவிடுகிறது என்பதைக் காட்ட ஒரு குரங்கின் உடல்மொழியை நரிக்குட்டிக்குக் கொடுத்திருக்கிறார்.

இவையெல்லாம் ஒரு பக்கம், சாதித்தலைவரின் மகள் காதலிக்கும் இளைஞன் சாதிக் சமூக அடுக்கில் கீழே இருந்தால் அவன் கருப்பாகவும் தோற்றக் குறைவு கொண்டவனாகவும்தான் இருப்பான் என்பதைப் போன்ற ‘ஸ்டார் காஸ்ட்’ இயக்குநரின் ஸ்டீரியோ சினிமாத்தனத்தைக் காட்டுகிறது. அதேபோல மற்றொரு சொல்லிசைக் கலைஞன், தனது காதலை தந்திரமாக மறைப்பவனாகக் காட்டியிருப்பது, ராமதாஸ் முன்வைக்கும் நாடகக் காதலை உறுதிப்படுத்துவதுபோல இருக்கிறது. அதேபோல, அங்கயீனம் கொண்ட ஒருவரைக் காட்டியதன் மூலம் நேரடிக் குறியீட்டைத் தவிர்த்திருக்கலாம்.

படத்தில் நரிக்குட்டியின் அட்டகாசமான நடிப்பு, இரட்டைச் சாகோதரியாக அஞ்சலியின் நடிப்பு, தமிழ் தெரியாவிட்டாலும் பாலிவுட்டின் மாற்று சினிமா நடிகையான கல்கி கேக்லோனின் அர்ப்பணிப்பு மிக்க சிறு கதாபாத்திரத்துக்கான நடிப்பு, சாதித்தலைவராக பதம் குமாரின் நடிப்பு என நடிகர்கள் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள்.

படத்தின் முடிவில் சாதித் தலைவரின் மனமாற்றம் ஏற்றுக்கொள்ளும்விதமாக இருந்தாலும் தனது வலதுகையான நரிக்குட்டி தன்னை மீறிச் செல்வதில் அடங்கிப்போவதற்கான காரணத்தை இன்னும் அழுத்தமாக வைத்திருக்கலாம். ஆனால் இதுவும் கூட ஒருவகைச் சாதீய மனோவிகாரம்தான். தலைவர்கள் புனிதர்களாக தொண்டர்கள் குற்றவாளிகளாகும் தந்திர உத்திதான். இந்தக் குறைகளையெல்லாம் படத்தின் முடிவு ஈடுகட்டிவிடுகிறது.

-4தமிழ்மீடியா விமர்சனம் குழு

இவற்றையும் பார்வையிடுங்கள்

நீண்ட காலமாக திரைப்பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்தார் நமீதா.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டுவரும் விஜய் சேதுபதி காணும் பொங்லான இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தாம் புதிதாக நடிக்கவிருக்கும் பட குழுவினருடன் இணைந்து பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய செய்தியை அவரே தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.