திரைவிமர்சனம்

வாழ்க்கை என்பதை நான்கு சுவர்களுக்குள் முடித்துவிடுகிற எளிய மனிதர்கள் இந்த பூமியில் பில்லியன்களில் வசிக்கிறார்கள். மாறாக, புதிய இடங்களை நோக்கி, புதிய மனிதர்களைத் தேடி மேற்கொள்ளப்படும் பயணங்கள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையாகவே இருக்க முடியாது என்பதை நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள் ‘பாரு’வும் ‘மாறா’வும் ‘வெள்ளை’யும்.

கட்டிடமோ, கலைப்பொருளோ, அவற்றின் தொன்மையைச் சிதைத்துவிடாமல் மீட்டெடுக்கும் ‘ரெஸ்டோரேஷன் ஆர்கிடெக்ட்’ ஆகப் பணிபுரிகிறாள் பாரு. அவள் சிறுமியாக இருந்தபோது கேட்ட ஒரு மறக்கமுடியாத கதையை, கேரளத்தின் கொச்சி நகரத்திற்குச் சென்றிருக்கும்போது அங்குள்ள பழைய கட்டிடங்கள் மீது ஓவியமாக வரையப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள். தனக்குத் தெரிந்த அந்தக் காதல் கதை, மற்றொருவருக்கும் தெரிந்திருக்கிறதே என்று வியக்கும் அவள், அந்த ஒவியங்களை வரைந்த ‘மாறா’வை தேடிக் கிளம்புகிறாள்.

அவளது தேடலில் சந்திக்கும் மனிதர்களின் வழியே மாறாவின் வாழ்க்கைக் கதை கொஞ்சம் கொஞ்சமாகப் புலப்படத் தொடங்குகிறது. ‘மாறா’வின் மீது பாரு மனம் நிறையக் காதலை வரித்துக்கொள்கிறாள். அதற்கு அவனது செயல்கள் காரணமாகின்றன. தேடலின் இறுதியில் பாரு, மாறாவைச் சந்தித்தாளா? உண்மையில் மாறா ஒரு ஓவியன் மட்டும்தானா என்பது உட்பட பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது திரைக்கதை.

கடந்த 2015-ல் வெளியான மலையாள படம் ‘சார்லி’. துல்கர் சல்மான், பார்வதி மேனன் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற அந்தப் படத்தின் ரீமேக் என்று சொல்லப்பட்டாலும் மாதவனின் வயதுக்கு ஏற்ப கதாபாத்திரச் சித்தரிப்பில் பெரும் மாற்றங்களைச் செய்திருக்கிறார் இயக்குநர் திலிப் குமார். குறிப்பாக, ‘சார்லி’ படத்தில் அவனது பூர்வகதை இருக்காது. இதில் ‘மாறா’ தூரிகையின் வழி மானுட நேயனாக எவ்வாறு துளிர்த்தான் என்கிற பூர்வகதை, அவன் யாருக்காக தனது நடுத்தர வயது வரை ஒரு நாடோடியைப்போல பயணம் செய்தபடியிருக்கிறான் என்கிற காரணமும் உணர்வுப்பூர்வமாக இணைக்கப்பட்டிருக்கின்றன.

‘மாற்றங்களை உருவாக்க கலகக்காரனாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை; கலாக்காரனாலும் (கலைஞன்) அதைச் செய்யமுடியும்’ என்று எம்.எஸ்.பாஸ்கர் மாறாவைப் பற்றி தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் இடம், இந்தச் சமூகத்துக்கு மாறாக்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள் என்பதைக் கூறும். எத்தனை பெரிய கலைஞனாக இருந்தாலும், அவன் தேடல் கொண்டவனாக இருந்தாலும் அவனுக்குள், சோகமும் இயலாமையும் இருந்தே தீரும் என ‘மாறா’ பொங்குகிற காட்சி, மனதுக்குள் பாரமாய் இறங்குகிறது.

பாருவின் கதாபாத்திரம் வீடடங்கிச் சுருங்கிப்போக விரும்பாத நவீனப் பெண்மையின் விடுதலைப் பிரதி எனலாம். ‘களவாடிய பொழுதுகள்’ என்கிற மாறாவின் பென்சில் ஸ்கெட்ச் புத்தகத்தை வைத்துக்கொண்டு, விடுபட்ட கதையைத் தேடிச் செல்லும் அவளது உள்ளத் துடிப்பை, பெரும்பாலான பெண்கள் தங்களது வாழ்நாளில் கொன்றுவிடுகிறார்கள் அல்லது தொலைத்துவிடுகிறார்கள்.

காதலே வாழ்க்கையின் அஸ்திவாரம் என எண்ணிக்கொண்டு, தனக்குக் கிடைக்காமல்போன காதலை, சக மனிதர்கள் மீது கொட்டி வாழ்ந்து தீர்க்கும் ‘வெள்ளை’ கதாபாத்திரம்தான் படத்தின் ‘இதயமாகவும் மையமாகவும்’ இருக்கிறது. அதன் கதையைக் கடைசி 20 நிமிடங்கள் விரித்துக்காட்டும்போது படம் ‘கல்ட் கிளாசிக்’ தன்மைக்கு மாறுகிறது.

மணிமாறன் என்கிற மாறாவாக மாதவனின் நடிப்பு அளவாக, அழகாக இருக்கிறது. மாதவன் இளமையாகவும் இருக்கிறார். ஆனால், அவரது டப்பிங் பல இடங்களில் ‘லிப் சிங்’ சரியில்லாமல் இருப்பது உறுத்துகிறது. மாறா முழுமையான நாடோடி இல்லை என்பதால் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து அவர் காட்டியிருக்கும் நிதானம் ‘இறுதிச் சுற்று’ மாதவனை எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம்.

பாருவாக நடித்திருக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் அழகிய ராட்சசியாக இருக்கிறார். மாறாவைப் பற்றி சிறிது சிறிதாக அறிந்துகொள்ளும்போது காட்டும் முகபாவங்களில் காதலின் வண்ணங்களை அவ்வளவு அழகாகப் பிரதிபலித்திருக்கிறார்.

‘வெள்ளை’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநரும் நடிகரும் நாடகக் கலைஞருமான மௌலி தனக்குக் கிடைத்த வாழ்நாள் கதாபாத்திரத்தை வாழ்ந்து தீர்த்திருக்கிறார். முடிந்தவரைத் தனது நடிப்பிலிருந்து நாடகத் தன்மையை வெளியேற்ற முயன்று அதில் வெற்றிபெற்றிருக்கிறார். ஆனால், அவரது வசன உச்சரிப்பு, அரங்க உச்சரிப்பாகத் தேங்கிவிடுகிறது. இவர்கள் தவிர ‘மீனாட்சி’யாக வரும் அந்த 60 வயதுப் பெண்மணியின் நடிப்பைக் குறைத்துக் கூறுவதற்கில்லை.

அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட் புகழ் அலெக்ஸ் பாபு, ஆடுகளம் நரேன், ஜோக்கர் சோமசுந்தரம், சிவதா, நீண்ட இடைவெளிக்குப்பின் நடித்திருக்கும் அபிராமி என துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பிரபலமான முகங்கள் பலரும் நடிப்பில் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

நாவல் தன்மை கொண்ட ஒரு கதை திரைக்கதையாகும்போது நாவலில் இடம்பெற்றிருக்கும் விவரிப்புகளை, காட்சி வழியாகக் கடத்த வேண்டுமானால், சிறந்த கலை இயக்கம், ஒளிப்பதிவு, இசை ஆகிய மூன்று துறைகளும், திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றுக்கு இணையாகப் பங்களிப்பும் செய்திருக்க வேண்டும். அது இந்தப் படத்தில் 100 விழுக்காடு சாத்தியமாகியிருக்கிறது.

‘சார்லி’ படத்தின் ரீமேக் என்கிற எதிர்பார்ப்புடன் மாறாவைக் காண வருபவர்களுக்கு ஏமாற்றமாக அமையலாம். ஆனால், சார்லியை விடச் சிறந்த படைப்பாக ‘மாறா’ உங்களை ஆர்கஷித்துக்கொள்வான்.

-4தமிழ்மீடியா விமர்சனக்குழு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல் 'விலாத்தி ஷராப்' (Vilayai Sharaabt) யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில் அல்லு அர்ஜூன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இத்தாலியில் பயண அனுபவங்களில் நாம் காண முடியும் முக்கிய அம்சம் விதவிதமான விளம்பரத் தட்டிகள். ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் மிக இத்தாலியில் அதிகமாக நிறுவப்பட்டடிருக்கும் பிரமாண்டமான நிரந்தர விளம்பரத் தட்டிகளை விடவும், பெரும் ஊர்த்திகளில் நிறுவப்பட்ட நகரக் கூடிய தட்டிகளையும் கூடக் காணலாம்.

கடந்த தொடரில் கருந்துளைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் மற்றும் தோற்றம் என்பவை குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகப் பார்த்தோம்.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோடியில் ஒருவன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளன.

தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது.