திரைவிமர்சனம்

மதுவுக்கு அடிமையான ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கும் குற்றங்களின் பல்கலைக்கழகமாக இருக்கும், மதுவையே தொட விரும்பாத ஒரு லாரி மார்க்கெட் தாதாவுக்கும் நடுவிலான ஆடுபுலி ஆட்டமே மாஸ்டர்.

இளங்குற்றவாளிகள் மனம் மாற்றம் பெற்றுத் திருந்தி வாழ்வதற்காக உருவாக்கப்பட்டவைதான் ‘சிறார் கூர்நோக்கு இல்லம்’ என்று அழைக்கப்படும் ஜுவனைல்கள். ஆனால், இந்த ‘சின்ன ஜெயில்’களுக்கு வரும் சிறுவர்களை, தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, கொடியவர்களாக உருவாக்கி, தனது குற்றவுலக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திக்கொள்ள அவர்களைப் பயன்படுத்திக் கொள்கிறான் பவானி (விஜய்சேதுபதி).

இன்னொரு பக்கம், ‘வாத்தி’ என்றும் ‘ஜேடி’ என்றும் மாணவர்களால் அழைக்கப்படும் ஜான் துரைராஜ் (தளபதி விஜய்) ஒரு மது அடிமை. மது விஷயத்தில் பலகீனமானவராக இருக்கும் அவர், மாணவர்களைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாக உருவாக்குவதில் அதிரடிப் பேராசிரியர். இந்த இரண்டு துருவங்களையும் மோதவிடும் கருவியாக இருந்து, நன்மையை அறுவடை செய்ய முயல்கிறார் சாருமதி என்கிற (மாளவிகா மோகனன்) என்கிற தன்னார்வலர் மற்றும் கல்லூரி விரிவுரையாளர். ஜேடியின் கண்ணியில் பவானி சிக்கினானா இல்லையா, அல்லது பவானியிடம் ஜேடி சிக்கினாரா இல்லையா.. யார் கை ஓங்குகிறது என்பதுதான் மாஸ்டர் படத்தின் மீதி ஆட்டம்.

மாஸ் மசாலா படங்களில் கணமான எந்த விஷயத்தையும் கையாள முடியாது என்கிற காலம் மலையேறிவிட்டது. எம்.ஜி.ஆர். சிவாஜி காலம் ஆரம்பித்து ’மது’ அடிமையாக இருக்கும் கதாநாயகன், அதிலிருந்து மீண்டுவந்து நன்மையின் பாதைக்குத் திரும்பும் கதைகள் ஆயிரமுண்டு. ஆனால், விஜய்க்கு இப்படியொரு கதாபாத்திரம் இதுவே முதல்முறை. அதைத் தயங்காமல் செய்த காரணத்திற்காகவே விஜய்யை மனமாறப் பாராட்டலாம்.

முக்கியமாக, இன்றைய தமிழக அரசியலில், மது விற்பனையும் அதன்மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு இலவசங்கள் தந்து சாமானிய விளிம்பு மக்களை ’இலவசம்’ எனும் போதையிலேயே அடிமையாகவே வைத்திருக்கும் வாக்கு அரசியல் மீதும் விஜய் வழியாகத் துணிந்து விமர்சனம் செய்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதேபோல், டாஸ்மாக் கடைகள் வழியாக, அரசே மது விற்பனை செய்வதை, வரிச் சலுகைக்காக மதுக்காட்சிகளை வைத்துப் படமெடுத்து வந்த ஈனத் தயாரிப்பாளர்கள் நிறைந்த தமிழ் சினிமாவில் அதற்கு எதிரான விவாதத்தை உருவாக்கும் கருத்துகொண்ட கதையைத் தேர்வு செய்து நடித்திருப்பதற்காகவும் விஜய்க்குப் பாராட்டுகள்.

படம் நல்ல விஷயத்தைப் பேசினாலும் விஜய் சேதுபதி, விஜய் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த, இயக்குநர் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டிருப்பது படத்தை இழுவையாக்கியிருக்கிறது. விஜய் சேதுபதி பற்றிய கதையில் அவர் ஒரு குற்றவாளியாக எப்படி உருவாகிறார்.. லாரி செட் தேர்தலில் வெற்றிகொள்ள என்ன செய்கிறார், அடுத்தது அவரது இலக்கு அரசியல் என்கிற தொடர்ச்சியை இழுத்துக்கொண்டே செல்வதும், ஈக்களைக் கொல்வதைப்போல் போட்டியாளர்களை அவர் கொல்வதும் ஒரு கட்டத்துக்குப் பின் சலிப்பூட்டுகிறது.

அதேபோல, மாணவர்களின் நலன் காக்கும் பேராசிரியராக இருக்கும் விஜய்யின் பராக்கிரமங்களைக் காட்டக் கல்லூரியிலேயே பாதி படத்தை முடித்துவிடுகிறார் இயக்குநர். இந்த இருவரது கதாபாத்திரங்களின் பின்னணியை சுருக்கமாகக் காட்டியிருந்தால் 3 மணிநேரப் படத்தை இரண்டரை மணிநேரமாகக் குறைத்திருக்கலாம். என்னதான் தளபதி விஜய் படமாக இருந்தாலும் இரண்டு படங்களுக்குரிய காட்சிகளை ஒரே படத்தில் பார்ப்பது பெரும் மண்டையிடி. கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலைத் துண்டாக வெட்டியெறிந்தாலே படத்துக்குப் பெரிய ரிலீஃப் கிடைக்கும். இந்த இடத்தில்தான் எடிட்டர் உண்மையிலேயே தனது வேலையைச் செய்திருக்கிறாரா இல்லையா என்கிற கேள்வி எழுகிறது. அத்தனை மொக்கையான எடிட்டிங்.

படத்தில் ரசிக்கக் கூடிய அம்சங்களில் விஜய், விஜய்சேதுபதி ஆகிய இருவரது நடிப்புக்கும் முதலிடம் கொடுக்கவேண்டும். மாஸ் ஹீரோ என்பதற்காக எதற்கெடுத்தாலும் கை நீட்டாமல், காரண காரியத்தைக் குறித்த அதிக அக்கறையுடன் தனது பேராசிரியர் கதாபாத்திரத்தின் மேன்மையைக் காப்பதற்காக அடக்கி வாசித்திருக்கிறார் விஜய். அதேசமயம் தனது ரசிகர்களுக்குத் தேவையான தீனியை, பன்ச் வசனங்கள், சீர்திருத்த வசனங்கள், நடனம், பாட்டு, நடிப்பு, ஆக்‌ஷன் காட்சிகளில் காட்டும் தனக்கேயுரிய ஸ்டைல் எனப் பிரித்து மேய்ந்திருக்கிறார் விஜய். நல்ல வேளையாக விஜய்க்கும் மாளவிகா மோகனனுக்கும் டூயட் மாதிரி எதுவுமில்லை. இருவரும் ஆட்டம் போடுகிறமாதிரி ஒரு பாடல் இருந்தால் கூட, இந்தப் படத்தில் அட்டகாசமாக எடுபட்டிருக்கும் இயக்குநரின் ‘செய்தி’ பிரச்சாரம் சுத்தமாக நீர்த்துப் போயிருக்கும். அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய் எனும் மாஸ் நாயகனைக் கொஞ்சம் இழுவையாகப் பயன்படுத்தியிருந்தாலும் ஒழுங்கான அலைவரிசையில் அவரைக் கையாண்டிருக்கிறார் எனலாம்.

விஜய் சேதுபதி எனும் நடிப்பு ராட்சசன் தனக்குக் கிடைத்த வாய்ப்பை வாழ்ந்திருக்கிறார். விஜய்யிடம் அடி மட்டும் வாங்காமல் அவரை அடித்துத் துவைப்பது மரணத் தெறியாக இருக்கிறது. பரிதாபகரமாக பெரும்பாலான துணைக் கதாபாத்திரங்களுக்கு முழுமை என்பது சுத்தமாக இல்லை. நாயகன் - வில்லனுக்கான நீட்டிப்புகளை விட்டுவிட்டு துணைக் கதாபாத்திரங்கள் சிலவற்றை இன்னும் செதுக்கியிருக்கலாம். குறிப்பாக ஆண்ட்ரியா கதாபாத்திரத்தை இவ்வளவு வீணடித்திருக்க வேண்டாம். அதைவிடப் பரிதாபம்.. அவர் வரும் அந்த நீண்ட வில் -அம்பு ஆக்‌ஷன் காட்சி, 2டி அனிமேஷன் பொம்மைகளில் இருக்கும் உணர்ச்சியை கூடத் தரவில்லை. அம்பு - வில் கொண்டு கனரக வாகனங்களைச் சாய்த்துவிட முடியும் என்பது சுத்தமாக நம்பும்படியாக இல்லை.

அறிமுகக் கதாநாயகி மாளவிகா மோகனனுக்கு குறைவான காட்சிகளே என்றாலும் மனதில் பதிந்துபோகிறார். சாந்தனு, ‘96’ புகழ் கௌரி, ரமேஷ் திலக் உள்ளிட்ட நல்ல நடிகர்களை உப்புக்குச் சப்பாணியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் குடிசைப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் பலரை ஜுவனைல் காட்சிகளில் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர். விஜய் - விஜய்சேதுபதி அட்ராக்‌ஷன் என்கிற காரணங்களைத் தாண்டி, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவும் அனிருத் இசையும் தான் இத்தனை நீளமான படத்தைக் கடைசிவரைப் பார்க்கும் மனநிலையை நமக்குத் தருகின்றன.

’மாஸ்டர்’ விஜய்சேதுபதிக்கு இன்னொரு ‘விக்ரம் வேதா’ என்றால் விஜய்க்கு பாதி மாஸ்.. மீதி ‘கிளாஸ்’.

 - 4தமிழ்மீடியா விமர்சனக்குழு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பீட்சா, சூதுகவ்வும், அட்டகத்தி, இன்று நேற்று நாளை, தெகிடி உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட மக்கள் மனதில் இடம்பிடித்த படங்களை தயாரித்து வருபவர் சி வி குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இத்தாலியில் பயண அனுபவங்களில் நாம் காண முடியும் முக்கிய அம்சம் விதவிதமான விளம்பரத் தட்டிகள். ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் மிக இத்தாலியில் அதிகமாக நிறுவப்பட்டடிருக்கும் பிரமாண்டமான நிரந்தர விளம்பரத் தட்டிகளை விடவும், பெரும் ஊர்த்திகளில் நிறுவப்பட்ட நகரக் கூடிய தட்டிகளையும் கூடக் காணலாம்.

கடந்த தொடரில் கருந்துளைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் மற்றும் தோற்றம் என்பவை குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகப் பார்த்தோம்.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோடியில் ஒருவன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளன.

தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது.