திரைவிமர்சனம்

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் முக்கிய விஞ்ஞானியாக இருக்கிறார் ஜெயம் ரவி. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க்கின் மனவுறுதியை நினைவூட்டும் இவர், செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்யும் ஆராய்ச்சியில் வெற்றி பெற்று, அங்கே செல்லவிருக்கும் விண்வெளிக் குழுவில் இடம்பிடிக்கிறார்.

அதற்கு முன்பு அவருக்கு ஒரு மாதத்திற்கான விடுமுறையை நாசா கொடுக்கிறது. அந்த ஒரு மாத விடுமுறையை நண்பர்கள் மற்றும் ஊர்க்காரர்களுடன் கழிக்க, தமிழகத்திலுள்ள தனது சொந்த கிராமத்துக்கு வருகிறார். அங்கே தண்ணீர் இல்லாமலும், கடன் பிரச்சனையாலும் விவசாயிகள் படும் கஷ்டத்தைப் பார்த்து பதைத்துப் போகிறார்.

சொந்த மண்ணுக்கு முதலில் தனது அறிவியல் மூளை பயன்படட்டும் என்று முடிவுடன் விவசாயிகளுக்காகக் களமிரங்குகிறார். இயற்கை விவசாயம் செய்து நல்ல லாபம் ஈட்ட முடியும் என்றுகாட்டி, அந்த நவீன உத்திகளை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்கிறார்.

இதனால் ஏற்கனவே ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட விதைகள் சந்தையில் கோலோச்சும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிக்கும் ஜெயம் ரவிக்கும் மோதல் உருவாகிறது. ஜெயம் ரவியை ஒளித்து கட்டாவிட்டால் தனது கார்ப்பரேட் சாம்ராஜ்ஜியம் சரியும் என்பதை உணரும் வில்லன், ஆட்சியாளர்களையும் அதிகார வர்க்கத்தையும் வைத்துகொண்டு ஆடும் பகடை ஆட்டத்தில் ஜெயம்ரவி என்னவாகிறார். அவர் செவ்வாய் கிரகத்திற்கு சென்றாரா இல்லையா என்பது பூமி படத்தின் கதை.

விஞ்ஞானி, விவசாயி கோபக்கார இளைஞன் ஆகிய மூன்று பரிமாணங்களில் தனது அற்புதமான நடிப்பைத் தந்து தனது கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார் ஜெயம் ரவி. ஈஸ்வரன் படத்தை போலவே கதாநாயகி நிதி அகர்வால் இந்தப்படத்திலும் ஊறுகாய் மாதிரி பயன்பட்டிருக்கிறார். கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயியாக தம்பி ராமையா கண்கலங்க வைக்கிறார். வில்லனாக வரும் ரோனித்ராய் கார்ப்பரேட் முதலாளியின் ‘உலகமயமாக்கல்’ திமிரை நன்றாகவே காட்டியிருக்கிறார். ஜெயம் ரவிக்கு அவர் வரிசையாக செக் வைத்துக்கொண்டே வரும் இடங்கள் ரகளையான திருப்பங்கள். அம்மாவாக வரும் சரண்யாவுக்கு பெரிதாக வேலை இல்லை.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 10 ஆண்டுகளாக மேடைகளில் பேசி வரும் விவசாயம் சார்ந்த கருத்துக்களை ஒரு சுவரஸ்யமான கமர்ஷியல் திரைக்கதையாக பின்னி இருக்கிறார் இயக்குநர் லக்‌ஷமன். அதேபோல் விவசாயம் சார்ந்து சீமான் மேடையில் பேசும் பேச்சுக்களிலிருந்து நேரடியாக அப்படிய வசனமாகவும் பல இடங்களில் எழுதியிருக்கிறார்கள். இதனால் நன்றாகவே ஜெயம் ரவியின் கதாபாத்திரம் எடுபடுகிறது. பல நேரங்களில் சீமான் பேசுவது போலவே உள்ளது. அத்துடன் நாம் தமிழர் கட்சிக்கான பிரச்சாரப் படமாகவும் வடிவெடுத்துவிடுகிறது. அந்த வகையில் இந்த தேர்தல் சமயத்தில் நாம் தமிழர் கட்சி இந்தப் படத்தை ஒரு பிரச்சார ஆயுதமாகவும் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

நிலத்தடி நீரை கார்ப்பரேட்டுகள் எப்படி உறிஞ்சி எடுக்கிறார்கள் என்பதை, குறிப்பாக தயாரிப்பு கம்பெனிகள், ஜீன்ஸ் தயாரிப்புக் கம்பெனிகள், குளிர்பான நிறுவனங்கள் தண்ணீரை உறிஞ்சி எடுத்துவிட்டு, விவசாயிகளை எப்படி தவிக்க விடு கிறார்கள் தோலுரித்துக் காட்டி இருக்கிறார்கள். அதேபோல அதேபோல பாரம்பரிய விதைகளை தமிழர்கள் எப்படி தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் என்பதையும், அவற்றை கோவில் கலசங்களில் எப்படி காப்பாற்றி வைத்திருக்கிறார்கள் என்பதையும் காட்சியாக வைத்த விதம் விறுவிறுப்பும் உண்மையும் கலந்த கலவையாக ஈர்க்கிறது.

விண்ணில் விதைக்க நினைக்கும் ஒரு தமிழ் விஞ்ஞானி, கார்ப்பரேட்டுக்களால் மரணிக்கும் தன் மண்ணைக் காப்பாற்றப் போராடும் கதையை ஆழமாகவும் அழுத்தமாகவும் சித்தரித்துக் காட்டிய வகையில் தமிழர்கள் அனைவரும் காணவேண்டிய படமாக ஈர்க்கிறது பூமி.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

-4தமிழ்மீடியா விமர்சனக் குழு

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

‘சிந்து சமவெளி’ எனும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் அமலா பால். அதன்பின்னர், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவிம்ன் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இச் சிறுகதையினை வாசித்து முடிக்கையில் ஒரு தியானம் செய்த மன உணர்வு எழக்கூடும். இந்தப் பூவுலகின் மீதும் வாழ்தலின் மீதூமான பற்றுதல் அதிகரிக்கக் கூடும்.

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

‘வாரணம் ஆயிரம்’ ஷமீரா ரெட்டியை தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாது. கௌதம் மேனன் இயக்கத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷமீரா ரெட்டி.

சிவகார்த்திகேயனுக்காக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் புதிய திரைப்படமான அயலான் பாடல் அண்மையில் வெளியானது. பாடலில் வருவது போல் பாடலும் வேற லெவல் சகோக்களே!