4TamilMedia | News&Entertainment Network

Sunday, May 20th

Last update05:03:50 PM

இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!

தோனி : தமிழ் சினிமாவில் மற்றுமொரு சிக்ஸர்!? - திரை விமர்சனம்

AddThis Social Bookmark Button

நடிப்பு, தயாரிப்பு இரண்டிலுமே தரம் பேணவேண்டும் என்ற சிரத்தையுடைய கலைஞர்களில் பிரகாஷ்ராஜும் ஒருவர். இம்முறை தன்னை முதன்முறையாக இயக்குனராக தரம் உயர்த்திக்கொண்டிருக்கிறார் 'தோனி' படத்தின் மூலம்.

இன்று எரியும் பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கும் தனியார் பள்ளிகளின் கண்மூடித்தனமான மதிப்பெண் அணுகுமுறையின் முகத்திரையை இந்தப்படத்தின் மூலம் கிழித்து எரிவதுதான் இயக்குனரின் நோக்கமாக இருக்கலாம். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

 “அப்பா கீழ போடவேண்டிய இட்லியை ஃப்ரை பண்ணி அதையே உப்புமாங்கிற பேர்ல போட்டு கொடுமைப்படுத்துறீங்களே? “பதினான்கு வயது மகன்  கார்த்திக் அப்பாவிடம் கேட்கிறான்.

“ அப்பிடி தினமும் வெரைட்டியா டிபன் சாப்பிடனுமுன்னு நினச்சா, நீ அம்பாணி வீட்டுலதான் பொறந்திருக்கனும்”-இது கார்த்திக்கின் அப்பா சுப்ரமணியத்தின்(பிரகாஷ்ராஜ்) பதிலடி.

“அது எதுக்கு பேசாம நீ அம்பானி ஆனபிறகு எங்களப் பெத்திருக்கலாமில்ல” இது  கார்த்திக்கின் நெத்தியடி.! கிரிக்கெட்டில் இந்திய வீரர் தோனி மாதிரி ஆகவேண்டும் என்கிற வெறி கார்த்திக்குக்கு. ஆனால் மனைவியை இழந்து பிள்ளைகளை போராடிப்படிக்க வைக்கும்  மிடில்கிளாஸ் அப்பா பிரகாஷ்ராஜோ, படிப்பைப் தவிர பையன் வேறு எதிலும் கவனம் செலுத்தக்கூடாது என்று  மகனின் கிரிகெட் மட்டையை சுவற்றில் அடித்து சுக்கல் நுறாக்குகிறார்.

உங்கப்பையனால எங்க பள்ளிக்கூடம் 100% ரிசல்ட்ங்குற பெருமையை இழக்க முடியாது! ஒன்பதாம் வகுப்பு பாஸ்ன்னு டிசில போட்டு கொடுக்குறோம் பேசமாம வேற ஸ்கூல் பாருங்க என்கிறார்கள் பள்ளிக்கூடத்தில்! படிப்பில் ஆர்வமில்லாத பையனை தேற்றி கொண்டு வரவேண்டிய பள்ளிக்கூடம், தனது கடமையில் இருந்து விலகிக்கொள்கிறது. பள்ளிக்கூடம் தந்த நெருக்கடியில் வெறுப்பின் உச்சத்துக்குப் போகும் பிரகாஷ்ராஜ், தன் பையனை அடிக்கப்போய், அவன்  தலையில் அடிபட்டு ‘கோமா’வில் படுத்த படுக்கையாகிறான்.

துறுதுறுப்பாக கிரிக்கெட் மைதானத்தில் சிக்ஸர்களை விளாசித்தள்ளியவன் பொம்மைபோல படுத்தபிறகுதான் அப்பா பிரகாஷ்ராஜுக்கு தனது மகனையும், பள்ளியின் கோர முகத்தையும் புரிந்துகொள்ளாமல் போனதை உணரமுடிகிறது. இதன் பிறகு மகனை கோமாவில் இருந்து மீட்க முடிந்ததா? கார்த்திக் லட்சியத்தை நோக்கி நகர்ந்தானா என்பதுதான் தோனி படத்தின் உணர்ச்சிகரமான திரைக்கதை.

நடுத்தர வர்க்கத்தினர் அனுபவிக்கும் வேதனைகளை, கண்களில் நீர் முட்ட…சில சமயங்களில் நகைச்சுவையாகவும், பல சமயங்களில் சமூககோபமாகவும் மாறி், மாறி  காட்சிபடுத்தியிக்கிறார்  பிரகாஷ்ராஜ்!  முக்கியமாக அந்த தொலைக்காட்சி நிகழ்சியில் அவர் பங்கேற்கும் காட்சியில் அவரது நடிப்புக்கு 100 மார்க் கொடுக்கலாம்! நல்லவேளையாக ஓவர் ஆக்டிங் இல்லாமல் பார்த்துக்கொண்டிருகிறார்.

அச்சு அசலாக ஒரு நடுத்தர வயது தந்தையாக மாறிவிட்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ். பிரகாஷ்ராஜின் மகன் கார்த்திக்காக நடித்திருக்கும் ஆகாஷ்பூரி அருமையான செலக்‌ஷன்! கதாநாயகி இல்லாத குறையை நிவர்த்தி செய்ய போடப்பட்டிருக்கும் ராதிகா ஆப்டே. அந்த நளினி கதாபாத்திரத்துக்கு ரொம்ப ஆப்ட்!  ஆனால் அவர் ஏன் பாலியல் தொழிலாளி ஆனார் என்று அவர்சொல்லும் காரணம் அத்தனை அழுத்தமாக இல்லை. அதேபோல சின்னச்சின்ன கதாபாத்திரங்களுக்கான நடிகர்களை தேர்வு செய்த விதத்திலும், அவர்களை திரைக்கதையில் தேவையான அளவு பயன்படுத்திய விதத்திலும் ஒரு இயக்குனராக பிரகாஷ்ராஜ் முதல் முயற்சியிலேயே ஜெயித்திருகிறார்.


படத்தில் முக்கிய பங்காற்றியிருக்க வேண்டிய குகனின் ஒளிபதிவு படம் முழுக்க தேவையில்லாத இருளில் தத்தளிக்கிறது. மொத்தபடத்திலும் இயக்குனர் பிரகாஷ்ராஜுக்கு இரண்டுபேர் பக்கலமாக இருந்திருகிறார்கள் ஒருவர் வசனகர்த்தா தா.சே.ஞானவேல். இரண்டாமவர் இளையராஜா.

கதைக்கான பாடல்கள், வசனங்களே இல்லாமல் பெரும்பான்மையான இடங்களில் தனது பின்னணி இசையாலேயே ராஜா பேசியிருப்பது, இயக்குனருக்கு பெரும் பக்கபலம்.

படிப்பு பிள்ளைகளுக்கு அவசியமானதுதான். ஆனால் அதையும் தாண்டி பிள்ளைகளுக்கு ஒரு கனவு இருக்கும்… ஒரு லட்சியம் இருக்கும்... அதைக்கண்டுபிடித்து அவர்களுக்கு வழங்க முடிந்தால்  அவர்களது வாழ்க்கை எத்தனை நலமாக இருக்கும் என்ற பார்வையை நிறைய வலியுடன், அதேநேரம் அழுத்தமாக பெற்றோர்களிடம் முன் வைத்திருகிறது இந்தப்படம்.

கிளைமேக்ஸ் உட்பட படத்தின்  ஒரு சில இடங்களில், நாடகத்தன்மையின் சாயல் தெரியும் போதும், மொத்தத்தில் கல்விமுறையில் மாற்றங்கள் வந்தே ஆகவேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தியுக்கும் இத் 'தோனி', பார்க்கப்பட வேண்டிய படம் தான்.

மகேந்திர சிங் தோனி, தான் களமிறங்கிய முதலாவது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 'டக்கில்' தான் ஆட்டமிழந்தார். ஆனால் இயக்குனராக சினிமா ஆடுகளத்தில் முதன்முறையாக களமிறங்கிய பிரகாஷ் ராஜ், முதல் திரைப்படத்திலேயே அரைச்சதம் கடந்திருக்கிறார் எனலாம்.

- 4தமிழ்மீடியாவுக்காக தேவா

'தோனி' : டிரெய்லர்

போனஸ் இணைப்பு :

சச்சின், கொலவெறி, பாடல்களின் இசையமைப்பாளர் அனிருத்துடனான நேர்காணல் கானொளி

நேர்காணலின் முழுமையான தொடர்ச்சியைக் காண இங்க அழுத்துங்கள்

மேலும் திரை விமர்சனங்கள்

 

இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!

உங்கள் கருத்து இங்கே

blog comments powered by Disqus

இச்செய்தி தொடர்பில் நீங்கள் நினைப்பது என்ன?

நாகரீகமான வார்த்தைகளில் உங்கள் கருத்துக்களைத் கீழேயுள்ள பாக்ஸில் தெரிவியுங்கள். அவற்றிக்கு கருத்தாளர்களே உரித்துடையவர்கள். அனுமதித்த பின்னரே வெளியாகும். கருத்துக்கள் தெரிவிப்பதற்கான முறை மற்றும் தமிழில் எழுத, உதவிக்கு அழுத்துக!..