திரைவிமர்சனம்

‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே...’ என்ற கொள்கையோடு கிளம்பி வந்திருப்பார் போலிருக்கிறது இப்படத்தின் இயக்குனர் நாகராஜன். அக்மார்க் காதல் கதையில் அன் லிமிடெட் வெடிச்சிரிப்பை கலந்தால், அதுதான் ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’! “தம்பி... நீங்கள்லாம் இத்தனை வருஷம் எங்கப்பா இருந்தீங்க?” என்று இந்த புதிய டீமை வியக்காமல் தியேட்டரை விட்டு வெளியே வருகிறவர்கள், உம்மணாம்மூஞ்சி உலகநாதன்களாகவோ, சுடு கஞ்சி சுகுமாறன்களாகவோ மட்டுமே இருப்பார்கள்.

டபுள் மீனிங் இல்லை. கெட்ட வார்த்தை இல்லை. அநாகரீக அசிங்கங்கள் இல்லை. ஆனாலும் நிமிஷத்துக்கு நிமிஷம் வெடித்துக் கொண்டேயிருக்கிறது தியேட்டர்! காதல் படத்தை விரும்புகிற அத்தனை பேரும் அவரவர் குடும்பத்தோடு தியேட்டருக்கு போனால், ஒரு இனிய அனுபவம் நிச்சயம்!

‘உச்சி மண்டையில தேளு ஊறுதுடா’ என்றால் கூட, கெக்கே பிக்கே என்று சிரிப்பார் போலிருக்கிறது இப்படத்தின் ஹீரோ ராஜன் சுரேஷ். சத்தியமாக இந்த கதைக்கு இவரை விட பொறுத்தமான ஒரு பையன் சிக்கவே மாட்டா(ன்)ர்! படத்தின் முதல் சீனில் சிரிக்க ஆரம்பிக்கிற இவர், தானும் சிரித்து தியேட்டரையும் சிரிக்க வைக்கிறார். இவர் வருகிற காட்சிகள் அத்தனையும் பேரானந்தம்.

கதை? பெரிதாக ஒன்றுமேயில்லை. ஒழுங்காக படிக்காமல், வேலைக்கும் போகாமல் தண்டத் தீனி தின்று கொண்டிருக்கும் முருகனுக்கு லவ் வந்துவிடுகிறது. அவளோ ‘செருப்பு பிய்ஞ்சுரும்’ என்பதையே தேசிய கீதம் போல தினம் ஒலிக்கிறாள். பையன் கேட்டால்தானே? வீட்டிலிருந்தால் அப்பா அம்மாவையும், வெளியே வந்தால் தன்னை கிராஸ் பண்ணுகிற அத்தனை பேரையும் கலாய்த்து மகிழ்கிற இவரை காதல் என்ன பாடு படுத்துகிறது? காதலை இவர் என்ன பாடு படுத்துகிறார்? என்பதுதான் கதை.

ஹீரோ ராஜனின் டயலாக் உச்சரிப்பே அலாதியாக இருக்கிறது. (அதற்காக படத்தில் வரும் எல்லா கேரக்டர்களும் அப்படியேவா பேச வேண்டும்? கொஞ்சம் கவனித்திருக்கலாம் டைரக்டர்) பார்த்தவுடன் பிடிக்கிற முகமும் அல்ல. ஆனால் படம் முடியும்போது, மனசுக்கு நெருக்கமாகிவிடுகிறார் ராஜன். தமிழ்சினிமா இவரை முறையாக பயன்படுத்தினால், இன்னும் ஒரு ‘கரண்ட் அக்கவுன்ட்’ ஹீரோ கிடைக்கும் வாய்ப்புண்டு.

ஹீரோயின் அர்ஷிதாவுக்கு, எள்ளும் கொள்ளும் வெடிப்பது போலவே முகத்தை வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். டூயட் காட்சிகளில் மட்டும் ரிலாக்ஸ் ஆகிறது அந்த பிஞ்சு முகம். தன்னை காதலிப்பவன் லூசு என்கிற முடிவுக்கும் வர முடியாமல், லவ் பண்ணவும் முடியாமல் தத்தளிப்பதை இயல்பாக வெளிப்படுத்துகிறார். சற்றே அறிவு முதிர்ச்சியுடன் ஹீரோவின் அப்பாவிடமே சென்று பேசுகிற காட்சியெல்லாம் ஸ்மார்ட்.

ஹீரோவின் அப்பாவாக வரும் பட்டிமன்ற ராஜா, பட்டிமன்றத்தில் ஆயிரம் ஜோக்குகளை கூட கேட்டிருக்க முடியும். ஆனால் அதையெல்லாம் மிஞ்சுகிற அளவுக்கு இவரை பேச வைத்து அழகு பார்த்திருக்கிறார் டைரக்டர் நாகராஜ். படத்தின் பலமே டைரக்டர் எழுதிய வெடிச்சிரிப்பு டயலாக்குகள்தான். சென்ட்டிமென்ட்டில் உருகி அழுது மூக்கு சிந்தி நம் சட்டையில் துடைப்பார்களோ என்கிற அளவுக்கு படத்தில் ‘கேப்’ இருந்தாலும், அங்கும் ஒரு ஜோக்கை போட்டு கலகலக்க விடுகிற வித்தை, கை கூடி வந்திருக்கிறது இவருக்கு. அதுவும் காதல் தோல்வியால் ஓவர் பீலாகிவிடும் ஹீரோ, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை கண்டிக்கும் அப்பா ராஜாவுக்கு அவர் ஒரு விளக்கம் சொல்கிறாரே... கரை புரள்கிறது தியேட்டர்! படம் முழுக்க இப்படி பல பல சுவாரஸ்யங்கள்...

வீட்டைவிட்டு கோபத்தில் வெளியேறும் ஹீரோவை அவரது நண்பர்கள் எதிர்கொள்ளும் அந்த காட்சி ஜஸ்ட் ஒரே ஒரு உதாரணம்தான்.  இப்படி சரம் சரமாக கொளுத்திப் போடுகிறார் டைரக்டர். பெரிய கம்பெனிகள் நம்பி அட்வான்சை அள்ளிக் கொடுக்கலாம் நாகராஜுக்கு.

ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் வேலைதான் ஹீரோவுக்கு. ரசிகர்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்கள். மன்ற பதவிகளுக்காக என்னெல்லாம் செய்கிறார்கள் என்ற விஷயத்தில் மட்டும், சற்றே விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ராஜன் மகாதேவின் இசையில் எல்லா பாடல்களும் மனசை அள்ளிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு பாடல் வரிகளையும் ரசித்து ரசித்து எழுதியிருக்கும் பாடலாசிரியர்களின் திறமைக்கு சற்றும் சளைத்ததல்ல இப்படத்தின் நடன அமைப்புகள். நடன இயக்குனர் தினேஷுக்கு தனி பாராட்டு!

காட்சிகளை அதன் இயல்பு மாறாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜே.கே.கல்யாண்ராம். இரண்டேகால் மணி நேரத்தில் எந்த இடத்தையும் இழுவைக்குள்ளாமல் ‘நறுக் சுருக்’ கட்டிங் போட்டிருக்கிறார் எடிட்டர் கோபி கிருஷ்ணா. அந்த வடசென்னை டான் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் நறுக்கித் தள்ளியிருக்கலாம்.

கருத்தாவது... குருத்தாவது... போனமா, சிரிச்சமா என்ற ஆசையிருக்கும் அத்தனை பேரும் தயங்காமல் தியேட்டருக்கு போனால், ஒரு சிறப்பான இளைஞர் கூட்டத்தை வாழ வைத்த பெருமை உங்களை சேரும்! மழையாவது... புயலாவது... தியேட்டருக்கு படையெடுங்க மக்களே. உங்களை மகிழ்வித்து மகிழ, அமுதா இருக்கிறாள். அவளோட சொந்த பந்தங்களெல்லாம் காத்திருக்கு!

பின்குறிப்பு- ஒரு தவறான இளைஞன் பற்றிய கதையை பிரமாதம் என்பதா? என்கிற கருத்து கந்தசாமிகள் மட்டும் எங்காவது கோவில் வாசலில் நின்று உபன்யாசம் கேட்டு இன்புறலாம்! மற்றபடி இன்னொரு ‘புதிய பாதை’ போட்டிருக்கும் இளைஞர் கூட்டத்திற்கு நமது ஆதரவு முழுக்க முழுக்க!


-ஆர்.எஸ்.அந்தணன்

நடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள்  இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன. 

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.