திரைவிமர்சனம்

சித்தூரில் விற்றாலென்ன? சிங்கப்பூரில் விற்றால் என்ன? கொய்யாப் பழம் கொய்யா பழம்தான்! எப்பவுமே பிரிட்ஜில் வைக்கப்பட்டது போல பளிச்சென்று இருக்கும் ‘காதல்’ என்கிற கொய்யாப்பழத்தை சிங்கப்பூரில் வைத்து கூவியிருக்கிறார் டைரக்டர் தனபால் பத்மநாபன். பழம் இனிப்பா, புளிப்பா? பார்க்கலாம்!

ஓப்பனிங்கிலேயே சிங்கப்பூருக்கு பறந்துவிடுகிறார் படத்தின் ஹீரோ லுத்புதீன். அதற்கப்புறம் அதே ஊரில் எந்நேரமும் லவ் நினைப்போடு திரியும் அவருக்கு, ‘ஐ லவ் யூ’ சொல்வதற்கும் ஆள் வேண்டுமல்லவா? அறைத் தோழிகளான இருவருமே அல்ரெடி புக்கிங்! தன்னை அடிக்கடி கிண்டல் செய்யும் இவர்களுக்காகவாவது ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணி காதலிக்க வேண்டும் என்று துடிக்கும் லுத்புதீன், ஒரு பெண்ணின் பெயரில் பொய்யாக ஒரு பேஸ்புக் ஐடி உருவாக்கிக் கொள்கிறார். உபயம்- ஆர்.ஜே.பாலாஜி. அவளிடமிருந்து தனக்கு மெசேஜ் வருவதாகவும், போட்டோக்கள் ஷேர் ஆவதாகவும் பெருமைப்படும் அவருக்கு பின்னாளில் வருகிற பஞ்சாயத்துதான் இப்படத்தின் சர்வ ஸ்டிராங்கான முடிச்சு. அதே பேக் ஐடி பெண்ணான அந்த சீன தேவதை நரேல் கேங் நேரில் வந்து நிற்கிறாள். விழுகிறது பலே முடிச்சு. அதை லுத்புதீன் அவிழ்க்க நினைப்பதும், சிக்கல் தொடர்வதும்தான் மிச்ச சொச்ச ஜாய்புல் சிங்கப்பூர்!

இதுல ஐஸ்வர்யா ராஜேஷ் எங்கேர்ந்து வர்றாங்க? ம்... அவங்க லுத்புதீனின் இன்னொரு காதலி. திடீரென்று பெற்றோர்கள் ஆசியுடன் உள்ளே நுழையும் ஐஸ்வர்யாவுக்கும், சீன தேவதை நரேல் கேங்குக்கும் நடுவேதான் போட்டி. லுத்புதீனுக்காக இருவருமே ஏங்க... யாரை கை பிடிக்கிறார் ஹீரோ?

லுத்புதீன் துறுதுறுப்பானவர்தான். ஆனால் ஹீரோ மெட்டீரியல் இல்லை என்பதுதான் படத்தின் தர்ம சங்கடமே! ஆனால் அந்த நெருடலையெல்லாம் அடித்து தூள் பரத்துகிறது அவரது பர்பாமென்ஸ்! ‘நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்’ பாடலுக்கு லுத்புதீன் வைக்கும் ஸ்டெப்புகள், நாசர் வீட்டு குலப் பெருமைக்கு நலங்கு வைக்கிறது. பேஸ்புக் பெண் தன்னை துரத்த ஆரம்பிக்கிறாள் என்பதை அறிந்ததும், விலாங்கு மீனாக அவர் நழுவ துடித்தாலும் மீண்டும் மீண்டும் சிக்குவதெல்லாம் கலகல ‘கைப்புள்ள’ எபிசோட்!

தும்பை பூவை வாஷிங் மிஷினில் போட்டு எடுத்த மாதிரியிருக்கிறார் ஐஸ்வர்யா. அதுவும் விதவிதமான காஸ்டயூம்களில், சிங்கப்பூர் பின்னணியில் அவரை பார்த்தால் இன்னும் நாலு படங்கள் அட் எ டைமில் புக் ஆனாலும் ஆச்சர்யமில்லை.

நம்மை ஏற இறங்க பார்க்க வைப்பது மட்டுமல்ல, எக்குத்தப்பாக கிறங்க வைப்பதும் அந்த நரேல் கேங்தான்! ஆளை துளைக்கிற பார்வையும், அடித்து துவைக்கிற பலமுமாக மொத்த ரசிகர்களையும் கட்டிப் போடுகிறது அந்த சைனீஸ் அழகு! கடைசியில் வரும் அந்த சில நிமிட பைட் காட்சிகள், ஜெட்லிக்கு நிகரான சிங்க் குயிங்க்! காதலால் உருகி வழிகிற காட்சிகளில், நம்ம ஊரு சீரியல் பெண்களை கூட தூக்கி சாப்பிடுகிறது அவரது பர்பாமென்ஸ். தமிழ் பட இயக்குனர்கள், நரேல் கேங் முகவரியை வாங்கி வைத்தால், ரசிகர்கள் மகிழ்வார்கள்.

படத்தில் ஆர்ஜே.பாலாஜியின் சீனி வெடி சிரிப்புக்கெல்லாம் யானை வெடி ரெஸ்பான்ஸ். அப்புறம் சதீஷையும் கருணாகரனையும் யாராவது சிரிப்பு நடிகர்கள் என்று சொன்னால், ‘வாய் மேல் போட்டாவது’ அந்த எண்ணத்தை மாற்றிவிடுவது உத்தமம்!

அப்புறம் படத்தில் ஹீரோயின்கள் போலவே வரும் இரண்டு பெண்கள், கண்ணுக்கு எலுமிச்சம்பழ குளிர்ச்சியை தருகிறார்கள். சோனாவையும் நமீதாவையும் மிக்ஸ் பண்ணி செய்தது போல எடை கூடிய எக்குதப்பான அழகு. அவர்கள் போட்டிருக்கும் குட்டி குட்டி டிரஸ்கள் கண்ணை விட்டு அகலவில்லை.

இப்படத்தின் ஆகப்பெரிய அற்புதமே ஆர். ஷங்கரின் ஒளிப்பதிவுதான். சிங்கப்பூரின் அழகை, அப்படியே அள்ளி அள்ளி பருகும் விதத்தில் அமைத்திருக்கிறார்.

ஜோஸ்வா ஸ்ரீதரின் இசை, அப்படியே வசீகரம் செய்கிறது. படம் நெடுக நிறைய பாடல்கள். ஜோஸ்வாவின் கைவண்ணத்தில், பொறுமை காக்கிறது பொதுஜனம்!

இந்த காதல் கதையை நேரடியாக சொல்வதை விட்டுவிட்டு, சீரியல்... கேன்டிட் கேமிரா... பொன்னம்பலம்... அடியாள் கூட்டம்... என்று அல்வா டப்பாவுக்குள் கிரீஸ்சை கொட்டியதுதான் அய்யோ...!

பறக்கலாம்... சற்றே பொறுமையுடன்!

-ஆர்.எஸ்.அந்தணன்

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா அலை முடிந்தபிறகுதான் அஜித் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று அஜித் தரப்பில் முதல் கூறப்பட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடி கட்சி அரசியலில் ஈடுபட போவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்