திரைவிமர்சனம்

திரைக்கும் நமக்குமான இடைவெளியை குறைப்பது, உட்காருகிற சீட்டின் வேலையல்ல… அதுதான் இயக்குனரின் வேலை! முதல் ஷாட்டிலேயே

அதை உணர வைத்துவிடுகிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன்! நமக்கும் ஸ்கிரினுக்கும் நடுவில் கொசு புகுந்தால் கூட, அட சீ தள்ளிப்போ சனியனே… என்று டென்ஷன் ஆகிற அளவுக்கு ஒன்றிப் போக வைக்கிற அந்த ஒன்றே முக்கால் மணி நேரம்தான் ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் சூத்திரமும் சூட்சுமமும் ! ஒரு போலீஸ் அதிகாரி, தான் டீல் பண்ணிய ஒரு கொலை வழக்கை விவரிக்கிறார். நேர்த்தியாக சுருட்டப்பட்ட கொசு வலையை மீண்டும் பிரிக்கும் போது ஒரு சிக்கல் வருமே? அப்படிதான் இப்படத்தின் கதை சொல்லப்பட்ட விதமும். முன்னிழுத்து பின்னிழுத்து நடுவில் மடித்து பிரித்து என்று போட்டு துவைக்கிறார் கார்த்திக் நரேன். ஆனால் கதையை இறுக்கமாக பற்றிக் கொள்கிற நம் விரல், அதனூடே பயணிக்கிறது. அதுதான் இப்படத்தின் விசேஷமும் கூட!

போலீஸ் அதிகாரி ரகுமான், துடிப்பான இன்னொரு கான்ஸ்டபுள் கவுதமுடன் ஒரு கொலையை துப்பறியக் கிளம்புகிறார். ஒரு புள்ளியாய் ஆரம்பிக்கும் அந்த பயணம், அடுத்து அடுத்து என்று விரிந்து கொண்டே போகிறது. முடிவில் கொடூரமான ஆக்சிடென்ட். தன் காலை இழந்துவிடுகிற ரகுமான், பணியிலிருந்து விலகி தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது, மறுபடியும் துரத்துகிற அதன் நீட்சி, என்ன செய்கிறது அவரை? க்ளைமாக்ஸ்!

ஸ்கிரினில் ஒரு சைக்கிள் கிராஸ் பண்ணினால் கூட, அதற்கும் ஒரு லாஜிக் இருக்கிறது. கார் ஹாரன் அடித்தால் கூட அதற்குள்ளும் ஒரு காரணம் வைத்திருக்கிறார் இயக்குனர். இப்படி படம் நெடுக பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும், குற்றம் கண்டுபிடிக்க முடியாத வாத்தியாராகி நிற்கிறான் ரசிகன். அப்படியே தேடிப்பிடித்து கண்டுபிடிக்கிற மிஸ்டேக்குகள், தயவு தாட்சண்யமின்றி டஸ்ட் பின்னில் எறிய வேண்டிய சிறு துரும்பாகதான் இருக்கும்.

படத்தின் ஹீரோ ரகுமான்தான். மனுஷன் என்னமாய் நடித்திருக்கிறார். புருவம் சுருக்கி, பெல்ட்டை சரி பண்ணுகிற நேரத்தில் கூட ஒரு அர்த்தம் வழிகிறது அந்த நடிப்பில். இந்தப்படத்தின் உயிரோட்டத்தில், ரகுமானின் பங்கு அளப்பறியது. படத்தில் நடித்திருக்கும் இளைஞர்கள். அவர்களின் கண்களில் வழிகிற அச்சம், குரோதம், கோபம், ஆத்திரம், இயலாமை எல்லாம் கனக்கச்சிதம்! நடிகர்களின் அர்ப்பணிப்பு நான்கில் ஒரு பங்குதான் என்றாலும், படத்தின் மேக்கிங்குக்கு உதவியிருக்கும் அத்தனை பேரும், கடோத் கஜன்களாக மாறி பாரம் இழுத்திருக்கிறார்கள்.

முக்கியமாக சுஜித் சரங்கின் ஒளிப்பதிவு. படத்தில் ஒரு கேரக்டராகவே மாறிப் போன அந்த மழை, லேசான அச்சத்தை ஏற்படுத்தும் அதன் நெருக்கம் எல்லாமே ஒளிப்பதிவாளரின் லைட்டிங்கிலும் கோணத்திலும் அடங்கி விடுகிறது. ஒலிப்பதிவு செய்த சிங்க் சினிமா நிறுவனத்திற்கும் தனி பாராட்டுகள்.

இசைக்க வேண்டிய இடத்தில் மட்டும் இசைத்து, மவுனிக்க வேண்டிய இடத்தில் மவுனித்து பின்னணி இசையில் புது அர்த்தம் படைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜாய்.

வழக்கமாக வங்கக் கடலில்தான் புயல் கிளம்பும். இயக்குனர் கார்த்திக் நரேன் என்கிற புயல் கோவையிலிருந்து கிளம்பியிருக்கிறது. பெரிய ஹீரோக்கள் இவரிடம் தங்கள் கால்ஷீட்டை நம்பி ஒப்படைக்கும் நாள் வந்தால், தமிழ்சினிமா இன்னும் என்னென்ன மாற்றங்களை சந்திக்குமோ!

நல்லபட விரும்பிகள் தங்கள் துருவத்தை இப்படம் ஓடும் தியேட்டரை நோக்கி திருப்புவதாக…! ஆமென்!

 

-ஆர்.எஸ்.அந்தணன்