திரைவிமர்சனம்

பவுடர் டப்பாவுக்கே பவுடர் அடித்து பல் இளிக்க விடுகிற கோடம்பாக்கம் இது. இங்கே வருங்கால சந்ததிக்கும் சேர்த்து சிந்திக்கிற இயக்குனர்கள் எவ்வித பகட்டும் இல்லாமல் படம் எடுப்பதை கேட்கவும் பார்க்கவும் ஆயிரம் காது, கண்கள் வேண்டும்.

அந்த வகையில் கரம் வலிக்கிற கை தட்டல்களோடு இப்படத்தின் இயக்குனர் அருண் சிதம்பரத்தை வரவேற்றுவிடலாம். யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக படம் இயக்கியிருக்கிறார். அதனால் கண்ணில் படுகிற குறைகளை தயவு தாட்சண்யமில்லாமல் ‘கண்ட்ரோல் டெலிட்’!

சிறு வயசிலிருந்தே இந்த பல்ப் எப்படி எரியுது சார்? இந்த ரேடியோ எப்படி பாடுது சார்? என்று சந்தேகம் கேட்கிற பையனை கண்டு வாத்தியார்களே விடு ஜூட் ஆகிறார்கள். அப்பாவின் ஆசியோடு பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு, ரேடியோ உள்ளிட்ட சகலத்தையும் சரி பண்ணும் மெக்கானிக் ஆகிவிடுகிறார் ஹீரோ அருண்சிதம்பரம். அந்த நேரத்தில்தான் ஊரில் நாள் ஒன்றுக்கு இருபத்துமூன்றரை நேரம் கரண்ட் கட் ஆகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு ஊரே கஷ்டத்திலிருக்க, உசுப்பிவிடுகிறது அருணின் மூளை. ஏன் நீயே கரண்ட் கண்டுபிடிக்கக்கூடாது?

அதற்கப்புறம் ஊரே இவரை கிறுக்கன் என்று அவமானப்படுத்த.... விடாமுயற்சியால் வெல்கிறார் அருண். இணை கோடுகள் போல, இவருடன் பயணிக்கும் இன்னொரு கேரக்டர் யோக் ஜேபி. இயற்கை விவசாயம் செய்யும் நோக்கத்துடன் இரண்டு லட்சம் ஐடி சம்பளத்தை தியாகம் செய்துவிட்டு ஊருக்கு வருகிற ஜே.பி யையும் சேர்த்தே கிறுக்கன் என்கிறது ஊர். அவரும் எப்படி வென்றார்? அவரது தங்கைக்கு அருண் சிதம்பரத்தின் மீது ஏற்பட்ட லவ் என்னாச்சு? இதுதான் கனவு வாரியம்.

எவ்வித பரிச்சயமும் இல்லாத முகம் என்பதாலேயே மனசுக்கு நெருக்கம் ஆகிவிடுகிறார் அருண். அவருடைய திராவிடக் கலரும் நம்மை படத்திற்குள் ஈர்த்துக் கொள்கிறது. ஹீரோயின் ஜியோ சங்கர் ஒரு குளோஸ் அப்புக்கு கூட லாயக்கில்லாமல் இருக்கிறார். டிரஸ் மாடர்ன் கலாச்சாரத்திலிருக்கிறது. இருந்தாலும் சகித்துக் கொண்டு பார்க்கிறோம். பிகருக்காக இல்லை. கன்டென்ட்டுக்காக!

“நான் வீணா பேசுறேன்”- ஹீரோயின். “வீணா ஏன் பேசுறே? போனை வை” இது அருணின் நண்பனாக வரும் பிளாக் பாண்டி. இவர் வருகிற காட்சிகளில் எல்லாம் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. அலட்டிக் கொள்ளாத அசால்ட் நடிப்பும் கூட.

ஒரு சீன் மட்டும் வந்தாலும், தியேட்டரை தெறிக்க விடுகிறார்கள் டி.பி.கஜேந்திரனும், கிரேன் மனோகரும்.

எல்லா படத்திலும் வில்லனாகவே வரும் யோக் ஜே.பி இப்படத்திலும் அப்படியொரு அயோக்கியத்தனத்தைதான் செய்யப் போகிறார் என்று நினைத்தால், மனுஷன்... நெஞ்சமெல்லாம் நிறைகிறார்.

ஒரு புத்தகத்துடன் ஒரு சாக்லெட்டையும் இணைத்து நம்பிக்கையோடு ஊர் மக்களுக்கு படிக்கக் கொடுக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஞானசம்பந்தன் கேரக்டரும் புதுசு. அருமை. ஆனால் அவரது விக்கில் வைத்த நரை மேக்கப்தான் பெரும் நகைப்பே ஏற்படுத்திவிடுகிறது. ஸ்கூல் மாறுவேஷ போட்டிக்கு மேக்கப் போட்டவர்தான் யாரோ இப்படத்தில் மேக்கப்மேனாக பணியாற்றியிருக்க வேண்டும். (மன்னிச்சூ... மன்னிச்சூ... இது நல்ல படம்)

இளவரசு, செந்தி தம்பதிகள் அப்படியே நிஜம்போலவே நடித்திருக்கிறார்கள்.

படத்தில் வலிமை கதையின் கரு என்றால், அதை தாங்கிப்பிடிக்கிறது ஷார்ப்பான வசனங்கள். “ஈ பி ஆபிஸ்ல வந்து கரண்டு கேட்கிறான் பாரு...” என்று நையாண்டி பண்ணுகிறது அந்த பேனா.

“வருங்காலத்துல எவன் விவசாய நிலம் வச்சுருக்கானோ, அவன்தான் கோடீஸ்வரன்” என்று ரியல் எஸ்டேட்டை நம்புகிறவனின் பொட்டில் அடிக்கிறது அதே பேனா.

“எங்க தாத்தா காலத்துல தண்ணீரை வானம் கொடுத்துச்சு. எங்க அப்பா காலத்துல தண்ணீரை குளம் குட்டை கொடுத்துச்சு. எங்காலத்துல தண்ணீரை பாட்டில்ல கொடுக்கிறாங்க. என் பேர புள்ளைங்க காலத்துல எதுல கொடுப்பானுங்களோ...” என்று கேட்கிற போது அதிர்ச்சியடைய வைக்கிறது அந்த பேனா. எழுதியவருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

ஷ்யாம் பெஞ்சமனின் இசை, காதுகளை நெரிக்கவில்லை. இதமாக இருக்கிறது. முக்கியமாக ‘கல்லா மண்ணா’ பாடலும், அது படமாக்கப்பட்ட விதமும் அருமை.

முதல் முதலாக அருணால் கிடைக்கும் கரண்ட் மூலம், ஒரு பள்ளிக்கூடத்தில் பல்ப் எரிவது போலவோ, வீட்டிற்குள் பல்ப் எரிவது போலவோ, பம்ப் செட்டில் நீர் வருவது போலவோ காட்டியிருந்தால் சரியாக இருந்திருக்கும். ராட்டிணத்தை தேர்ந்தெடுத்தது உறுத்தல்தான்.

உலக படவிழாக்களில் விருதுகளை குவித்த கனவு வாரியத்தை, உள்ளூர் மக்களும் வரவேற்றால்தான் மக்கள் பிரச்சனையை பற்றி பேசுகிற படங்கள் வரும். வாழ்க்கை மீதும், வருங்கால தமிழ்நாட்டின் மீதும் நம்பிக்கையும் அக்கறையும் வைத்திருக்கும் அத்தனை பேரும் ஒருமுறை இந்தப்படத்தை  பார்க்க வேண்டும் என்பதே நமது ஆசையும் கனவும்.  

கனவை வாரி விட்றாதீங்க மக்களே...

-ஆர்.எஸ்.அந்தணன்

இவற்றையும் பார்வையிடுங்கள்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.