Friday, Jul 29th

Last update08:00:00 AM

தி அமேசிங் ஸ்பைடர்மேன் : விமர்சனம்

இதுவரைக்கும் ஸ்பைடர் மேன் திரைப்படங்களை பார்க்காதவங்க அமேஸிங் ஸ்பைடர்மேனிலிருந்து ஆரம்பியுங்க என்கிறார்கள் ரசிகர்கள். முன்னைய மூன்று பாகங்களும் மோசமில்லை என்றாலும், இந்த ஸ்பைடேர்மேனே முழுக்க முழுக்க காமிக்ஸை ஒட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.

காமிக்ஸ் நாவல் படித்தவர்களுக்கு இந்த படம் உண்மையில் கொண்டாட்டம் தான். அண்மையில் திரைக்கு வந்த The Amazing Spider-Man 3டியில் ரசிகர்களை குளிர்வித்துக்கொண்டிருக்க அத்திரைப்படத்தை பற்றி இப்படி கூலாக அலசுகிறார் கருந்தேள் கண்ணாயிரம். இப்பதிவை எமக்கு மீள் பிரசுரம் செய்ய அனுமதித்தமைக்கு அவருக்கு நன்றி கூறி இங்கு பிரசுரிக்கிறோம்.

- 4தமிழ்மீடியா குழுமம்

ஸ்பைடர் மேன் என்ற கதாபாத்திரம், உலகின் அத்தனை பேருக்கும் தெரிந்த கதாபாத்திரம். எப்படித் தெரியும் என்றால் ஆல்ரெடி மூன்று வசூல் சாதனைப் படங்கள் வந்துவிட்டன. அப்படங்களை எடுத்தவரோ திகில் மன்னன் ஸாம் ரெய்மி. இதோ ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் அதன் முந்தைய ஸீரீஸின் கடைசிப்படம் வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு அந்த மூன்று படங்களும் மறக்கவேயில்லை.

இந்த சூழ்நிலையில், நான்காவது பாகத்தை கான்ஸல் செய்துவிட்டு, மறுபடியும்முதலிலிருந்து ஆரம்பித்தால், அந்த முயற்சி எடுபடுமா?

ஸாம் ரெய்மியால் நான்காவது பாகம் எடுக்க முடியவில்லை. அதற்கேற்ற நல்ல கதை தயார் செய்யமுடியவில்லை என்று அவர் ஒப்புக்கொண்டு இந்த ஸீரீஸிலிருந்தே விலகிவிட்டார். ஆகவே, நான்காவது பாகம் வெளியாக இருந்த 2011 வருடத்திலிருந்து இன்னும் ஒரு வருடம் தள்ளிப்போட்டுவிட்டு இந்த வருடம் படத்தின் ரீ-பூட் (அதாவது கதை மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பித்தல்) வெளிவரும் என்று ஸோனி பிக்சர்ஸ் அறிவித்தது. இதற்குமுன் ஒரே ஒரு படம் இயக்கியிருந்த - (500) Days of Summer - மார்க் வெப் (Marc Webb) என்ற இயக்குநரிடம் இந்தப் பொறுப்பை அளித்தது அந்நிறுவனம்.


இந்தப் புதிய படத்துக்கு, ஒரிஜினல் காமிக்ஸின் பெயரான ‘Amazing Spider-Man' என்பதே சூட்டப்பட்டது. படத்தில், காமிக்ஸில் வருவது போலவே கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது (கதாபாத்திரங்களிலும் சம்பவங்களிலும் ஸாம் ரெய்மி சில மாற்றங்களை செய்திருப்பார்.உதாரணம்: ஸ்பைடர் மேனின் கையில் இருந்து இயல்பாகவே வலை பாயுமாறு இப்படங்களில் இருக்கும். ஆனால் காமிக்ஸில், பீட்டர் பார்க்கர், வலையை உமிழும் சாதனத்தை செயற்கையாக உருவாக்கி, அவனது கையில் இணைத்துக்கொள்வான்).

அதிலும், குறிப்பாக, இந்தப் புதிய படத்தில் பழைய படங்களில் காட்டப்பட்ட காதலி மேரி ஜேன் இல்லை. உண்மையில், காமிக்ஸில், மேரி ஜேனுக்கும் முன்னர் பீட்டர் பார்க்கரின் பள்ளியில் அவனுடன் படித்த க்வென் ஸ்டேஸி (Gwen Stacy) என்ற கதாபாத்திரமே ஸ்பைடர் மேனின் காதலியாகக் காட்டப்படவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த க்வென் ஸ்டேஸி, பழைய ஸ்பைடர்மேன் 3ம் பாகத்தில், பீட்டர் பார்க்கரின் பரிசோதனைக்கூட தோழியாக கொஞ்ச நேரம் வருவாள். மேரி ஜேனை டென்ஷன் படுத்த பீட்டர் பார்க்கர் இவளுடன் சுற்றுவது போல அமைக்கப்பட்டிருக்கும்.காமிக்ஸில், இந்தக் கதாபாத்திரம் 1973ல் கொல்லப்பட்டது. அதன்பின்னர் ஸ்பைடியின் காதலியானவளே மேரி ஜேன்.

படத்தின் வில்லன் யார்? பேட்மேன், சூப்பர்மேன் போல, ஸ்பைடர் மேனின் வில்லன்கள் நம்மூரில் அந்த அளவு பிரபலம் இல்லை. சென்ற மூன்று பாகங்களில் மூன்று வில்லன்களைக் காட்டியாகிவிட்டது. இந்த ஸ்பைடர்மேன் ரீபூட்டில் சில உன்னிப்பான விஷயங்களை கான்ஸண்ட்ரேட் செய்ய இருந்ததால் (பீட்டர் பார்க்கரின் வாழ்க்கை. அவனது பயங்கள்), தந்தை தாய் இல்லாத பீட்டர் பார்க்கருக்குப் பொருத்தமாக, ஒரு கை இல்லாத கர்ட் கான்னர்ஸ் (Curt Connors) என்ற ராட்சத பல்லியை வில்லனாக்க முடிவுசெய்தனர்.

ஆஸ்கார்ப் (Oscorp) தெரியும் அல்லவா? ஸ்பைடர் மேன் முதல் பாகத்தில் வரும் வில்லன் Green Goblin என்ற நார்மன் ஆஸ்போர்னின் நிறுவனம். இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் புகழ்பெற்ற விஞ்ஞானியே கர்ட் கான்னர்ஸ். அவருக்குக் கை இல்லாத காரணத்தால், செயற்கையாக மனிதனுக்கு உடல் பாகங்கள் பளரும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க முயல்பவர். ஒரு சக்திவாய்ந்த, எந்தக் குறைபாடும் இல்லாத மனிதனை உருவாக்க முனையும் விஞ்ஞானி. இவர், பீட்டர் பார்க்கரின் தந்தையான ரிச்சர்ட் பார்க்கருடன் வேலை செய்தவரும் கூட. சிறுவயதிலேயே பீட்டர் பார்க்கரை விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டவர். அதன்பின் ஒரு விமான விபத்தில் தந்தை தாய் ஆகிய இருவருமே இறந்துவிடுவதைக் கேள்விப்படுகிறான் சிறுவன் பீட்டர். அவனுடைய தந்தையின் தம்பியான பென் பார்க்கர் இளவயது பீட்டரை வளர்க்கிறார். பள்ளியில் படிக்கையில் அவனுக்கு, அவனது தந்தை விட்டுச்சென்ற பரிசோதனையைப் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. இதைத்தொடர்ந்து ஆஸ்கார்ப் சென்று, விஞ்ஞானி கர்ட் கான்னர்ஸை சந்திக்கிறான் பீட்டர்.

அங்கே அவனை சிலந்தி கடிக்கிறது. இதன்பின் அவன் ஸ்பைடர்மேனாக மாறுகிறான். அதேசமயம் நல்ல விஞ்ஞானியான கானர்ஸ், ஆஸ்கர்ப்பிலிருந்து வெளியேற்றப்படுவதால் (மனித உடலில் பீட்டர் பார்க்கர் கண்டுபிடித்துக்கொடுக்கும் மருந்தை செலுத்த மறுத்ததால் கல்தா), வேறு வழியேயின்றி அவரது உடலிலேயே அந்த மருந்தை செலுத்திக்கொள்ள, வில்லன் பல்லி ரெடி. இதன்பின் என்ன நடக்கும் என்பதை யார் வேண்டுமானாலும் செப்பி விடலாமே?

படத்தை எப்படி எடுத்திருக்கிறார்கள்? பழைய படங்களை விட இது தேவலாமா அல்லது மொக்கையா?

இந்தப் படத்தில் 3D உபயோகிக்கப்பட்டிருக்கும் விதத்தில், சமீபகாலமாக வேறு எந்தப் படத்திலும் 3டியை அனுபவித்திருக்க முடியாது என சொல்லலாம். ஸ்பைடர்மேன் தாவுவதை இப்படித்தான் பார்க்கவேண்டும். அசத்தல்! இந்தப் படத்தை 3Dயிலேயே பாருங்கள்.

ஒரு விஷயம் ஆல்ரெடி இருந்தால், அதையே புதிதாக எடுக்கும்போது எல்லாவற்றிலும் அந்தப் பழைய மேட்டருக்கு ஆப்போஸிட்டாகவே எடுப்பது வழக்கமல்லவா? அதைப்போல் இதிலும், பழைய படங்களுடன் ஒப்பிட்டால் எக்கச்சக்க நுண்ணிய மாற்றங்கள் உள்ளன. அவற்றை வெளியே சொல்லிவிட்டால் படத்தின் சுவாரஸ்யங்கள் போய்விடும். படம் பார்க்கப்பார்க்கவே அந்த ஆப்போஸிட் மேட்டர்கள் உங்களுக்குப் புரிந்துவிடும்.

ஓவரால்,  பழைய ஸ்பைடர்மேன் படங்களைவிட இப்படம் நன்றாகவே வந்திருக்கிறது. ஏனெனில், எப்படி பியர்ஸ் ப்ராஸ்னனைவிட தற்போது டானியல் க்ரெய்க்கின் ஜேம்ஸ்பாண்ட் மிகவும் சீரியஸாக, ஒரு கொலைகாரனைப் போலவே காட்டப்படுகிறாரோ , அதேபோல், பழைய பீட்டர் பார்க்கரைவிட, இந்தப் புதிய பார்க்கர் இன்னும் கொஞ்சம் சீரியஸானவன். அதேசமயம் ஒருவித ஆளுமையும் உள்ளவன். டோபி மாகையரின் ஸ்பைடர்மேன் சித்தரிப்பு, அதாரிடி இல்லாத ஒரு காமெடி சிறுவன் போல. ஆனால் ஆண்ட்ரூ கார்ஃபீல்டின் சித்தரிப்பு, சீரியஸ்னெஸ்ஸுக்காகவே பிடித்துப்போகிறது.

பிற கதாபாத்திரங்கள் வழக்கப்படியே. பீட்டர் பார்க்கரின் முதல் காதலியாக வரும் க்வென் ஸ்டேஸி, இப்படத்தின் மூலம் பிரபலமாகிவிடுவாள். மேரி ஜேன் மெதுவாக இனி மறக்கப்படலாம்.

படம் கட்டாயம் பார்க்கலாம்.

The Amazing Spider-Man படத்தின் ட்ரய்லர் இங்கே.

பிகுக்கள்

1. ஸ்பைடர்மேன் காமிக்ஸின் பிரம்மா ஸ்டான் லீ, வழக்கப்படி இந்தப் படத்திலும் கச்சிதமாக நான்கே செகண்டுகள் காமியோவில் வந்துபோகிறார். படம் பார்க்கும் நண்பர்கள், எங்கே வருகிறார் என்று ஃபேஸ்புக்கிலோ அல்லது இங்கேயோ சொல்லுங்கள் பார்க்கலாம் (இந்தக்கேள்வி, ரஜினியின் பெயர் என்ன என்பதைப்போல் படுசுலபமானது).

2. வழக்கமான அவெஞ்சர்ஸ் படங்களைப்போல், டைட்டில்கள் முடிந்தவுடன் இதிலும் ஒரு ஸீன் உண்டு (ஆனால் அதில் அவெஞ்சர்களோ அல்லது நிக் ஃப்யூரியோ வருவதில்லை).

3. படத்தின் tagline - The untold story என்பது ஒருவகையில் சரி. ஸ்பைடர்மேன் முந்தைய படங்களைப் பார்த்துவிட்டவர்களுக்கு அது புரியும். இரண்டிலும் ஒரே போன்று வரும் ஸீன்கள் எப்படி முடிகின்றன என்பதைக் கவனியுங்கள்.

 

பதிவின் மூலம் : The Amazing Spider-Man (2012) - English

கருந்தேள் கண்ணாயிரம்

comments powered by Disqus