திரைவிமர்சனம்

உசுரே இல்லாத கோழி, ஓடே இல்லாத முட்டை போட்டுச்சாம். அதை விரலே இல்லாத சமையல்காரன் எடுத்து நெருப்பே இல்லாத அடுப்புல வேக வச்சானாம். கடைசியில என்னாச்சு? ஒரு காலத்துல கதையா சொல்லி அசத்துன டிஆர் மகன் அதையும் ஆம்லெட்டுன்னு நினைச்சு ஆசையா விழுங்குனாராம். போங்கய்யா... நீங்களும் ஒங்க ட்ரிப்பிள் ஏ-வும்!

சிம்பு கால்ஷீட் கிடைச்சா போதும். வெறும் சட்டியில வித்தை காட்டிடலாம் என்று நினைத்த இப்படத்தின் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரனை குறை சொல்வதா? நம்ம குலப் பெருமை சொல்லி கும்புடு போட ஒருத்தன் கிடைச்சான். பழம் பெருமை பேசியே பசியாறிடலாம்னு நினைச்ச சிம்புவை குறை சொல்வதா? அல்லது இவங்க இரண்டு பேரையும் நம்பி கோடி கோடியா கொட்டுன படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை குறை சொல்வதா? மொத்தத்தில் சிம்புவின் கொஞ்ச நஞ்ச மார்க்கெட்டில், மவுலிவாக்கமே விழுந்து மண்ணை மூடிய அதிர்ச்சி.

ரசிகர்களின் ஆராதனையை சூடமாக நினைத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டிய சிம்பு, தன் தொழிலில் காட்டிய அலட்சியம்தான் இப்படி அருவறுப்பாக வந்து விடிந்திருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரனின் டைரக்டர் சங்க உறுப்பினர் அட்டையை பிடுங்கி பல்லாயிரக்கணக்கானோர் புடை சூழ அதை கடலில் எறிவதைவிட சிறந்த விமோசனம் ஏதும் இருந்தால், அதை கூட செய்யுங்கள். வேண்டாம் இனி... இப்படி! ஒரு ‘டான்’ கதையை இப்படி‘டான்’ எடுப்பாங்களா ஆதிக்?

‘முது’ரை மைக்கேல் (ஏம்பா... சரியாதான் சொல்றேனா?) சிம்பு ஜெயிலில் இருந்து தப்பிப்பதுதான் முதல் பிளாஷ்பேக். அதற்கு முன்பு படத்தில் ஒரு ‘பேக்’ இருக்கிறது. அது கஸ்தூரியின் ‘பேக்’! தன் உதட்டை என்னவோ போல நாக்கால் தடவிக் கொண்டு என்ட்ரி கொடுக்கிறார் அவர். அவரது காஸ்ட்யூமும், நடிப்பும்...? ‘கவர்ச்சியா ஒரு ஆன்ட்டி வேணும்’ என்று நினைத்தது கூட ஒ.கே. அதற்கு இவர்தானா கிடைத்தார் ஆதிக்.? இவர் காட்டுகிற அருவறுப்பான கவர்ச்சிக்கே தியேட்டர் உவ்வே ஆகிக் கிடக்க, மரத்தமிழச்சிடா... என்று அவர் குரலுயர்த்துவது ஐயே... ஐயய்யே! முதலில் மறைங்க தமிழச்சி!

அதற்கப்புறம் படத்தில் சிம்பு, தமன்னா, விடிவி கணேஷ் தவிர மற்றதெல்லாம் ஈயம் பித்தளைக்குக் கூட தேறாத கேஸ்கள்! இதில் வில்லனாக நடித்திருக்கும் அந்த நபர், ஒன்ஸ்மோர் சிவாஜியை உப்புத்தாள் வச்சு தேய்ச்ச மாதிரியிருக்கிறார். பல நேரங்களில் சிம்புவே அப்படிதான் இருக்கிறார். படத்தில் இன்னும் நானூறு கெட்டப் கூட போட்டுக்கோங்க. பட்... ஒன்றும் இன்னொன்றும் ஒரே வெயிட்டில் இருந்தால் எப்படி பிரதர்? அதிலும் அந்த அஸ்வின் தாத்தா கெட்டப், இந்தியன் கமல்(?) கெட்டார் போங்க. துளி கூட மெனக்கெடாமல் ஆங்காங்கே வெள்ளை மை தடவினால் ஆகிடுமா?

எந்நேரமும் இவரை புகழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். படத்தில் சிம்பு வருகிற எல்லா காட்சிகளுமே ஹீரோ ஓப்பனிங் காட்சிகளாக இருப்பதுதான் ஷாக். டி.ஆரின் குடும்பத்துக்கேயுரிய ‘உயர்வு நவிர்ச்சி அணி’ ஓவராக தலைக்கு ஏறி பிதற்றவும் வைத்திருக்கிறது சிம்புவை. ஒரு பாடலில் எம்.ஜி.ஆருக்கு பின் நான்தான் என்கிறார். இன்னொரு காட்சியில் இவரை ரஜினி, கமல் என்று வர்ணிக்கிறது டயலாக். இது போல இன்னும் நாலு படத்தில் தொடர்ந்து நடித்தால், “மிஸ்டர் சிம்பு... நீங்க குள்ளமணியாக கூட ஆகமுடியாது” என்பதுதான் பேக்ட்டு.

அப்புறம் சிம்புவே திடீரென ஆவேசத்துடன் தனுஷ், விஷாலையெல்லாம் சீனுக்குள் இழுக்கிறார். கதைக்காக இவரா? இவருக்காக டயலாக்கா? யாருக்காக எது? எதற்காக இது? என்றெல்லாம் குழப்பம் வந்து கும்மியடித்துக் கொண்டேயிருக்கிறது ஒவ்வொரு காட்சியிலும்.

ஆதிக் ரவிச்சந்திரனின் கற்பனை திறமைக்கு ஒரே ஒரு சான்று. ரேஷன் கடை க்யூவில் நிற்கிறார் சிம்பு. பக்கத்தில் இன்னொரு க்யூவில் ஸ்ரேயா. “அவ என்னையே பார்க்கிற பாரேன்” என்று கூறுகிற சிம்பு, “இப்ப நான் கொட்டாவி விடுவேன். பதிலுக்கு அவளும் விடுவா பார்” என்று கூறி கொட்டாவி விட, அந்த க்யூவில் நிற்கிற அத்தனை ஆன்ட்டிகளும் ஆவ் என்று வாய் திறக்கிறார்கள். சிம்புவை கேவலப்படுத்த இதை ஒரு குறியீடாக பயன்படுத்துகிறாரோ டைரக்டர்?

அதற்கப்புறம் படத்தில் ஒய்ஜி.மகேந்திரன்தான் ஸ்ரேயாவின் அப்பா. இவருக்கு ஸ்விட்சை தொட்டால் ஷாக்கடிக்கிற யோகம். ஒவ்வொருமுறை இவருக்கு ஷாக்கடிக்கும் போதும், இவரது வாய்க்குள் வாய் வைத்து கரண்ட்டை உறிஞ்சி எடுக்கிற வேலை சிம்புவுக்கு. (ஒங்க கற்பனையில ஆயிரம் வாட்ஸ் கரண்ட்டை விட்டுதான்யா பொசுக்கணும்!) அதுவும் மேற்படி காட்சிகளில் நடிப்பு என்ற போர்வையில் ஒய்.ஜி.மகேந்திரன் செய்யும் சேஷ்டைகளை பார்த்தால் ஒருவாரத்திற்கு குடலுக்குள் தண்ணி கூட இறங்காது! ச்சேய்...  

ஐயோ பாவம் தமன்னா. வழி புரியாத ஊர்ல குழி தெரியாம விழுந்த குட்டியாடு மாதிரி கிடந்து திணறுகிறார்.

யுவன் சங்கர் ராஜாதான் தன்னால் முடிந்தளவுக்கு பின்னணி இசையை போட்டு உருட்டி மிரட்டி போராடிப் பார்க்கிறார். எடுபட்டால்தானே?

மொத்தத்தில் படம் சொல்லும் நீதி? அறுபது வயசிலும் லவ் வரும். வந்தா ஏத்துக்குங்க(டி) என்பதுதான். இந்த டி உபயம்... சிம்பு அண்டு ஜி.வி.பிரகாஷ். காதல் பற்றியும் பெண்கள் பற்றியும் இவர்கள் மாய்ந்து மாய்ந்து தரும் விளக்கங்களை கேட்டால், தலை சுற்றுகிறது.

இந்தப்படத்தின் பார்ட் 2 வுக்கான அறிவிப்பு திரையில் மின்ன மின்ன ஒரு வணக்கம் போடுகிறார்கள்.

பழைய பிளேடை வச்சு ‘பைல்ஸ்’ ஆபரேஷன் பண்ற டாக்டருங்கள்லாம் ஒண்ணு கூடி, ஹார்ட் ஆபரேஷன் பண்ண கிளப்பியிருக்காய்ங்க. என் அன்பு தமிழனே.... ஸ்பேர்ட் பார்ட்ஸ் பத்திரம். அவ்ளோதான். அவ்ளோதான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தமிழ் சினிமாவில் உயரமான நடிகர்கள் பலர். அவர்களில் சத்தியராஜ், விஷால் ஆகிய இருவரையும்விட உயரமானவர் நெப்போலியன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து