திரைவிமர்சனம்

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்யமே! அவன் ஆதி வாசியாக இருந்தாலும் சரி. பங்களாவாசியாக இருந்தாலும் சரி. இடம் மாறுகிற எதற்கும் அவன் மட்டும் பொறுப்பல்ல. சுற்றமும் சூழலும்தான் என்பதை பக்காவான ஒரு காதல் கதையாகவும், பரிதாபமான ஒரு காட்டுக் கதையாகவும் சொல்ல நினைத்திருக்கிறார் ஏ.எல்.விஜய்.

படம் முடிந்தபின்பு எந்தெந்த காட்டிலிருந்து எத்தனையெத்தனை மலைவாழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை வெளியிட்டு, ஒரு சின்ன ‘ஷாக்’ கொடுக்கிறார் அவர். காட்டு பலாப்பழத்தை கையாலேயே உரித்து, கலகலப்பாக ஊட்டியதில் கமர்ஷியல் ருசியும் கலந்திருப்பதால் ஏ.எல்.விஜய்க்கு ஒரு “ஒஹோய்...”

அந்தமான் காட்டுப்பக்கம் விசிட் அடிக்கும் ஹீரோயின் சாயிஷா அண்டு பிரண்ட்ஸ் குரூப், தங்கள் காரில் அடிபட்டு விழும் காட்டுவாசி ஜெயம் ரவியை விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்த்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் நழுவுகிறார்கள். காட்டைத் தவிர எதையும் கண்டிராத ரவி ஆஸ்பிடலையே துவம்சம் செய்ய... எப்படியோ மீண்டும் கொண்டு வந்து சாயிஷாவிடம் காட்டுவாசியை சேர்த்துவிடுகிறது ஆஸ்பிடல். அப்புறம் அந்த கா.வாசிக்கும், இந்த கனகாம்பரத்திற்கும் நடுவே முகிழ்க்கும் சொல்ல முடியாத சொச்ச மிச்ச சோன்பப்டி.... வேறென்ன லவ்தான்!

காட்டு பாஷையை தவிர வேறெதுவும் தெரியாத ரவியை, அதே காட்டில் விட்டுவிட்டு வரக்கிளம்பும் கோடீஸ்வரி சாயிஷாவுக்கு தன் மீதல்ல... தன் சொத்தின் மீது கண் வைத்திருக்கும் அங்க்கிளின் சுயமுகம் தெரியவர... சாயிஷாவின் முடிவென்ன? வனமகன் நிறைவு!

படம் முழுக்க ஜெயம் ரவி பேசுவது ஒரே ஒரு தமிழ்வார்த்தை. அதுவும் காதலியான காவ்யா என்ற பெயரை திக்கி திக்கி..! காட்டுக்குள் போனபின் அவர் பேசும் பாஷை யாருக்கும் புரியப்போவதில்லை. பேசினால் என்ன, பேசாவிட்டால்தான் என்ன? பட்... தன் எக்ஸ்பிரஷன்கள் அனைத்தையும் வார்த்தைகளை மூடி வைத்துவிட்டு காட்ட வேண்டிய கட்டாயத்திலிருக்கும் ரவி, ச்சும்மா பிய்த்து உதறியிருக்கிறார். சவாலான அந்த கேரக்டரை, தன் அனுபவத்தால் கடந்துவிடும் ரவியின் வித்தியாசமான கதை தேர்வுக்காகவே கூடை நிறைய பாராட்டுகள்.

ஒவ்வொரு முறையும் சாயிஷாவுக்காக சண்டை போட்டுவிட்டு, பாராட்டுகளை வேண்டி முதுகு காட்டி குனியும் அந்த பவ்யம் அழகோ அழகு! சண்டைக்காட்சிகளில் புயல் போல சீறியிருக்கும் ரவியின் புயல் வேகத்திற்கு தியேட்டர் குதூகலமாகிறது. குறிப்பாக அந்த பார்ட்டி சீன் பிரமாதம்! மிக சிறப்பாக கம்போஸ் செய்த ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவுக்கும் தனி பாராட்டுகள்.

இன்னும் கொஞ்ச நாளைக்கு சாயிஷாவே தமிழ்சினிமாவின் கனவுக் கன்னி. த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னாவின் ஒட்டுமொத்த கலவையாக இருக்கிறார். உதடும் கண்களும் கன்னங்களும் மட்டுமல்ல. வழுக்கிவிடும் இடுப்பு கூட பாடல் காட்சிகளில் பேசுகிறதேய்யா...

‘மேடம் பாப்பா மேடம் பாப்பா’ என்று கூவிக்கொண்டே வருகிற தம்பி ராமய்யா, ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். டிபிக்கல் வில்லனாக பிரகாஷ்ராஜ். “இரண்டு கோடியை இரண்டாயிரம் கோடியாக்கியிருக்கேன். சும்மா இல்ல...” என்று ஒரு வசனத்தில் தன் உண்மை முகம் புரிய வைக்கிறார்.

சண்முகராஜா குழந்தையை பறிகொடுத்துவிட்டு தவிப்பது போல ஒரு காட்சியும் இல்லை. திடீரென அவர் தன் மகளை ஆதிவாசி கூட்டத்தில் பார்க்கிற போதும் கூட ஷாக் இல்லை. அந்த ஒரு காரணத்தினாலேயே அதற்கப்புறம் அழுது புரள்வது எதுவும் ஒட்டவும் இல்லை.

காட்டுவாசிகளின் தேவை மற்றும் சுதந்திரம் குறித்து இன்னும் கூட பேசியிருக்கலாம். ஆனால் போதனைக்குள் அடங்கிவிட்டால் என்னாவது என்கிற அச்சம் காரணமாகவே தவிர்த்திருக்கிறார் ஏ.எல்.விஜய்.

விஸ்தாரமான காடு. அதை தன் சின்ன லென்சால் அகலமாகவும் ஆழமாகவும் விழுங்கியிருக்கிறது திருநாவுக்கரசின் கேமிரா. இயற்கை வெளிச்சத்தில் அந்த காடு அப்படியே நம் கண் முன் வந்து மிரட்டுகிறது. பாராட்டுகள் சார்.

ஹாரிஸ் ஜெயராஜுக்கு இது 50 படம். அட்வான்ஸ் கொடுக்கும் போதே அதை கொஞ்சம் அழுத்தமாக ஞாபகப்படுத்தியிருக்கலாம்.

ஒருகாட்டுவாசி. அவனை ஏதோ ஒரு விதத்தில் அன்பு பாராட்டும் ஒருத்தி. அது காதலாகதான் இருக்க வேண்டுமா விஜய்? அதுவும் பல நூறு கோடிகளுக்கு அதிபதியான அவள் இப்படியெல்லாம் முடிவெடுப்பாளா? நெருடல்!

இதுபோன்ற சின்ன சின்ன குறைகளை ஜெயம் ரவி போலவே அசால்டாக தாண்டிவிடுகிறது ரசிகனின் மூளை.

காரணம் வனம்... அதன் மீது போகுதே மனம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.