Sunday, May 26th

Last update11:46:32 PM

சுந்தரபாண்டியன் : சசிக்குமாரின் 'நட்பு' ஃபோர்முலாவுக்கு மீண்டும் ஒரு சக்ஸஸ்!

வழக்கமான சசிகுமாரின் “நட்பு” கேட்டகிரி படம்தான்..! ஆனால் சக்ஸ்ஸில் நாடோடிகளைத் தொடும் என்கிறார், வலைப்பதிவாளர் உண்மைத்தமிழன்.

இதோ அண்மையில் திரைக்கு ஆர்ப்பாட்டாமல் திரைக்கு வந்து வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் சசிகுமாரின் சுந்தரபாண்டியன் குறித்து உண்மைத்தமிழன் எழுதிய விமர்சனத்தை அவருடன் அனுமதியுடன் இங்கு மீள்பிரசுரிக்கிறோம் - 4தமிழ்மீடியா குழுமம்

வீட்டில் அப்பத்தா, இரண்டு அம்மாக்களின் செல்லம்.. மற்றும் ஊரில் இருக்கும் பல்லு போன கிழவிகளுக்கும், பல்லு போகக் காத்திருக்கும் ஆண்ட்டிகளுக்கும் லவ்வர் பாய்தான் இந்த சுந்தரபாண்டி. வாயைத் திறந்தால் கேலி, கிண்டல், நக்கல்.. இதில் ஊர்க்கார பெண்கள், உறவுக்காரப் பெண்கள் என்றில்லாமல் எப்பவும், எல்லா விஷயத்துலேயும் நான் ஒப்பனா இருப்பேன்னு சொல்ற கேரக்டர்.. நண்பர்களுக்கு உதவுவதென்றால் இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆர்வம்..!

நெருங்கிய நண்பனின் காதலுக்கு உதவப் போய்... அது இவருக்கே காதலாக மாறி.. இதனால் ஏற்படும் சிறு சண்டையில் ஒரு மரணம் நிகழ்ந்து கொலைக்குற்றத்துக்கு ஆளாகி நிற்கும் சசிகுமார், இறுதியில் காதலியை மணந்தாரா..? இல்லையா? என்பதுதான் கதை..!

சிறிதளவு கடுகாக சுப்பிரமணியபுரம்.. வெங்காயமாக நாடோடிகள்.. பூண்டுவாக தூங்கா நகரம்.. மற்றபடிக்கு ஆங்காங்கே மிச்சம் மீதியிருந்த தனது படங்களையே காப்பி பேஸ்ட் செய்து கொடுத்திருந்தாலும், வழங்கல் துறையினர் புதிய ஆளுகளாக இருந்ததால் இறுதி வரையிலும் ரசிக்கவே முடிந்தது..!

முதல் 20 நிமிடங்களுக்கு யார் பேசுவதற்கு சிரிப்பது என்ற யோசனையில் மூழ்கியிருந்த நமக்கு, ஆபத்வாந்தனாக வந்து வாய்க்கிறார் இனிகோ இளங்கோ.. இவரது காதல் கதையின் ஒரு டிவிஸ்ட்டை ஏற்படுத்த  சசிகுமார் களத்தில் குதித்த பின்புதான் பரோட்டா சூரி, சசி, இனிகோவின் தப்பாட்டம் துவங்கிறது.. சிறிது நேரத்தில் அப்புக்குட்டியும் சேர்ந்து கொள்ள இடைவேளை வரையிலும் படம் ஜிவ்வுதான்..!

சசிகுமாருக்கு ஏற்ற கேரக்டர்தான்.. நடிப்பதே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்கு இப்போதைக்கு தமிழ்ச் சினிமாவில் அண்ணனைவிட்டால் வேறு யாரும் இல்லை..! எந்த இடத்திலும் இவர் நடித்திருக்கிறார் என்று யாரும் சொல்ல முடியாது.. இயல்பாக எப்படி இருப்பாரோ அப்படித்தான் கடைசிவரையிலும் இருக்கிறார்..

தாடியுடன் தான் நடிப்பதும்.. இது போன்ற அசால்ட்டாக வந்து போவதிலும் இதுதான் கடைசி படம் என்று பிரஸ் மீட்டில் சொல்லியிருக்கிறார் சசி.. இதனை உடனே நடைமுறைக்குக் கொண்டு வந்தால் நல்லது என்றே நினைக்கிறேன்..! என்னதான் தலையில் இடி மாதிரி அந்த அடியை வாங்கிக் கொண்டும், காணாமல் போகும் காட்சியெல்லாம் கொஞ்சம் ஓவராகவே இருக்கிறது..! ஹீரோயிஸம் தேவைதான்.. ஆனால் இந்த அளவுக்குத் தேவைதானா..?

லட்சுமி மேனன் அசத்தல்.. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகு.. குறைவில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார்.. தான் பள்ளியில் படிக்கும்போது சசிகுமார் தன்னிடம் பேசிய அதே டயலாக்கை இப்போது திருப்பிச் சொல்லிவிட்டு போகும் அந்த ஒரு காட்சியிலேயே மொத்த ஆடியன்ஸையும் கவர்ந்துவிட்டார்..! பாடல் காட்சிகளின் மாண்டேஜ்களிலும், அப்பாவிடம் காட்டும் மெளனம்.. சசி அண்ட் கோவிடம் பேருந்தில் காட்டும் முறைப்பு.. தோழியிடம் காட்டும் அலட்சியப் பார்வை.. சிடுசிடுப்பு.. சசியின் அப்பாவை பார்த்தவுடன் படும் சந்தோஷம்.. கல்யாணத்தை எதிர்பார்த்து அவர் காட்டும் ரியாக்ஷன்ஸ்.. இன்னுமொரு அழகுடன் கூடிய நடிப்பு தேவதை தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்..!

இனிகோ, சூரியைவிடவும் அப்புக்குட்டிதான் என்னை பெரிதும் கவர்ந்திருக்கிறார்.. மன்னாரு போன்ற படங்களில் தனி ஹீரோவாக ஆக்ட் செய்து கொண்டே இது போன்ற படங்களில் தனி கேரக்டரில் நடிக்க துணிந்திருக்கும் அவருடைய ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்..! ஒரு மாசம் நீங்க.. ஒரு மாசம் அவங்க என்ற டீலிங்கிற்கு ஒத்துக் கொண்டு ஹீரோயினை கவர அவர் செய்யும் சாகசங்கள் அனைத்தும் செமத்தியான ஜோக்ஸ்..!  அதேவேகத்தில் லட்சுமியை பார்த்து பஸ்ஸின் கீழேயிருந்து கோபத்துடன் உதிர்க்கும் பேச்சுக்களும் சரவெடி..

இவருடைய எதிர்பாராத திடீர் முடிவைத்தான் எதிர்பார்க்க முடியவில்லை..! அதிலும் படத்தில் பல இடங்களில் வைத்திருக்கும் இது போன்ற டிவிஸ்ட்டுகள்தான் படத்தின் வெற்றியை இப்போது தீர்மானித்திருக்கிறது..! சசிகுமாரின் லவ் டிராக்ஸ்.. இனிகோவுக்காக சசி ஏற்றுக் கொண்ட பழி.. இனிகோவின் கிளைமாக்ஸ் பழிவாங்கல்.. விஜய் சேதுபதியின் கிளைமாக்ஸ் ருத்ரதாண்டவம் என்று அனைத்துமே சற்றும் எதிர்பார்க்காதவை.. ஆனால் இது சுப்பிரமணியபுரத்தை நினைத்துப் பார்க்க வைத்தாலும், அடுத்தது என்ன என்றுதான் ஏங்க வைத்தது..!

சின்னச் சின்ன கேரக்டர்கள் மூலமாகவும் இந்தப் படத்தின் சுவாரஸ்யம் குன்றாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.. சசியின் முறைப் பெண்ணாக வருபவர்.. லட்சுமியின் சித்தியாக வரும் சுஜாதா.. கல்லூரிக்கு எதிரில் தச்சு வேலை செய்யும் நண்பர்.. லட்சுமி அப்பாவின் மீசைக்கார நண்பர்.. அப்புக்குட்டியின் உறவினர்கள்.. விஜய் சேதுபதி மற்றும் அவரது அண்ணன்.. என்று பல இடங்களிலும் இவர்களது கேரக்டர் ஸ்கெட்ச்சே சுவாரஸ்யமாக இருந்தது..!

சுந்தரபாண்டியன் : சக்ஸஸ் பிரஸ் மீட் புகைப்படங்கள்

தென்மேற்குப் பருவக் காற்றில் காற்றாய் ஒலித்த ரகுநந்தனின் இசையில் கொண்டாடும் மனசும், ரெக்கை முளைத்ததேனும் பாடல்கள் பார்க்கவும், கேட்கவும் இனித்தன..! ரோஜா படத்திற்குப் பிறகு கிழவிகளும் ஒரு தப்பாட்டத்தில் ஆடியது இந்தப் படத்தில்தானோ..? பாடல் காட்சிகளின் மாண்டேஜ் சீன்ஸ்களை ரம்மியமாக எடுத்திருக்கிறார் இயக்குநர்..! அதிலும் பேருந்தின் வாசலில் நின்று கொண்டு சசியும், லட்சுமியும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து நிற்கும் அந்த ஒரு ஷாட்.. பிரமாதம்..!

காதல் என்ற கத்திரிக்காயை தமிழ்ச் சினிமா இயக்குநர்கள் விதம், விதமாக சமைத்துக் கொடுத்தாலும் அது ருசிக்கத்தான் செய்கிறது.. காதலிக்கப்படும் பெண்களும், காதலிக்கத் துடிக்கும் ஆண்களும் என்னென்ன பாடுபடுவார்கள் என்பதை முதல் பாதியில் சசிகுமார் செய்து காட்டுவது அத்தனையும் சூப்பர்..! இந்த வித்தைக்காகவே இந்தப் படம் நிச்சயம் தலையில் தூக்கி வைக்கப்படும் என்றே நினைக்கிறேன்.. காதலில் டாக்டரேட் பட்டம் வாங்கியதுபோல் பேசும் சசி, லட்சுமியின் கண்களை வைத்தே உண்மையைக் கண்டுபிடித்துவிட்டு தான் திரும்பிக் கொள்வதும்.. லட்சுமி சொல்லி “அதை” கேட்டவுடன், அவர் காட்டும் ரியாக்ஷனும் காதலர்களுக்கு நிச்சயம் பிடித்தமானதுதான்..!


புதிய இயக்குநர் பிரபாகரன் தனது குருவுக்கு நல்லதொரு படத்தைக் காணிக்கையாக்கியிருக்கிறார். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் காதலர்களுக்கும், காதலுக்கும் ஜே சொல்லும் விதமாகவே காட்சிகளை வைக்க பிரம்மத்தனம் செய்யும் சசிகுமார், முதல் மூன்று நாட்களில் தியேட்டர்களுக்கு வந்து குவியும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும், ஆர்வத்தோடு தேடி வரும் தன்னுடைய ரசிகர்களுக்கும் எந்தவிதத்திலும் ஏமாற்றம் தரக் கூடாது என்பதற்காகவே மெனக்கெட்டு இந்தப் படத்தின் திரைக்கதை விவாதத்தில் பெருமளவில் பங்கெடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது..! வாழ்க அவரது தொழில் பக்தி..!

“குத்துனவன் நண்பனா இருந்தா, அவன் குத்துனதை, செத்தாலும் வெளிய சொல்லக் கூடாது...” - இதுதான் கிளைமாக்ஸில் சசிகுமார் சொல்லும் பஞ்ச் டயலாக்.. இனி வரும் காலங்களில் நட்புக்கு உதாரணமாக இதனை பலவிதங்களில் நாம் பார்க்கலாம்.. நட்புக்கும், காதலுக்கும் மீண்டுமொரு முறை மரியாதை தந்திருக்கும் சசிகுமாருக்கும், இயக்குநர் பிரபாகரனுக்கும் வாழ்த்துக்கள்.

தொடர்பு பதிவு : கமலும் அஜித்தும் என்னைக் கூப்பிட்டு பாராட்டணும்! : சுந்தரபாண்டியன் நடிகரின் சூப்பர் ஆசை!

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus