திரைவிமர்சனம்
Typography

படத்தில் வரும் எல்லாரையும் அழுக்குல போட்டு புரட்டியெடுத்தால் ‘பாலா பிராண்டு படம் ரெடி’ என்று யாரோ கோடம்பாக்கத்தின் கல்வெட்டில், கோழிக் கிறுக்கல் போட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.

தியேட்டரை கழுவி, ஸ்கிரீனையும் கழுவினாலும் கூவத்தின் அழுக்கும், கூட்டத்தின் அழுக்கும் போகாது போகாது! அதுவும் முதல் காட்சியிலேயே கூவத்தில் முங்கி கன்னங் கரெலென எழுகிறார் ஹீரோ. எதுக்குய்யா அப்படியொரு காட்சி? என்று படம் முடிந்த பின்பு யோசித்தாலும், பலன்... முட்டைதான்!

மனம் போன போக்கில் வாழும் ரவுடிதான் ஹீரோ சதீஷ் ராவண். பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். “ஏதாவது கொலை, கொள்ளைன்னு பெருசா செஞ்சுட்டு ஜெயிலுக்கு போவியா, அத விட்டுட்டு...” என்று அலுத்துக் கொள்ளும் அவனது அம்மா. அடைஞ்சா இவன்தான் என்று உருகி உருகி காதலித்து கள்ள உறவில் பிள்ளை பெறும் ஹீரோயின் டெல்னா டேவிஸ். லோக்கல் தாதாக்கள் இருவர். அவர்களால் வேலை வாங்கப்படும் சில இளைஞர்கள். அப்புறம் எந்நேரமும் நாற்றமும் இருட்டுமாக இருக்கிற லொக்கேஷன். இவையெல்லாம் கூடிக் கும்மியடிக்கிற கொட்டேஷன் பாயின்ட்தான் இந்த ஆக்கம். இப்படி தாறுமாறாக வளர்கிற ஹீரோவுக்கு, வழக்கமாக என்ன முடிவு கிட்டும்? இதுதான் இந்த படத்தின் க்ளைமாக்ஸ்.

சதீஷ் ராவண் இந்த படத்திற்காக அவ்வளவு சிரமம் சுமந்திருக்கிறார். ஆரம்பக்காட்சியில் இவர் ஆடும் பிணக்குத்து, அப்படியொரு மரண மாஸ்! ஒரு காட்சியில் கூட, ‘நடிக்கிறாரே...’ என்று தனியாக பிரித்துப் பார்க்க முடியாதளவுக்கு கேரக்டரோடு கரைந்திருக்கிறார். அடித்தது பித்தளை செயின் என்று ஏமாந்து, அடுத்த சில நிமிஷங்களில் அதை தங்க செயினாக மாற்றிவிடுகிற அந்த யுக்தி, எத்தனை பேருக்கு தொழில்(?) கற்றுக் கொடுக்குமோ? தனது தவறெல்லாம் தவறென்றே அறியாத இளைஞர்களின் பிரதிபலிப்பாகவே இருக்கிறார் ஹீரோ. இன்னும் பொறுத்தமான படங்கள் அமைந்தால், கோடம்பாக்கத்தில் ஸ்டடியாகலாம்.

அப்பாவி பெண்களின் மொத்த பிம்பமாக இருக்கிறார் ஹீராயின் டெல்னா டேவிஸ். லட்சுமிராமகிருஷ்ணன் நடத்தும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ டைப் ஷோக்களுக்கென்றே படைக்கப்பட்டது போன்றதொரு கேரக்டர். உணர்ந்து நடித்திருக்கிறார் அவரும்.

குடிகார அப்பனாக வரும் கயல் தேவராஜ், தப்பா பொறந்த புள்ள ஒண்ணும் தப்பேயில்ல... என்று மகளிடம் சமாதானம் ஆகும்போது கலங்க விடுகிறார்.

முன்னாள் ஹீரோ ரஞ்சித்தும் நடித்திருக்கிறார். ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரியில்லை.

இந்த கூட்டத்திலும் படித்து கலெக்டர் ஆகிற ஒருவனின் கேரக்டர், அடிக்கிற வெயிலில் ஆங்காங்கே தெளிக்கப்பட்ட மழைத்துளி.

ஏரியாவுக்கேற்ற அடி அடித்து பின்னி பிரமாதப்படுத்திவிட்டார் ஸ்ரீகாந்த் தேவா. அதிலும் அந்த முருகன் பாட்டு, குத்துக்கு குத்து. பக்திக்கு பக்தி!

சமீபகாலங்களாக வரும் வடசென்னை படங்கள், அப்பகுதி மக்களை வேற்று கிரக ஆசாமிகள் போல நினைக்க வைப்பதுதான் பேரதிர்ச்சி. அந்த அதிர்ச்சியை ரிக்டர் அளவில் வெளிப்படுத்தியிருக்கிறார் டைரக்டர் வேலுதாஸ் ஞானசம்பந்தம்.

ஒல்லியா கிடக்கிறவங்களெல்லாம் பாலாவும் இல்ல. ஓப்பனா பேசுறவங்களெல்லாம் ராதாரவியும் இல்ல.

தலைப்பில் இருப்பதால் மட்டும் ‘ஆக்கம்’ இல்லை.  

-ஆர்.எஸ்.அந்தணன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்