திரைவிமர்சனம்

படம் என்பது ஃபார்முலா! காட்சிகளெல்லாம் கமிட்மென்ட்! பல வருஷமாக தமிழ்சினிமாவை பாம்பு போல பின்னியிருந்த இந்த நியதியை, ஒற்றை சுத்தியல் கொண்டு உடைத்தெறிகிறவன் எவனோ... அவனையெல்லாம் ‘ராம்’ என்ற பெயரிலேயே அழைப்பதாகுக! (இங்கு ஒருமை என்பதை ஓவர் பாராட்டென கொள்க மக்களே...) ராமின் இயக்கத்தில் உருவான இந்த ‘தரமணி’  ஃபார்முலாவுக்குள் அடங்காத சினிமா. கட்டுப்பாட்டுக்குள் அடங்காத கதை!

கதைக்கோ, சினிமாவுக்கோ தொடர்பில்லாமல் நடுநடுவே வாய்ஸ் கொடுக்கிறார் டைரக்டர் ராம். என்ன மாயமோ, அது சூழ்நிலைக்கும் பொருந்தி சுச்சுவேஷனையும் கலகலப்பாக்குகிறது. “மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ருக்கேன். நீங்க மொட்டைன்னு நினைச்சா மொட்டை. முழங்கால்னு நினைச்சா முழங்கால்” என்று அவர் ஆரம்பத்தில் கொடுக்கிற அந்த விளக்கமே அசத்தல்!

காதலில் தோல்வியடைந்த பையன் ஒருவனும், திருமணத்தில் தோல்வியடைந்த பெண் ஒருத்தியும் சந்திக்கிறார்கள். இருவருக்குமே அடித்தளம் ஐ.டி.தொழில்! (புரபஷன்னு இங்கிலீஷ்ல சொல்லியிருக்கணுமோ?) சந்திப்பு மெல்ல காதலாக மாற, லிவிங் டூ கெதர் வாழ்க்கை. காதலியின் மகனையும் கள்ளமில்லாமல் நேசிக்கும் அவனுக்கு ஒரு கட்டத்தில் காதலி மீது டவுட். அதற்கப்புறம் அந்த லிவிங் டூ கெதர் வாழ்வு, வழுக்கல் தரையில் ‘வீலிங்’ ஆகிவிட.... அடிதடி சண்டை வருகிற அளவுக்கு காச் மூச். மீண்டும் திருந்தி வரும் அவனை அவள் ஏற்றுக் கொண்டாளா? கலங்க வைக்கும் முடிவு! தமிழ்சினிமாவில் இதற்கு முன் வந்த உளவியல் படங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல அமைந்திருக்கிறது தரமணி.

ஆண்ட்ரியா நடித்து வந்த படங்களிலேயே அவருக்கு பெயரும் புகழும் வாங்கித் தரப்போகும் படம் இதுதான். என்னவொரு மெச்சூரிடி! கணவனே தப்பானவனாக இருந்தும், அவனது நியாயத்தையும் யோசித்து அன்பு செலுத்தும் அந்த மனசு... ‘என் வாழ்க்கையில இனிமே உன்னை பார்க்கவே கூடாது’ என்று காதலனை துரத்தியடிக்கும் கோபம்... புரியாத வயசிலிருக்கும் மகனின் குழப்பத்தை போக்க வாஞ்சையோடு வாரிக்கொள்ளும் தாய்ப் பாசம், கடைசியில் தன்னை தேடி வரும் காதலனிடம் காட்டுகிற நிதானம் என இந்த கதைக்காகவே பிறந்தவர் போல நிறைந்திருக்கிறார். (அப்பப்ப அடிக்கிற தம்மும், அதன் புகையும்தான் நமக்கு ஜெர்க் கொடுக்குதுங்கக்கா...)

இந்தப்படத்தில்தான் வசந்த் ரவி அறிமுகம்! ராமின் தாடியை கன்னத்திலும், கதையை ஆன்மாவுக்குள்ளும் இறக்கிக் கொண்டு அப்படியொரு ‘ராம்’தாசனாகவே மாறியிருக்கிறார். காதல் தோல்வி தந்த எரிச்சலில், உலகத்திலிருக்கிற அத்தனை பெண்களையும் வளைத்து ஏமாற்றி சாய்ச்சுடணும் என்கிற வெறியோடு கிளம்புவதுதான் பகீர். அதற்கேற்றார் போல எல்லா திருமதிகளும் விழுந்து வைப்பது(?) கதைக்கு உதவியிருக்கலாம். பட்...

கெஸ்ட் ரோல்தான் அஞ்சலிக்கு. அந்த மென்சோக முகம், இந்தப்படத்தின் அந்த துளிக் காட்சிக்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. ‘நான் பார்த்த ஆம்பளைகள்ல நீ மட்டும்தான் நல்லவன்’ என்று அவர் கடைசியாக சொல்லும்போது, கெட்ட நினைப்புள்ளவனும் திருந்துவான்.

தூத்துக்குடி பாஷையில் பேசியபடி தன்னிறைவோடு வாழும் அழகம்பெருமாளின் கதை, எதிரிக்கும் நேரக்கூடாத சோகம். மனுஷன் அப்படியொரு நடிப்பால் அசர விட்டிருக்கிறார்.

படத்தில் எல்லா கேரக்டர்களையும் அச்சு அசலாக அதற்குள் பொருந்த வைக்கிற திறமை கை கூடி வந்திருக்கிறது ராமிற்கு. குறிப்பாக அந்த ஐடி கம்பெனி மேனேஜரும், அந்த இன்ஸ்பெக்டரின் மனைவியும். பிரமாதம்! தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே மட்டும் என்னவாம்? முழு நேர நடிகர் போல மிரட்டியிருக்கிறார் மிரட்டி!

படத்தின் பலம் ராம் என்றால், அந்த பலத்தின் அழுத்தமாக இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. பல படங்களுக்கு பின் இளவலின் ராஜாங்கம்! வாங்க யுவன்... இனிமே உங்க வெற்றிடத்தை நீங்க மட்டும்தான் நிரப்ப வேண்டும். குறிப்பாக நாகூருக்கு ஹீரோ வந்திறங்கும் போது ஒரு இஸ்லாம் பாடலை ஒலிக்க விட்டீர்களே, மெய் சிலிர்த்துவிட்டது.

தரமணியை கழுகு பார்வையோடு சுற்றி சுற்றி வரும் தேனி ஈஸ்வரின் கேமிரா, லயிக்க விட்டிருக்கிறது. வானுயர்ந்த அபார்ட்மென்ட்டுகளை தன் கேமிராவால் தொட்டு தழுவியிருக்கிறார் ஈஸ்வர்.

நடுநடுவே வரும் ராமின் கமென்டுகளுக்கெல்லாம் கைதட்டும் தியேட்டர், அந்த பண மதிப்பிழப்பு கமென்டுக்கு கொடுக்கிற ரியாக்ஷன்,  இந்நேரம் டெல்லிக்கே  தெரிந்திருக்கும்! விசில் சப்தம் அப்படி....!

சொல்ல வருகிற விஷயத்தை முதுகெலும்பை நிமிர்த்திக் கொண்டு சொல்வதுதான் ராமின் துணிச்சல். இந்தப்படத்தில் அது இன்னும் திமிராக நிற்கிறது. ரசிக்கக் கூடிய திமிர்தான் அது என்றாலும், பெண்களை ‘சக்தியாக’ வணங்கும் நாட்டில், அவர்களை ‘சகதியாக’ காட்டியிருப்பதை நினைத்தால்தான் மனம் பதறுகிறது.

இருந்தாலும் நோயை காட்டி எச்சரித்ததுடன், அந்த நோய்க்கான மருந்தையும் நீட்டியிருப்பதால், தரமணி தரமான மணிதான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

மலையாளத்தில் பிரேமம் படத்தில் தன்னம்பிக்கை பொங்கும் இளம் ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் சாய்பல்லவி.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழ்நாட்டில் சைவ, அசைவ உணவங்களில் இன்று அளவு சாப்பாட்டின் சாராசரி விலை 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கிறது.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நிறுத்திவிடலாமா என்று விஜய் தொலைக்காட்சியும் அந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான என்.டி.மோலும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தொலைக்காட்சி வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

யூடியூப்பில் உலக பிரபலமாகி இருப்பது ராணி தாஜ் என்பவரின் பங்கார டோலக்கு வாசிக்கும் வீடியோதான்.