திரைவிமர்சனம்

முப்படை மட்டுமல்ல..., சொறி சிரங்கு படை உள்ளிட்ட எப்படையும் வெல்ல முடியாத ஒரு ஹீரோ! பல்லாயிரம் குண்டுகளுக்கு தப்பி, பல லட்சம் குண்டுகளை எதிரிகளின் மீது ஏவி, அவர் இன்னும் உயிரோடு இருப்பது ஒருவனை கொல்வதற்காக! அந்த ஒருவன் யார்? ஏன் அவனை கொல்ல வேண்டும்? இதுதான் விவேகம்!

நமக்கோ, நமது மண்ணுக்கோ, துளியும் ஒட்டாமல் ஒரு கதையை எழுதி, அதில் ‘மிஸ்டர் க்ளீன்’ அஜீத்தை நடிக்க வைத்திருக்கிறார் சிவா! படம் முழுக்க அஜீத்தை வியந்து கொண்டேயிருக்கிறது ஒவ்வொரு கேரக்டரும். கொடூரமான வில்லன் கூட, ‘அவன் இப்படி சுட்ருப்பானே... அப்படி நடந்திருப்பானே... இப்படி பல்டி அடித்திருப்பானே... அவன் சாதாரண ஆள் இல்ல. அவனை கொல்ல இன்னொருத்தன் பிறந்து வரணும்’ என்று ஜால்ரா அடித்துக் கொண்டேயிருக்கிறார்.

அதற்கப்புறம் சிங்கிள் மேன் அஜீத் ஒன்மேன் ஆர்மியாகி, இராணுவ டாங்கி, ஏர்போர்ஸ் ஏவுகணையை கூட தெருமுனை பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது போல உடைத்து விட்டு உயிர்த்தெழுகிறார். சீரியஸ் ஆன காட்சிகளில் கூட சிரித்து சிரித்து என்ஜாய் ஆகிறது தியேட்டர்.

பரமபிதாவே... இந்த அறியாக் குழந்தைகளின் விளையாட்டை மன்னிப்பாயாக!

பல்கேரியா செர்பியா பகுதிகளில் இயங்கி வரும் பயங்கரவாத ஒழிப்புப் படை அது. அவ்வளவு கூட்டத்துக்கும் ஏட்டய்யா நம்ம அஜீத்துதான். விவேக் ஓபராய், மூக்கு நீண்ட வெள்ளைக்காரி ஒருத்தி. அப்புறம் கன்னங்கரேல் நீக்ரோ ஒருத்தன் என்று பலமான வில் அம்பு டீம் அவருடையது. இந்த பொல்லா பசங்கள், எல்லாருமாகச் சேர்ந்து அஜீத்தை கொல்ல திட்டமிட்டு ஒரு மலைச்சரிவில் வைத்து சுட்டுத்தள்ளுகிறார்கள். குற்றுயிரும் குலை உயிருமாக தப்பிக்கும் அவர் திரும்ப வந்து போடுவதுதான் விளையாட்டின் பைனல் மேட்ச்! நடுவில் காதல் கணவனுக்காக வயிற்றில் குழந்தையுடன் காத்திருக்கும் காஜல் அகர்வால். (இது தனி காமெடி)

அஜீத்தின் திணவெடுத்த தோள்களையும் திடுக்கிட வைக்கும் ஆக்ஷனையும் பிடித்தவர்களுக்கு இந்தப்படம் இருட்டுக்கடை அல்வா. மனுஷன் தோட்டாவை போல பாய்ந்திருக்கிறார். பல காட்சிகளில் அவர் படும் வேதனையையும் அவஸ்தையையும் கண் முன் காட்டுகிறார்கள். (பினிஷிங் டைட்டிலில்)

ஆக்ஷனுக்காக மெனக்கெட்ட அஜீத், அப்படியே கதைக்காகவும் மெனக்கெட்டிருந்தால் விவேகம்... அமோகம்! பட்?

அஜீத்தின் டயலாக் டெலிவரிதான் வயிற்றை கலக்குகிறது. வில்லனிடம் சவால் விடும்போதும் அதே டோன். மனைவியை ரொமான்ஸ் பண்ணும்போதும் அதே டோன். தனக்குத் தானே பேசிக் கொள்ளும்போதும் அதே டோன். ஒரு கட்டத்தில் அவர் ஸ்கிரீனுக்கு அருகில் வந்து நோக்கினாலே, நமது ஹார்ட் பீட் கலங்கி அடங்குகிறது. வேணாம்ய்யா... இதே ரேஞ்சுல போனா, பொய்யா கலைச்ச மன்றமெல்லாம் மெய்யாலுமே ‘மெர்சல்’ ஆகிடும்! ப்ளீஸ்...

காஜலை காப்பாற்ற எங்கிருந்தோ சுட்டுத்தள்ளும் அஜீத், அது தான்தான் என்று மனைவிக்கு கன்வே செய்த பின்பும் சுவற்றில் துப்பாக்கி புல்லட்டுகளால் ஏ.கே என்று இங்கிலீஷில் எழுதி, வீட்டை பொத்தல் போடுவது என்ன மாதிரி மேஜிக்ணே?

கர்ப்பமாக இருக்கும் காஜல், பிறக்கப் போகும் தன் குழந்தைக்கு ஸ்வெட்டர் பின்னும் காட்சியெல்லாம் சரோஜாதேவி காலத்திலேயே வந்தாச்சுண்ணே... சிவாண்ணே? அப்புறம், இந்த காஜல் ஓட்டல் வைத்திருக்கிறாரா? குழந்தைகளுக்கு பாட்டு டீச்சரா? பளபளன்னு இருக்கிற வெள்ளக்காரன் குழந்தைக்கெல்லாம் பாரதியார் பாட்டு சொல்லித் தர்ற அளவுக்கு அவர் என்ன பல்கேரியா தமிழிசை சவுந்தர்ராஜனா? பயங்கர லாஃபிங் மூவ்மென்ட்!

கொஞ்சமாவது காமெடி பண்ணுவார் என்று கருணாகரனை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள். சுத்தம்!

விவேக் ஓபராய்க்கு பயங்கர பில்டப் கொடுக்கிறார்கள். ஆனால் ஒரு கண்ணாடி ரூமிற்குள் நின்றபடி அஜீத்தின் கும்மிடிப்பூண்டி ரசிகர் மன்றத் தலைவர் ரேஞ்சில் பேசிக் கொண்டேயிருக்கிறார். ‘நண்பனுக்கு துரோகம் செய்யணும்னு எவன் நினைச்சாலும் அவன் ஆணிவேர் வரைக்கும் நடுங்கணும். உன் மரணம் கொடூரமா இருக்கணும்’ என்று டயலாக் பேசி அடிக்கும் அஜீத்தும் சரி. அடிவாங்கும் விவேக்கும் சரி. வசனமளவுக்கு வொர்த் இல்லாமல் மோதியிருக்கிறார்கள்.

அக்ஷரா ஹாசனுக்கு அளந்து வைத்த மாதிரி ரோல். இன்டர்நேஷனல் ஹேக்கர். (ஜோக்கர்னாலே தெரியாத நம்ம சனத்துக்கு ஹேக்கர்னா என்னத்தை புரியப் போவுதோ?) எப்படியோ? அஜீத் அவரை விரட்டி கண்டு பிடிக்கும் அந்த நீண்ட எபிசோடில் கொஞ்சம் சுவாரஸ்யம்.

படத்தில் பாடல்கள் இருக்கிறது. அது இசையா, இரைச்சலா என்று இனம் கண்டு கொள்வதற்குள் படமே முடிந்துவிடுகிறது. ஆனால் பின்னணி இசையில், பிரமிப்பூட்டியிருக்கிறார் அனிருத்.

பல்கேரியா, செர்பியா, ஆஸ்திரியா என்று அந்தந்த நாடுகளுக்கே போய் இறங்கிய எபெக்ட்டை வாரி வழங்கியிருக்கிறது வெற்றியின் ஒளிப்பதிவு. இந்தப்படத்தின் ஒரே உருப்படி இவர் மட்டும்தான்!

முழு படமும் கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்யப்படும் வீடியோ கேம்ஸ் போல இருக்கிறது. ஒருவேளை சேட்டிலைட் ரைட்ஸ் போல, வீடியோ கேம்ஸ் ரைட்ஸ்சும் இந்தப் படத்தின் எக்ஸ்ட்ரா பிசினஸ்சில் இடம் பிடிக்குமோ என்னவோ?

நல்லவேளை... இந்தியாவை மேப்பில் ஒருமுறையும், டெல்லியின் இந்தியா கேட்டை ஒரு முறையும் காட்டுகிறார்கள். (ஒங்க தில்லுல திமிசு கட்டையால இடிக்க) ஒரு தமிழ் ஜோடி எப்படி பல்கேரியா போனார்கள் என்பதை இங்கிருந்து ஆரம்பித்திருந்தால்தானே அந்தக்கதை நம் வேரிலிருந்து துவங்கிய நிம்மதியை ஏற்படுத்தும்? கோட்டை விட்டுட்டீங்களே சிவா.

படத்தில் அடிக்கடி ஒரு பீனிக்ஸ் பறவையை காட்டுகிறார்கள். மாவீரன் அஜீத்தை யாராலும் அழிக்க முடியாது என்பதன் குறியீடுதான் அது! ஐயோ பாவம்.... அந்த பீனிக்ஸ் பறவைக்குத் தெரியுமா ஒரு படுதோல்வியை நோக்கியிருக்கிறது தன் பயணம் என்பது?

- 4தமிழ்மீடியாவுக்காக ஆர்.எஸ்.அந்தணன்