திரைவிமர்சனம்

தமிழ்சினிமாவில் குப்பைகள் சேரும்போதெல்லாம் ‘கூட்டிப் பெருக்கு’வதற்காகவே ஒரு படம் வரும்! ‘குரங்குபொம்மை’ அதில் ஒன்று! கடத்தல் கதையாய் துவங்கி, குடும்பக் கதையாய் நகர்ந்து, கொலையில் முடியும் இந்த பொம்மை, நிமிஷத்துக்கு நிமிஷம் நம்மை பதற வைக்கிறது. பரிதாபப்பட வைக்கிறது. சிரிக்க வைக்கிறது. முடிவில் சிந்திக்கவும் வைத்து அனுப்புகிறது.

கடிச்சா புளிக்கும்... ஆனா மாங்காய் அல்ல. சுவைச்சா இனிக்கும்... ஆனா தேங்காய் அல்ல என்பது போல, சிந்திக்க வைக்கும் என்றதும், ஏதோ கமர்ஷியல் படத்தை விட்டு விலகியிருப்பதை போல தோன்றும். ஆனால் நிஜம் அதுவல்ல என்பதை ரசிகனுடைய சட்டை காலரின் கழுத்தோர வேர்வை சொல்லிவிடும். படம் நகர நகர அவ்வளவு பதற்றம்! படத்தின் இயக்குனர் நித்திலன் எந்த இயக்குனரிடம் தொழில் கற்றுக்கொண்டாரோ... அவருக்கும் சேர்த்தே ஒரு நமஸ்காரம்!

சிலைக்கடத்தல் பிரமுகர் தேனப்பன் ஐந்து கோடி மதிப்புள்ள சிலையை தனது உயிர் நண்பர் பாரதிராஜாவின் மூலமாக தஞ்சையிலிருந்து சென்னைக்கு கொடுத்தனுப்புகிறார். பையின் உள்ளேயிருப்பது என்னவென்றே தெரியாத அப்பாவி பாரதிராஜா, அதை கர்ம சிரத்தையாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க... அதற்கப்புறம் வருகிற தொல்லை ஒரு புறம். நடுவில் யதேச்சையாக கையில் சிக்கும் அதே பையை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கக் கிளம்பும் பாரதிராஜாவின் மகன் விதார்த் இன்னொரு புறம்.

இப்படியொரு பையை சுற்றி சுற்றி வரும் கதை, அந்தப் பைக்குள் என்ன இருக்கிறது என்பதோடு முடிகிறது. (ஆங்... முக்கியமான விஷயம். அந்த பையின் மீது வரையப்பட்டுள்ள குரங்கு பொம்மைதான் இந்தப்படத்தின் தலைப்பு) அதற்கப்புறம் வருகிற அந்த துண்டு சீன், அதுவரை நம்மை கை பிடித்து இழுத்துச்சென்ற வேகமான திரைக்கதைக்கு திலகம் வைக்கிறது. அடேயப்பா... கன்னத்தில் அறைந்து புத்தி சொல்வதைவிட படு ஷார்ப்பான முடிவு.

இந்தப்படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் அப்படியே கதைக்குள் கரைந்து காணாமல் போயிருப்பதால், யாரைப்போய் தனித்தனியாக பாராட்டுவது? இருந்தாலும், பாரதிராஜா என்ற மகத்தான இயக்குனர் இதற்கு முன் இப்படியொரு நடிப்பு நடித்து பார்த்ததேயில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்மைக் கொல்லப் போகிறான் என்று தெரிந்தும், அந்த தழுதழுக்கும் குரலால், கதற வைக்கும் கண்களால், துடிதுடிக்கும் உதடுகளால் ஒரு கதை சொல்கிறாரே... அப்படியே மூச்சை அடைக்கிறது நமக்கு!

படத்தின் ஹீரோ விதார்த், தனக்கான முக்கியத்துவங்களை தாரை வார்த்து இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனாலும் கிடைத்த சந்தர்ப்பங்களில் தன் அசால்ட்டான நடிப்பால் கவர்கிறார். முரண்பாடுகளுக்கு நடுவில் வளரும் விதார்த்தின் காதலில் சோகத்தை விட சுவாரஸ்யமே அதிகம்.

இவருக்கு ஜோடியாக வரும் டெல்னா டெவிஸ், நம் ஒவ்வொருவரும் எங்கோ பார்த்த மாதிரி இருப்பதுதான் ப்ளஸ். தன் அப்பாவை அறைந்தவனையே காதலிக்கும் ஆயிரமாவது ஹீரோயின் என்றாலும், இந்தப்படத்தில் அதற்கான நியாயம் நீக்கமற நிறைந்திருப்பதால் எவ்வித யோசனைக்கும் இடமின்றி ஒரு ‘வெரிகுட்’!

ஒரு திரைப்பட தயாரிப்பாளராக மட்டுமே அறியப்பட்ட தேனப்பனை, இவ்வளவு கொடூரமான ஒரு மனிதராக காட்டுவது இருக்கட்டும். இந்த சட்டைக்கு என் பாடிதான் மேட்ச் ஆகும் என்று நச்சென்று அதற்குள் நுழைந்து கொள்கிறாரே... அதற்காகவே தனி அப்ளாஸ். இனி கொடூர வில்லன்கள் லிஸ்ட்டில், தேனப்பனுக்கு ஒரு நிரந்தர சேர் உண்டு.

குரங்கு பொம்மை மூலம் கல்கி என்ற நகைச்சுவை நடிகர் நமக்கு லட்டு போல கிடைத்திருக்கிறார். இந்த மலிவு விலை லட்டு, எதிர்கால சினிமாவுக்கு தேவையோ தேவை! விட்றாதே கோலிவுட்...

பாலாசிங், அவருடனேயே இருக்கும் அந்த தீனிக்கார மாமா, ஒரு காட்சியில் வந்தாலும் சுவற்றில் மாட்டும் அந்த கடிகாரத்திலேயே கிச்சுகிச்சு மூட்டிவிட்டு காணாமல் போகும் கஞ்சா கருப்பு என அத்தனை பேரும் அக்மார்க் சுத்தம்!

அப்புறம்... இந்த சினிமாவை அப்படியே ரொட்டி போல சுருட்டி ஏப்பம் விட்டிருக்கிறார் அசகாய நடிகன் குமரவேல். பிரகாஷ்ராஜ் படங்களிலும், அவ்வப்போது வரும் நல்ல சினிமாக்களிலும் இவரை பார்த்தவர்கள், இந்தப்படத்தில் இவரின் வேறொரு குரூர முகத்தை கண்டு களி... ஸாரி, சுளிப்பார்கள். “என்ன பண்றது... நானும் நாலு பேரு மாதிரி நல்லாயிருக்கணுமே?” என்று நியாயம் கற்பித்து, அதற்காக கொலை வரைக்கும் செல்லும் இவரது வேகமும் முடிவும் நறுக் சுருக்!

ஒரு சீரியசான கதையில் ஆங்காங்கே தக்காளி விதையை தெளித்தது போல நகைச்சுவையை இழையோட விடுகிற வசனங்கள் தனி கவனிப்புக்குரியவை.

“நான் சாதாரண ஆளு இல்ல. என்னைய பார்த்து ஏ.வி.எம் சரவணனே கைய கட்டிகிட்டுதான் பேசுவாரு...”,

“அண்ணே... எந்த பைண்ணே...?”, “ம், ராஜ்கிரண் நடிச்ச மஞ்சப்பை”

இப்படி சீரியஸ் காட்சிகளுக்கு நடுவிலும், தென்றலாய் நுழைந்து கிசுகிசுத்துவிட்டு போகிற வசனங்களுக்கு யார் பொறுப்போ, வாழ்த்துக்கள்.

படத்தில் வரும் கேரக்டர்களை பின் தொடர்ந்தாலும், கிடுக்கிப் போட்டது போல அவர்கள் பின்னாலேயே போகாமல், சொசைட்டியின் இன்னொரு முகத்தையும் சேர்த்தே காட்டிக் கொண்டு நகர்கிறது கேமிரா! ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமாருக்கு தனி பாராட்டுகள்.

கொஞ்சம் அசால்ட்டாக விட்டிருந்தால் கூட ‘சிக்கல்’ பிடித்திருக்கும். அதை கல்யாணப் பெண்ணின் ஜடை போல மிக அழகாக பின்னியிருக்கிறார் எடிட்டர் அபினவ் சுந்தர் நாயக். இந்தப்படத்தை பொருத்தவரை இவரும் ஒரு ஹீரோ.

பாடல்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். அடுத்த படத்தில் முயலுங்கள் பி.அஜனிஷ் லோகநாத்.

குரங்கு கையில் பூமாலை போல சிக்கிக் கொண்டிருக்கும் தமிழ்சினிமாவை, இதுபோன்ற குரங்குகள் வந்துதான் மலையேற்ற வேண்டும்! அஞ்சநேயா அருள்புரி...!

-ஆர்.எஸ்.அந்தணன்

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மோடி அரசு தென்மாநிலங்களில் இந்தியை வலுக்கட்டாயமாக திணித்து வருகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் காதலித்து பெற்றோர் சம்பத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.