திரைவிமர்சனம்

‘எரியுற வீட்டில் புடுங்குற வரைக்கும் லாபம்’ என்ற பழமொழியை இவ்வளவு பாசிட்டிவாக யாரும் அப்ரோச் பண்ணியிருப்பார்களா தெரியாது. எரிகிற ஏரியாவிலிருந்து ஒரு சினிமா கதையை ‘கேட்ச்’ பண்ணியிருக்கிறார் இயக்குனர் அசோக்குமார். குரங்கு வாலில் நெருப்பை பற்ற வைத்த மாதிரியே படம் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள். படமும் ஸ்பீட்தான்! (என்ன ஒன்று... தடுக்கி விழுந்தால் ஒரு ரவுடி மீதும், தப்பித்து எழுந்தால் ஒரு பேண்டேஜ் மீதும் எழ வேண்டியிருக்கிறது)

சிறு வயதிலிருந்தே தீயணைப்பு வீரர் பணியில் அமர வேண்டும் என்று துடியாய் துடிக்கும் நான்கு இளைஞர்கள், வேலை கிடைக்கும்வரை சும்மாயில்லாமல் தீயணைப்பு வண்டியில் தன்னார்வ தொண்டாற்றி வருகிறார்கள். ஒருவழியாக பயர்மேன் தேர்வெழுதப் போகும் நேரத்தில் ஒரு செய்யாத கொலை பழியில் சிக்கிக் கொள்ள, லோக்கல் ரவுடிக்கும் இவர்களுக்கும் இழுபறியாகிறது.

செத்துப்போனவன் ரவுடியின் வலது கையாச்சே. மாட்னோம்டா ரவுடிகிட்ட... என்று நண்பர்கள் பதறினாலும், ‘அந்த ரவுடியை நாமளே முதல்ல தூக்கிட்டா?’ என்ற ஐடியாவை கொடுக்கும் ஹீரோ விக்ரம் பிரபு அதை செய்யக் கிளம்புகிறார். ஆனால் ட்விஸ்ட் வேறு மாதிரியாக இருக்கிறது. விட்டுதுடா சனி... என்று மன நிம்மதியோடு திரும்பினால் அங்கு ஒரு ட்விஸ்ட். வேலியில போன ஓணானை இழுத்து வேஷ்டிக்குள் விடுகிறார்கள் மற்ற இரு நண்பர்கள். ஒருவழியாய் ஒவ்வொன்றாய் தப்பித்து க்ளைமாக்சுக்கு வந்தால், அங்கும் ட்விஸ்ட்!

இப்படி படம் முழுக்க, கமா முற்றுப்புள்ளிக்கு பதிலாக ட்விஸ்ட் ட்விஸ்ட் என்று வெடியை பற்ற வைத்துக் கொண்டேயிருக்கிறார் டைரக்டர். ஒரு சந்தர்பத்தில் விக்ரம் பிரபுவுக்கு போன் வந்தாலே நமக்கு உச்சா வருகிற அளவுக்கு போகிறது நிலைமை. (ஒரு துளியூண்டு படத்துக்குள் இவ்ளோ ட்விஸ்ட் ஆவாது சாமீய்)

ஆங்காங்கே சி.ஜி புண்ணியத்தில் நெருப்பு பிடித்தாலும், ஓடுவது குதிப்பது புரள்வது முகமெல்லாம் கரி பூசிக் கொண்டு தாவுவதென, கடுமையாக உழைத்திருக்கிறார் விக்ரம்பிரபு. எரியும் குடிசைக்குள்ளிருந்து குழந்தையை காப்பாற்றும் அந்த சீன், நிஜமாகவே புல்லரிப்பு மகாதேவா... தேவையேயில்லாமல் வீட்டுக்குள் எறியப்படும் நோட்டீஸ்கள் போல, இந்தப்படத்தில் காதல் வந்து வந்து போகிறது. அதையும் பொறுப்பாக செய்து முடிக்கிறார் விக்ரம் பிரபு.

ஹீரோயின் நிக்கி கல்ராணியின் முகம் ‘சலவைக்கல் பாலிஷ் மிஷினால்’ தேய்த்து வைத்தது போல அவ்வளவு பிரஷ். சற்றே பூசிய சதைப் பிடிப்பு கவர்ச்சியா, கவர்ச்சி போல வந்த ஆபத்தா என்று ஆராய்வதற்குள் அவர் போன இடம் தெரியவில்லை. ஷான் ரோல்டன் போட்ட டூயட்டுகளுக்கு பயன்பட்டார் என்ற அளவோடு முடிந்துவிடுகிறது கல்ராணியின் கதை! அச்சச்சோ...

படம் நெடுக வருகிறார் மொட்டை ராஜேந்திரன். குழந்தைகள் மத்தியில் இவருக்கு இருக்கும் அந்தஸ்துக்கு கொடூர வில்லனாக காட்ட முடியாதாச்சே? யோசித்து பயன்படுத்தியிருக்கிறார் டைரக்டர்.

விக்ரம் பிரபுவுடன் வரும் நண்பர்கள் அளவாக நடித்து, சுளையாக கைதட்டல் வாங்குகிறார்கள்.

க்ளைமாக்சில் வரும் அந்த திருநங்கை யாரென இப்பவே சொன்னால் ‘பெப்’ போய்விடும். அதனால் கப்சிப்! (இருந்தாலும் அவ்வளவு ஆக்ரோஷமும், மூச்சிரைப்பும் ஆகாதும்மா)

ஆர்ட் டைரக்டர் எம்.பிரபாகரின் கை வண்ணத்தில் உருவான பிரமாண்டமான அந்த மணிகூண்டு ஸ்டைல் மாதா கோவில் அழகு. அதுவும் குடியிருப்புகளுக்கு மத்தியில் அது அமைக்கப்பட்ட விதம் அருமை. படத்தில் அதற்கு வேலையில்லை என்பதுதான் சற்றே ஏமாற்றம்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு வழக்கம் போல பிரமாதம். ஷான் ரோல்டனின் இசை, நெருப்பிலும் வேகாமலிருப்பதுதான் நெருடல். ஒரு பாடலை அவரே பாடியிருக்கிறார். தவிர்த்திருக்கலாம்.

நெருப்புடா.... ட்விஸ்ட்டுடா!

-ஆர்.எஸ்.அந்தணன்

விஷாலுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின் தனது அடுத்த படமாக பிசாசு 2 குறித்த அறிவிப்பினை இயக்குநர் மிஷ்கின் நேற்றிரவு இன்று அதிகாலை இந்தியநேரம் நள்ளிரவு 12 மணிக்கு அறிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் காதலித்து பெற்றோர் சம்பத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.