திரைவிமர்சனம்

‘உசுரை எடுப்பதே விளையாட்டு. அலற வைப்பதே ஆனந்தம்’ என்று வாழும் ஒரு சைக்கோவுக்கும், உதவின்னு நினைச்சாலே போதும்.

ஓடி வந்து ஸ்பாட்டில் நிற்கும் ஒரு இளைஞனுக்குமான மோதல்தான் ஸ்பைடர்! எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக் கால் என்பதை போல மிக சுலபமான படமில்லை இது. இதை ஹாலிவுட் படத்திற்கே நிகரான தரத்தோடு உருவாக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். பங்களித்த எல்லாருக்கும் தனித்தனியாக பாராட்டுகள். பட்... சிலந்தி வலை போல சுற்றி சுற்றி பின்னப்படும் படம், ஒரு கட்டத்தில் ‘சீக்கிரம் முடிஞ்சா தேவலாம்’ என்கிற எண்ணத்தையும் உருவாக்கிவிடுவதால், புருவ மத்தியில் கருவை முள்ளின் குத்தல்.

இன்டலிஜென்ஸ் டிபார்ட்மென்ட்டில் பணியாற்றும் மகேஷ்பாபுவுக்கு சந்தேகத்திற்கிடமான போன் கால்களை ஒட்டுக் கேட்பதுதான் வேலை. இதற்காகவே ஒரு ஸ்பெஷல் சாஃப்ட்வேர் கண்டுபிடிக்கும் அவர், அதன் உதவியோடு சிக்கலான கால்களில் நுழைந்து சம்பந்தப்பட்டவர்களை களத்தில் இறங்கி காப்பாற்றவும் செய்கிறார். அப்படியொரு காப்பாற்றுதலில் இறங்கும் அவர், தன் கான்ஸ்டபுள் தோழியை பறிகொடுக்க, ‘யாரந்த சைக்கோ?’ என்று தேடிப்போகிறார்... வில்லனா அவன்? எமனின் ஏஜென்ட்!

அவனுக்கும் இவருக்கும் நடக்கிற ரத்தகளறியான கண்ணாமூச்சு விளையாட்டுதான் செகன்ட் ஆஃப்! நடுவில் வரும் லவ், ஒரு டேஷுக்கும் பிரயோனமில்லை, நமக்கும் மகேஷ்பாபுக்கும்(கூட)

ஒரு துப்பாக்கியை வைத்து ஓராயிரம் பேரை சுட்டுத்தள்ளுவது. லெப்ட் கையால் ஆயிரம் பேரையும், ரைட் கையால் தொள்ளாயிரம் பேரையும் கொன்று போடுகிற அபத்தத்தையெல்லாம் நம்பாமல், ஹீரோவின் மூளையைக் கொண்டு கதையை நகர்த்தியிருக்கும் முருகதாசுக்கு, ஸ்பெஷல் அப்ளாஸ். அதுவும் மகேஷ்பாபு சீரியல் பார்க்கும் பெண்களை கோதாவில் இறக்கி வில்லன் பிடியிலிருக்கும் குடும்பத்தை காப்பாற்றுகிற அந்த ஒரு காட்சி, பெருமூச்சு அனல்மூச்சாகி, அனல் மூச்சை அரை மூச்சாக்குகிறது. அடேயப்பா...

மகேஷ்பாவுக்கு நேரடி தமிழ்ப்படம். அந்த பவர்புல் கண்களும், அலட்டிக் கொள்ளாத நடிப்பும் தமிழ்நாட்டிலும் அவருக்கான கொடியை ஏற்ற வைக்கும்.

வில்லன்னா இப்படிதான்யா அலற விடணும் என்கிற பார்முலாவை கெட்டியாக பிடித்துக் கொண்டு மிரட்டியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் ஆசாமி என்ற பெயர் அவருக்கு இருந்தாலும், இந்த ஓவர் ஆக்டிங்தான், ஓவர் ஆல் கைத்தட்டல்களை அள்ளிக் கொள்கிறது. அதிலும் ஒரு காட்சியில், அப்படியே உதடுகள் துடிக்க அழுதும், சடக்கென மாறி அந்த உதட்டுக்குள் மெல்லிய சிரிப்பை கொண்டு வருவதுமாக பிரமாதப்படுத்துகிறார்.

எஸ்.ஜே.சூர்யாவின் தம்பியாக பரத். ஒரு ஹீரோ, இப்படி டிபிக்கல் வில்லனாக மாற பெரிய மனசு வேண்டும். கொடுத்த கேரக்டரை மிக சிறப்பாக செய்திருக்கிறார் இவர்.

நடுநடுவே கேன்ட்டின் போக வேண்டும் என்கிற நினைப்பை, ராகுல் ப்ரீத்திசிங்கின் ரசகுல்லா அழகு தடுத்தாட் கொள்கிறது. கடைசிவரைக்கும் இவர் ஆசையை நிறைவேற்றாமலே விட்ட மகேஷ்பாபுவுக்கு மட்டுமா ஏமாற்றம்? நமக்குதான்... நமக்குதான்...!

வில்லனின் நியாயத்திற்கென ஒரு பிளாஷ்பேக் இருக்குமல்லவா? அங்குதான் மிரட்டியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா என்ன? அதுவும், அந்த கேரக்டரை அப்படியே உள்வாங்கி அலற விடுகிறான் அந்த சிறுவன். கண்களில் வழியும் கொடூரமும், ஆவேசமும் பயங்கரம்.

அப்புறம் சொல்ல மறந்தாச்சே... இந்தப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜியும் இருக்கிறார். அவரது லொட லோட பேச்சு இருந்தாலும் கஷ்டம். இல்லாவிட்டாலும் கஷ்டம். இந்த படத்தில் இல்லாத கஷ்டம்.

சூர்யாவை தேடிப்போகிற மகேஷ்பாபு அவரை பிடிப்பதோடு படம் முடிந்திருந்தால் மன்னிக்கலாம். குதிரைவாலை நறுக்கி, கோழிக்கு ஒட்ட வைத்தது போல எக்ஸ்ட்ரா பிட்டிங் கொடுக்கிறார் முருகதாஸ். அதுவரைக்குமான இவரது மொத்த உழைப்பும் கேலிக்கு ஆளாவது இந்த எக்ஸ்ட்ரா நிமிஷங்களில்தான்.

சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவு அபாரம். குறிப்பாக அந்த ரோலர் கோஸ்ட் பைட்டில் சுற்றி சுழன்றிருக்கிறது கேமிரா. கிராபிக்ஸ் பணிகள் மிக மிக கச்சிதம். ஆஸ்பிடல் இடிந்துவிழும் அந்த காட்சி, மற்றும் மலை குன்று உருண்டு வரும் இன்னொரு காட்சி. இரண்டுக்கும் பாராட்டுகள்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் மனசுக்குள் கேட்ச்!

படம் நெடுகிலும் லாஜிக் மீறல்கள் துருத்திக் கொண்டு தெரிவதுதான் துரதிருஷ்டம். பட்... ஆக்ஷன் படங்களில் தவிர்க்க முடியாத சங்கதியாச்சே அது?

தானே பின்னிய ‘ஸ்பைடர்’ வலையில், தானே மறுமுறை சறுக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ‘கஜினி’யாக மீளுங்கள் ப்ரோ!

-ஆர்.எஸ்.அந்தணன்

இவற்றையும் பார்வையிடுங்கள்

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.