திரைவிமர்சனம்

வறுமைக்கு தாலி கட்டிய கிராமம். பக்கத்திலேயே வான் வெளியை கிழிக்கிற ராக்கெட் தளம்!

இந்தியாவின் இந்த மேலடுக்கு, கீழடுக்கு சமாச்சாரத்தை தன் கூரிய பேனாவால் குத்திக் குடைந்திருக்கிறார் கோபி நயினார். இருட்டும் எரி நட்சத்திரங்களுமாக இருக்கிற தமிழ்சினிமாவில், கிழக்கும் விடிவெள்ளியுமாக முளைத்திருக்கிற இந்த அறிமுக இயக்குனருக்கு ஒரு ரத்தினக் கம்பளம் விரித்திருக்கிறது ‘அறம்’! இனிவரும் காலங்களிலும் இதே மாதிரி படங்களோடு வாங்க சாமீய்...!

கூலி வேலைக்கு குழந்தையோடு போகிறார் சுனு லட்சுமி. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஆழ் துளை கிணற்றில் விழுந்துவிடுகிறது. அலறியடித்துக் கொண்டு கூடுகிற ஊர், செய்வதறியாமல் கை பிசைந்து நிற்க... அந்த மாவட்டத்தின் கலெக்டர் நயன்தாரா ஸ்பாட்டுக்கு ஓடோடி வருகிறார். அதற்கப்புறம் வருகிற திக் திக் வினாடிகளும், தீ பிழம்பு வசனங்களும்தான் முழு படம். உச்சி வானில் பறக்கிற பறவைக் கூட்டத்தின் நிழல் கூட, நம் தோள் தொட்டு பேசிவிட்டு போகிறது. ஒரு ஷாட் கூட வீணாகாத அற்பணிப்போடு முழு படத்தையும் தந்திருக்கிறார் கோபி நைனார். கயிறு, கம்பு, இரும்புத்தடி என எல்லாமும் நடித்திருக்கும் இப்படத்தில் நயன்தாராவின் நடிப்பு....? இமயமலை சிகரத்திற்கு மேலே ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். அங்கு வைத்து கொண்டாடலாம்!

திரைக்கும் ரசிகனுக்குமான தூர இடைவெளி குறைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை திரைக்கதையும் காட்சிகளும்.

பொசுக்கென அப்படியே நம்மை வாரிக் கொள்கிற படம், அணுஅணுவாக மனசை பிசைந்து ரத்தகளறியாக்குகிறது. அந்த குழந்தைக்கு ஏதேனும் ஆகியிருந்தால்...? சொல்ல முடியாது. கோபி நயினாரின் வீடு தேடிப் போயாவது உதைத்திருப்பான் ஒவ்வொரு ரசிகனும்!

சுற்று புற சூழ்நிலைகள் கைவிட்ட அந்த கடைசி நிமிஷத்தில் கூட நம்பிக்கையோடு ‘குழந்தையை காப்பாத்திடுவோம்’ என்று பேட்டியளிக்கிற நயன்தாராவுக்குள்தான் எவ்வளவு கம்பீரம். எந்த சந்தர்ப்பத்திலும் உடைந்துவிடக் கூடாது என்று அவர் பொத்தி வைக்கிற கண்ணீர், பொசுக்கென்று அவிழும் அந்த தருணம்... ரசிகனின்  தவிப்பை பிளட் பிரஷர் கருவியை வைத்து அளந்தால் அழுத்தம் தாங்காமல் உடைந்தே போயிருக்கும்! வெறும் நடிப்பல்ல... அவர் உதட்டிலிருந்து விழுகிற ஒவ்வொரு வசனமும், அதிகாரத்தின் பிடறியை பிடித்து உலுக்குகிறது.

குறிப்பாக, தன் கலெக்டர் பதவியை ராஜினாமா செய்கிற நேரத்தில் மேலதிரிகாரி கேட்கும் கேள்விகளுக்கு நயன்தாரா சொல்கிற பதில்களில் நெருப்பு நெருப்பு...

“மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்கணும். ஏதோ ஒரு சட்டத்தை உருவாக்கிட்டு அதுல ஜனங்களை திணிக்கக்கூடாது!”


“ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு அடிமையா இருக்க முடியும்?”


இங்கு மட்டுமல்ல... குழந்தையை மீட்க அவளது அண்ணனையே குழிக்குள் இறக்க முனையும் நயன்தாரா, அந்த சிறுவனிடம் பேசுகிற வசனங்கள் இந்தியாவே குனிந்து கேட்க வேண்டிய போதனை!


“இந்த மாதிரி அரசியல்வாதிங்க ஒழிஞ்சாதான் நாடு உருப்படும்” என்கிற டயலாக்கை நயன்தாரா சொல்லும்போது, ஆமோதித்து ஆர்ப்பரிக்கிறது தியேட்டர்.

நயன்தாரா மட்டுமல்ல... படத்தில் வரும் இன்னபிற கேரக்டர்களின் மூலமாக இந்திய அரசியல்வாதிகளை நோக்கி தீப்பந்தங்களை வீசிக் கொண்டேயிருக்கிறார் கோபி நயினார். “முதல் குழந்தை குழிக்குள் தவிக்கும் போது இந்த பதிலை சொன்னால் நியாயம். இது 361 வது குழந்தை. இன்னும் இதே பதிலைதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிற இன்னொரு டயலாக்குக்கு இந்திய அரசியல்வாதிகள் தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டும்.

குழிக்குள் விழுந்த அந்த குழந்தை தன்ஷிகாவின் நடிப்பு அவ்வளவு பிரமாதம். நிஜமாகவே 100 அடி ஆழத்தில் கிடப்பதை அப்படியே நமக்கு புரிய வைக்கிறாள். அவளுக்கு மூச்சுத் திணறும்போது நமக்கும் திணறுகிறது. அவள் உதடுகள் துடிக்கும் போது நமக்கும் துடிக்கிறது. ‘இருட்டா இருக்கும்மா... பயமா இருக்கு’ என்கிற அவளது ஈனஸ்வரக் குரல், காதுக்குள் புகுந்து கதற விடுகிறது நம்மை.

இதுவரை பல படங்களில் வில்லனாக பார்த்த ராம்ஸ், இந்தப்படத்தில் அந்த குழந்தையின் அப்பா. நடிப்பால் மட்டுமல்ல... சோகம் வழியும் குரலாலும் கதற விடுகிறார் நம்மை. அவரது மனைவியாக நடித்திருக்கும் சுனு லட்சுமிக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.

படத்தில் வரும் கையாலாகாத அதிகாரிகளும், அவர்களது சூழ்நிலைகளும் புரிந்து கொள்ள வைத்தாலும் கோபப்படவும் வைக்கிறது.

ஜிப்ரானின் இசையில் தேவைப்படுகிற இடத்தில் மட்டும் இரண்டு பாடல்கள். அதில் எழுதப்பட்ட அர்த்தமுள்ள வரிகள். பிரமாதம். முக்கியமாக பின்னணி இசையால் நம்மை சம்பவ இடத்திற்கே கொண்டு போய் கலங்க விட்டிருக்கிறார் ஜிப்ரான்.

ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு ஒரு நிழலை நிஜம்போல மனசுக்குள் பதியன் போடுகிறது. அந்த ஆழ்துளை கிணற்றின் வடிவமைப்பிலும், அதற்குள் திணறும் குழந்தையின் பரிதாபத்திலும், பிரபல சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயினின் பங்கும் இருக்கிறது. தனி பாராட்டுகள்.

“நிலாவில் ஆம்ஸ்டராங் கால் வைச்சதை விட பெருமை, நீ ஆழ்துளை கிணறுக்குள் போய்விட்டு திரும்புவது...” என்று பேசியதோடு நில்லாமல், ராக்கெட் கிளம்புகிற அதே நேரத்தில் குழாய்க்குள்ளிருந்து குழந்தை மீட்கக் படுகிற காட்சியையும் சேர்த்து கம்போஸ் பண்ணிய அந்த யுக்திக்காகவும் புத்திக்காவும் கொண்டாடப்படுவார் கோபி.

தியேட்டர்களில் மட்டுமல்ல... இந்தியாவின் உச்சந் தலையான பாராளுமன்றத்திலேயே திரையிடப்பட வேண்டிய படம் அறம்!


படத்தில் இடம் பெற்ற அத்தனை பேரும் நல்ல சினிமாவுக்கான வரம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

சிம்பு மாநாடு படத்தில் நடிக்கத் தொடங்கியபிறகு மிகவும் நல்லப் பிள்ளையாக மாறிவிட்டார் என்று கோலிவுட்டில் பேசப்பட்டது.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.