free website hit counter
25
வி, ஏப்

எனிமி விமர்சனம்

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரியான பிரகாஷ் ராஜ், தன்னுடைய மகனை (ஆர்யா) காவல்துறையில் சேர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவனுக்குப் பள்ளிப் பருவத்திலேயே பயிற்சியளிக்கிறார்.

மளிகைக் கடை நடத்தும் பக்கத்து வீட்டுக் காரரின் மகன் (விஷால்), தன்னுடைய மகனைவிட திறமை மிக்கவனாக இருப்பதைப் பார்க்கும் பிரகாஷ் ராஜ், மகன் போட்டி மனப்பான்மையுடன் முன்னேறுவான் என்ற நோக்கத்துடன் சிறுவன் விஷாலுக்கும் பயிற்சி அளிக்கிறார். இதனால் இரண்டு சிறுவர்களும் நண்பர்கள் ஆகிறார்கள். ஒரு எதிர்பாராத சம்பவத்தால் சிறுவயதிலேயே பிரிந்துவிடும் இந்த நண்பர்கள், சிங்கப்பூரில் மீண்டும் எதிரிகளாகச் சந்தித்துக்கொள்கிறார்கள். இருவருக்கும் இடையிலான ஆடுபுலி ஆட்டம் தொடங்குகிறது. அதில் வென்றது யார் என்பது கதை.

பள்ளிச் சிறுவர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவருக்கும் பிரகாஷ் ராஜ் பயிற்சி அளிக்கும் காட்சிகள் சுவாரசியம் குன்றாமல் இருக்கின்றன. பிறகு விஷால் வளர்ந்தபிறகு, சிங்கப்பூரில் பல்பொருள் அங்காடி நடத்தும் அவருடைய அப்பா தம்பி ராமையாவின் கடையைப் பார்த்துகொள்வது, டோர் டெலிவரி செய்வது, எத்திகல் ஹேக்கராக இருப்பது, கடவுச்சீட்டு பிடுங்கப்பட்ட தமிழகத் தொழிலாளர்களுக்கு சூப்பர் மேனாக களமிறங்கி கடவுச்சீட்டுகளை மீட்டுக்கொடுப்பது என்று தொடக்கத்தில் அசத்தினாலும் மிருணாளினி ரவிக்கும் அவருக்குமான காதலில் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் படு மொக்கையாக இருக்கிறது.

பிறகு சிங்கப்பூர் வரும் தமிழக வெளியுறவு அமைச்சரைக் கொல்லத் திட்டமிட்டு அங்கே ஆஜராகும் உயர்தொழில்நுட்பத் தொழில்முறை கொலைகாரனான ஆர்யாவை 20 ஆண்டுகளுக்குப் பின் விஷால் சந்தித்தபிறகு கதை சூடுபிடிக்கிறது. ஆனால், ஆர்யாவுக்கும் விஷாலுக்கும் இடையிலான தனிப்பட்ட சண்டையாக மாறிவிடுவதில் அவர்கள் இருவரையும் சுற்றி இருப்பவர்களுக்கு பாதிப்புகளுடன் கதை நகரும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் மிகவும் சரி. நீங்கள் எதிர்பார்ப்பது போல், எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் அதுதான் நடக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்துவிடுவதால், காட்சிகள் எதிர்பார்ப்பை மீறி இருக்க வேண்டும் என்பதில் அக்கறைகொள்ள மறுத்துவிட்டார் இயக்குநர். இதனால், இரண்டாம்பாதி முழுவதும் கடத்தல், மீட்டல், இருதரப்பிலும் பலரைப் போட்டுத்தள்ளுவது என்று வழக்கமான ஆக்‌ஷன் ட்ராமாவாக முடிந்துவிடுகிறது படம்.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். தமன் இசையில் பாடல்கள் படத்தின் ஓட்டத்துக்கு தேவையற்ற பசைபோல் திரைக்கதையில் ஒட்ட வைக்கப்பட்டிருக்கின்றன. சாம் சி.எஸ். பின்னணி இசை படத்துக்கு பலம். ஆனால், படத்தொகுப்பாளர் ரேமண்ட் தனது வேலையைச் சரிவர செய்யமால் ‘டைரக்டர் கட்’ ஆகவே படத்தை விட்டுவிட்டார்.

இரு நண்பர்களில் ஒருவன் குற்றவாளி ஆவதற்கான தொடக்கப்புள்ளி அழுத்தமாகச் சொல்லப்படாததால் ஆர்யா வேடம் அங்கேயே புஸ் ஆகிவிடுகிறது. அப்பாவுக்காக தன்னை முடக்கிக்கொள்ளும் விஷாலின் வேடம், சிங்கபூர் போலீசுக்கே வழிகாட்டியாக இருப்பது, வெளியுறவுத்துறை அமைச்சரின் வருகைக்கான பாதுகாப்பு அம்சங்களை விஷாலுக்கு சிங்கப்பூர் போலீஸ் சொல்லி உதவி கேட்பது, வெளியுறவு அமைச்சரை விஷால் சுடுவது போன்ற காட்சிகள் விஷாலின் வேடத்தைக் கேலிக்கூத்தாக ஆக்குகின்றன.

ஆர்யா - விஷால் வேடங்கள் ஸ்டீரியோ டைப் முரண்களை மட்டுமே நம்பி எழுதப்பட்டிருக்கிறதே தவிர, அதில் லாஜிக் பற்றியோ நம்பகம் பற்றியோ கவலைப்பட்டு எழுதப்படாததால் எனிமி வெறும் காரச் சட்னியாக ஆகிவிட்டது.

- 4தமிழ்மீடியா விமர்சனக் குழு

Ula

new-year-prediction