கட்டுரைகள்
Typography

21 ஆம் நூற்றாண்டின் இணையில்லா இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்கிங் இன்று புதன்கிழமை 14 ஆம் திகதி மார்ச் இறைவனடி சேர்ந்து விட்டார்.

இவரது வாழ்க்கை சாதாரண மாணவர்களுக்கு மாத்திரம் முன்மாதிரியாகத் திகழ்வதோடு நின்று விடாது எந்தவொரு தீராத நோயினால் பாதிக்கப் பட்ட நபருக்கும் வாழ்வின் பெறுமதியையும் தன்னம்பிக்கையையும் உணர்த்தும் சரித்திரமாகும்.

1942 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் நகரில் பிறந்த இந்த மாமனிதரது ஆய்வுப் பணி விஞ்ஞான ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் பிரபஞ்சவியல் (Cosmology) மற்றும் நவீன பௌதிகவியலின் அனைத்துக்குமான கொள்கை (theory of everything) இனைக் கண்டுபிடிக்க மிகவும் தேவைப் படும் குவாண்டம் ஈர்ப்பு (Quantum Gravity) என்ற கூறு தொடர்பில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எமது இன்றைய நூற்றாண்டில் வெறும் இயற்பியலாளராக மட்டுமல்லாது கணிதவியலாளராகவும், பிரபஞ்சவியலாளராகவும், வானியலாளராகவும் தத்துவ பௌதிகவியலாளராகவும் விளங்கிய இவர் விஞ்ஞானிகள் அற்ற சாதாரண மக்களுக்கும் ஏன் தனது இறுதிக் காலத்தில் குழந்தைகளுக்கும் கூட எழுதிய புத்தகங்கள் ஏராளம். இப்புத்தகங்களில் சிக்கலான கணித சூத்திரங்கள் தவிர்க்கப் பட்டு இலகு நடையில் அனைவருக்கும் பிரபஞ்சவியலில் ஆர்வம் ஏற்படும் வகையில் இருந்தது ஹாவ்கிங் இன் எழுத்து நடை என்றால் மிகையாகாது.

இவர் எழுதிய 'The Brief History of Time' என்ற புத்தகம் உலகளாவிய ரீதியில் அதிகம் விற்பனையான அறிவியல் புத்தகங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்தப் புத்தகம் மாத்திரமன்றி இவர் வளர்ந்த மாணவர்களுக்கு எழுதிய முக்கியமான புத்தகங்கள் கீழே :

1.Black Holes and Baby Universes and Other Essays
2.The Universe in a Nutshell
3.On The Shoulders of Giants. The Great Works of Physics and Astronomy
4.God Created the Integers

ஹாவ்கிங் தனது மகள் லூஸி இன் துணையுடன் குழந்தைகளுக்கு எழுதி வெளியிட்ட முக்கிய புத்தகங்கள் கீழே:

1.George's Secret Key to the Universe, with Lucy Hawking
2.George's Cosmic Treasure Hunt, with Lucy Hawking
3.George and the Big Bang, with Lucy Hawking

 தன் முதலாவது திருமணத்துக்குச் சற்று முன்னர் 21 ஆவது வயதில் உலகில் மிக அரிய வகை நரம்பு நோயான ALS எனப் படும் Amyotrophic Lateral Sclerosis இனால் தாக்கப் பட்ட இவரது கழுத்துக்குக் கீழே உடலியக்கங்கள் நின்று போயின. ஆனாலும் சோர்ந்து போய் விடாத இவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து பிறரின் துணையுடன் தான் வாழ முடியும் என்ற நிர்ப்பந்தத்தின் மத்தியிலும் தனது இயற்பியல் ஆராய்ச்சியிலும் எழுத்துத் துறை மற்றும் பொது வாழ்வில் விருப்புடன் ஈடுபட்டார்.

நவீன கணணி அறிவியலின் வளர்ச்சி இவருக்கு கை கொடுத்ததை அடுத்து கணணித் திரை மற்றும் மென்பொருள் உதவியுடன் பிறருடன் முதலில் கை ஜாடை தாடை அசைவுகள் மூலம் பேசவும் தன் ஆராய்ச்சிப் பணியை முன்னெடுக்கவும் செய்தார். தனது இறுதிக் காலத்தில் இவரால் கேட்க முடிந்த போதும் கணணியின் துணை கொண்டு கண்ணசைவினால் தான் இவரால் பேச முடிந்தது. 2009 ஆமாண்டு ஆக்டோபர் முதலாம் திகதி பதவி விலகும் வரை இங்கிலாந்தின் பிரபல கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர் ஐசாக் நியூட்டன் வகித்த அதே கணிதப் பேராசிரியர் பதவியில் இவர் கடமையாற்றினார். ஹாவ்கிங் உடல் நலம் பாதிக்கப் பட்ட கட்டத்தில் தான் இவ்வாறு பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வியப்புக்குரிய அம்சம் என்னவென்றால் 21 ஆம் வயதில் இந்த நோயினால் அவர் தீவிரமாகப் பாதிக்கப் பட்ட போது மருத்துவர்கள் இன்னும் சில ஆண்டுகள் தான் இவர் உயிர் வாழ்வார் என்று கைவிரித்திருந்தனர். ஆனால் தனது தீவிர அறிவியல் வேட்கையினால் நோயினை ஒரு பொருட்டாக மதிக்காது உத்வேகத்துடன் சுமார் 1/2 நூற்றாண்டுக்கும் மேல் உயிர் வாழ்ந்து எமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக விளங்கியுள்ளார் ஸ்டீபன் ஹாவ்கிங்.

ஸ்டீபன் ஹாவ்கிங் இனது பிரபஞ்சவியல் குறித்த ஆய்வுகளில் அவரது முக்கியமான கருத்துக்களைக் காண்போம். எமது பிரபஞ்சத்தில் காணப் படும் கருந்துளைகளில் (Black holes) இருந்து அவற்றின் அபார ஈர்ப்பு விசை காரணமாக நாம் கண்ணால் காணும் ஒளி கூட வெளியேற முடியாது என்று நம்பப் பட்டு வந்த வேளையில் கருந்துளைகளில் இருந்தும் துணிக்கைக் கற்றைகள் (Particles) வெளியேறுகின்றன என்றும் அதனால் அவையும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் இல்லாமல் போய் விடுகின்றன என்றும் தனது அபூர்வ கண்டுபிடிப்பை கணித ரீதியாக ஹாவ்கிங் முன் வைத்தார். இவ்வாறு கருந்துளைகளில் இருந்து வெளியேறும் துணிக்கை கற்றைக்கு ஹாவ்கிங் கதிர்வீச்சு என்று பெயரிடப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர இன்று உலகில் வளர்ந்து வரும் AI எனப்படும் செயற்கை அறிவு மனித குலத்துக்கு ஆபத்தானது என்றும் இது தொடர்பில் மனித இனம் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் ஹாவ்கிங் தெரிவித்துள்ளார். இயற்கை அழிவு மற்றும் மனிதனின் செயற்பாடுகளால் ஏற்படக் கூடிய அழிவு என இரு அழிவுகளில் இருந்தும் மனித இனம் தப்பிப்பதற்கு இன்னும் சில நூறு வருடங்களுக்குல் மனித இனம் வேற்றுக் கிரகங்களுக்குக் குடி பெயர்வது அவசியம் என்றிருந்த ஹாவ்கிங் வேற்றுக் கிரக வாசிகளைத் தொடர்பு கொள்ள மனித இனம் செய்யும் முயற்சி சொந்த இனத்துக்கே ஆபத்தில் முடியலாம் எனவும் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாவ்கிங் எழுதிய The Brief history of time என்ற புத்தகத்தின் தமிழ் பதிப்பு 'காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம்' என்ற பெயரில் வெளியாகி உள்ளது.

2014 ஆம் ஆண்டு ஸ்டீபன் ஹாவ்கிங் இனது இளமைக் காலம், காதல் வாழ்க்கை, நோய் வாய்ப் படல் மற்றும் சாதனைகளைச் சித்தரிக்கும் வாழ்க்கைச் சரிதம் The Theory of Everything என்ற பெயரில் ஹாலிவுட்டில் திரைப் படமாக வெளியாகி இருந்தது. ஸ்டீபன் ஹாவ்கிங் இனது துணைவியாரான ஜேன் ஹாவ்கிங் இனால் எழுதப் பட்ட Travelling to Infinity: My Life with Stephen என்ற புத்தகத்தைத் தழுவி ஜேம்ஸ் மார்ஸ் இன் இயக்கத்தில் வெளியான இத்திரைப் படம் மிகச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை சுவீகரித்தது.

 

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

BLOG COMMENTS POWERED BY DISQUS