கட்டுரைகள்

உலகின் மிகப் பெரிய சமுத்திரமான பசுபிக் சமுத்திரத்தில் மாத்திரம் அடைக்கப் பட்டுள்ள பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளை இணைத்துப் பெறப்படும் பரப்பளவை விட அதிகம் என சமீபத்தில் கணிக்கப் பட்டுள்ளது.

இது முன்னைய கணிப்பீட்டை விட மிக மிக அதிகம் என்பதால் அதிர்ச்சியடைந்துள்ளனர் புவியியலாளர்கள்.

வியாழக்கிழமை வெளியான இந்த ஆய்வு முடிவின் பிரகாரம் இந்த பிளாஸ்டிக்கின் அளவு இன்னமும் வெகு வேகமாக வளர்ந்து வருவதாகவும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. நெதர்லாந்தைத் தளமாகக் கொண்ட ஆய்வாளர் குழு ஒன்று படகுகள் மூலமாகவும் விமானங்கள் மூலமாகவும் பசுபிக் கடலில் அடைக்கப் படும் போத்தல்கள், கண்டெயினர்கள், மீன்பிடி வலைகள், GPGP எனப்படும் மைக்ரோ பார்டிக்கல்ஸ் ஆகியவற்றை வேவு பார்த்தே இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இந்த GPGP எனப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு மாத்திரம் 80 000 டன் எடை எனக் கணிக்கப் பட்டுள்ளது.

இந்த கணிப்பு முன்னையதை விட 16 மடங்கு அதிகமாகும். அதிர்ச்சியான இன்னொரு தகவல் என்னவென்றால் ஹாவாய் மற்றும் கலிபோர்னியாவுக்கு இடைப்பட்ட கடற் பகுதிகளில் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மிகவும் செறிந்து காணப் பட்டமை ஆகும். தற்போதைய கணிப்பீட்டின் படி பசுபிக் சமுத்திரத்தில் மாத்திரம் 1.8 டிரில்லியன் பிளாஸ்டிக் பாகங்கள் காணப் படுவதாகவும் இவை கடல் உயிர் வாழ்க்கைக்கு மிகவும் அச்சுறுத்தல் என்றும் கூறப்பட்டுள்ளது.

GPGP எனப்படும் மைக்ரோ பார்ட்டிக்கல் துணிக்கைகளை மீன் உயிரினங்கள் உணவாக எடுத்துக் கொள்வதால் அவை பெரும் அழிவைச் சந்திக்க நேரிடுவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.