கட்டுரைகள்
Typography

நட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரில் சூரிய குடும்பத்தில் உள்ள வாயுக் கோள்களைப் பற்றி தற்போது ஆராய்ந்து வருகிறோம்.

இவ்வரிசையில் கடந்த தொடர்களில் வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்களைப் பற்றிய தகவல்களைப் பார்த்தோம். இன்னும் இரு தொடர்களில் நெப்டியூன், மற்றும் புளூட்டோ ஆகிய கிரகங்களுடன் இத்தொடரின் சூரிய குடும்பம் பகுதி நிறைவு பெறுகிறது என 4 தமிழ் மீடியாவின் வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.

யுரேனஸும் புவியும் ஓர் ஒப்பீடு

பூமியை விட மூன்று மடங்கு பெரிய கனவளவை உடைய யுரேனஸ் சூரியனிடமிருந்து ஏழாவது இடத்தில் அமைந்துள்ள சூரிய குடும்பத்தில் மூன்றாவது மிகப் பெரிய கோளாகும். இதற்கும் பண்டைய கிரேக்க கடவுளர்களின் முந்தைய சுப்ரீம் கடவுளின் பெயரான யுரேனஸ் எனும் பெயர் இடப்பட்டுள்ளது. யுரேனஸ் கிரகமே தொலைக்காட்டி ஒன்றின் மூலம் முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட கிரகமாகும். வியாழனைப் போன்றே மிகப் பெரிய வாயுக் கோளான யுரனேஸ் இன் வளி மண்டலத்தில் ஐதரசன்,ஹீலியம், மெத்தேன் ஆகிய வாயுக்கள் பெருமளவு காணப்படுகின்றன. யுரேனஸில் வெறும் 2% வீதமே மெத்தேன் வாயு காணப்பட்டாலும் தொலைக் காட்டியால் நோக்கும் போது அதன் மேற்பரப்பு அழகிய நீலம் மற்றும் பச்சை வண்ணத்தில் தென்படுவதற்கு இவ்வாயு காரணமாகின்றது.

ஏனைய வாயுக் கோளங்களைப் போலவே யுரேனஸுக்கும் வளையங்களின் தொகுதியும், காந்த மண்டலமும் அதிக பட்சமாக 27 துணைக் கோள்களும் காணப்படுகின்றன. வெள்ளியைப் போன்றே யுரேனஸும் கிழக்கிலிருந்து மேற்காக சுழலும் போதும் தனது அச்சில் 90 பாகை சாய்வில் ஏறக்குறைய நீள்வட்டப்பாதையில் வலம் வருவதால் அது சூரியனைச் சுற்றி வரும் அதே பக்கத்தில் வடக்கிலிருந்து தெற்காக சுழலுவது போன்ற தோற்றம் ஏற்படுகின்றது. மேலும் இத்தகைய முரணான தன்மை காரணமாக அங்கு பருவ காலங்கள் 20 வருடங்களுக்கு ஒரு முறையே மாறுகின்றன. யுரேன்ஸின் மேற்பரப்பிலும் வியாழன் மற்றும் சனி கிரகங்களைப் போலவே மிக வேகமாக கிட்டத்தட்ட 900Km/h வேகத்தில் காற்று வீசி வருகின்றது. யுரேனஸ் கிரகத்தைச் சுற்றி 11 வளையங்கள் அவதானிக்கப் பட்டுள்ளது. எனினும் இவ்வளையங்கள் மிக மெல்லியதாக இருப்பதால் ஹபிள் போன்ற வினைத் திறன் மிக்க விண் தொலைக்காட்டிகளால் மட்டுமே இவை அவதானிக்கப் பட முடிவதுடன் வெறும் கண்களுக்கோ சாதாரண தொலைக்காட்டிகளுக்கோ இவை புலப்படுவதில்லை. யுரேனஸ் கிரகம் 1781ம் ஆண்டு மார்ச் 13 சர்.வில்லியம் ஹெர்ஷெல் எனும் ஆங்கிலேய விஞ்ஞானியால் கண்டு பிடிக்கப்பட்டது.

யுரேனஸின் வளையங்களின் நிற மாலை

யுரேனஸின் துணைக் கோள்களும் விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமூட்டும் தன்மைகளைக் கொண்டுள்ளன. வெறும் 300 மைல்களே விட்டமுடைய டைனி மிரான்டா எனும் துனைக் கோள் பூமியிலுள்ள எவெரெஸ்ட் சிகரத்தை விட உயரமான அதாவது 10 மைல் உயரமுடைய மலையைக் கொண்டுள்ளது, இச் செய்தியை யுரேனஸை ஆராய்வதற்காக அதன் சுற்றுப் பாதைக்குள் நுழைந்த நாசாவின் வொயேஜர் 2 செய்மதி கண்டு பிடித்தது.

இனி யுரேனஸ் குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் -

1.தனது அச்சில் சுழல எடுக்கும் நேரம் - 17 மணி 14 நிமிடம்
2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 84 வருடம் 3 நாள் 15.66 மணி
3.சூரியனிடமிருந்து சராசரி தூரம் - 2 872 460 000 Km
4.சுற்றுப் பாதையில் பயணிக்கும் வேகம் - 6.8352 Km/s
5.தனது அச்சில் சுழலும் வேகம் - 2.59 Km/s
6.தனதச்சில் சாய்வு - 0.76986 பாகை
7.விட்டம் மையத்தினூடாக - 51 118 Km
8.மேற்பரப்பளவு - 8 130 000 000 Km2
9.திணிவு - 8.686 * (10 இன் வலு 25) Kg
10.சராசரி அடர்த்தி - 1.29 g/cm3
11.ஈர்ப்பு விசை - 8.69 m/s2
12.தப்பு வேகம் - 21.29 Km/s
13.சராசரி வெப்ப நிலை - 355 பாகை ஃபரனைட்
14.துணைக் கோள்களின் எண்ணிக்கை - 27

யுரேனஸின் வளி மண்டலத்தில் காணப்படும் வாயுக்களின் சதவீதம் (சராசரி) -

1.ஐதரசன் - 83%
2.ஹீலியம் - 15%
3.மெத்தேன் - 2.3%
4.ஐதரசன் டெயூடெரைட் (HD) - 0.009%

 
 சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்களின் பருமன் ஓர் ஒப்பீடு

யுரேனஸில் காணப்படும் வளி மண்டல அமுக்கம் 130 KPa ஆகும். கடந்த 2006 ஆம் ஆண்டு ஹபிள் தொலைக் காட்டியால் யுரேனஸின் வட துருவத்தில் மிகப் பெரிய கரும் பொட்டு ஒன்றை அவதானித்தது. சுமார் 1700 Km நீளமும் 3000 Km அகலமும் உடைய இந்த கரும் பொட்டு பின்னர் வளிச் சுழல் எனத் தெளிவு படுத்தப் பட்டது. மேலும் விஞ்ஞானிகள் யுரேனஸின் வட துருவத்துக்கு வர உள்ள வசந்த காலத்துக்கான அறிகுறி எனத் தெளிவு படுத்தினர். இது வரை யுரேனஸ் குறித்த சுருக்கமான தகவல்களை ஆராய்ந்தோம். எதிர் வரும் தொடரில் நெப்டியூன் கிரகம் பற்றிய தகவல்களை எதிர்பாருங்கள்.

 

முன்னைய பதிவுகள் :

சூரிய குடும்பம் 1 : நட்சத்திர பயணங்கள் 7

நட்சத்திரப் பயணங்கள் : 8 (சூரிய குடும்பம் 2, சந்திரன்)

நட்சத்திரப் பயணங்கள் 9 : (சூரிய குடும்பம் 3, பூமி)

நட்சத்திரப் பயணங்கள் 10 (சூரிய குடும்பம் 4, புதன்)

நட்சத்திரப் பயணங்கள் 11 (சூரிய குடும்பம் 5, வெள்ளி)

நட்சத்திரப் பயணங்கள் 12 (சூரிய குடும்பம் 6, செவ்வாய்)

நட்சத்திரப் பயணங்கள் 13 (சூரிய குடும்பம் 7, வியாழன்)

நட்சத்திரப் பயணங்கள் 14 (சூரிய குடும்பம் 8, சனி)

 

- 4 தமிழ் மீடியாவுக்காக: நவன்

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்