கட்டுரைகள்

இன்னும் 2 வருடங்களில் செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் ரோபோ தேனீக்களை ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

முன்னதாக அனுப்பப் பட்ட ரோவர் விண்வண்டி செவ்வாயில் மெதுவாக நகர்வதாலும் அதிக எரிபொருட்களை எடுத்துக் கொள்வதாலும் அதன் தகவல்களில் திருத்தம் குறைவாக இருப்பதாலும் தான் இந்த மாற்று ஏற்பாட்டுக்கு விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

அதாவது மார்ஸ் பீஸ் எனப் பெயரிடப் பட்டுள்ள 3 முதல் 4 செண்டி மீட்டர் வரை அளவு மாத்திரமே கொண்ட ரோபோ தேனீக்களை செவ்வாய்க்கு அனுப்பி ஆராய்ச்சி செய்வது என்பதே அம்முடிவாகும். இந்த சிறிய ரோபோ தேனீயில் சிறிய கேமரா மற்றும் சிறிய சென்சார் உட்பட நவீன வசதிகள் உள்ளன. இவ்வாறான 20 தேனீக்களை முதற்கட்டமாக நாசா அனுப்பவுள்ளது. இந்த தேனீக்களில் பேட்டரி சார்ஜ் முடிந்த பின் உடனடியாக மீளவும் சார்ஜ் செய்து கொள்ளவெனெ மேம்பட்ட தொழிநுட்பத்தில் தயாரிக்கப் பட்டு சூரிய சக்தியில் இயங்கும் ரோவர் வண்டி ஒன்றும் சேர்த்தே அனுப்பப் படவுள்ளது. இந்த ரோவர் வண்டியே பூமிக்குத் தகவல் அனுப்பும் சாதனமாகவும் பயன்படவுள்ளது. தற்போது இரு குழுக்களாகப் பிரிந்து ஆய்வாளர்கள் இந்த ரோபோட்டிக் தேனீக்களை வடிவமைத்து வருகின்றனர்.

மேலும் மார்ச் 30 ஆம் திகதி இத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. செவ்வாய்க் கிரகத்தில் ஈர்ப்பு விசை பூமியை விட 1/3 பங்கு மாத்திரமே இருப்பதால் இது மார்ஸ் பீஸ் தேனீக்களுக்கு ஆராய்ச்சி செய்ய இலகுவான தன்மையை ஏற்படுத்தித் தருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மார்ஸ் பீஸ் தேனீக்கள் செவ்வாயின் நிலப்பரப்பின் மேப் இனை வடிவமைப்பது மாத்திரமல்லாமல் உயிர் வாழ்க்கைக்கு அவசியமான மெதேன் வாயு அங்கு வளிமண்டலத்தில் உள்ளதா எனவும் தூசு மாதிரிகளைப் பெற்று ஆராயவுள்ளது.

தற்போது இந்த மார்ஸ் பீஸ் தேனீக்களை வடிவமைக்கும் பணியில் அலபாமா பல்கலைக் கழகமும் ஜப்பானியக் குழு ஒன்றும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.