கட்டுரைகள்

நட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரின் பிரபஞ்சவியல் பகுதியில் புதிய பாகமாக 'பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்' எனும் தலைப்பில் சென்ற வாரம் புதிய அத்தியாயம் தொடங்கியிருந்தோம்.

இப்பகுதியில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து 21 ஆம் நூற்றாண்டு வரை பிரபஞ்சம் பற்றிய நமது பார்வை எவ்வாறு மாறி வருகின்றது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

சென்ற தொடரில் வரலாற்றின் முதல் வானியல் மேதை எனக் கருதக் கூடிய கிரேக்க தேசத்தைச் சேர்ந்த அரிஸ்டோட்டில் மற்றும் அவர் எழுதிய புத்தகமான 'On The Heavens' இல் பூமியைப் பற்றிய அவரின் நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டோம். பூமி கோள வடிவமானது என்று முதன்முறை கூறியவர் இவரே. எனினும் கிறித்தவ மதத்தின் ஆதிக்கமோ அல்லது வேறு ஏதும் நம்பிக்கை அடிப்படையிலேயோ அரிஸ்டோட்டில் பிரபஞ்சத்தின் மையம் பூமி என்ற பிழையான அவதானத்தை நம்புவதற்குக் காரணமானது.

(இவ்விடயம் பற்றி நமது 'நட்சத்திரப் பயணங்கள் முதல் இரண்டு தொடர்களில் ஏற்கனவே அலசியிருந்தோம். அதற்கான இணைப்பு இங்கே -

நட்சத்திரப் பயணங்கள் : 1 (வானியல் தொடர்... மீள்பதிவு)

நட்சத்திரப் பயணங்கள் : 1 (வானியல் தொடர்... மீள்பதிவு)


இவரின் கூற்றுப்படி 'பூமி பிரபஞ்சத்தின் மையம் என்பதுடன் நிலையானது. இதை சூரியன், சந்திரன், ஏனைய கிரகங்கள், மற்றும் நட்சத்திரங்கள் என்பன வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன' என்று விளக்கப்பட்டது.

இவரைப் பின்பற்றி கி.பி 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்து நாட்டின் இன்னொரு மேதையான தொலமி பூமியை மையமாகவும் அதைச் சுற்றி 8 கோள வளையங்களில் (Spheres) முறையே சந்திரன்,புதன்,வெள்ளி,சூரியன்,செவ்வாய்,வியாழன்,சனி, மற்றும் நிலையான நட்சத்திரங்கள் என்பன அமையுமாறு ஒரு கணித வரைபடத்தை ஆக்கினார். இவ்வரைபடம் தொலைக்காட்டிகள் மூலம் நோக்கப் படாத கண்ணால் பார்க்கக் கூடிய வின்வெளியின் பிரத்தியட்சத் தோற்றத்தை வெறும் அவதானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அதில் உள்ள பொருட்களின் இயக்கத்தை விளக்கியது.


தொலமியின் கோள் வளைய மாதிரி

இவ்வரைபடம் முழுதும் விஞ்ஞான ரீதியாக இல்லாவிட்டாலும் கிறித்தவ தேவாலயங்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு அவர்களின் புவி மையப் பரப்புரைகளை நியாயமாக்கி வந்தது. எனினும் கி.பி 1514 இல் நிக்கலஸ் கொப்பர்னிக்கஸ் எனும் போலந்து நாட்டைச் சேர்ந்த பாதிரியார் தொலமியின் மாதிரியை விட மிக எளிமையான வரைபடத்தை முன்வைத்தார். இதில் பிரபஞ்சத்தின் மையம் சூரியன் எனவும் சூரியனை மையமாகக் கொண்டு சந்திரன்,ஏனைய கிரகங்கள், மற்றும் நட்சத்திரங்கள் வட்ட ஒழுக்கில் வருகின்றன என்றும் அவர் விளக்கியிருந்தார். எனினும் இவரின் மாதிரியை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள மேலும் ஒரு நூற்றாண்டு ஆனது.


நிக்கலஸ் கொப்பர்னிக்கஸ்

சில நூற்றாண்டுகளாக நீடித்து வந்த தொலமி மற்றும் அரிஸ்டோட்டிலின் புவி மையக் கோட்பாட்டு மயக்கம் அடிபட்டுப் போனது கி.பி 1609 இல் தான். முதன் முதலில் தொலைக்காட்டி ஒன்றின் மூலம் அவதானங்களை மேற்கொண்டு கேத்திர கணித வரைபடங்களை வரைந்த அறிஞரான கலீலியோ கலிலி இவ்வருடத்தில் தான் தன் தொலைக்காட்டி மூலம் வியாழனைச் சுற்றி துணைக் கோள்கள் காணப்படுவதை கண்டு பிடித்தார். இவரின் அவதானத்துக்கும் தொலமியின் மாதிரிக்கும் தொடர்பின்மை உறுதியானதை அடுத்து கலீலியோ கொப்பர்னிக்கஸ்ஸின் மாதிரியை ஏற்றுக் கொண்டார்.


கலீலியோ கலீலியின் தொலைக்காட்டி

இவரைத்தொடர்ந்து அதே நூற்றாண்டில் வாழ்ந்தஇன்னொரு வானியலாளரான ஜொஹான்னாஸ் கெப்ளர் கொப்பர்னிக்கஸ் மற்றும் கலீலியோவின் யோசனைகளை ஏற்றுக் கொண்டதுடன் இன்னொரு படி மேலே போய் சூரியனைச் சுற்றிக் கிரகங்கள் வட்ட ஒழுக்கில் அல்லாது நீள்வட்டப் பாதையில் வலம் வருகின்றன என்றும் விளக்கினார்.


கெப்ளரின் நீள்வளைய மாதிரி

வானியலில் கிரகங்களின் நீள்வட்ட ஒழுக்கு என்பது எதிர்பாராத ஒரு அவதானமாகும். கிரகங்கள் இப்படித்தான் சூரியனை சுற்றி வருகின்றன என அக்காலத்தில் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப் பட முடியாமைக்குக் காரணம் ஈர்ப்பு விசை (Gravity) குறித்த இவர்களின் விளக்கம் போதாமையேயாகும். இதன் பின் தான் அறிவியலில் புரட்சி ஏற்படப் போகின்றது என அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஆம். சர் ஐசாக் நியூட்டன் அறிவியல் உலகில் பிரவேசித்தார். கிரகங்கள் சூரியனைச் சுற்றி வரக் காரணம் சூரியனின் காந்தப் புலத்தால் அன்றி அதன் ஈர்ப்பு விசையால் என அவர் கூறினார். மேலும் சந்திரன் பூமியைச் சுற்றி வரவும் பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கும் காரணம் ஈர்ப்பு விசையே என்றும் அவர் கூறினார். ஈர்ப்பு விசை என்பது பிரபஞ்சத்தில் எந்த இரு பொருட்களுக்கும் இடையே காணப்படும் ஒரு வித கவர்ச்சி விசை. இது பூமியில் உள்ள சிறு கற்கள் மரங்கள் மட்டுமன்றி கோள்கள் உட்பட நட்சத்திரங்கள் என்பவற்றுக்கு இடையிலும் காணப்படுகின்றது.


சர் ஐசாக் நியூட்டன்

இந்த ஈர்ப்பு விசை ஒரு பொருளின் திணிவில் தங்கியுள்ளது என அவர் தெரிவித்தார். நியூட்டன் 1687 இல் எழுதிய 'Philoshopiae Naturalis Principia Mathematica' 'எனும் புத்தகத்தில் சூரியன் மற்றும் கிரகங்களுக்கு இடையே மட்டுமல்லாது குறித்த இரு பொருட்களுக்கு இடையே தொழிற்படும் ஈர்ப்பு விசை அவற்றின் இயக்கம் குறித்த மிகவும் சிக்கலான கணிதச் சமன்பாடுகளும் சூத்திரங்களும் காணப்படுகின்றன. மேலும் பௌதிகவியலில் முக்கிய பகுதிகளான இயக்கவியல் (Dynamics), நிலையியல் (statics) ஆகியவற்றில் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகக் கணிதவியலில் நுண்கணிதம் (Calculas) எனும் பிரிவை விருத்தி செய்தவர் நியூட்டனே ஆவார். இதற்காக என்றும் அறிவியல் அவருக்குக் கடமைப் பட்டுள்ளது.


'Philoshopiae Naturalis Principia Mathematica' புத்தகம்

நியூட்டனுக்குப் பின்னரும் வானியலில் பிரபஞ்சத்தின் மையம் எது என்ற குழப்பமும் நட்சத்திரங்கள் யாவும் நிலையாக ஒரு இடத்தில் இருக்கின்றன என்ற மயக்கமும் தீர்க்கப் படாமல் காணப் பட்டன. பிரபஞ்சத்தின் மையம் சூரியன் என்றும் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதாகவும் தெளிவான பின்னர் நட்சத்திரங்கள் இரவு வானில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பயணிப்பது பூமியின் சுழற்சியால் தான் என ஊர்ஜிதமானது. ஆகவே அவை தமது இடத்தை மாற்றுவதில்லை விண்ணில் நிலையாக தத்தமது இடங்களில் உள்ளன என்ற கருதுகோளும் உருவானது.

ஆனால் நியூட்டனின் இயக்க விதிப்படி எந்த இரு பொருட்களுக்கும் இடையே ஈர்ப்பு விசை தொழிற்படும். அப்படியானால் நட்சத்திரங்களுக்கு இடையே ஈர்ப்பு விசையோ இயக்கமோ இல்லாமல் இருக்குமா? அப்படியிருந்தால் அவை எப்படி நிலையானவையாக இருக்க முடியும்? எனும் கேள்வி நியூட்டனின் கொள்கைகளால் விளைந்தது...

இதன் தொடர்ச்சியை அடுத்த நாளையும் எதிர்பாருங்கள்...

நன்றி - தகவலுதவி: 'A Breif History of Time' - Stephen W.Hawking

 

முன்னைய பதிவுகள் :

நட்சத்திரப் பயணங்கள் 18 (பிரபஞ்சவியல் 1, கரும் சக்தி)

நட்சத்திரப் பயணங்கள் 19 (பிரபஞ்சவியல் 2, கரும் சக்தி 2)

நட்சத்திரப் பயணங்கள் 20 (பிரபஞ்சவியல் 3, கரும் பொருள்)

நட்சத்திரப் பயணங்கள் 21 (பிரபஞ்சவியல் 4, கரும்பொருள் 2)

நட்சத்திரப் பயணங்கள் 22 (பிரபஞ்சவியல் 5, கரும்பொருள் 3)

நட்சத்திரப் பயணங்கள் 23 (பிரபஞ்சவியல் 6, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்)

 

- 4 தமிழ் மீடியாவுக்காக: நவன்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.