கட்டுரைகள்

திருப்பூருக்குப் போனா எப்படியும் பிழைச்சுக்கலாம் என்னும் நம்பிக்கையைக் கொடுக்கும் தமிழகத்தின் தொழில் நகரம் அது. அந்த நகருக்கு வரும் ஒரு கிராமத்து இளைஞனின் அனுபவத் தொடராகத் தொடங்குகிறது இந்த டாலர் நகரம்.

திருப்பூரில் ஒரு சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு தொழில் நிறுவனத்தின் நிர்வாகியாக உயர்ந்திருப்பவர் திருப்பூர் ஜோதிஜி. தான் சார்ந்த தொழில்துறையின் நுணுக்கங்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பவர். எழுத்து, வாசிப்பு, என்பவற்றில் ஆர்வம் மிகுந்தவர். அதற்கும் மேலாக சமூகம் சார்ந்த அக்கறை மிக்கவர். இவையாவும் இணைந்ததில் பிறந்திருக்கிறது இந்த டாலர் நகரம்.

கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகளில் சிறைப்பட்டுக் கிடந்த இந்த டாலர் நகரத்தை, இச் சுதந்திர நாளில் விடுதலை செய்து, புதிய அத்தியாயங்களை ஜோதிஜிக்கும், அனுபவங்களை வாசகர்களுக்கும், கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு வெளியிடுகின்றோம். - 4Tamilmedia Team

1. டாலரைத் துரத்த தொடங்கிய போது

திருப்பூரில் அந்த ஏற்றுமதி நிறுவனத்தை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர், நான் சேர வேண்டிய முகவரியை கொடுத்ததோடு ஒதுங்கி விட்டார்.

திருப்பூரில் நுழைந்தது முதல், ஆறு மாதங்கள் நூல் கடையில் வேலை செய்த போதிலும் நான் எங்கும் சென்றதில்லை. அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. திருப்பூர் வாழ்க்கையின் தொடக்கத்தில், நான் பணியாற்றத் தொடங்கிய நூல் வியாபாரத்தில் எனக்கு பழக்கமோ, முன் அனுபவமோ இருந்ததில்லை.

கோவில் விசேடத்திற்கு ஊருக்கு வந்திருந்த செட்டியார் மூலம் இந்த முதல் வேலை வாய்ப்பு வந்தது. ஊரில் வாட்ச் கடை நாச்சியப்பனிடம், படித்த ஒரு பையன் தேவையென்று செட்டியார் சொல்லி வைத்திருக்க; கூட்டாளிகளுடன் சுற்றிக் கொண்டிருந்த என்னை வாட்ச் கடை நாச்சியப்பன் தான் திருப்பூருக்கு அனுப்பி வைத்தார். பள்ளித்தோழன் மாதவன் செலவுக்கு பணங்கொடுத்து வழியனுப்ப திருப்பூருக்கு வந்து சேர்ந்தேன்.

முதற்பணி தொடங்கிய நூல் கடை திருப்பூரில் கொங்கு நகர் பகுதியில் முத்து நகர் சந்தில் இருந்தது. நூல் கடைக்கு எதிரே செல்வவிநாயகர் ஆலயம். ஒரு மத்தியான நேரத்தில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் வந்திறங்கி, கையில் வைத்திருந் துண்டுச் சீட்டை ஆட்டோக்காரரிடம் காட்டி, இந்தக் கோவிலின் முன் தான் வந்து இறங்கினேன்.

நாலு முழ வேஷ்டி கட்டி, கையில் துணிக்கடை மஞ்சள் பையுடன் நின்ற என்னை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, நூல் கடையின் அலுவலகப் பகுதிக்கு அனுப்பி வைத்தார் வீட்டின் உரிமையாளர்.

நூல் கடையின் அலுவலகம், வீட்டின் அமைப்புப் போலவே இருந்தது. வீட்டின் மாடியில் செட்டியாரின் வீடு. கீழ்ப் பகுதி அலுவலகம். திண்டுக்கல் அண்ணாமலையார் மில், உடுமலைப்பேட்டை ஜிவிஜி மில்லில் இருந்து லாரி மூலமாக நூல் பைகள் வந்து கொண்டிருக்கும். 60 கிலோ உள்ள ஒரு மூட்டை விற்றால் 10 ரூபாய், நூல்கடைச் செட்டியாருக்கு நூற்பாலையிலிருந்து கொடுத்து விடுவார்கள். இங்கு நடக்கும் வியாபரங்கள் அனைத்தும் தொலைபேசி வழியாகவே முடிவு செய்யப்பட்டு விடும். மிக அதிகமான மூதலீடு தேவையில்லை. நம்பிக்கையே முக்கிய மூலதனம். ஒரு மாதத்திற்குள் விற்று முடித்த மொத்த நூலின் தொகையையும் நூற்பாலைகளின் வங்கிக் கணக்கில் கட்டி விட வேண்டும்.

திருப்பூருக்குள் இரண்டு விதமான உலகங்கள் உண்டு. ஒன்று; உள்நாட்டுக்கான பனியன் மற்றும் ஜட்டி தயாரிப்பு. இதன் சந்தையென்பது இந்தியாவின் எல்லா மாநிலங்களை அடிப்படையாக வைத்து நடந்து கொண்டிருக்கும். குறைவான முதலீடு, வருடம் முழுக்க நிரந்தர அளவான வருமானம்.

மற்றொன்று ஏற்றுமதி உலகம். உலகத்தின் சகல பகுதிகளுக்கும் கப்பல், விமானம் வழியாக சென்றடையும். அதிக முதலீடு. ஆனால் எங்கு வேண்டுமானாலும் தவறு நடக்கலாம். நாடுகளின் அரசியல் கொள்கைகள் முதல் அந்தந்த நாடுகளில் நடக்கும் எதிர்பாரத கலவரங்கள் வரைக்கும் இங்குள்ள ஏற்றுமதியாளர்களை ஆட்டம் காண வைக்கும்.

நூல்கடை செட்டியார் ஏற்றுமதி நிறுவனங்களுடன் அதிக வரவு செலவு வைத்துக் கொள்ளமாட்டார். காரணம் பின்னால் பார்க்கலாம். ஒவ்வொரு விதமான ஆயத்த ஆடைகளுக்கும் தனித்தனியான நூல் தேவைப்படும். மனிதர்களுக்கு வயது போல நூல்களுக்கு கவுண்ட்ஸ் என்று அழைக்கிறார்கள். பத்து முதல் அறுபது வரைக்கும் கவுண்ட்ஸ் உண்டு. ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் தயாரிக்கும் ஆடைக்குத் தேவைப்படும் நூலை இது போன்ற நூல் கடைகள் மூலமாகத் தான் வாங்கிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு ஆடைக்கும் அதன் தரம் பொறுத்து இந்த நூலின் கவுண்ட்ஸ் மாறுபடும்.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் நம்பிக்கையான மாட்டு வண்டிகாரர்கள் இருப்பார்கள். அவர்களிடம் அந்தந்த நிறுவனங்கள் தங்களின் மெமோ சீட்டில் தேவைப்படும் நூல் பை எண்ணிக்கையை எழுதி அத்துடன் பின் தேதியிட்ட காசோலையையும் கொடுத்து அனுப்புவார்கள். பெற்றுக் கொள்ளும் நூல் பைகளை வண்டிக்காரர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குரிய அறவு (நிட்டிங்) நிறுவனத்தில் கொண்டு போய் சேர்த்து விடுவார்கள்.

. செட்டியாரின் நூல் கடைக்கான நூல் பைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோன் கொங்கு நகர் தனலெஷ்மி திரையரங்கம் அருகே இருந்தது. நூல் கடையின் அலுவலக நேரமென்பது காலை ஒன்பது தொடங்கி மாலை ஐந்து மணி வரையில் இருக்கும். எப்போதாவது இரவு நேரத்தில் பணியிருக்கும். எனக்கு ஒதுக்கப்பட்ட குடோன் வேலை மிக எளிதாகவேயிருந்தது.

. குடோனை பூட்டி விட்டு வெளியேயுள்ள கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி வருபவர்களுக்காக காத்திருப்பேன். தினமும் காலையில் குடோனுக்குச் செல்லும் போதே வாடகை நூலகத்திலிருந்து பல புத்தகங்களை எடுத்து சென்றுவிடுவேன்.

எடுத்துச் சென்ற புத்தகங்களை படித்து முடிக்கும் போது மதிய சாப்பாடு வேளை வந்து விடும். இடையில் வரும் வண்டிகாரர்கள் கொண்டு வந்து தரும் மெமோ சீட்டைப் பார்த்து குறிப்பிட்ட பகுதியில் அடுக்கி வைத்திருக்கும் நூல்பைகளை காட்டினால் அவர்களே எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். மீதம் இருக்கும் நூல் பையின் எண்ணிக்கையை மாலையில் செட்டியாரிடம் வந்து சொல்ல வேண்டும்.

என்னுடன் அலுவலகத்தில் வேறொருவரும் பணிபுரிந்து கொண்டிருந்தார். என் சொந்த ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் என் மூத்த அண்ணனின் வகுப்புத் தோழரும் கூட. நூல் கடையில் உள்ளே நுழைந்த முதல் நாளன்றே நான் அறிமுகப்படுத்திக் கொள்ளாமலேயே எங்கள் குடும்ப முக அமைப்பை வைத்து அவராகவே உறுதிபடுத்திக் கொண்டு கேட்டார். அவர் அலுவலகத்தின் உள்ளே தங்கி சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். என்னையும் அவருடன் சேர்த்துக்கொள்ள, தங்குமிடமும் சாப்பாட்டு பிரச்சனையும் முடிவுக்கு வந்தது. காலை ஐந்து மணிக்கே நண்பர் எழுந்து மூன்று நேரத்திற்கும் சமைத்து விடுவார். நான் மற்ற வேலைகளை செய்து கொடுத்து விடுவேன். நூல் கடையில் நண்பரின் வேலையென்பது செட்டியாரின் அந்தரங்க வேலைகள் முதல் நிறுவனங்களில் பாக்கித் தொகையை வசூலிப்பது வரைக்கும்.

எங்கள் குடோன் அருகே மற்ற நூற்பாலைகளின் அலுவலகங்களும் இருந்தன, அருகருகே குடோன் பல உண்டு மற்ற மில்களின் கோடவுன் வேலையாட்கள், வண்டிக்காரர்கள் என்று ஒரு தனியான உலகம் அந்த பகுதியை எப்போதும் பரபரப்பாக இயக்க வைத்துக் கொண்டிருந்தது. அவர்களின் வினோதமான பழக்கவழக்கங்கள், பேச்சுகள் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் அத்தனை பேர்களும் பேசும் கொங்கு பாஷை... எல்லாமே எனக்குப் புதிது.

நான் எவருடனும் பேச விரும்பாமல் புத்தகங்களின் துணையோடு முழு பொழுதையும் கழித்து விடுவேன். எத்தனை பாலகுமாரன், சுஜாதா? கணக்கில்லை.

எதிரே இருக்கும் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண் பல நாட்கள் என்னை தொடர்ச்சியாக கவனித்துக் கொண்டே இருந்திருக்க வேண்டும். திடீரென்று ஒரு நாள் என்னை நோக்கி வந்தார். அவர் பல சமயம் என்னைப் பார்த்து சிரித்து இருக்கிறார். நான் பயந்து கொண்டு தலையை குனிந்து கொண்டு விடுவேன். அருகே வந்து நின்றவர் சிரித்துக் கொண்டே கேட்டார்.

“காலையிலேந்து படிச்சுக்கிட்டேயிருக்கீங்களே? யாருடனும் பேச மாட்டீங்களா?”

அவர் திடீரென்று என்னருகில் வந்து நின்றதும் உதறலாய் இருக்க பதில் சொல்லாமல் மெதுவாக சிரித்து வைத்தேன். என் பதிலை எதிர்பார்க்காமல் “உங்களுக்கு படித்துப் படித்து பைத்தியம் தான் பிடிக்கப் போகுது?” என்று சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.

நூல் கடையில் என்னுடன் பணிபுரிந்த நண்பருக்கு ஏற்கனவே ஐந்தாண்டுகள் பணிபுரிந்த போதிலும் மாதச் சம்பளமாக 600 ரூபாய் தான் செட்டியார் கொடுத்துக் கொண்டுருந்தார். எனக்கு முதல் மாதமே ஆயிரம் ரூபாய். நான் முதல் முதலாக பார்த்த ஆயிரம் ரூபாய். என்னுடைய மாத செலவென்பது சாப்பாட்டுக்கு நான் கொடுக்க வேண்டிய பங்குத் தொகை 180 ரூபாய் மட்டுமே. மற்ற செலவுகள் 50 ரூபாய் போக மிஞ்சியது 770 ரூபாய். எப்படி செலவழிப்பது என்று தெரியாத மக்குப் பையனாகத் தான் இருந்தேன்.

நண்பரோ எல்லா பழக்கத்திற்கும் அஞ்சா நெஞ்சன். முன்னாள் எம்.எல்.ஏ. வகையில் நெருங்கிய சொந்தமும் கூட. அவர் கல்லூரிப் படிப்பில் தேர்ச்சியடையாமல் படித்த மூன்று ஆண்டுகளும் குடியிலும் மடியிலும் கழித்தவர். இதெற்கெல்லாம் மேல் அவரின் முரட்டு குணாதிசயங்கள்.

காரைக்குடியில் கல்லூரி முடிக்கும் வரையில் எனக்கு வெளியுலகம் என்பதே தெரியாது. இரவு உலகம் எப்படி இயங்கும்? என்ன மாதிரி சூழ்நிலை என்பதே அனுமானிக்கத் தெரியாமல் வாழ்ந்த வாழ்க்கையில் இரவு பத்து மணியென்பது எனக்குத் தூக்கத்தின் இரண்டாவது ஜாமம்.

பகல் நேரத்தில் எங்கேயாவது தெருச்சண்டை நடந்தாலும் அடுத்த சந்தின் வழியாக வீட்டுக்கு வந்து விட வேண்டும். சண்டை நடந்த இடத்தில் பார்த்ததாக வீட்டுக்குத் தகவல் சென்றாலே அன்று இரவு மண்டகப்படி அவசியம் நடக்கும்.

எனக்கு நூல்கடையில் பெரிய பிரச்சனை என்று ஒன்றும் இல்லை. ஆனால் மூளை மழுங்கி விடும் அளவிற்கு அந்த வேலை சலிப்புத்தட்டியது. “என்னை எப்படியாவது வேறு நல்ல வேலையில் சேர்த்து விடுங்கள்?” என்று உடன் பணிபுரிந்த நண்பரிடன் கேட்டேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இதே வேலையிலிருந்த அவருக்கு அவரது மூளையும் உடம்பும் இந்த வேலைக்கு பழகி விட்டது. நூல் கடை செட்டியாருக்கு அவர் மாதிரி ஆட்கள் தான் தேவை. சிந்திக்கக் கூடாது. அவர் சொல்லும் அனைத்து வேலைகளையையும் செய்ய வேண்டும். நடு இரவில் எழுப்பி கழிப்பறையை கழுவச் சொன்னாலும் கேள்வி கேட்கக் கூடாது.

நண்பர் எங்கள் நூல் கடைக்கு வந்து போய்க் கொண்டிருந்த பழனியப்பன் என்பவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பழனியப்பன் நான் பணிபுரிந்த நூல் கடையில் நூல் வாங்கிச் சென்று அவருக்குத் தெரிந்த நிறுவனங்களில் விற்று குறிப்பிட்ட லாபம் பார்த்துக் கொண்டுருந்தார்.

என்னைப்பற்றி விசாரித்துவிட்டு “ நீங்க எக்ஸ்போர்ட் கம்பெனி வேலைக்கு போறீங்களா?” எனக் கேட்டார். எனக்கு எக்ஸ்போர்ட் கம்பெனி என்றால் என்னவென்றே தெரியாது. முதலில் இங்கிருந்து தப்பிக்க வேண்டும். “சரியென்று” தலையாட்டினேன். அவினாசி சாலையில் பத்மாவதிபுரத்தில் இருந்த ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் முகவரியை கொடுத்தார்.

நான் வெளியேறுகிறேன் என்றதும் செட்டியார் பெரிதாக எதுவும் கேட்கவில்லை. இருவரும் ஓரே ஊர் என்பதாலோ என்னவோ ஒரு பைசா பாக்கியில்லாமல் கொடுத்து அனுப்பினார்.

வேறொரு நிறுவனத்தில் என்னைப் போல் போராடிக்கொண்டுருந்த பள்ளித் தோழன் முருகேசனைப் பார்த்து விபரங்கள் சொன்ன போது “ எனக்கு அந்த இடம் தெரியும். நான் வருகின்றேன்” என்றான். அவனுடன் அந்த ஏற்றுமதி நிறுவன முகவரி தேடி அவினாசி சாலைக்கு வந்தோம்.

எப்போதும் போல ஊர்ப்பழக்கத்தில் உடுத்தியிருந்த வேட்டி சட்டையுடன் முருகேசனின் சைக்கிளை தள்ளிக்கொண்டு பேசிக் கொண்டே ஒரு மாலை வேலையில் அந்த நிறுவனத்தை அடைந்தோம். .அன்று ஞாயிற்றுக்கிழமை. அந்த ஏற்றுமதி நிறுவன கட்டிட உரிமையாளர் எங்களை வரவேற்றார்.

“குமார் நீங்க வருவீங்கன்னு சொன்னார். இந்தாங்க உங்க அறையின் சாவி” என்று ஒரு துருப்பிடித்த சாவியை என் கையில் கொடுத்து நான் தங்க வேண்டிய அறையைக் காட்டினார்.

அவர் காட்டிய அறை அந்த ஏற்றுமதி நிறுவனத்தின் பொது கழிப்பறைக்கு அருகே இருந்தது. நிறுவனத்தை ஒட்டிய சந்துக்குள் இருந்த அந்த அறையில் எக்ஸ்போர்ட் கம்பெனி பணியாளராக புதிய வாழ்க்கைத் தொடங்கியது

தொடர்வோம்...

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.