கட்டுரைகள்

2. தடுமாறிய பயணங்கள்  என்னுடைய திட்டமிடுதலும், விருப்பங்களும் நிறைவேறாத ஆசையாகவும், கனவாகவும் தான் தொடர்ந்தது. ஆனால் விடா முயற்சிகளை மட்டும் நான் பத்திரப்படுத்தி வந்தேன்.

சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை அதல பாதாளத்திற்கு இட்டுச் சென்ற போதிலும், ஒவ்வொரு நிலையிலும் “ சொந்தமாய் ஒரு தொழில்” என்பது மனதில் கனன்று கொண்டிருந்தது.

அதற்கான தருணத்தை எதிர்பார்த்து பல்வேறு நிறுவனங்களில் மாறிமாறி வேலை செய்தேன். எனக்கென்று நிரந்தர வேலையோ நிரந்தர முவரியோ இல்லாமல் எனது வாழ்க்கை பயணம் தொடர்ந்தது.

முதலில் நுழைந்த ஏற்றுமதி நிறுவனத்தில் “இது தான் வேலை” என்று எதுவுமில்லை. .

முதலாளி யாரென்று எனக்குத் தெரியாது. நண்பர் கொடுத்தனுப்பிய சீட்டில் குமார் என்றெழுதி நிறுவனத்தின் பெயர் முகவரியை எழுதி கொடுத்திருந்தார். இங்கு எவரைப் பார்த்தாலும் முதலாளி போலவே தெரிந்தார்கள். உரத்த குரலும், வேகமான செயல்பாடுகளுமாய் ஒவ்வொருவரும் பறந்து கொண்டேயிருந்தார்கள்.

வேலையின் முதல் நாள், ஊர் பழக்கம் போல் அதிகாலையில் குளித்து முடித்து விட்டு சாப்பிட எங்கு போவது என்று தெரியாமல் சாப்பிடாமலேயே வேலைக்குச் சென்றேன். உள்ளேயிருந்த ஒருவர் மட்டும் “நீங்க புதுசா வேலையில் சேர்ந்திருக்கீங்களா? என்றார். உள்ளே பணியிலிருந்த ஒவ்வொருவரும் அங்குமிங்கும் வேகமாக போய்க் கொண்டிருந்தார்கள்.

அந்த நிறுவனத்தின் அமைப்பே ரொம்ப வித்யாசமாய் இருந்தது. எண்ணூறு சதுர அடி பரப்பளவில் தரை முழுக்க கோரைப்பாய் விரிக்கப்பட்டு அதன் மேல் வரிசையாக எந்திரங்களை நிறுத்தியிருந்தார்கள்.

பதினான்கு வயது முதல் நடுத்தர வயது வரை ஆண்களும் பெண்களுமாய் தைத்துக் கொண்டுருந்தார்கள். சிறு வயது நபர்கள் ஒவ்வொருவரும் அருகே நின்று கொண்டு தைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு துணியை எடுத்து கொடுத்துக் கொண்டுருந்தார்கள்

ஓடிக் கொண்டிருந்த எந்திர ஓசைகளும் தைத்து முடித்து வெளியே வந்து விழுந்த ஆடைகளும் எனக்கு வினோதமாகத் தெரிந்தது. கண்ணெதிரே ஒரு ஆடை முழு வடிவம் பெறுவதை அன்று தான் முதன் முதலில் பார்த்தேன்.

என்னை எவரும் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. யார் முதலாளி? எவரிடம் போய் பேசுவது என்று தெரியாமல் பெண்கள் வரிசையாக நின்று கொண்டிருந்த செக்கிங் டேபிள் அருகே கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு அவர்கள் செய்யும் வேலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தேன்.

செக்கிங் பெண்கள் தைத்து வந்த ஆடைகளை தரம் பிரிப்பதற்கான வேலையை செய்து கொண்டிருந்தார்கள். எனக்கு நேர் பக்கவாட்டில் இருந்த கண்ணாடி அறைக்குள் இருந்து வந்தவர் என்னருகே வந்து நின்றார். என் தோளில் கை போட்டுக்கொண்டு, “ பழநியப்பன் உங்களை பற்றிச் சொன்னார்” என்று கேட்டு விட்டு ஊர் விபரங்களை மேலோட்டமாக விசாரித்தார், கடைசியாக ” அந்த டேபிளில் உள்ள பீஸ்களை அளவு பார்த்து தனித் தனியாக பிரித்து அடுக்குங்கள்” என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டார். என் வேலை தொடங்கியது.

தொடர்ந்து வந்து கொண்டிருந்த மொத்த ஆடைகளையையும் முழுமையாக பார்த்து முடித்த போது இரவு இரண்டு மணி. இடையில் கிடைத்த காபி மட்டும் தான் உணவு. என்னை எவரும் எதுவும் கேட்கவில்லை. சாப்பிடப் போக வேண்டும் என்று தோன்றவும் இல்லை. வெறி வந்தவன் போல் யாருடனும் பேசாமல் கடமையே கண்ணாய் இருக்க, நடு இரவில் வேலை முடியும் நேரத்தில் என் தோள்பட்டை அருகே யாரோ கவனிப்பது போன்று தோன்றியதால் திரும்பி பார்த்தேன்.

கண்கள் சிவந்து, வாய் முழுக்க பாக்குடன், மது வாடையுடன் காலையில் எனக்கு வேலையை கொடுத்து விட்டுச் சென்ற முதலாளி குமார் நின்று கொண்டுருந்தார். என் பின்னால் நின்று கொண்டு வெகு நேரமாய் கவனித்திருப்பார் போல. என் தோளின் மேல் கையை போட்டுக் கொண்டு “மீதி வேலைகளை காலையில் வந்து பார்க்கலாம், போய் தூங்குங்க” என்றார். மிச்சம் இருந்த ஆடைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த எனக்கு அவர் சொன்ன வார்த்தைகள் பசி மயக்கத்தில் பாதி தான் புரிந்தது. அவர் வாயிலிருந்து வந்த மது வாடை என் பசி மயக்கத்தை அதிகப்படுத்தியது.

புறப்படுகையில், “காலை வந்ததும் என்னை பார்த்து விட்டு பிறகு உள்ளே செல்லுங்கள்”. என்றார்.

மூன்று நேரமும் சாப்பிடாத பசி மயக்கத்தில் அறைக்குள் வந்து படுத்தபோது கொசு, மூட்டைப்பூச்சி அவஸ்த்தைகள் எதுவும் தெரியவில்லை.

எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத என்னை உள்ளே பணிபுரிந்து கொண்டடிருந்த மற்றவர்கள், அவர்கள் மந்தையில் கடைசி வரையில் சேர்க்கவே இல்லை. ஆனாலும் எல்லா கண்களும் என்னை கவனித்துக் கொண்டேயிருந்தன என்பதை அறிவேன். உழைப்பினால் நிச்சயம் முன்னேற முடியும். இதை மட்டுமே முழுமையாக நம்பி மிகுந்த ஆர்வமாய் ஒவ்வொரு வேலைகளையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

நாட்கள் நகர்ந்தன நானும் வளர்ந்தேன். நிர்வாகியின் உள் வட்டத்தில் நுழைந்த போது முழுமையாக மூன்று மாதங்கள் கடந்திருந்தன..

நிர்வாகத்தில் உள்வட்டம் வெளிவட்டம் என்பதெல்லாம் சுற்றியுள்ளவர்கள் எனக்கு கொடுத்த மரியாதையை வைத்து தான் கண்டு கொண்டேன். கூடவே ஒவ்வொரு பொறுப்புகளும் என்னிடம் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. நிர்வாகத்தின் வங்கி வரவு செலவு கணக்குகளையும் கையாளத் தொடங்கும் போது புதுப்புது பிரச்சனைகளும் வரத் தொடங்கியது.

ஒவ்வொரு சனிக்கிழமைகளும் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளப் பணம், மற்ற பங்குதாரர்களின் கையிலிருந்து என்னிடம் வந்து சேர்ந்த போது எதிரிகளின் எண்ணிக்கை அதிகமானது.

என்னுடைய வெகுளித்தனமான பேச்சுக்கள் பல பிரச்சனைகளை உருவாக்கியது. என் இயல்பான குணாதிசயங்களை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. முதலாளி கொடுத்த பொறுப்புகளில் கவனம் இல்லாததால் பிரச்சனைகள் மேலும் அதிகமானது.

பணம் வைத்திருக்கும் மேஜையை விட்டு நகர அவ்வவ்போது பணம் குறையத் தொடங்கியது. யார் எடுத்தார்கள்? என்பதை கண்டு கொள்ளத் தெரியாமல் என் சம்பளப் பணத்தை வைத்து சமாளிக்கத் தொடங்கினேன்.

ஆடை ஏற்றுமதி தொழிலில் பெண்கள் ஒவ்வொரு இடத்திலும் இருந்தார்கள். குழந்தைத் தொழிலாளர்கள் முதல் வயதான பெணகள் வரைக்கும் அவரவர் வயதுக்கு தகுந்தாற் போல் வேலையிருந்தது.

ஏற்றுமதி நிறுவனங்களில் டைலராக வருபவர்கள் மிகுந்த கௌரவமானவர்கள் இருந்தார்கள். ஓவர் லாக், பேட்லாக், ரிப் கட்டிங் என்று ஒவ்வொரு எந்திரமும் ஆடை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது.

குறிப்பிட்ட எந்திரத்தில் ஆள் இல்லாவிட்டால் தைத்துக் கொண்டுருக்கும் ஆடைகள் முழுமை பெறாது. டைலர்களை மிரட்டி வேலைவாங்கவும் முடியாது. இதற்கு மேல் தொழிலாளர்களின் பாலியல் சமாச்சாரங்கள். கண்டும் காணாமல் நகர்ந்து போய்விட வேண்டும்.

பல சமயம் இரவு வேலையென்பது ஆடைகளை தரம் பார்த்து பிரிக்கும் செக்கிங் பெண்களுக்கு மட்டுமே இருந்தது. இது போன்ற சமயங்களில் குறிப்பிட்ட டைலர்களுக்கு மட்டுமே வேலையிருக்கும். பகலில் தைத்த ஆடைகளில் உள்ள தவறுகளையையும், லேபிள் மாற்றி வைக்கப்பட்ட ஆடைகளையையும் இரவு வேலையில் இருப்பவர்கள் பிரித்து கட்டி வைத்து விடுவார்கள். அடுத்த நாள் காலையில் வந்து சேரும் டைலர்கள் தைக்க வசதியாய் இருக்கும்.

வேலை செய்து கொண்டுருக்கும் பகுதியைத் தவிர மற்ற இடங்களில் மின்சாரம் விளக்குகள் நிறுத்தப்பட்டு அந்த இடங்களில் ஆள் நடமாட்டமும் இருக்காது.

டெய்லர்களிடம் தைக்க வேண்டிய ஆடைகளை தனியாக ஒரு மேஜை மேலே அடுக்கி வைத்திருப்பார்கள். ஆடைகளின் எண்ணிக்கை அதிகமாக மேஜையின் பக்கவாட்டிலும் தொங்கவிடப்பட்டுருக்கும். மேஜையின் கீழ்ப்பகுதியில் உள்ள பலகை படுப்பதற்கு வசதியாக இருக்கும். இயல்பாகவே இந்த மேஜையின் உள்ளே ஒருவர் படுத்திருந்தாலும் வெளியே தெரியாது. இது போன்ற மேஜைகள் மட்டும் நடுஇரவில் திடீரென்று முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருக்கும். மேஜையின் கீழே முறையற்ற காமம் அரங்கேறிக் கொண்டிருக்கும். மற்ற பணியாளர்களை விட நான் இரவு வேலைக்கு விருப்பப்பட்டு போய்விடுவதுண்டு. காரணம் இரவு வேலைக்கு என்று தனியாக சாப்பாடுக்காசு முப்பது ரூபாய் கிடைக்கும். இரவு ஒரு மணி வரைக்கும் பணிபுரிய வேண்டும். பகல் முழுக்க வேலை செய்து சோர்வாக இருந்தாலும் அந்த முப்பது ரூபாய் பணத்திற்காகவே முன்னால் போய் நின்று விடுவேன்.

கிடைக்கும். மொத்த ரூபாய்க்கும் தின்று தீர்த்துவிடுவதுண்டு. காரணம் ஊரில் இருந்தவரைக்கும் வீட்டைத் தவிர வேறெங்கும் சாப்பிட்டது இல்லை. கல்லூரி வரைக்கும் இப்படித்தான் என்னை வளர்த்தார்கள்.

கல்லூரி படிப்பு முடியும் வரைக்கும் குடும்ப வளர்ப்பின் காரணமாகவே வெளியுலக வாழ்க்கையில் இருந்த எந்த இருட்டு பகுதிகளையும் நான் பார்த்தது இல்லை. இப்போது நிறுவனத்தில் நான் பார்த்துக் கொண்டுருக்கும் ஒவ்வொன்று மிகுந்த அதிர்ச்சியாய் இருந்தது.

தொடக்கத்தில் என்னைப் பற்றி உடன் பணிபுரிபவர்களிடம் சொன்ன போது கிண்டலடித்தார்கள். நிறுவன முதலாளிக்கு என்னுடைய இந்த ஒழுக்கம் மேலும் கவர்ந்து விட்டது. ஆனால் உள்ளேயிருந்த முதலாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தொடுப்பு உண்டு என்பதை பிறகு தான் கண்டு கொண்டேன்.

பணிபுரிந்து கொண்டுருந்த பெண்கள் கூட்டத்தில் அந்த தொடுப்பு எவரென்று அறியாமலேயே எப்போதும் போல பணிபுரிபவர்களிடம் மிகுந்த கண்டிப்புடன் இருக்க அதுவும் பல பிரச்சனைகளை உருவாக்கியது.

உடன் புரிபவர்கள் அனைவருமே நண்பர்கள்.

அன்பு சூழ்ந்த உலகம்.

யாருக்கு பொறாமை இருக்க போகின்றது.?

உழைப்பவர்கள் முன்னேறுவதை எவர் தடுப்பர்?

கஷ்டப்படுவர்களுக்கு பணம் கொடுத்தால் என்ன தவறு?

உயிரைக் கூட கொடுப்பதாகச் சொல்லும் நண்பர்கள் அழைக்கும் போது மதுபான கடைகளுக்குச் சென்றால் என்ன தவறு?

இது போன்ற மனதில் தோன்றிய எண்ணங்கள் ஒவ்வொன்றும் என்னை மாற்றிக் கொண்டேயிருந்தது. உடன் இருந்தவர்கள் மிகத் தெளிவாக என்னை பயன்படுத்திக் கொண்டார்கள். எனக்கென்று முதலாளி தனியாக ஒரு இரண்டு சக்கர வாகனத்தை கொடுத்திருந்தார்.

இரண்டு சக்கர வாகனத்தில் கணக்கில்லாமல் இருக்கும் பெட்ரோல் தீரும் வரையில் வெளியே சுற்ற வைத்தது. பணிபுரியும் தொழிலாளர்களிடம் கண்டிப்பும் கறாருமாய் இருந்து விட்டால் நிச்சயம் எந்த தவறும் நம்மை மீறி நடந்து விடாது என்பதில் உறுதியாய் இருந்தேன்.

இன்னும் இது போன்ற பல கேள்விகளை எனக்கு நானே உருவாக்கிக்கொண்டு விசுவாசத்தின் மொத்த உருவமாய் நாளொன்றுக்கு சர்வசாதாரணமாக இருபது மணி நேரம் உழைத்துக் கொண்டுருந்தேன். ஆறே மாதங்களில் கண்ட இடங்களில் தேடித் தேடி தின்ற நேரங்கெட்ட சாப்பிட்டினால் டைபாய்டு காய்ச்சல் வந்தது.

மூத்த அண்ணன் அந்தியூரில் அரசு அலுவராக பணிபுரிய இரண்டு மாதங்கள் சிகிச்சைக்காக அங்கே தங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போதிலும் முதலாளியின் தொடர் அழைப்பினால் பாதியிலேயே திரும்பி வந்து நிறுவனத்திற்கான என் உழைப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.

எல்லா உழைப்புக்கும் என்னுள் இருந்த அத்தனை கேள்விகளுக்கும் ஒரு நாள் விடை கிடைத்து.

நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் திருடு போய் விட்டது. உள்ளே இருந்தவர்களின் பார்வைகள் மொத்தமும் என் மேல் விழுந்தது. காரணம் காசோலை புத்தகம் என் பொறுப்பில் தான் இருந்தது. வரவு செலவு முதல் வங்கிக் கணக்கு வரைக்கும் நான் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். மூத்த பங்குதாரர் குமார் மட்டுமே கையொப்பமிடும் அதிகாரம் உள்ளவர். அவர் கையெழுத்திட்ட நான்கைந்து காசோலை தாள் என்னிடம் தான் இருக்கும். தேவைப்படும் போது நான் தான் பூர்த்தி செய்து கொண்டு போய் பணம் எடுத்து வருவேன். எப்போதும் போல வாரத்திற்கு ஒரு முறை வங்கிக்குச் சென்று வரவு செலவு கணக்குகளை குறித்து வந்த போது தான் இந்த பிரச்சனை வெளியே தெரிந்தது.

நிறுவனப் பெயர் இல்லாமல் தனி நபர் மூலம் ஒரே காசோலையின் மூலமாக ஒரு லட்சத்தை எடுத்திருப்பது புரிந்தது. மொத்த நிர்வாகமும் கலங்கி நின்றது. முதலாளி மெத்தப்படித்தவரல்ல. காசோலையில் கையெழுத்து போடுவதுடன் அவர் வேலை முடிந்து விடும். அவருடன் இருக்கும் மற்ற பங்குதாரர்கள் எவரும் அந்தப் பக்கமே வருவதில்லை.

நிர்வாகத்தின் மொத்த வரவு செலவுகளை என்னைத் தவிர இரண்டு மாதங்களுக்கு முன்னால் சேர்ந்த புதிய நபருக்கு மட்டுமே தெரியும்.

நான் ஒவ்வொரு நாளும் வங்கிக்குச் செல்லும் போது உருவாகும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டுமென்று முதலாளியிடம் துணைக்கு மற்றொரு நபர் வேண்டுமென்று சொல்லியிருந்தேன். பணப் பொறுப்புகளை கையாள தனியாக திறமை வேண்டும். அந்த விசயத்தில் நான் ஜீரோவாக இருந்தேன். அப்போது தான் என்னை இந்த நிறுவனத்தில் சேர்த்து விட்ட பழநியப்பன் மற்றொரு புதிய நபரை கொண்டு வந்து சேர்த்து இருந்தார். அவர் பெயர் மெய்யப்பன்.

என்னிடமுள்ள மொத்த பொறுப்புகளையையும் புதிதாக வந்தவரிடம் ஒப்படைத்து ஒதுங்கி விடவேண்டுமென்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடைமுறைகளையையும் சொல்லிக் கொடுத்தேன். இது தான் எனக்கு வினையாக வந்து முடிந்தது.

மிகப் பெரிய வலை என் முன்னால் விரிக்கப்பட்டுருப்பதை உணராமலே நானே போய் சிக்கியிருந்தேன்.

திருடப்பட்ட காசோலை விவகாரம் என்னை நோக்கி வரவேயில்லை. ஆனால் நிறுவன பங்குதாரர்ர் ஒருவர் திடீரென்று ஒரு நாள் நான் தங்கியிருந்த அறையில் எல்லாவற்றையும் பிரித்து பார்த்து சோதித்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத நேரத்தில் அறையின் உள்ளே நுழைய என்னைக் கண்டதும் “சாம்பிள் தைக்க துணி தேடி வந்ததாக” சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.

அந்த மாத சம்பளம் கைக்கு வரவில்லை,. படிப்படியாக என்னிடமிருந்த ஒவ்வொரு வேலையும் மற்றவர்களுக்கு மாறத் தொடங்கியது. ஏதோ ஒன்று என்னைச் சுற்றி நடந்து கொண்டுருக்கிறது. ஆனால் யாரும் எதுவும் சொல்ல வில்லை. மற்றவர்கள் கூடி நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். என்னைக் கண்டதும் வேகமாக கூட்டம் கலைந்து விடும்.

வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் எனக்கு ஒரு மாறுதல் வரப்போகிறதென்றால் நான் செய்யும் சிறிய காரியங்கள் கூட பிரச்சனைகளாக மாறத் தொடங்கும். .

பழநியப்பன் திடீரென்று ஒரு நாள் வந்து அருகேயுள்ள டீக்கடைக்கு அழைத்துச் சென்றார். மிகுந்த தயக்கத்துடன் திருடப்பட்ட காசோலை விவகாரத்தைப் பற்றி கேட்க எனக்கு தலை சுற்றியது.

அய்யய்யோ என்று அலறத் தான் முடிந்தது. ஒரு லட்சம் என்பது என் வாழ்வில் எப்படி இருக்கும் என்றே தெரியாது என்று ஏதேதோ புலம்பத் தான் முடிந்தது. என்னுடைய எந்த விளக்கத்தையும் எவரும் கேட்கத் தயாராயில்லை. .

என்ன செய்வது என்று புரியவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால் தவறு நடந்துள்ளது. சந்தர்ப்ப சாட்சியங்கள் அனைத்தும் எனக்கு எதிராக உள்ளது.

இதற்கிடையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த மெய்யப்பனின் நடவடிக்கைகளில் நிறைய மாறுதல்கள் தெரிந்தது. .

. இவர் முதல் முதலாக உள்ளே வந்த போது அழுக்கான உடைகளும் மாற்றுத் துணிக்கு வழியில்லாமல் கூட உள்ளே வந்தார். ஊரில் உள்ள கடன் தொல்லைக்குப் பயந்து ஊரை வீட்டு ஓடி வந்தவர். இவரை உதவியாளராக வைத்துக் கொள்ளுங்கள் என்று முதலாளி அறிமுகப்படுத்திய போது மகிழ்ச்சியுடன் அத்தனையையும் கற்றுக் கொடுத்தேன். இவரே எதிரியாய் மாறுவார் என்று கனவிலும் நினைக்கவில்லை..

உள்ளே நுழைந்த போது இருந்த அவரின் தொங்கிப்போன முகம் நாளாக கம்பீரமாய் மாறிக் கொண்டுருந்தது. ஆனால் நான் இது போன்ற உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட குணாதிசியங்களை கண்டு கொள்வதில்லை. காலை முதல் இரவு வரை அடுத்து என்ன வேலை? என்பதில் மட்டும் கவனத்தில் வைத்திருப்பேன். இது போன்ற உள் அரசியல் விளையாட்டுக்களை கண்டு கொள்வதில்லை. இதன் காரணமாகவே உடன் இருப்பவர்களின் உண்மையான முகத்தை கண்டு கொள்ளத் தெரியாமல் தவித்ததுண்டு. இது தான் இப்போது மிகப் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டிருந்தது.

மெய்யப்பன் என்னை அங்கிருந்து வெளியேற்ற மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். எல்லாவற்றையும் மறைமுகமாகவே நடத்திக் கொண்டிருந்தார். ஒரு நாள் மாலை அவராகவே என்னை பார்க்கு அழைத்துச் சென்று புலம்பும் நிலைக்கு கொண்டு வந்து விட்டு ஆறுதல் படுத்தும் விதமாக மற்றொரு ஏற்றுமதி நிறுவன ஆள் தேவையை எடுத்துச் சொன்னார்.

இந்த நிறுவனத்தில் ஆறேழு மாதங்கள் தான் இருந்திருப்பேன். தொழில் ரீதியாக என்ன கற்றுகொண்டேன்? என்பதே எனக்குப் புரியவில்லை. பணிபுரிந்த வரைக்கும் எனக்கென்று எந்தப் பிரச்சனைகளும் இல்லை. முதலாளி மேல் எந்த தவறுமில்லை. எல்லாவிதங்களிலும் முழுமையான சுதந்திரத்தை கொடுத்திருந்தார். தொழில் ரீதியான எந்த விசயத்தையும் கற்றுக் கொள்ளாமல் அலைச்சலில் வீணடித்திருப்பது அப்போது தான் புரிந்தது.

இனி வேறு வழியில்லை. வேறு நிறுவனத்திற்கு மாறித்தான் ஆக வேண்டும். தொடர்ந்து இங்கு இருக்கவும் முடியாது. முதலாளி என் மீது வைத்திருந்த நம்பிக்கையை வைத்து பலவிதமாக காரியம் சாதித்துக் கொண்டவர்கள் ஒவ்வொருவரும் என்னை விட்டு ஒதுங்க ஆரம்பித்தனர். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன்.

ஒவ்வொன்றாக யோசித்துப் பார்க்கும் போது வியப்பாக இருந்தது. முதலாளி ஓட்டிக்கொண்டிருந்த யமாகா பைக் என்பது மொத்தத்தில் அங்குள்ள அனைவருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் போலவே தெரியும்.

எவரும் தொடக்கூட அனுமதியில்லை, ஆனால் திடீரென்று ஒரு நாள், எனக்கு பைக் ஓட்டத் தெரியும் என்று நினைத்துக்கொண்டு சாவியை கையில் கொடுத்து பெட்ரோல் போட்டு வர கொடுத்து அனுப்பினார். எனக்கு ஓட்டத் தெரியும் என்பதாக காட்டிக்கொண்டு பக்கத்து சந்தில் நிறுத்தி ஒரு வழியாக முதல் கியரிலேயே சென்று பெட்ரோல் போட்டுக் கொண்டு வந்து விட்ட போது முழுமையாக எதையோ சாதித்த நிம்மதி கிடைத்தது.

ஊரில் சைக்கிள் தவிர எதையும் ஓட்டத் தெரியாத என்னை சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றும் கற்றுக் கொள்ள வைத்து. பிறரின் சூழ்ச்சிகளும், முகத்திற்கு பின்னால் வேறுவிதமாக பேசியவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கை மனத்தை ரணம் போல் படுத்தி எடுத்தியது. இவர்களை மனதார நம்பி பலவற்றை இழந்துள்ளேன். நான் வளர்ந்த குடும்ப வளர்ப்பின் தாக்கம் என்னை அதிகமாக பாதித்திருந்தது. என்னை மாற்றிக் கொள்ள முடியாமல் தடுமாறி இருக்கின்றேன். ஆனால் சில மாதங்களிலேயே தங்களை முழுமையாக மாற்றிக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிய பலருடைய வாழ்க்கையை பின்னாளில் பார்த்துள்ளேன்.

நான் நின்று கொள்வதாக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி விட்டேன். காசோலை பிரச்சனை தொடங்கியது முதல் முதலாளி என் மேலிருந்த பிரியத்தின் காரணமாக பெரிய அளவிற்கு பிரச்சனையை கொண்டு செல்லவில்லை. என்னிடமிருந்து ஒதுங்கி பேசுவதையே நிறுத்திக் கொண்டார். என் மனம் பேதலித்தது போல் இருந்தது.

முதன் முதலாக இந்த நிறுவனத்தின் உள்ளே நுழைந்த போது கையில் வைத்திருந்த பணம் கூட இல்லாமல் எங்கு செல்வது? இனி யாரைப் போய் பார்த்து வேலை கேட்பது என்ற குழம்பி நின்றேன்.

என்னை வெளியே அனுப்புவதில் குறியாக இருந்த மெய்யப்பன் சொன்ன நிறுவனத்தின் வரவேற்பறையில் ஒரு காலை வேளை, நண்பர் சொல்லிக் கொடுத்தபடி பேச வேண்டிய பொய் வசனங்களை, மனதுள் சொல்லிப் பார்த்துப் பதியவைத்தவாறு அந் நிறுவன நிர்வாகியின் வருகைக்காக மறுபடியும் ஒரு காத்திருப்பு...

காத்திருங்கள்..

 

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

டாலர் நகரம் - 1

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.