கட்டுரைகள்

நமது நட்சத்திரப் பயணங்கள் தொடரில் பிரபஞ்சவியல் பகுதியில் இதுவரை 9 தொடர்கள் எழுதப் பட்டுள்ளன.

இதில் கடந்த மூன்று தொடர்களிலும் பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் எனும் தலைப்பின் கீழ் வரலாற்று ரீதியாக விண்வெளி பற்றிய மனிதனின் புரிந்துணர்வு எவ்வாறு தெளிவு பெற்று வருகின்றது எனப் பார்த்து வருகின்றோம். இறுதியாக சென்ற தொடரில் நியூட்டனின் காலம் வரை வானியல் அறிவு எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்துள்ளது எனப் பார்த்திருந்தோம்.

இதில் நியூட்டனின் கருதுகோளான எல்லையற்ற நிலையான பிரபஞ்சத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் சம அளவில் பரப்பப் பட்டுள்ளன என்றும் இதற்கு மையம் இல்லை என்பதும் விவரிக்கப் பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து வரும் விளக்கங்களை இன்று பார்ப்போம். நியூட்டனின் இக்கருதுகோள் ஜேர்மனிய தத்துவவியலாளரான 'ஹெயின்ரிச் ஒல்பெர்ஸ்' (Heinrich Olbers) என்பவரால் விரிவு படுத்தப்பட்டது. இவர் தனது கொள்கைகளை 1823 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். நியூட்டனின் சமகாலத்தவர்கள் பலர் அவரது எல்லையற்ற பிரபஞ்சம், எண்ணற்ற நட்சத்திரங்கள் மற்றும் மையமின்மை கொள்கைக்கு எதிராக எழுப்பிய பல கேள்விகளுக்கு எதிராக போலியான வாதங்களை பலர் முன்வைத்த போது ஒல்பெர்ஸின் வாதம் தனித்து உறுதியான ஒன்றாகத் தென்பட்டதால் அவரது விளக்கங்கள் பல அறிஞர்களால் எடுத்து நோக்கப் பட்டன.


Heinrich Olbers

Infinite Static Universe எனப்படும் எல்லையற்ற நிலையான பிரபஞ்சம் எனும் கருதுகோள் தெளிவாக விளங்குவதற்குத் தடையாக உள்ள காரணம் என்னவென்றால் இப்படிப்பட்ட ஒரு பிரபஞ்சத்தில் நமது கண் பார்வை திரும்பக்கூடிய அனைத்துக் கோணங்களிலும் ஏதாவது ஒரு நட்சத்திரம் தென்பட வேண்டும் என்பதும் இதன் காரணத்தால் இரவிலும் வானம் முழுதும் சூரிய வெளிச்சம் போல் மிகுந்த பிரகாசமாகத் தென்பட வேண்டும் எனும் முரண்பாடு இருப்பதாகும். ஒல்பெர்ஸ் முரண்பாடு (Olbers paradox) எனப்படும் இந்த மாறுபாட்டுக்கு ஒல்பெர்ஸ் முன்வைக்கும் எதிர் வாதம் என்னவென்றால் மிகவும் தூரத்திலுள்ள நட்சத்திரங்களில் இருந்து புறப்படும் ஒளி அவற்றுக்கும் பூமிக்கும் இடையே உள்ள வெளியில் காணப்படும் இடைப்பட்ட சடப்பொருளினால் உறிஞ்சப் படுவதால் அவை மங்கலாக்கப் படுகிறது என்பதாகும்.Olbers Paradox

எனினும் இந்த விளக்கம் யதார்த்தமாகாமல் இன்னொரு முரண்பாடும் தோன்றுகின்றது. அதாவது இந்த இந்த இடைப்பட்ட சடப்பொருள் (Intervening Matter) நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளியை உறிஞ்சினால் இறுதியின் அவை மிகவும் சூடாகி நட்சத்திரங்களைப் போல் பிரகாசமாகி மினுங்கத் தொடங்கி விடும் என்பதே இதைச் சாத்தியமற்றதாக்கும் பிரதிவாதமாகும்.

இந்த முரண்பாட்டைத் தீர்க்கும் ஒரே வழியாக பிரபஞ்சம் எல்லையற்றதாக உள்ள ஒன்று என்ற போதும் அது அழிவற்றது அல்லது நிலையானது எனும் கருத்து பொய், அதாவது Static Universe என்பது ஏற்புடையதல்ல என அக்கால விஞ்ஞானிகள் உணரலாயினர்.

ஏனெனில் பிரபஞ்சம் கடந்த காலத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதியில் தோன்றியது என்றும் அது எப்போதாவது அழிவடையும் என்பதையும் ஏற்றுக்கொண்டால் இவ்வுண்மை நட்சத்திரங்களுக்கும் பொருந்தும். ஆகவே நட்சத்திரங்கள் எப்போதும் மின்னிக் கொண்டிருப்பவையல்ல. அவை கடந்த காலத்தில் எப்போதோ வெளியிட்ட ஒளியைத் தான் இன்று நாம் பார்க்கிறோம். வானத்தில் நாம் பார்க்கும் கோணம் எதுவாக இருந்தாலும் அங்கு ஒரு நட்சத்திரம் இருக்கும் வாய்ப்பு இருக்கின்றது எனினும் அவற்றின் ஒளி நம்மை இன்னமும் வந்து சேரவில்லை அல்லது பூமி தோன்ற முன்னமேயே கடந்து போய் விட்டது என்று கருதுவதே இரவு வானம் முழுதும் பகல் போல் பிரகாசமாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம் என்று தெளிவு படுத்தும் விளக்கமாகும்.

இதையன்றி பூமிக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையே ஒளியை உறிஞ்சும் சடப்பொருள் உள்ளது எனும் விளக்கம் போலியானது என்பதும் அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை என்பதும் இக்கால அறிஞர்களுக்கும் புலனாகும்.

பிரபஞ்சத்துக்கு தோற்றமும் முடிவும் உண்டு என்பது இப்போதல்ல, அரிஸ்டோட்டிலுக்கு முற்பட்ட பண்டைய காலத்திலேயே இந்நம்பிக்கை ஒரு பகுதியினரிடையே காணப்பட்டது. மனித நாகரீகத்தின் ஆரம்பத்தில் காணப்பட்ட சில வானியலாளர்கள் மற்றும் யூத, கிறிஸ்தவ, முஸ்லிம் கலாச்சாரப்படி பிரபஞ்சத்துக்குத் தோற்றம் உள்ளது என்பதும் இது பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் என்றல்லாது சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நிகழ்ந்தது எனவும் இது நிகழ்வதற்கு அடிப்படையான முதற் காரணம் (First Cause) எனும் எனும் சம்பவம் ஒன்று இருந்தது எனவும் பரவலாக நம்பப்பட்டது. அதாவது இப்பிரபஞ்சத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களுக்குப் பின்னணியிலும் ஒன்றுக்கொன்று காரணத் தொடர்பு இருக்கும் எனவும் ஆனால் பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கு அப்படியல்லாமல் குறித்த ஏதேனும் ஒரே காரணம் தான் இருக்க முடியும் எனவும் அதுவே முதற் காரணம் மற்றும் அதிலிருந்து தான் ஏனைய காரணங்கள் தோன்றுகின்றன எனவும் விளக்கப்பட்டது.முதற்காரணமும் காரண சங்கிலியும்

அரிஸ்டோட்டிலுக்குப் பின்னர் கி.பி 354 இல் வாழ்ந்த கிறித்தவ தத்துவவியலாளரான புனித. ஆகஸ்டின் (St.Augustine) எழுதிய புகழ் பெற்ற நூல் 'கடவுளின் நகரம்' எனப் பொருள் படும் 'The City of God.' இதில் மனித நாகரிகம் செயற்படக் காரணமான பழக்க வழக்கங்களையும் அவர்கள் பின்பற்றும் தொழிநுட்பங்களையும் யார் கற்பித்ததோ அவரே பிரபஞ்ச இயக்கத்தையும் கற்பித்தவர் (படைத்தவர்) என்ற வாதம் காணப்படுகின்றது. மேலும் ஆகஸ்டின் எழுதிய 'தொடக்கம்' (Genesis) எனும் நூலில் கிறிஸ்துக்கு முன் 5000 ஆண்டில் பிரபஞ்சமும் மனித நாகரீகமும் தோன்றியது எனும் குறிப்பு காணப்படுகின்றது.


St.Augustine

இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த வருடம் கடைசிக் குளிர்க்காலம் (Last Ice Age) முடிவடைந்த ஆண்டான கிறிஸ்துக்கு முன் 10 000 இல் இருந்து இது வெகு தொலைவில் இல்லை என்பதுடன் அக்குளிர்காலம் முடிவடைந்த ஆண்டே மனித நாகாரிகம் உண்மையில் விருத்தியாகத் தொடங்கியது என தொல்பொருளியாலாளர்கள் (Archaeologists) கூறுவதும் இதனுடன் பொருந்துவதாகும்.கடைசிக் குளிர்காலத்தில் உலகம்

எனினும் இவருக்கு முன் வாழ்ந்த (கி.மு 384) அரிஸ்டோட்டில் அவர் கொண்டிருந்த மிகுந்த ஆன்மிக ஈடுபாட்டால் பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதையோ அழிவடையும் என்பதையோ ஏற்க மறுத்தது. எனவே அவரும் அக்கால அறிஞர்களும் மனித குலம் ஏற்கனவே இருந்தது எனவும் எப்போதும் இருக்கும் எனவும் நம்பினர். மேலும் பருவ கால அடிப்படையிலும் குறித்த கால இடைவெளிகளிலும் அடிக்கடி தோன்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் மனிதனை அழிப்பதற்கன்றி அவர்கள்  நாகரீகமடையத் தொடங்க உதவுவதற்கே என்றும் அவர்கள் கூறினர்.

காலப் பெருவெளியில் ஏதோ ஒரு கட்டத்தில் பிரபஞ்சம் தோன்றியதா? மற்றும் அது எல்லையுடையதா? என்ற கேள்விகளை மிகத் தீவிரமாக ஆராய்ந்த தத்துவவியலாளர்களில் முக்கியமானவர் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இம்மானுவெல் கான்ட் (Immanuel Kant) இவர் எழுதிய மிக முக்கிய நூலான 'Critique of Pure Reason' 1781 இல் வெளிவந்தது. இதில் இவர் மேலே குறிப்பிட்ட இரு கேள்விகளையும் முரண்பாடுகள் எனக் குறிப்பிடுகின்றார். மேலும் இக்கேள்விகளுக்கு ஆம் என்பவர்களுக்கும் இல்லை என்பவர்களுக்கும் சமமாக இரு பிரதி வாதங்களை முன்வைக்கலாம் எனவும் இவர் கூறுகின்றார்.


Immanuel Kant

அதாவது thesis எனப்படும் பிரபஞ்சம் ஒரு கட்டத்தில் தோன்றியது என நம்புவர்களுக்குச் சார்பாக இவர் கூறுவது என்னவென்றால் பிரபஞ்சத்துக்கு தோற்றம் இல்லையென்றால் எந்த ஒரு சம்பவத்துக்குப் பின்னும் முடிவற்ற காலம் காணப்படும். எனவே இது நகைப்புக்கு இடமானது ஆகும். இதேவேளை antithesis எனப்படும் பிரபஞ்சம் தோற்றமும் முடிவும் அற்றது என நம்புவர்களுக்குச் சார்பாக இவர் கூறுவது என்னவென்றால், பிரபஞ்சத்துக்கு தோற்றம் உண்டென்றால் அதற்கு முன்னர் முடிவற்ற காலம் எப்போதும் காணப்படும். எனவே ஏன் பிரபஞ்சம் இதில் குறித்த ஒரு பகுதியில் மட்டும் தனித்து தோன்ற வேண்டும்? என்பதாகும்.

இவர் முன்வைக்கும் இந்த இரு கருத்துக்களும் கூறுவது ஒரே வாதத்தைத் தான் என்பதை சற்று ஆழமாகப் படித்துப் பார்த்தால் புரியும். இது இரண்டிலும் இவர் கூற வரும் கருத்து என்னவென்றால் பிரபஞ்சம் எப்போதும் நிலையாக இருக்கிறதோ இல்லையோ காலம் என்ற ஒன்று முன்னுக்கும் பின்னுக்கும் எப்போதும் உள்ளது என்பதுதான். அதாவது காலத்தைப் பற்றிய இக்கருதுகோள் பிரபஞ்சத்தின் தோற்றத்தோடு ஒப்பிடுகையில் அர்த்தமற்ற ஒன்றாக் மாறி விடுகின்றது.

இக்காரணத்தால் தான் முன்னர் குறிப்பிட்ட கிறித்தவ தத்துவவியலளாரன புனித ஆகஸ்டின் பின்வரும் கருத்தைக் கூறியிருந்தார். அதாவது அவரிடம் ஒருவர் பிரபஞ்சத்தைப் படைக்கும் முன்னர் கடவுள் என்ன செய்து கொண்டிருந்தார்? எனும் கேள்வியை எழுப்பியிருந்தார்.

இதற்கான பதிலையும் நிலையான பிரபஞ்சம் அதாவது Static Universe குறித்த மேலதிக விவாதங்களையும் அடுத்த தொடரில் எதிர்பாருங்கள்...

நன்றி - தகவலுதவி: 'A Breif History of Time' - Stephen W.Hawking

 

முன்னைய பதிவுகள் :

நட்சத்திரப் பயணங்கள் 18 (பிரபஞ்சவியல் 1, கரும் சக்தி)

நட்சத்திரப் பயணங்கள் 19 (பிரபஞ்சவியல் 2, கரும் சக்தி 2)

நட்சத்திரப் பயணங்கள் 20 (பிரபஞ்சவியல் 3, கரும் பொருள்)

நட்சத்திரப் பயணங்கள் 21 (பிரபஞ்சவியல் 4, கரும்பொருள் 2)

நட்சத்திரப் பயணங்கள் 22 (பிரபஞ்சவியல் 5, கரும்பொருள் 3)

நட்சத்திரப் பயணங்கள் 23 (பிரபஞ்சவியல் 6, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்)

நட்சத்திரப் பயணங்கள் 24 (பிரபஞ்சவியல் 7, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 2)

நட்சத்திரப் பயணங்கள் 25 (பிரபஞ்சவியல் 8, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 3)

 

- 4 தமிழ் மீடியாவுக்காக: நவன்

இவற்றையும் பார்வையிடுங்கள்

தென்னிந்திய மொழிகள், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானால் அதை ‘பான் இந்தியா பிலிம் என்று அழைக்கிறார்கள். 'கே.ஜி.எஃப்' அப்படியொரு படம்தான்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.