கட்டுரைகள்

கற்றுக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அந்த நிறுவனத்தின் வரவேற்பரையே பிரமாண்டமாய் இருந்தது. அறையின் மூலைப்பகுதியில் ஒரு பெண் அமர்ந்திருந்தார். தலையில் ஹெட் போனுடன் நுனி நாக்கில் ஆங்கிலமும் அவவ்போது தமிழும் பேசிக்கொண்டு இருந்தார், இடைவிடாத தொலைபேசி அழைப்புக்கு பதில் சொல்லிக்கொண்டு, வந்து அமரும் நபர்களின் பெயர் மற்றும் விபரங்களை உள்ளே தெரிவித்துக் கொண்டிருந்த பெண்ணுக்கு வயது இருபதுக்குள் தான் இருக்கும். எனக்கு சற்று திகிலாகத் தான் இருந்தது. அன்று தான் நேரிடையாக ஒரு பெண்ணின் லாவகத்திறமையை, மொழித்திறமையை கண்டேன்.

பள்ளி, கல்லூரி என கற்றதும் பெற்றதும் ஏதும் இல்லாமல் தக்கையாய் மிதந்து வந்து இங்கு வந்து சேர்ந்துள்ளேன் என்பதை புரிந்து கொண்டேன். என்ன கேட்பார்கள்? எதைப் பற்றி கேட்பார்கள்? நேரிடைத் தேர்வு மூலம் தான் தேர்ந்து எடுப்பார்களாமே? கேட்பது ஆங்கிலத்திலா அல்லது தமிழிலா? பதட்டமாய் அமர்ந்திருந்தேன். மெய்யப்பன் சொன்னபடி சட்டையை உள்ளே விட்டு மேலே பெல்ட் கட்டி ஒரு நாகரிக தோற்றத்தை உருவாக்கியிருந்தேன். என்னுடைய நேரம் வந்ததும் எம்.டி அறைக்கு வரவேற்பறை பெண்மணி அனுப்பி வைத்தார்.

பள்ளி லீவ் லெட்டர் போல். எழுதிக் கொடுத்திருந்த என்னுடைய பயோடேட்டா எம்.டி பார்வைக்கு போயிருந்தது. அறையின் நடுநாயமாக அமர்ந்திருந்தவர்க்கு பதினெட்டு வயது கூட இருக்காது. திரைப்பட நடிகர் போல் இருந்தார். அந்த அறையின் ஆடம்பரம் என்னை பயமுறுத்தியது. மூன்றே கேள்வி தான் கேட்டார்.

“லெஷமணன் சாரை எத்தனை நாளாகத் தெரியும்? "

“இந்தத்துறையில் எத்தனை வருடங்கள் அனுபவம்? “

“என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?”

அத்துடன் முடித்து விட்டு " நாளைக்கே வந்து சேர்ந்து விடுங்கள் ” என்றார்.

குளிரூட்டப்பட்ட அறையாக இருந்த போதிலும் எனக்கு குப்பென்று வியர்த்தது. என் காதுக்கே கேட்காத அளவிற்கு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

என்னுடைய அதிர்ஷடம் நான் நுழைந்த நேரத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த இறக்குமதியாளரும் உள்ளே நுழைந்திருந்தார். அந்த அவசரத்தில் எம்.டி யால் அதிகம் பேசமுடியாத சூழ்நிலை எனக்கு சாதகமாக இருந்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியே வந்து விட்டேன்.

யாரிந்த லெஷமணன் சார்?

யாருக்குத் தெரியும்!

முந்தைய நிறுவனத்தில் மெய்யப்பன் சொன்ன ஐடியா இது.

லெஷ்மணன் என்பவர் திருப்பூரில் உள்ள ஏதோவொரு வங்கிக் கிளையில் மேலாளாராக பணிபுரிந்து கொண்டிருந்தவர். அவர் மெய்யப்பனுக்கு தூரத்து உறவு முறை, இந்த நிறுவனத்திற்கு மெய்யப்பன் ஏற்கனவே லெஷ்மணன் சாருடன் வந்திருந்த காரணத்தால் அவருக்கு கிடைத்த மரியாதையை மனதில் வைத்துக்கொண்டு தான் என்னிடம் இது போன்ற ஒரு வாய்ப்பை சொல்லியிருக்கிறார்.

ஆனால் லெஷ்மணன் சார் இப்போது திருப்பூரில் இருக்கிறாரா? இல்லையா என்பது மெய்யப்பனுக்கும் தெரியாது. காரணம் அவர் சேர்த்து விட்ட நிறுவனங்களில் எல்லாம் நண்பர் ஓரிரு மாதங்கள் கூட இருந்ததில்லை. அவரை பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு தான் கடைசியாக நான் பணிபுரிந்த முதல் நிறுவனத்திற்கு வந்து இருக்கிறார். இங்கு உள்ளே நுழைந்த பிறகு தான் லெஷமணன் சார் வாரி இறைத்த வங்கிக் கடன் தயவால் தான் நான் வந்துள்ள இந்த இரண்டாவது நிறுவனம் வெகுவிரைவில் வளர முடிந்துருக்கிறது. அப்பாவும், மகனும் 20 ஏக்கர் தோட்டத்தில், ஒரு ஏற்றுமதி நிறுவனத்திற்குத் தேவைப்படும் அத்தனை வசதிகளையையும் உருவாக்கியிருந்தார்கள்.

உள்ளே வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஜெயில் போன்ற ரூம்களை கொடுத்து ஒவ்வொருவரையும் சக்கையாக பிழிந்து கொண்டிருந்தார்கள். நான் பணிபுரிந்த முதல் நிறுவனம் மறைமுக ஏற்றுமதியாளர், பாம்பாயில் இருந்து வந்து ஒப்பந்தம் கொடுப்பார்கள். ஆடைகளுக்குத் தேவைப்படும் நூலுக்கு முன் பணம் கொடுத்து விடுவார்கள். அவர்களின் விருப்பப்படி தரத்தோடு ஆடைகளை பெட்டி போட்டு கொடுத்து விட வேண்டும். பம்பாயில் இருப்பவர்கள் தங்கள் பெயரில் ஏற்றுமதி செய்து கொள்வார்கள். .ஆனால் இந்த நிறுவனம் நேரிடை ஏற்றுமதி நிறுவனமாக இருந்தது.

பெரிய ராஜாங்கம் போலவே இருந்தது. நிறுவனத்திற்கு வைத்திருந்த பெயரான நட்சத்திரம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தார்கள். வருடத்தில் 365 நாட்களும் வேலை. முந்தைய நிறுவனத்தை விட ஐம்பது மடங்கு கூட்டம் அதிகம். பிரச்சனைகளும் பல மடங்கு இருந்தது.

நிறுவனத்திற்கு பின்புறம் இருந்த நொய்யல் ஆற்றின் கரையில் கூரையால் வேயப்பட்ட சாப்பாட்டுக் கடை இருந்தது. மாதச் சம்பளம் வாங்கும் போது பணம் கொடுத்தால் போதுமானது. உள்ளே பணிபுரியும் மற்றவர்கள் அறிமுகம் செய்தாலே நம்முடைய பெயருக்கு ஒரு பக்கத்தை ஒதுக்கி விடுவார்கள்.

முதல் நிறுவன சூழ்நிலையை விட முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையாக இருந்தது. அங்கு கற்றவை அனைத்தும் ப்ரிகேஜி போலவே இருந்தது. இங்கு நூல் முதல் பெட்டி போடும் துறைகள் வரைக்கும் தனித்தனியாக உள்ளேயே இருந்தது. ஒவ்வொரு துறையிலும் உள்ளே நுழைந்து வெளியே வந்த போது என்னுடைய தொழில் பார்வை சற்று விசாலாமானது.

இங்கும் எனக்குத் தெரிந்த உழைப்பை வஞ்சகம் இல்லாமல் வழங்க என்னுடைய பெயர் தனியாக தெரிந்து மேலே வர முடிந்தது. தொடர்ச்சியாக 72 மணி நேரம் தூங்க விடாமல் வாட்டி வதக்கி எடுத்தார்கள். வெளியே எங்கும் செல்ல முடியாது. அரண்மனை வாசல் போல் உள்ள கேட்டில் உள்ளவர்கள் அத்தனை சீக்கிரம் வெளியே அனுப்பி விட மாட்டார்கள். நாம் சொல்லும் காரணங்களுக்கு சீட்டு மூலம் முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும். மனிதவள துறை என்று ஒன்று இதற்காக தனியாக இருந்தது. அவர்களிடம் இருந்து உத்தரவு வருவதற்குள் வெளியே செல்லும் ஆசையே போய் விடும் ஆனால் நான் முயற்சித்ததே இல்லை. செல்ல வேண்டிய இடமும் இல்லை. என்னுடைய ஒரே நண்பன் முருகேசனைக்கூட மறந்து விட்டேன்.

ஆடைகளுக்கான உற்பத்தி பிரிவு மற்றும் அலுவலகம் என்ற இரண்டு விதமான பகுதிகள் உள்ளேயிருந்தது. சாப்பிடப் போகும் போது தான் அனைவரையும் பார்க்க முடியும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுடன் பழக எளிதாக இருந்தது. அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பர் ஜெரோம் செல்வகுமார் அறிமுகமானார். நிர்வாகத்தில் உள்ள நிறைகுறைகளை கேட்டு மனதில் வைத்துக் கொள்ள முடிந்தது. வேறு எவருடனும் பேசவே பயமாக இருந்தது. அலுவலகத்தை விட உற்பத்தி பிரிவில் அதிக பிரிவினைகள் இருந்தது.

முரட்டு சுவாவமும், அடிதடியும், கைகலப்பும் தினந்தோறும் நடப்பது வாடிக்கையாகவே இருந்தது. தூர நின்று வேடிக்கை பார்த்து விட்டு ஒதுங்கிப் போய்விடுவேன். இது போக ஒவ்வொரு துறைவாரியான வேறுபாடுகள் என்னை அதிகம் பயமுறுத்தியது.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக நூற்பாலை இல்லாத போதும் கூட எப்போதும் 500க்கும் குறையாத நூல் பைகள் உள்ளே குடோன் போன்ற பகுதியில் தயாராகவே இருக்கும். இதற்கு நூல் டெலிவரி செக்சன் என்று பெயர். இங்கிருந்த நிட்டிங் செக்சனில் இருப்பவர்கள் தேவைப்படும் நூலை வாங்கிக் கொண்டு அறவு செய்து கொடுத்து விடுவார்கள். இதற்கான நிட்டிங் செக்சனும் உள்ளேயே தனியாக இருந்தது. இந்த துணிக்கு கோராத் துணி என்பார்கள். இந்த கோரத்துணி உள்ளேயிருந்த சாயப்பட்டறைக்கோ அல்லது சலவைப்பட்டறைக்கோ செல்லும். சாயமேற்றிய துணிகள் காம்பேக்டிங் என்று சொல்லப்படும் உலர் சலவையகத்திற்கு செல்லும், மடிப்பு கலையாத துணியாக டயா வாரியாக பிரித்து வெட்டுவதற்கு தகுந்தாற் போல் இறுதியாக லாட் செக்சன் என்று சொல்லப்படும் இடத்திற்கு வந்து சேரும். இங்கு தான் ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பதற்க்குத் தேவைபடும் துணிகள் கட்டிங் பிரிவுக்குச் செல்ல தயாராயிருக்கும்.

கோரத் துணியாக ஒவ்வொரு அளவிலும் உள்ளே கொண்டு வந்து சேர்ப்பவர்களுக்கு சாயம் ஏற்றும் பிரிவில் இருப்பவர்களை பிடிக்காது. சாயம் ஏற்றும் போது வரும் அனைத்து குறைகளும் நூலால் தான் வருகின்றதென்று மல்லுக்கட்டிக் கொண்டுப்பார்கள். குறைந்த கிலோ அளவெல்லாம் நிட்டிங்கில் ஓட்டியவர்களால் தான் வருகிறது என்று வார்த்தைகள் வெடிக்கும். ஒவ்வொரு துறையிலும் நாள் தோறும் பிரச்சனைகள்.

சாயமேற்றிய துணிகள் உற்பத்தி பிரிவின் தொடக்கமான கட்டிங் பகுதிக்குச் செல்லும் போது இந்தச் சிக்கல் மேலும் விரிவடையும். ஆடைகளுக்குத் தேவையான அளவில் கட்டிங் பீஸாக வெட்டிய பிறகு உருவாகும் பிரச்சனைகள் வேறொரு பக்கம் கடத்தப்படும். ஒருவருக்கொருவர் ஈகோ பார்த்துக்கொண்டு கடைசியில் மொத்த உற்பத்தியும் பாதிக்கபடும் அளவிற்கு தினந்தோறும் மன உளைச்சலுடன் தான் வேலை பார்க்க வேண்டியிருந்தது.

ஒவ்வொரு துறையிலும் இருப்பவர்கள் உருவாக்கும் மொத்த பிரச்சனைகளும் கடைசியில் பேக்கிங் செக்சனுக்கு வந்து நிற்கும். வெளியே லாரி பெட்டிகளை ஏற்றிச் செல்ல அவசரப்படுத்திக் கொண்டு இருக்க அப்போது தான் இறுதிப் பெட்டிக்கு தேவைப்படும் ஆடைகளை தேடிக் கொண்டுருப்பார்கள். ஏற்றுமதிக்கு தேவைப்படும் பெட்டிகள் 500 என்றால் கடைசியில் 24 பெட்டிக்கு தேவையான ஆடைகள் இருக்காது. பாதி ஆடைகள் காணாமல் போயிருக்கும். இருக்கும் ஆடைகள் தரமில்லாமல் அழுக்கு, எண்ணெய் பிசுப்பு, முக்கியமான இடத்தில் பிரிந்த தையல் என்று ஏகத்துக்கும் பேக்கிங் பிரிவில் அடிதடியாய் இருக்கும். ஒவ்வொருவரும் பேசும் அநாகரீகமான வார்த்தைகளை கேட்க சகிக்காது. தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லும் லாரி கேட்டை விட்டு தாண்டும் வரைக்கும் எவரும் தூங்க முடியாது. அன்று இரவு பணியில் இருக்கும் அத்தனை துறை சார்ந்தவர்களுக்கும் சிவராத்திரி போல முழித்திருக்க வேண்டும். பெட்டிகள் நிறுவனத்தை விட்டு வெளியே சென்றால் தான் ஒவ்வொருவரும் தங்கியுள்ள அறைக்குச் செல்ல முடியும்.

இந்தப் பிரச்சனைகள் போக உள்ளே மத்திய, மாநில அரசு நிர்வாகம் போல் மகனும் அப்பாவும் வெவ்வேறு திசையில் இருந்தார்கள். அப்பா பழைய காலத்து ஆள். அவருக்கு உழைப்பு தான் முக்கியம். எழுதுவதெல்லாம் பிடிக்காது.. அவருக்கு உழைப்பவர்கள் மட்டும் சரியான நபர்கள் மற்ற அனைவருமே தண்டச்சம்பளம். அவருக்கு ஒருவரை பிடிக்கவில்லையென்றால் “வாடா தண்டச்சம்பளம்” என்று தான் அழைப்பார்.

அப்பா அலுவலக பகுதிக்குள் நுழைந்தாலே உள்ளேயிருப்பவர்கள் டீக்குடிக்கச் செல்லும் சாக்கில் மறைந்து விடுவார்கள். கணினி முன்னால் அமர்ந்து கொண்டு முக்கியமான வேலை செய்து கொண்டிருப்பவர்களை பார்த்துமே சப்தம் போட ஆரம்பித்துவிடுவார். .“எத்தனை நாளைக்கு இந்தப்பெட்டி முன்னால் உட்காரந்து கொண்டு தண்டச்சம்பளம் வாங்கிக்கொண்டுருக்கப் போகிறாய்?” என்று கேட்பவருக்கு என்ன பதில் சொல்லி புரியவைக்க முடியும்?. அவர் வந்து உருவாக்கி விட்டுச் செல்லும் அலை அடித்து முடிய மகன் வந்து சமாதானப்படுத்தி விட்டுச் செல்வார்.

அப்பா என்பவர் “பெரியவர்”. அப்படித்தான் அவரை அழைக்க வேண்டுமென்ற கட்டளை. புள்ளி விபர புலி. நிர்வாகத்தில் உள்ள அனைத்து விபரங்களும் மனக்கணக்கில் வைத்திருப்பார். எவரும் தப்பவே முடியாது. தவறான தகவல்களை சொல்லவே முடியாது. ஆங்கிலம் பேச வராது என்றாலும் வரக்கூடிய இறக்குமதியாளரிடம் அவருக்குண்டான பட்லர் ஆங்கிலத்தில் புரியவைத்து விடுவார். மகன் மீதியை பார்த்துக் கொள்வார். மகன் உருவாக்கும் அனைத்து நவீன உத்திகளுக்குண்டான நிர்வாக முறையும் அவரைப் பொறுத்தவரையில் பணத்தை வீணாக்குகிறானே? என்ற ஆதங்கத்தில் புலம்பிக் கொண்டு இருப்பார். ஆனால் பையனை எதுவுமே கேட்க மாட்டார். ஓரே பையன். அவரின் மொத்த உயிர்.

பரந்து விரிந்திருந்த அந்த சாம்ராஜ்யத்தில் தொடக்கத்தில் அலுவலகம் சார்ந்த கட்டிடங்கள். அதற்குப் பின்புறம் துணி அறவு எந்திரங்கள் அதைத் தொடர்ந்து உற்பத்தி பிரிவு தொடர்பான தொடர்ச்சியான கட்டிடங்கள்.. தோட்டத்தின் கடைசியான எல்லைப்பகுதியில் சாயப் பட்டறைகள். இதற்கு பின்புறம் நொய்யல் ஆறு ஓடிக் கொண்டிருந்த காரணத்தால் வெளியாகும் கழிவு சாய நீரை எளிதாக ஆற்றில் கலந்து விட வசதியாய் இருந்தது. ஒவ்வொரு பகுதிகளுக்குமிடையே வயலும் அதில் மாடுகளுக்குத் தேவையான தட்டையும் தொடர்ச்சியான தென்னை மரக்கூட்டங்களுமாய் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தது போலவேயிருக்கும். சுற்றிலும் உயரமான எல்லைச் சுவர்கள். உள்ளே என்ன நடந்தாலும் எவருக்கும் தெரியாது. சிறைதான். சந்தேகமே இல்லை.

மகனுக்கு என்னை பிடித்த அளவுக்கு அப்பாவுக்கு என்னை ஏனோ தொடக்கம் முதல் பிடிக்காமல் போய் விட்டது. காரணம் அப்பாவின் எதிர்பார்ப்புகளை எந்த நிலையிலும் என்னால் முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. இதைப்பற்றித் தான் நம்மிடம் கேட்பார் என்று அது குறித்த விஷயங்களை துண்டு பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு செல்லும் போது சம்பந்தம் இல்லாத வேறு ஒன்றைக் கேட்க என் உளறல் தான் பதிலாக இருக்கும். நாளாக உதறல் அதிகமாகி சாதாரண விஷயங்கள் கூட அசாதராணமாகி பேசமுடியாமல் தொண்டை அடைத்து அவர் கத்தும் கத்தலில் கூனிக்குறுகி அனைவரின் பார்வையும் தவிர்த்து வேறு எங்கேயாவது நகர்ந்து விடுவதுண்டு.

தொடக்கத்தில் எனக்கு வழங்கப்பட்ட பணியென்பது ஒரு பிரிவின் மொத்த உற்பத்தியையும் கவனித்துக் கொள்வது. இதற்கு செக்சன் இன்சார்ஜ் என்று அழைத்தார்கள். உள்ளே வரக்கூடிய கட்டிங் பீஸ்கள் முதல் அது இறுதியாக பெட்டிக்குள் செல்லும் ஆடைகள் குறித்த மொத்த கணக்குகள் வரைக்கும் என் மேற்பார்வையில் இருக்க வேண்டும். ஏற்றுமதியான பிறகு மீதமான ஆடைகள் குறித்த விபரங்கள் என்று பல புள்ளி விபரங்களை எப்போதும் சட்டைப் பையில் வைத்திருக்க வேண்டும்.

இதை வார்த்தைகளாக படிக்கும் போது எளிதாகத்தான் இருக்கும். ஆனால் நிர்வாகத்தில் உள்ள ஒவ்வொரு துறைகள் சார்ந்த அரசியல்களை வென்று வர வேண்டும். உள்ளே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியான ஒப்பந்தக்காரர்கள் இருப்பார்கள். படிப்பறிவு என்பது ஒரு சதவிகிதம் கூட இல்லாமல் உள்ளூர் வாசியாக மொத்தத்தில் நிர்வாகத்திற்கு ஏதோவொரு வகையில் சொந்தமாக இருப்பார்கள். இவர்களை பகைத்துக் கொள்ள முடியாது. உள்ளே உள்ள தொழிலாளர்கள் இவர்களின் கட்டுப் பாட்டில் தான் இருந்தார்கள். . நம்மை தொழிலாளர்களிடம் நெருங்கி விட அனுமதிக்க மாட்டார்கள். இவர்கள் நிர்வாகத்திடம் வாங்கும் தொகைக்கும் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் தொகைக்கும் பெரிய வித்யாசங்கள் இருக்கும். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல் இவர்களை அனுசரித்து பக்குவமாக காரியம் சாதிக்க வேண்டும். . இவர்களின் திறமை ஆச்சரியமானது. மனக்கணக்காகவே மொத்த விசயங்களையும் நினைவில் வைத்திருப்பார்கள்.

நம்முடைய செக்சனில் உள்ள மொத்த எந்திரங்கள் குறித்தும் அது சார்ந்த மற்ற விசயங்களையும் நாம் கவனமாக வைத்திருக்க வேண்டும். இது நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டிய வராந்திர கடமைகள், தொழிலாளர் பிரச்சனைகள் தொடங்கி கண்ணுக்குத் தெரிந்த தெரியாத ஆயிரத்தெட்டு பிரச்சனைகளைக் கடந்து வர வேண்டும். கடைசியாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு ஒரு மணி நேரம் வரையிலான வேலையிருக்கும். ஒவ்வொரு வார சனிக்கிழமையின் போதும் முழு இரவும் வேலை. உள்ளே பணியில் இருந்த பலரும் பல்லுகூட விளக்காமல் அவசரகதியில் தினமும் ஓடிக்கொண்டுருந்தார்கள். எல்லா ஞாயிற்று கிழமையுமே தூக்க மயக்கத்தில் தான் கழிந்ததாக இருந்தது. பல சமயங்களில் ஞாயிறுக் கிழமைகளில் கூட வேலையிருக்கும். குளிக்காதவர்களும், குளிக்க நேரமில்லாதவர்களும் இருந்தார்கள். குடி மயக்கத்திலே வாழ்ந்தவர்களும் வேறு வழியே இல்லாமல் வந்து என்னைப்போல் மாட்டிக்கொண்டவர்களும் உண்டு.

இது போன்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பொங்கலோ தீபாவளியோ நிச்சயமில்லாதவை. பல சமயம் பண்டிகைக்கு முதல் நாள் வரைக்கும் வேலையிருந்தது. அப்புறம் எப்படி முன்னூறு மைல்கள் பேரூந்தில் பயணம் செய்து ஊருக்குச் செல்ல முடியும்? எத்தனையோ பண்டிகைகள் பேரூந்தின் வாசல்படி பயணத்தில் மூலம் நின்று கொண்டும் பாதி மயக்கத்தில் உட்கார்ந்து கொண்டும் கூட்டத்தில் போராடி ஊருக்குப் போய் சேர்ந்தது இருக்கிறேன்.

குடும்பத்தை பொறுத்தவரையில் பையன் திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்கிறான். என்ன வேலை? என்ன பதவி? எந்த இடத்தில்? எவருக்கும் தெரியாது. மொத்தத்தில் ஊரில் இருக்கக்கூடாது. இரண்டு நாட்களுக்கு மேல் தலை ஊரில் தென்பட்டாலே பார்க்கிறவர்கள் கேட்கும் முதல் கேள்வியே ” என்னடா ஊருல குடித்த தண்ணியெல்லாம் போதாதா? போய் பொழைக்கிற வழியைப் பாருடா? என்பார்கள். வேறு வாய்ப்பே இல்லை. என்னை இங்கு நிலைநிறுத்திக் கொள்ளத்தான் வேண்டும்.

உள்ளே அறிமுகமாயிருந்து நண்பன் ஜெரோம் செல்வகுமார் மூலம் வேறொரு வட்டம் உருவானது. அவர் பெயர் சரவணன். பண்னைபுரத்தைச் சேர்ந்தவர். தென்மாவட்டத்தில் இருந்து பல ஊர் தண்ணீர் குடித்து இங்கு அலுவலகத்தில் வந்து சேர்ந்து இருந்தார். ஏற்றுமதிக்குண்டான அனைத்து அலுவலக நடைமுறைகள், அரசாங்க விதிமுறைகள், வங்கியில் ஓப்படைக்க வேண்டிய பேப்பர்களை தயாரிப்பது அவரின் பணியாக இருந்தது. குறுகிய காலத்தில் மகன் நிர்வாகத்தின் உள் வட்டத்தில் நுழைந்து அலுவலகத்தின் முக்கிய நபராக மாறியிருந்தார். அறிமுகமான சில தினத்திலேயே என்னுடைய வெகுளித்தனமான பேச்சு அவருக்கு பிடித்துப் போயிருந்தது.

காலம் சில நாடங்களை நடத்தும். முடிவில் சில பாடங்கள் கிடைக்கும். கற்றுக்கொண்டவர்கள் கவனமாக முன்னேறி அடுத்து படியில் ஏறிவிடுவர். ஒவ்வொரு சூழ்நிலையும் ஒவ்வொரு பாடத்தை எனக்கு வழங்கிக்கொண்டே தான் இருந்தது. ஆனால் சரியாக புரிந்து கொளள்த் தெரியாமல் தடுமாறியிருக்கின்றேன். சரவணனின் பேச்சு ஒரு வித காந்த சக்தி போலவேயிருக்கும்.. ஓரு தீவிரவாத குழுவின் தலைவன் செய்யும் மூளைச் சலவைக்கு சமமாக இருக்கும். விடுதலைப்புலிகள் முதல் ஐ.நா சபை வரையிலும் கலந்து கட்டி பேசிக் கொண்டே வருவார். அவர் அறிமுகம் கிடைத்த சில மாதங்களில் அவர் உருவாக்கிய தந்திர வலை மூலம் மகன் (சின்னவர்) உருவாக்கிய புதிய பதவி கிடைத்தது.

மொத்த நிர்வாகத்திற்கும் உண்டான தொடர்பாளர். நிர்வாகத்திற்கும் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தி துறை சார்ந்த அனைத்து நல்லது கெட்டதுக்கும். என்று அந்த பொறுப்பை உருவாக்கியிருந்தார்கள். அதுவொரு பலிகடா என்று தெரியாமல் என் மனம் சந்தோஷப்பட்டது. பதவி என்பது பெரிய விஷயமல்ல. ஆனால் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். திறமையென்பது தொழிலில் முக்கியமில்லை. தந்திரமும் சமயோஜிதமும் தான் முக்கியமாக தேவைப்பட்டது. எதை எங்கு எப்படி பேச வேண்டும்? எப்படி சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். முதுகுக்குப் பின்னால் உள்ள துரோகங்களை கூர்மையாக கவனிக்க வேண்டும்.

நண்பர்கள் கற்றுத்தந்த எந்த விஷயங்களையும் என்னால் முழுமையாக செயல்படுத்தத் தெரியவில்லை. ஆனால் என்னுடைய நோக்கமென்பது வேறு விதமாகயிருந்தது. மொத்தத்தில் அனைவருக்கும் நல்லவர்களாக இருக்க வேண்டும். நிர்வாகம் நம்மை விரும்ப வேண்டும். இந்த நோக்கம் தான் என்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் படுபாதாளத்தில் கொண்டு போய் சேர்த்தது. சிலருடன் மட்டும் இருந்த பிரச்சனைகள் மாறி அனைவருக்கும் ஒரே நாளில் வேண்டாதவனாக மாறிப் போனேன். என்னைக் கண்டாலே ஒதுங்க ஆரம்பித்தார்கள். வந்த ஆறு மாதத்திற்குள் எனக்கு கிடைத்த முக்கியத்துவம் அனைவருக்கும் பொறாமையை உருவாக்கியிருந்தது.

உள்ளேயிருக்கும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு சட்டதிட்டம். வெவ்வேறு வேலை நேரங்கள். வித்யாசமான கொள்கைகள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்து வந்தும் இங்கு பணியில் இருந்தார்கள். வெவ்வேறு கலாச்சாரம், வளர்ப்பு பின்னணி இதையெல்லாம் எனக்கு உணர்ந்து கொள்ளத் தெரியவில்லை. நிர்வாகத்தில் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு என்பதை உருவாக்காமல் கொடுக்கப்படும் வேலைகளை அவரவர் முடிக்க வேண்டும் என்பதிலேயே மிகக் கவனமாக இருந்ததார்கள். எல்லோரிடத்திலும் ஒரு விதமான அடக்கி வைக்கப்பட்டுருந்த கோபம் மனதிற்குள் இருந்தது. எவரும் வெளிப்படுத்த முடியாமல். மனதிற்குளளே வைத்து புழுங்கிக் கொண்டிருந்தார்கள். வாய்ப்பு கிடைத்த போது ஒவ்வொருவரும் எதிர்க்க ஆரம்பித்தனர். எதிர்த்தவர்களை நிர்வாகம் வழிக்கு கொண்டு வர பல்வேறு தண்டனைகள் வழங்கப்பட்டது.

எனக்கு அளிக்கப்பட்ட கூடுதல் பொறுப்பில் அந்தந்த துறை சார்ந்த தினசரி நடவடிக்கை குறித்த புள்ளி விபரப்பட்டியல்களை. தினமும் காலை பத்து மணிக்குக்குள் சின்னவரிடம் அளிக்கப்படவேண்டும். இது தான் கொடுமையின் உச்சக்கட்டம். எனக்கு ஒவ்வொரு துறை சார்ந்தவர்களையும் அணுகும் விதம் நரக வேதனையாக இருந்தது. இதற்கிடையே என்னை சோதிக்க அப்பா என்ற பெயரில் இருந்த பெரியவர் வைக்கும் தேர்வு படாய் படுத்திக் கொண்டுருந்தது. ஒவ்வொரு முறையும் அவரிடம் தோற்றுக் கொண்டே இருந்தேன். என்னிடம் ஒன்று சொல்லி விட்டு அவரிடம் வேறுவிதமாக சொல்லி என்னை சிக்க வைத்துக் கொண்டுருந்தார்கள். மற்றவர்கள் செய்த தந்திரங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொண்ட போது எப்படியாவது இங்கிருந்து வெளியேறி விட்டால் போதும் என்ற மனோநிலைக்கு வந்திருந்தேன். எவரைப்பார்த்தாலும் துரோகியாகத் தான் தெரிந்தார்கள். அலுவலக நண்பர்கள் வட்டாரத்திலும் சொல்ல முடியாத டார்ச்சர். அவர்களும் நிறுவனத்தை விட்டு வெளியேற நாள் குறித்து வைத்திருந்தார்கள்.

மாதத்தின் இடையில் வேலையை விட்டு நின்று விட்டால் அந்த மாதச் சம்பளம் கைக்கு வராது. எந்த தொழிளாலர் சட்டமும் அந்தத் தோட்டத்திற்குள் நுழைய முடியாது. அந்த வருடம் தீபாவளி வந்தது. இங்குள்ள மற்றொரு கொடுமையின் உச்சகட்டம், ஒவ்வொரு தீபாவளி பண்டிகை வர ஒரு மாதம் இருக்கும் போதே தேவையில்லாத நபர்களை வெளியேற்ற ஆரம்பித்து விடுவார்கள்.

இங்கு கூலித் தொழிலாளர்கள் முதல் வாகன கிளீனர்கள் வரைக்கும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வாரச் சம்பளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அணைவருக்கும் போனஸ் கணக்கு போட்டு கொடுக்க வேண்டுமென்றால் பல லட்சங்களைத் தாண்டும். இதன் காரணமாகவே தங்களுக்கு தேவையில்லாத நபர்களை டார்ச்சர் செய்யத் தொடங்க ஒவ்வொருவரும் காணாமல் போகத் தொடங்கினர். முடிந்த வரைக்கும் கழித்துக் கட்டிய பிறகு தான் பெரியவரின் முகத்தில் சிரிப்பு வரும்.

நிர்வாகம் மீதியுள்ள ஒவ்வொரு துறை சார்ந்தவர்களின் மேல் கரிசனமாய் நடந்து கொள்ளும். ஒவ்வொருவரும் செய்யக்கூடிய எந்தத் தவறுகளையையும் பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஓரே காரணம் ஊருக்குச் சென்றவர்கள் திரும்பி வரவேண்டும். தீபாவளி முடிந்து அந்த நிறுவனம் அதன் போக்கிலேயே போய்க்கொண்டிருந்து,அலுவலக நண்பர்கள் சரவணன், ஜெரோமும் என்னையும் தவிர்த்து.

தொடரும் காத்திருப்பு ..

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

 

டாலர் நகரம் - 1  நகரம் - 2

 

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்