கட்டுரைகள்

4. தரகர்கள் எனும் தரமற்ற கூட்டம் என்னைப் போலவே முந்தைய நிறுவனத்திலிருந்த தப்பி வந்த ஜெரோம் தனியாக அறை எடுத்து தங்கியிருந்தார். அது ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட குடியிருப்பு வளாகம். இருபத்தி நான்கு மணி நேர தண்ணீர் வசதியுடன் அவினாசி சாலையில் எஸ்ஏபி திரையரங்கம் பின்புறம் இருந்தது.

ஒவ்வொரு அறையிலும் மூன்று கட்டில்களுடன் ஒரு மின் விசிறி இருந்தது. ஒவ்வொரு கட்டிலுக்கும் 300 ரூபாய். உள்ளே நுழையும் போது மூன்று மாத தொகையை முன்பணமாக கொடுக்க வேண்டும்.

திருப்பூருக்குள் இருந்த தண்ணீர் பிரச்சனையினால் இந்த தங்குமிடத்தில் புதிதாக அறை கேட்டு வருபவர்களுக்கு எளிதாக கிடைத்து விடாது. ஊரிலிருந்து திரும்பி வந்த என்னை சரவணன் தன் வீட்டில் இரண்டு நாட்கள் தங்க வைத்து, ஜெரோம் தங்கியிருந்த இந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார். ஜெரோம் ஒரு வார காலம் போராடி அவர் அறையிலேயே தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்தார். ஏற்றுமதி துறையில் நுழைந்த முதல் மூன்று வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் தனியறையில் வசிக்கத் தொடங்கினேன்.

இப்போது எடுத்த முடிவின்படி இனிமேல் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களுக்கு பணிக்கு செல்லக் கூடாது. அலுவலகம் சார்ந்த வேலைகளுக்குச் சென்று விட வேண்டுமென்று உறுதியாக இருந்தேன். அலுவலகம் என்றால் வேலை நேரம் இயல்பானதாக இருந்து விடும். தினந்தோறும் இரவு முழிக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதற்காக முயற்சித்துக் கொண்டுருந்தேன். காரணம் இடையில் பல சிறிய நிறுவனங்களில் சேர்ந்து எனக்கு நல்ல தொழில் அனுபவம் உருவாகியிருந்தது.

ஜெரோம் ஒரு பையிங் ஆபிஸில் வேலை செய்து கொண்டிருந்த நண்பரை அறைக்கு வரவழைத்து இருந்தார். அந்த நண்பர் சுட்டிக் காட்டிய அலுவலகத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு சென்ற போது, முகப்பறையில் இருந்தவர் என்னுடைய சுய விபர குறிப்புகளை வாங்கி அருகேயிருந்த மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அலுவலகத்தின் முதலாளி அமர்ந்திருந்த அறைக்கு ஷோரூம் என்று பெயர். இது போன்ற அறைகள் இரண்டு விதமாக பயன்படுகிறது. உள்ளே சுற்றிலும் தொங்க விடப்பட்டுள்ள ஹேங்கரில் பல விதமான ஆடைகள் தொங்க விடப்பட்டுருக்கும். வருகின்ற இறக்குமதியாளர்கள் ஒவ்வொரு ஆடைகளையும் பார்வையிட்டு தாங்கள் விரும்பும் வடிவத்தை தேர்ந்தெடுப்பார்கள்.

நடுவில் போடப்பட்டுருக்கும் நீண்ட மேஜையில் அலுவலகம் சார்ந்த கலந்துரையாடல் ஒவ்வொரு நாளும் நடக்கும். அந்த நீண்ட மேஜையின் முன் முதலாளி அமர்ந்திருந்தார். எழுந்து நின்று கைகுலுக்கி விட்டு அவருக்கு முன்னால் என்னை அமரவைத்தார். என்னைப் பற்றிய பொதுவான விசயங்களைக் கேட்டு விட்டு அவர் முன்னால் இருந்த ஆடையை சுட்டிக் காட்டி பேசத் தொடங்கினார். அவரிடமிருந்து ஒன்றன் பின் ஒன்றாக கேள்விகள் வந்து கொண்டேயிருந்தது. தொழில் நுட்ப சமாச்சாரத்தை முடித்தவர் கடைசியாக தொங்கிக் கொண்டுருந்த ஆடை ஒன்றை எடுத்து மேஜையின் மேல் போட்டு விட்டு பேசத் தொடங்கினார். விரித்து வைக்கப்பட்டடிருந்த அந்த ஆடையில் அதற்கு மேல் எந்த தவறும் என்னால் கண்டு பிடிக்கமுடியவில்லை. இருந்தாலும் என் முன்னால் இருந்தவர் திரும்பத் திரும்ப ஓரே கேள்வியையே கேட்டுக் கொண்டிருந்தார்.

" இல்லை, நீங்கள் இன்னும் ஏதாவது இரண்டு குறைகளை இதில் கண்டு பிடிக்க வேண்டும் " என்றார். இதற்கு மேல் என்ன சொல்வது? வேண்டுமானால் நாமே உருவாக்கி கண்டு பிடிக்க வேண்டியது தான். படபடப்பில் என் உள்ளங்கைகள் வேர்த்து இருந்தது. கை விரலில் இருந்த வியர்வையை அவர் கவனிக்காத போது அந்த ஆடையின் பின்புறத்தில் தேய்த்து எடுத்துவிட்டு அவரிடம் காட்டி, " இதோவொரு கறையிருக்கிறது“ என்றேன்..

" சுக்ரியா " என்று சொல்லிவிட்டு என்னுடைய பணிக்கான ஒப்பந்தத்தை உள்ளே வரவழைத்த பெண்ணிடம் தயார் செய்யச் சொன்னார்.

இவர் பம்பாயிலிருந்து வந்து திருப்பூரில் வாழ்க்கையை தொடங்கியிருந்தார். இவர் வைத்திருந்தது அலுவலகம் மட்டுமே. ஆயத்த ஆடைகளின் இறக்குமதியாளர்களை பையர் என்று அழைக்கிறார்கள். இது போன்ற அலுவலகத்திற்கு பையிங் ஆபிஸ் என்பார்கள். மொத்தத்தில் தரகர் என்று தமிழிலில் சொல்லலாம். உலகில் ஒவ்வொருநாடுகளிலும் ஏதோவொரு பகுதியில் ஆடைகளுக்கான இறக்குமதியாளர்கள் இருப்பார்கள்.. சில இறக்குமதியாளர்கள் மற்றவர்களின் தயவின்றி நேரிடையான கொள்முதல் செய்து கொண்டிருப்பார்கள். சில இறக்குமதியாளர்களின் அறிமுகம் இவரைப் போன்றவர்களுக்கு கிடைத்திருக்கும், அல்லது தேடியலைந்து பிடித்திருப்பார்கள்.

இறக்குமதியாளர்கள் கொடுக்கும் ஒப்பந்தங்களை இவர் திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் கொடுத்து தரத்துடன் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப வேண்டும். இதற்கென்று இங்கே ஒரு குழுவினரை வைத்து இருப்பதுண்டு. இவரைப் போன்றவர்கள் பெரிய மூதலீடு இல்லாமல் புத்தியை மட்டும் மூலதனமாக வைத்து தங்களுடைய வசதிகளை பலமடங்கு பெருக்கிக் கொள்வதுண்டு. திருப்பூரில் உள்ள பல நிறுவனங்கள் வீழ்ந்து போனதற்கு இது போன்று அலுவலகம் நடத்திக் கொண்டிருப்பவர்களும் முக்கிய காரணமாகும்.

எனக்கு இதுவொரு புதிய பாதை. எத்தனையோ நேரிடையான உற்பத்தி நிறுவனங்கள் மாறிய போதும் நான் எந்த தரகர் அலுவலக நிறுவனத்தின் வாசலில் கூட நுழைந்தது இல்லை.

" தவறுகளை மட்டுமே கண்டு பிடிக்க வேண்டும். இல்லாவிட்டாலும் நாமே உருவாக்க வேண்டும். உற்பத்தியாளர்களின் பயமென்பது நமக்கு வருமானம் மட்டுமல்ல நம்மை அவர்கள் தொடர்ந்து வரவேண்டியதன் அவசியத்தை மறைமுகமாகவும் உணர்த்தி விடமுடியும் ". அலுவலகத்தை நடத்திக் கொண்டிருந்த வடநாட்டவரின் கீத உபதேசத்தை ஏற்க முடியாதவனாய் அடுத்த ஆறு மாதங்களும் தோற்றுக் கொண்டேயிருந்தேன்.

இது போன்ற அலுவலகங்களை நடத்திக் கொண்டிருப்பவர்கள் உற்பத்தியாளரிடமிருந்து ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் ஐந்து சதவிகித கமிஷனை பெற்றுக் கொள்வார்கள். இங்கு பெறப்படும் கமிஷன் தொகையைப் போலவே வெளிநாட்டில் இருக்கும் இறக்குமதியாளரிடமும் சில புத்திசாலிகள் தனியாக குறிப்பிட்ட சதவிகிதத்தை கறந்து விடுவார்கள். தரகருக்கு கமிஷன் பணம் தேவை. உற்பத்தியாளருக்கு ஒப்பந்தம் தேவை. எல்லாம் சரி தான். இந்தப் பணத்தின் ஆசை அதிகமாக அதிகமாக இடையில் நடக்கும் " சாக்கடை " தான் என்னை அதிகமாக யோசிக்க வைத்தது.

திருப்பூர் ஏற்றுமதியில் தொடக்கத்தில் எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. உள்ளுர் சந்தைக்கான பனியன்கள் ஜட்டிகள் தாண்டி ஏற்றுமதிக்கான ஆடைகள் ஒவ்வொன்றாக உள்ளே வந்து கொண்டிருந்தது. உழைப்புக்கு பெயர் போன தென் மாவட்ட மக்களும், படித்து விட்டு வேலை கிடைக்காமல் அலைந்தவர்களும் திருப்பூரை நோக்கி வர இங்குள்ள மண்ணின் மைந்தர்களுக்கு அடுத்த கட்ட நகர்வு மிக எளிதாகவே இருந்தது.

ஒவ்வொரு நாட்டிலிருந்தும் இறக்குமதியாளர்கள் நேரிடையாகவே திருப்பூருக்கு வரத் தொடங்கினர். அந்தந்த நிறுவனங்களின் வசதி வாய்ப்புகள், விலைகள் வைத்து ஒவ்வொரு ஒப்பந்தங்களையையும் உறுதி செய்தார்கள். இருவருக்கும் நடக்கும் பேச்சு வார்த்தைகளின் போது இருபக்கமும் உள்ள நிறைகுறைகள் அலசப்பட்டது. இறக்குமதியாளர்களின் விருப்பப்படி மாற மாட்டேன் என்கிற உற்பத்தியாளர்கள் வெகு விரைவில் காணாமல் பேகத் தொடங்கினர். ஒன்று அவர்கள் உற்பத்தி செய்யும் தரம் மோசமாக இருக்கும். அல்லது இறக்குமதியாளர் எதிர்பார்ப்பை விட விலை அதிகமாக இருக்கும். எந்த இடத்திலும் இடைத்தரகர்கள் இல்லை. ஆனால் பம்பாய், டெல்லி மக்கள் திருப்பூருக்குள் நுழைந்த பிறகு தான் இந்த தரகர் கலாச்சாரம் உருவானது. வந்து இறங்கும் வெளிநாட்டு இறக்குமதியாளர்களுக்கு இங்குள்ள நிறுவனங்களின் நடைமுறைகளை தெளிவாக புரியவைத்து படிப்படியாக தங்களையும் இங்கே நிலைநிறுத்திக் கொண்டனர்.

இந்த தரகர் அலுவலகத்தில் நான் சேர்ந்த இரண்டாவது நாள் எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே உள்ளே பணிபுரிந்து கொண்டிருப்பவருடன் வேறொரு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார்கள். என்னுடன் வந்தவர் ஏற்றுமதியாகும் ஆடைகளின் இறுதி தரம் பார்த்து அனுப்பும் உயர் பதவியில் இருந்தார். புதிதாக சேர்ந்த என்னை ஆடர் கொடுக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அறிமுகப்படுத்துவதற்காக அழைத்துச் சென்றார். அவருடன் பழகிய சிறிது நேரத்திற்குள் அவரைப்பற்றி புரிந்து கொள்ள முடிந்தது. நடைமுறை வாழ்க்கையோடு ஒன்றி பணமே வாழ்க்கையின் பிரதான குறியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.

நாங்கள் நுழைந்த நிறுவனம் உள்ளாடைக்கு என்று பெயர் பெற்ற பெரிய நிறுவனமாகும். முதலாளியை எனக்கு ஏற்கனவே நன்றாகத் தெரியும். அவரின் முன் கோப குணாதிசியங்கள் நான் அறிந்தே வைத்திருந்தேன். ஓவ்வொரு நிறுவனத்தின் உள் அந்தரங்கமும் ஏதாதோவொரு வழியில் மற்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களிடம் வந்து சேர்ந்து விடும். நிறுவனத்தின் உள்ளே நாங்கள் சென்ற போது என்னுடன் வந்தவர் அலட்டலாய்த் தான் வந்தார். எனக்கும் அறிவுரை சொல்லியிருந்தார்.

அவரைப் பொறுத்தவரையில் உள்ளே நுழைந்து வெளியேறும் வரைக்கும் உள்ளே பணிபுரியும் ஒருவர் அவர் பக்கத்தில் நின்று கொண்டேயிருக்க வேண்டும். குறிப்பாக முதலாளி வந்து நின்றால் இன்னமும் சிறப்பு. இதற்கு மேலாக அரை மணிக்கு ஒவ்வொரு முறையும் குடிக்க பானங்கள் வந்து கொண்டேயிருக்க வேண்டும். நண்பர் புகைக்க விரும்பும் போது சிகரெட் எடுத்துக் கொடுக்க ஆட்கள் தயாராக இருக்க வேண்டும். என்னிடம் எந்த பழக்கமும் இல்லை. இது போன்ற எந்த எதிர்பார்ப்களும் இல்லை. நான் அமைதியாக ஒதுங்கி அடுக்கி வைக்கப்பட்டுருந்த பெட்டியில் உள்ள ஆடைகளை எடுத்து எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

முதலாளி உள்ளே யாரோ ஒருவரை செந்தமிழில் விளாசிக்கொண்டுருந்தார். கேட்டுக்கொண்டிருந்தவர் குனிந்தபடியே இருந்தார். “ஏதோ ஒன்று இன்று நடக்கப்போகின்றது” என்று எனக்கு புரிந்து விட்டது.. காயம் படாமல் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்று ஒவ்வொன்றையும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினேன். போடப்பட்டுருந்த பெட்டிகள் ஏற்றுமதிக்கு தயாராக இருந்தது. நண்பர் பார்த்து முடித்து சரி என்று சொன்னால் தூத்துக்குடிக்கு சென்று விடும். இல்லாத தவறுகளை பெரிதுபடுத்தி உரத்துப் பேசி அந்த இடத்தை ரணகளப்படுத்திக் கொண்டிருந்தார். காரணம் அவர் எதிர்பார்த்த மரியாதை எதுவும் கிடைக்கவில்லை. நான் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே என் வேலையில் கவனமாய் இருந்தேன்.

நிர்வாக சார்பாளராய் நின்று கொண்டிருந்தவர் பதில் பேசாமல் அமைதியாய் நின்று கொண்டுருந்தார். அவரால் பேச முடியாது. தரகர் அலுவகத்தில் இருந்து வருபவர்களை எதிர்த்து பேசினால் சில சமயம் ஏற்றுமதியாக வேண்டிய ஆடைகள் கப்பல் வழியாக செல்லாமல் விமானம் வழியே சென்று விடும். மேற்கொண்டு வாய்ப்பு இருந்தால் குறிப்பிட்ட சதவிகிதம் குறைந்து பேரத்தில் அக்கிரம முடிவு செய்யப்பட்டு விடும். பல சமயம் முதலாளிகள் தரகர் அலுவலகத்தில் வந்து கூனிக்குறுகி நிற்பார்கள்.

நிர்வாகத்தின் சார்பாக நின்று கொண்டுருந்தவரின் அமைதி, நண்பரை மேலும் அதிர வைக்கும் சமாச்சாரத்திற்கு கொண்டு சென்றது. , கையில் எடுத்த ஆடைகளைப் பார்க்காமலே தூக்கி எறிய வைத்தது. நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகளை உள்ளேயிருந்து கண்ணாடி அறையிலிருந்து முதலாளி கவனித்துக் கொண்டிருந்தார். கடைசியாக அவரே வெளியே வந்து நண்பருக்கு அருகில் வந்து நின்றார். விட்டாரே ஒரு அறை? கேட்ட சப்தத்தில் எனக்கே சிறுநீர் வந்து விடும் போலிருந்தது. ஏற்கனவே ஓதுங்கிக்கொண்டிருந்த நான் இப்போது ஒளிந்து கொள்ளும் நிலையில் தள்ளிப் போய் நின்றேன்.

“பத்து லட்சம் முதல் போட்டவன் நான். பத்துக்காசு சம்பளத்தை வாங்கிக்கிட்டு தூக்கியா எறியுற? கட்டுங்கடா இவனை தோட்டத்துக்குள்ள ” என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார். இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த போது பத்து சதவிகிதம் தள்ளுபடியில் அந்தப்பெட்டிகள் கப்பலை நோக்கி பயணப்பட்டது.

ஒவ்வொரு நாட்டு இறக்குமதியாளர் கேட்பது ஆடைகளின் தரம் மற்றும் விலை மட்டுமே. அதுவும் அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அந்த நாட்டின் துறைமுகத்தில் சென்று அடைந்திருக்க வேண்டும். ஆனால் இடையில் உள்ள இது போன்ற தரகர் கூட்டம் தரங்கெட்ட செயல்களையும் உருவாக்கி ஏராளமான பிரச்சனைகள் உருவாக காரணமாக இருந்து விடுகிறார்கள். ஒவ்வொரு தரகர் அலுவலக முதலாளியும் உற்பத்தியாளர்களை ரத்தம் உறிஞ்சம் அட்டை பூச்சி போலவே உறிஞ்சிக் கொண்டிருப்பார்கள். இது போன்ற அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களும், அவர்களால் முடிந்தவரைக்கும் சம்பாரிக்க, மொத்த பாதிப்புகளும் இறுதியில் உற்பத்தியாளர்களுக்கே வந்து சேரும். உற்பத்தியாளர்களுக்கு தேவைப்படும் நூல் முதல் அட்டைப் பெட்டி வரைக்கும் வாங்கும் அத்தனை இடங்களிலும் தரகர் அலுவலகத்திலிருந்து மறைமுக ஒப்பந்தம் போட்டு வைத்திருப்பார்கள்.

இந்த இடத்தில் தான் வாங்க வேண்டும் என்று பிடிவாதமாய் இருப்பார்கள். ஒவ்வொரு இடத்திலும் தரகருக்கு தனியான கமிஷன் தொகை போய்க் கொண்டே இருக்கும். ஒரு தரகரிடம் பத்து நிறுவனங்கள் இருந்தால் போதும். ஒரே வருடத்தில் கோடீஸ்வரனாக மாறி விடுவார். உற்பத்தியாளர்கள் இவர்களிடம் முரண்டு பிடிக்க முடியாது. தரகர்களின் மொத்த திட்டங்களும் மிகத் தெளிவாகவே இருக்கும்.

ஆடைகளுக்குண்டான புதிய ஒப்பந்தத்தை உற்பத்தியாளர்களிடம் கொடுத்து கையெழுத்து வாங்கும் வரையில் எந்த நிர்ப்பந்தமும் செய்ய மாட்டார்கள். படிப்படியாக தங்கள் வேலைகளை காட்டத் தொடங்குவார்கள். புதிதாக இது போன்ற அலுவலகம் தொடங்குபவர்களின் அறை பத்துக்கு பத்து சதுர அடிக்குள் இருக்கும், தவணையில் வாங்கியிருக்கும் ஒரு கணிணி. சுமாரான ஆங்கில அறிவு. அதிகமான அதிர்ஷடம். ஐம்பது கோடி போட்டு ஒரு தொழில் சாம்ராஜயத்தை உருவாக்கி வைத்துள்ள முதலாளியை சமான்யமானய மனிதனாக மாற்றி தெருவுக்கு கொண்டு வந்து விடுவார்கள். அவருடைய சரித்திர வாழ்க்கையை தரித்திர வாழ்க்கையாய் மாற்றி விடும் சக்தி அந்த பத்துக்குப் பத்து ரூமில் இருக்கும்.

நேர்மை என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்பார்கள், நரகலை உணவாக கொண்ட விலங்குக்குக்கூட ஒரு கட்டுபாடு உண்டு. பன்றிக் கூட்டம் கூட உண்டு முடித்ததும் உறங்கச் சென்றுவிடும். உறங்காமல் அடுத்த வேட்டைக்கு பயணிக்கும் இவர்களின் மூளையை எந்த பன்றிக்காய்ச்சல் தாக்கும்? இது போன்ற தரகர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் ஒரு நிறுவனம் நகர்ந்து போய்விட்டால் அடுத்த நிறுவன முதலாளி வரிசையில் வந்து நிற்பார்.

வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்காய் நிற்போம்....

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

 

டாலர் நகரம் - 3

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

மணிரத்னம் தனது கனவுத் திரைப்படங்களில் ஒன்றாகவும் , லைகா நிறுவனத்தின் தயாரிப்பிலும் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

சென்னையில் உள்ள அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்து இந்தி சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது