கட்டுரைகள்

சென்ற தொடரில் ஆன்மிகவாதிகள் பெருவெடிப்பின் (Bigbang) போது கடவுள் உலகைப் படைத்தார் என்று தமது நம்பிக்கையை முன்வைப்பதற்கு இடமுண்டு என்று கூறியிருந்தோம்.

ஆனால் இதன் போது அதாவது காலமும் வெளியும் (Time and Space) தோன்ற முன்னர் கடவுள் எங்கிருந்து இதைப் படைத்திருப்பார் என்பது சிறு பிள்ளைக்கும் தோன்றக் கூடிய கேள்வியாகும். இப்பிரச்சினையை ஆன்மிகவாதிகளின் போக்கிலேயே விட்டு விடுவோம். அதாவது இந்துக்களின் அத்வைதம் அல்லது இஸ்லாமியர்களின் கூற்றுப் படியும் ஏனைய மதங்களின் உட்பொருள் படியும் இவ்வாறு நோக்கலாம்.

'கடவுள் உருவமோ தோற்றம் மறைவோ இல்லாத ஒரு பொருள், அதுவே சத்தியம் மற்றும் எப்போதும் உள்ள பொருள்.'

இப்படிக் கருதினால் பிரபஞ்சத்தை வெளியில் இருந்து படைப்பதற்கு அவருக்கு இடமோ காலமோ தேவைப் பட்டிருக்காது. எனவே இக்குழப்பத்துக்கு இலகுவில் தீர்வு கிடைத்து விடும்.


அத்வைத வேதம்


இஸ்லாமிய கடவுட் கொள்கை

இதையே விஞ்ஞானிகளின் அணுகுமுறையைப் பார்த்தால் பிரபஞ்சத்தை விளக்கும் தத்துவம் என்பது இலகுவாக்கப் பட்ட பிரபஞ்சத்தின் ஒரு மாதிரி (model) அல்லது மட்டுப்படுத்தப் பட்ட (Restricted) அதன் ஒரு பாகமாகும். அதாவது நமது அவதானங்களை அடிப்படையாகக் கொண்ட சில அளவீடுகளை விளக்கும் விதிகளின் தொகுப்பு எனலாம். இந்த தத்துவம் நமது மனதால் உருவாக்கப் படுகின்றதே ஒழிய பிரபஞ்சத்தின் உண்மைத் தன்மையை உள்ளபடி அப்படியே விளக்கும் வெளிப்பாடு அல்ல.

விஞ்ஞானத்தால் கையாளப் படுகின்ற ஏதேனும் ஒரு தத்துவம் மிகச் சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட அது இரண்டு அம்சங்களை நிவர்த்தி செய்ய வேண்டும்.

1. மிகச் சொற்பமான தன்னிச்சையான அம்சங்களைக் கொண்டு பெறப்படும் அனைத்து அவதானங்களிலும் அதிக பட்ச அளவை மிகத் திருத்தமாக விளக்க வேண்டும்.

2. எதிர்காலத்தில் மேற்கொள்ளப் படவுள்ள அவதானங்களின் முடிவுகள் குறித்தும் உறுதியான எதிர்வுகூறல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
விஞ்ஞான தத்துவம் (Scientific Theory)

உதாரணமாக, அரிஸ்டோட்டிலின் தத்துவம் சாதாரணமான ஒன்று எனவும் நியூட்டனின் தத்துவம் மிகச் சிறந்தது என்றும் கொள்ளப் பட முடியும். அதாவது அரிஸ்டோட்டில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் வெறும் 4 மூலகங்களால் ஆனது எனவும் அவை பூமி, காற்று, நெருப்பு, மற்றும் தண்ணீர் என்றார். இது ஒரு எளிமையான விளக்கமாக இருந்த போதும் இதில் எதிர்காலத்துக்கான எதிர்வு கூறல்கள் எதுவும் இல்லை.

உலகம் ஆக்கப்பட்டுள்ள 4 மூலகங்கள்

ஆனால் நியூட்டனும் இதைப் போன்ற எளிமையான ஒரு தத்துவத்தைச் சொன்னார். அத்தத்துவம் ஈர்ப்பு விசை பற்றிய அவரது சமன்பாடு ஆகும். விளக்கமாகச் சொன்னால், எந்த இரு பொருளும் தமக்கிடையே ஈர்க்கப் படுகின்றன. இதன் போது அவற்றுக்கிடையே தொழிற்படும் விசையானது அவற்றின் திணிவுக்கு நேர் விகிதசமனாகவும், அவற்றுக்கிடையேயான தூரத்தின் வர்க்கத்துக்கு தலைகீழ் விகிதசமனாகவும் இருக்கும் என்பதே அச்சமன்பாடு ஆகும். இதைக் கணித வடிவில் கொடுத்தால்,
விசை - F, திணிவுகள் - m1,m2, அகில ஈர்ப்பு மாறிலி - G, இரு திணிவுகளினதும் மையத்துக்கு இடையேயான தூரம் - r எனின் சமன்பாடு இவ்வாறு அமையும்.

F = G. m1.m2/r2 , {G = 6.674×10 (−11 ஆம் வலு) N m2 kg−2}

இரு பொருட்களுக்கிடையேயான ஈர்ப்பு

இதில் அகில ஈர்ப்பு மாறிலியான G இன் பெறுமானம்  முழுப் பிரபஞ்சத்துக்கும் பொருந்தும். இதனால் இச்சமன்பாடு நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் சூரியன், நட்சத்திரங்கள்,சந்திரன், மற்றும் கிரகங்கள் ஆகியவற்றின் இயக்கத்தை விளக்கப் பயன்பட்டு வருகின்றது. இந்த விசேட தன்மையால் நியூட்டனின் இந்த ஈர்ப்புக் கொள்கை மிகச் சிறந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் இன்றைய நவீன வானவியலுக்கு இன்னும் இதுவும் பற்றாத நிலை இருப்பது வியப்பான உண்மையாகும். ஆம். நாம் இந்த ஈர்ப்புத் தத்துவத்தை நிறையுடைய துணிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். துணிக்கை மற்றும் அலை ஆகிய இரு அம்சங்களையும் கொண்ட ஒளி போன்ற மின்காந்த அலைகளுக்கோ அல்லது புற ஊதாக் கதிர்கள் பிரபஞ்ச பின்புலக் கதிர்களுக்கோ பிரயோகிக்க முடியாது.


ஒளியின் இருமை இயல்பு

இச் சந்தர்ப்பத்தில் நாம் 20 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கையையே கையாள வேண்டியுள்ளது. இச் சார்புக் கொள்கையின் அடிப்படையில் ஒளியை விட வேகமான பொருள் பிரபஞ்சத்தில் கிடையாது என நிரூபிக்கப் பட்டுள்ளது. (ஒளியின் வேகம் - 299 792 458 m / s)

அதாவது இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்தி,சடப்பொருள்களும் தகவல்களும் பயணிக்கக் கூடிய அதிகபட்ச வேகம் ஒளியின் வேகமாகும். ஒளியைத் துணிக்கையாகக் கருதினால்தான் நியூட்டனின் தத்துவம் செல்லுபடியாகாத நிலை தோன்றும். ஆனால் மற்றைய சந்தர்ப்பங்களில் பொருள்களின் இயக்கத்துக்குப் பிரயோகிப்பதற்கு நியூட்டனின் ஈர்ப்புக் கொள்கைக்கு எப்போதும் இன்றியமையாத மதிப்பு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.


அல்பேர்ட் ஐன்ஸ்டீன்

பொதுவாக எந்த ஒரு பௌதிகவியல் தத்துவமும் அதன் அனுமான அடிப்படையில் தற்காலிகமானதாகத் தான் இருக்கும். எம்மால் அதை ஒரு போதும் நிரூபிக்க முடியாது. நாம் எத்தனை முறை பரிசோதனை செய்து பார்த்தாலும் அதே முடிவையே காட்டும். அது அடுத்த முறையேனும் பிழையான முடிவைக் காட்டுமா என எம்மால் ஊகிக்க முடியாது.

ஆனால் சிலவேளைகளில் மிகச்சிறிய ஒரேயொரு அவதானம் குறித்த தத்துவத்தின் எதிர்வுகூறல்களை பொய்யாக்கி விடலாம். இரசாயனவியலாளர்களுக்கு (Chemists) இந்த அனுபவம் அனேகமாக வாய்த்திருக்கும். விஞ்ஞான உலகின் தத்துவவியலாரான கார்ல் பொப்பெர் பின்வருமாறு கூறுகின்றார் -

ஒரு சிறந்த தத்துவம் எவ்வாறு வடிவமைக்கப் படுகின்றது என்றால் தனது எதிர்வுகூறல்களை மறுதலிக்கும் அல்லது தவறு என சுட்டிக் காட்டும் அவதானங்கள் குறித்த சில மும்மொழிவுகள் அதன் கொள்கையில் அடங்கியிருக்குமாறு அதைப் பேணுவதன் மூலமாகும். ஏதேனும் ஒரு கட்டத்தில் புதிய ஒரு அவதானம் அதனுடன் முரண்பட்டால் அத்தத்துவத்தைப் புறக்கணிக்கவோ அல்லது திருத்தியமைக்கவோ முன்னர் இவ்வாறு செய்தால் அக்கொள்கை குறித்த நமது நம்பிக்கை நிலையாக இருப்பதுடன் எப்போதும் அதைப் பிரயோகிக்கத் தயாராக இருப்போம். மேலும் இக்கொள்கைக்குப் போட்டியாக புதிய அவதானங்களை மேற்கொள்ளும் நபர்களுடன் அவசியமான கேள்விகளைக் கேட்கவும் அதனைத் திருத்தி அமைக்கவும் முடியும்.


கார்ல் பொப்பெர்

நடைமுறையில் எவ்வாறு அமையுமெனில் புதிதாக உருவாக்கப்படும் தத்துவம் முன்னர் கருதப்பட்ட தத்துவத்தின் தொடர்ச்சியாக அல்லது திருத்தியமைக்கப்பட்ட வடிவமாக விரிவாக்கப் படுவதாகும். உதாரணமாக புதன் கிரகத்தின் இயக்கம் குறித்துத் தொலைக் காட்டிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மிகவும் திருத்தமான அவதானங்கள் நியூட்டனின் ஈர்ப்புக் கொள்கையின் மூலம் கூறப்பட்ட எதிர்வுகூறலுடன் சிறிய வித்தியாசத்தைக் காட்டியுள்ளன.

இதேவேளை ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கை (General Theory of Relativity) மூலம் பெறப்பட்ட எதிர்வுகூறல்கள் மிகச்சரியாகப் பொருந்தியுள்ளன. இந்த முடிவு ஐன்ஸ்டீனின் கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கான மிகத் திருத்தமான ஒரு சந்தர்ப்பமாகும். இவ்வாறு இருந்த போதும் நடைமுறையில் அதாவது அதிக நுணுக்கம் தேவைப்படாத  இடங்களில் நியூட்டனின் கொள்கையே நிகழ்காலத்தில் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று நியூட்டனின் கொள்கை ஐன்ஸ்டீனுடையதை விட மிக எளிமையாக இருப்பதும் ஆகும்.

இந்நிலையில் இன்றைய விஞ்ஞான உலகின் முக்கிய தேடலாக முழு பிரபஞ்ச இயக்கத்தையும் விளக்கும் முழுமையான ஒரேயொரு சமன்பாட்டைக் கண்டு பிடிப்பது எனும் இலக்கு விளங்குகின்றது. எனினும் இதற்காக தற்போது விஞ்ஞானிகள் பின்பற்றும் அணுகுமுறை இந்தத் தேடலை இரு  பிரிவுகளாக பிரித்துப் போட்டுள்ளது. அவை எவை என்பது பற்றியும் இன்னும் சுவாரசியமான தகவல்களையும் அடுத்த தொடரில் எதிர்பாருங்கள்...

நன்றி - தகவலுதவி: 'A Breif History of Time' - Stephen W.Hawking

 

முன்னைய பதிவுகள் :

நட்சத்திரப் பயணங்கள் 18 (பிரபஞ்சவியல் 1, கரும் சக்தி)

நட்சத்திரப் பயணங்கள் 19 (பிரபஞ்சவியல் 2, கரும் சக்தி 2)

நட்சத்திரப் பயணங்கள் 20 (பிரபஞ்சவியல் 3, கரும் பொருள்)

நட்சத்திரப் பயணங்கள் 21 (பிரபஞ்சவியல் 4, கரும்பொருள் 2)

நட்சத்திரப் பயணங்கள் 22 (பிரபஞ்சவியல் 5, கரும்பொருள் 3)

நட்சத்திரப் பயணங்கள் 23 (பிரபஞ்சவியல் 6, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்)

நட்சத்திரப் பயணங்கள் 24 (பிரபஞ்சவியல் 7, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 2)

நட்சத்திரப் பயணங்கள் 25 (பிரபஞ்சவியல் 8, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 3)

நட்சத்திரப் பயணங்கள் 26 (பிரபஞ்சவியல் 9, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 4)

நட்சத்திரப் பயணங்கள் 27 (பிரபஞ்சவியல் 10, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 5)

 

- 4 தமிழ் மீடியாவுக்காக: நவன்