கட்டுரைகள்

5. வளர்ச்சியின் அடுத்த கட்டம் திருப்பூர் செய்தி தாள்களில் தினந்தோறும் “ஆட்கள் தேவை” என்ற விளம்பரங்கள் வந்து கொண்டேயிருக்கும். குறிப்பாக ஞாயிற்றுக் கிழமையில் அதிகமாகவே வரும்.

நான் பேச்சுலர் ரூமில் வாழ்ந்த ஆறு ஆண்டுகளில் ஏராளமான நிறுவன மாறுதல்களை கடந்து வந்துள்ளேன். ஒவ்வொரு நிறுவன மாறுதல்களுக்கும் பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் ஒன்று உண்டு. நல்ல உழைப்பு இருந்தால் மட்டும் போதும், வாழ்வில் முன்னேறிவிடலாம் என முதலிருந்தே நினைத்திருந்தேன். ஆனால் கடந்த வந்த பாதைகளில் உழைப்புக்கு அப்பாற்பட்டு, அன்றாட வாழ்வில் தேவைப்படும் பல சமயோஜித நடவடிக்கைகள் இல்லாத காரணமே என்னுடைய நிறுவன மாறுதல்களுக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதையே மற்றொரு பெயரில் சொல்வதானால் அன்றாட தொழில் வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய அரசியல் விளையாட்டுகள் எனக் குறிப்பிடலாம்.

உடனிருப்பவர்கள் ஒவ்வொரு விசயத்திலும் மிகத் தெளிவாக இருந்தனர். உழைப்பை விட தனக்கு என்ன ஆதாயம் என்பதில் கவனமாக இருந்தனர். பழி போடவும், பழி சொல்லவும் தயாராக இருந்தார்கள். தெரியாமல் தோற்றுக் கொண்டிருந்தேன். ஆனால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் மேலேறி வந்துள்ளேன். தொழில் ரீதியாக உருவான தைரியம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவியது.

பள்ளித்தோழன் மூலம் அமெரிக்கா தொடர்பு உருவானது. நான் விரும்பிய ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்கூடத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒத்தி வைத்து விட்டு, நண்பர்களின் அறிவுரையின் படி முதலில் ஒரு அலுவலகத்தை உருவாக்கி விடலாம் என்று முனைப்போடு செயல்பட்டேன். ஆனால் கோட்டா என்றொரு பெரிய பிரச்சனை என் முன்னால் காத்துக் கொண்டிருந்தது.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் உருவாகாத 2000க்கு முன்னால் ஏற்றுமதியாளர்கள் தாங்கள் அனுப்பும் ஆடைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அதற்கு கோட்டா சிஸ்டம் என்று பெயர் அரசாங்கத்திடம் இருந்து வாங்க வேண்டிய கோட்டா நடை முறைகள் பயமுறுத்துவதாக இருந்தது. ஒவ்வொரு நாட்டுக்கும் இந்திய அரசாங்கம் ஒரு ஒதுக்கீடு வைத்து இருந்தது. அந்த ஒதுக்கீடு பெற பெரிய தள்ளு முள்ளு நடந்து கொண்டுருந்தது. “முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை” என்றாலும் கண்களுக்கு தெரிந்த தெரியாத அரசியல் சித்து விளையாட்டுக்கள் பலவும் நடந்து கொண்டிருந்தது.

அரசாங்கம் ஒதுக்கியுள்ள குறிப்பிட்ட ஆடைகளை மட்டுமே அந்தந்த நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்ய முடியும். அதுவும் அந்த கோட்டா ஒதுக்கீட்டை அரசாங்கத்திடமிருந்து முன்பே பணம் கொடுத்து வாங்கியிருக்க வேண்டும். இப்போது உள்ள தடையற்ற வணிக ரீதியான பொருளாதார சுதந்திரம் 10 ஆண்டுகளுக்கு முன்னில்லை. ஏற்றுமதியாளர்கள் தங்களின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் அரசாங்கத்தை சார்ந்திருக்க வேண்டும். அமெரிக்காவிற்கு நாம் ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் அந்த வருடம் அரசாங்கம் அனுமதிக்கும் அளவுக்குள் தான் நாம் ஏற்றுமதி செய்ய முடியும். இதற்குள் பல உள் விளையாட்டுகள், சட்ட திட்டங்கள் உண்டு.

நாம் இறக்குமதியாளர்களுக்கு சொல்லும் ஆடைகளின் உற்பத்தி விலையோடு இந்த கோட்டா வாங்கிய தொகையையும் சேர்க்க வேண்டும். பெரிய நிறுவனங்கள் அந்தந்த வருடங்கள் அரசாங்கம் ஒதுக்கும் கோட்டாவை தெளிவாக முன்பதிவு செய்து தயாராக வாங்கி வைத்திருந்தார்கள்.. அவர்களுக்கு ஏற்றுமதியில் எந்த பிரச்சனையும் வராது.

இந்த கோட்டாவை அரசாங்கத்திடம் இருந்து வாங்கி லாபம் சம்பாரிக்க தரகர் கூட்டமும் செயல்பட்டு கொள்ளை லாபம் பார்த்துக் கொண்டிருந்தது. சிறு நிறுவனங்களும் என்னைப் போல தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கும் பெரும் பாடாக இருந்தது. அப்போது தான் பள்ளித்தோழன் கோவிந்தராஜனின் அண்ணன் அமெரிக்காவில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். ஏற்கனவே பல முறை நண்பனிடம் சொல்லி வைத்திருந்த காரணத்தால் தகவல் வர ஊரில் சென்று அவரை சந்திக்க, உருவானது புதிய பாதை.

திருப்பூருக்குள் இருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கு தேவைப்படும் அலுவலகத்தை உருவாக்க என்றொரு புதிய திட்டம் உருவானது. அதாவது இறக்குமதியாளரின் நேரிடையான அலுவலகத்தை திருப்பூரில் உருவாக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தேன். . ஆனால் இந்த திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் என்னை நடுத்தெருவுக்கு கொண்டு வந்ததுடன் கையில் இருந்த காசும் போய் கடனுக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கையை அறிமுகப்படுத்தியது. அமெரிக்காவில் இருந்த நண்பர் உருவாக்கிக் கொடுத்த எந்த வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.

அரசாங்கம் ஒதுக்கும் கோட்டாவை வாங்க முடியவில்லை என்பதோடு இறக்குமதியாளர் விரும்பும் விலையும் அவர் கேட்ட தரமான ஆடைகளும் பயமுறுத்துவதாக இருந்தது. அவசரப்பட்டு எடுத்த முடிவின் அலங்கோலத்தை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்தேன். காயங்கள் அதிகமாகி தப்பவே முடியாமல், இனிமேல் இங்கு இருக்க வேண்டாம் என்று ஊரில் சென்று தங்கியிருந்தபோதுதான் பாட்டி வீடு விற்ற பணம் கைக்கு வந்தது. எவரிடமும் சொல்லாமல் சென்னையிலிருந்த நண்பரிடம் பேசி வைத்தபடி மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பாலித்தீவு, என்று இரண்டு வருடங்கள் வாழ்க்கை வாழ்ந்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்த போது என்னை சீண்ட ஆள் இல்லை.

குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்த பெரிய சூட்கேஸ்களும், கத்தைகளும் இல்லாமல் அதே மஞ்சள் பையுடன் உள்ளே வர எவரும் என்னை திரும்பிக் கூட பார்க்கவில்லை. மூத்த அண்ணி வீட்டில் இருந்த போது, அவர்கள் அமைதியாய் சொன்ன அறிவுரை என்னை அமைதிப்படுத்தியது. இப்போது தான் திருப்பூர் வாழ்வின் என்னுடைய இரண்டாம் கட்ட வளர்ச்சி தொடங்கியது.

நம்பிக்கையுடன் மீண்டும் திருப்பூர் வர தங்கியிருந்த அதே பழைய அறையே அதிர்ஷ்டவசமாக அமைந்தது. வேலைக்காக தேடி அலைந்த போது அன்று வந்த பத்திரிக்கை விளம்பரத்தைப் பார்த்து குறிப்பிட்ட அந்த நிறுவனத்திற்கு தங்கியிருந்த அறையில் இருந்து நடந்தே சென்றேன். அந்த நிறுவனத்தில் கூடியிருந்த கூட்டம் பயத்தை உருவாக்கியது. காரணம் உற்பத்தி பிரிவுக்கான பொது மேலாளர் பதவிக்கு ஆள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். என்னுடைய அசாத்தியமான துணிச்சலே அங்கே கொண்டு போய் நிறுத்தியது. இந்த பதவி கடந்த கால அனுபவத்தில் அடையாத ஒன்றாக இருந்தாலும் என்னால் முடியும் என்ற நம்பிக்கையின் பொருட்டு கூடியிருந்த கூட்டத்தில் நானும் ஒருவனாக அமர்ந்திருந்தேன். ஏற்கனவே இரண்டு நாட்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து போயிருந்தார்கள். கடைசியாக என்னை அழைத்தார்கள். முதலாளி கேட்ட தொழில்நுட்ப கேள்விகளுடன் என்னுடைய கொள்கைகள் குறித்த விளக்கங்கள் ரொம்பவே அவருக்கு பிடித்துப் போக “மறுநாளே வந்து சேர்ந்து விடுங்கள்” என்றார்.

பல்லடம் சாலையில் நிறுவனம் இருக்க அந்த பக்கமே சென்று விட வேண்டும் என்று மனதில் வைத்திருந்த தனி வீடு வாழ்க்கை இங்கிருந்து தான் தொடங்கியது. அவினாசி சாலை வாழ்க்கை, பல்லடம் சாலைக்கு என்னை உயர்வோடு மாற்றியது. கீழே ஆறு வீடு. மேலே ஆறு வீடு. அனைத்து வீட்டிலும் குடும்பமாய் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த குடியிருப்பில் நான் மட்டுமே பேச்சுலர். நான் சேர்ந்திருந்த நிறுவனம் கொடுத்த நம்பிக்கையில் தனியாக ஒரு வீடு பார்த்து இங்கே வந்திருந்தேன். சேர்ந்த நிறுவனத்தில் இருந்த ஒப்பந்தக்காரர் கந்தசாமி எனக்காக அலைந்து இந்த வீட்டை பார்த்து கொடுத்திருந்தார். பக்கத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு வீட்டின் உள்ளே தரையில் படுத்திருந்த என்னை மற்ற குடும்பத்தினர் வினோதமாக பார்த்தார்கள்.

வீட்டு அட்வான்ஸ் முதல் மற்ற அடிப்படை செலவுகள் வரைக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களின் ஆதரவோடு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருந்தேன். கையில் நயாபைசா இல்லாமல் அசாத்தியமான நம்பிக்கை என்னை நகர்த்திக் கொண்டிருந்தது. இப்போது ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் மொத்த உற்பத்தித் துறை சார்ந்த அத்தனை வேலைகளையும் என்னிடம் வந்திருந்தது. நான் இதுவரையிலும் கற்று வைத்திருந்த அத்தனை வித்தைகளும் இங்கு நன்றாக பயன்படத் தொடங்கியது. தொழிலாளர்கள் ஆதரவு ஒரு பக்கம். நிர்வாகத்திற்கு நான் கொடுத்த லாபங்கள் என்று இரண்டு பக்கமும் பலத்த ஆதரவைப் பெற்று மலர்ச்சியான வாழ்க்கை அறிமுகமானது.

இங்கு என்னுடன் பணியிலிருந்த மற்றவர்கள் உள்ளேயிருக்கும் ஒப்பந்தக்காரர்களிடம் நான் கமிஷன் வாங்குகின்றேன் என்று புதிய பிரச்சனையை கிளப்பிய போது அதுவும் என் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கையின் முன் புஸ்வானமானது. ஒவ்வொரு ஒப்பந்தக்காரர்களும் என்னுடைய கண்டிப்புத் தனத்தை வெறுத்தது போலவே நான் நிர்வாகத்தில் அவர்களுக்காக போராடிய விதம் அவர்களை என்னுடன் மேலும் நெருங்க வைத்தது. சிங்கர் ஒப்பந்தக்காரர் நாகராஜ் குடும்ப உறுப்பினர் போலவே மாறி என் தனிப்பட்ட வாழ்வில் நிறைய உதவிகளை செய்ய ஆரம்பித்ததார். அவர்களிடம் நான் வாங்கும் பணத்தை கணக்குப் பார்த்து திருப்பிக் கொடுக்க மற்ற தொழிலாளர்கள் மத்தியிலும் எனக்கான ஆதரவு உருவானது.

இப்போது வாழ்க்கை சற்று ஆசுவாசமாக போய்க் கொண்டிருந்தது.

உயர் பதவியை அடைந்த தைரியத்துடன் கையில் சற்றுக் காசு புழங்கிய போது, ஊரில் சகோதரிகளுடன் மட்டும் பேச்சு வார்த்தை மீண்டும் உருவானது. இப்போது எனக்குத் தெரியாமலே என்னுடைய திருமணத்திற்காக குடும்பத்தினர் முயற்சித்துக் கொண்டுருந்தார்கள். சகோதரிகள் சொன்னபோது, கண்டு கொள்ளாமல் அமைதியாகவே இருந்து விட்டேன். நம்பிக்கையாய் புதிய வாழ்க்கையை தொடங்கி இருந்த நேரத்தில் தான் திடீரென்று ஒரு நாள் மாமனராக வரப்போகின்றவரும் அவரின் மூத்த மாப்பிள்ளையும். நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்திருந்தனர். இவர்கள் என்னுடைய ஊருக்கு போயிருந்தபோது அம்மா என்னைப் பற்றி மிகத் தெளிவாகவே விளக்கியிருந்தார்.

"திருப்பூரில் இருக்கின்றான். என்ன வேலை செய்கிறான்? எந்த இடத்தில் இருப்பான் என்று எங்களுக்குத் தெரியாது? உங்களுக்கு வேண்டுமானால் போய் பார்த்துக்கொள்ளுங்கள்?” என்று சொல்லியிருக்கிறார். வந்த இருவரும் நான் ஏற்கனவே பணிபுரிந்த இரண்டு நிறுவன தொலைபேசி எண்களை வைத்துக் கொண்டு அங்கே செல்ல அங்கு பணிபுரிந்த, கண்களுக்கு தெரியாத அந்த நண்பர் கொடுத்த விபரங்களை வைத்து நான் தங்கியிருந்த வீட்டை கண்டு பிடித்தே வந்துவிட்டார்கள்.

குடும்பத்தினர் என்னைப் பற்றி கொடுத்த அறிமுகத்திற்கும், அவர்கள் திருப்பூரில் கிடைத்த விபரங்களும் ஒன்றுக்கொன்று வேறுபடாய் இருந்தது. வந்தவர்கள் என்னைப் பற்றி பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்து உள்ளனர்.

“நீங்கள் தேடிவந்தவர் இங்கு தான் அடுத்த வாசலில் இருக்கிறார். என்ன வேலை செய்கிறார்? எந்த நிறுவனம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த ஒரு வருடத்தில் யாரும் அவரை தேடி வந்து பார்த்ததே இல்லை. ஆனால் அவர் உள்ளே இருந்தால் எப்போதும் ஏதாவது ஒரு பக்திப்பாட்டு ஓடிக்கொண்டிருக்கும். அந்தப்பாடலை வைத்துத்தான் அவர் உள்ளே இருக்கிறார் என்பதை புரிந்துகொள்வேன். நீங்கள் தான் பேசிப் பார்த்து விட்டு புரிந்து கொள்ள வேண்டும்".

மாமனார் ஏற்கனவே இரண்டு முறை என்னுடைய சொந்த ஊருக்கு வந்திருந்த போதே என்னைப் பார்க்காமலே தகுதியான பட்டியலில் சேர்த்திருந்தார். அது பின்னாளில் தான் தெரிந்தது. குடும்ப சூழ்நிலை, வீட்டின் விஸ்தாரம், ஊரில் குடும்பத்துக்கு இருந்த பெயர், அப்பாவுக்குப் பிறகும் விட்டுக்கொடுக்காத கூட்டுக்குடித்தன வாழ்க்கை முறை, அம்மாவின் அப்பாவிப்பேச்சு என்று எல்லாவற்றையும் கணக்கில் வைத்து அவரை ஒரு முடிவுக்கு வரச்செய்திருந்தது. ஆனால் என்னைப் பற்றிய குடும்பத்தினரின் மதிப்பீடுகள் தான் அவரை பயமுறுத்தியிருந்தது.

அவரின் கருத்து மிக எளிது. நல்ல குடும்பம், பரம்பரியமான பழக்கவழக்கங்கள், பழைமையை விடாத நடைமுறைகள். ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இல்லாத குடும்பத்தில் இருந்து போனவன் நிச்சயம் தப்பாய் இருக்க மாட்டான். ஆனால் குடும்பமே எனக்கு எதிரியாய் கங்கணம் கட்டி கூறும்போது குழப்பம் வராமால் என்ன செய்ய முடியும்? மனந்தளராத விக்ரமாதித்னாய் மூத்த மாப்பிள்ளை துணை கொண்டு திருப்பூருக்கு வந்து விட்டார். என்னுடன் பேசிமுடித்து விட்டு செல்லும் போது வரட்டுமா மாப்பிள்ளை? என்றதும் எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை? காரணம் இப்போது என் வாழ்க்கை மீண்டும் ஒரு புயலில் சிக்கியிருந்தது.

உச்சத்தில் சென்று கொண்டிருந்த இரண்டாம் வாழ்க்கையின் இறுதியில் நான் பணிபுரிந்து கொண்டுருந்த நிறுவனம் கடனில் மூழ்கிப் போனது. திடீரென்று வந்த ஒரு புதிய இறக்குமதியாளர் பேச்சைக் கேட்டு தகுதிக்கு மீறி முதலாளி இறக்குமதி எந்திரங்களில் பணத்தை முடக்க உற்பத்தி தள்ளாட ஆரம்பித்தது. வாக்குறுதி கொடுத்த இறக்குமதியாளர் வேறொரு நிறுவனம் சென்று விட மொத்த நிர்வாகமும் கடனில் மூழ்கத் தொடங்கியது. உள்ளே பணிபுரிந்து கொண்டிருந்த ஒவ்வொருவரும் வெளியேறத் தொடங்கினர். மாதச் சம்பளம் தாமதமானது. நானும் வெளியேறினேன். மீண்டும் என் வேலைக்கான தேடல் வேட்டை தொடங்கியது.

நான் எந்த புதிய நிறுவனத்திற்கு வேலை தேடி சென்றாலும் உள்ளே காத்திருக்கும் நேரத்தில் நான் செய்யும் முதல் வேலை, அந்த இடத்தில் வேலை செய்து கொண்டுருக்கும் காவலாளி, கூட்டுபவர், மற்ற சுகாதரா வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சராசரி மதிப்பில் கீழே இருப்பவர்களுடன் சிநேகம் பிடித்துப் பேசுவதுண்டு. இவர்களுக்குத் தான் நிறுவனத்தின் உள்ளே உள்ள மொத்த அந்தரங்க விசயங்களும் தெரியும். இவர்களுடன் நாம் பேசி முடிக்கும் போதே நிறுவனத்தின் பலம் பலவீனம் நமக்குத் தெரிந்துவிடும்.

ஒவ்வொரு முதலாளியும் ஒரு இறக்குமதியாளரின் திருப்திக்காக நடை முறை சாத்தியங்களை மீறி பணத்தை வாரி இறைத்திருப்பார்கள். வந்த இறக்குமதியாளர் அது நொட்டை இது நொட்டை என்றதும் ஒரு கால கட்டத்திற்கு மேல் போராட முடியாமல் கடன் பெற்ற இடங்களில் இருந்து வந்து, நிறுவனத்தை பூட்டி உள்ளே இருக்கும் எந்திரங்களை எடுத்துச் செல்ல தயாராய் இருப்பார்கள். வாங்கிய காருக்காக பொள்ளாச்சி மகாலிங்க ஆட்களும், வாங்கியுள்ள கடன்களுக்காக வங்கி அதிகாரிகளும் வந்து நின்று விடுவார்கள்.

திருப்பூரிலுள்ள எந்த நிறுவனங்களையையும் நம்ப முடியாது. உள்ளே பணிபுரிபவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தங்களின் அடுத்த நாள் எப்படியிருக்கும்? என்பதே யூகிக்க முடியாது. இன்று நிறுவனத்திற்கு லாபமாக வந்த பத்து லட்சம், நாளை பத்து கோடிக்குள் சிக்க வைத்து விடும். ஏற்றுமதி நிறுவனங்கள் வளர உழைப்பு, தரம், நிர்வாகத்திறமை வேண்டும். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலே அதிர்ஷடம்., நம்ப கடினமாக இருக்கும், ஆனால் இது தான் உண்மை. மாமனாரும் சகலையும் என்னைப் பார்த்து விட்டு சென்ற போது மற்றொரு நிறுவனத்தில் உள்ளே நுழைய முயற்சித்துக் கொண்டுருந்தேன்.

எப்போதும் போல விளம்பரம் பார்த்து அந்த நிறுவனத்தைத் தேடிச் சென்ற போது எனக்கு முன்னால் 50 பேர்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அருகில் உள்ள செக்யூரிட்டி உடன் எப்போதும் போல பேசிக் கொண்டுருந்தேன். பேசி முடித்த போது மொத்தமும் புரிந்து விட்டது. இங்கே வேலை கேட்டு வந்தால் நிறுவனமே நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்தது. ஆனால் இதை விட்டாலும் இப்போதைக்கு எனக்கு வேறு வாய்ப்பில்லை.

இப்போது எனக்கு ஒரு மாதம் சம்பளம் கிடைத்தாலும் போதும். அடுத்த மூன்று மாதங்களுக்கு சாப்பாடு பிரச்சனை இருக்காது. என்னிடம் சொந்த வாகனமும் இல்லை. நிறுவனத்தில் கிடைக்கும் வண்டியைக்கொண்டு மற்ற இடங்களுக்குச் செல்லவும், பழைய உறவுகளை புதுபித்துக்கொள்ளவும் முடியும். முடிந்தால் வேறு நிறுவனத்திற்கு மாறவும் முடியும். இது போன்ற நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள இப்போதெனக்கு எந்த பயமும் படபடப்பும் இருப்பதில்லை.

நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்தவர்கள் பெரும்பாலும் டை கட்டி, சிலர் கோட் போட்டுக்கொண்டு, வரிசையாக அமர்ந்திருந்தார்கள். . நான் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டுருந்த பெட்டிகளுக்குப் பக்கத்தில் ஓரமாக சாய்ந்து நின்று கொண்டுருந்தேன். வந்தவர்களில் பாதிப்பேர்கள் சென்றதும் தான் எனக்கு அமர இடம் கிடைத்தது. நிறுவனத்தின் உள்ளே எல்லா இடங்களிலும் பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தார்கள். எனக்கு குழப்பாக இருந்தது. ஏற்றுமதியாக வேண்டிய பெட்டிகள் நிறுவனத்திற்குள் இரண்டு நாட்களுக்கு மேல் இருக்காது. ஆனால் இந்த பெட்டிகள் ரொம்ப நாளாக இருப்பது போல் தெரிகிறதே என்று யோசித்துக் கொண்டே பொறுமையாக உள்ளே உள்ள நிகழ்ச்சிகளை கவனித்துக் கொண்டிருந்தேன்.

என்னுடைய சுய விபரத்தாள் சொல்லி வைத்தாய் போல் கடைசியாய் இருந்து தொலைக்க எல்லோரும் சென்றபிறகு கடைசியாக என்னை அழைத்தனர். அந்த பெரிய மர மேஜை முன்னால் மூன்று நபர்கள் அமர்ந்து இருந்தனர், இந்த முறை மிகத் தெளிவாகவே சுயவிபரம் தயாரித்திருந்தேன். இத்தனை வருட அனுபவங்களும், நேற்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் போலிப்பெயர் நிறுவனத்தின் எனக்குண்டான பங்களிப்பும் என, நன்றாக திரைக்கதை எழுதியிருந்தேன்.

என்னைப் பற்றிய விபரங்களை படித்து நிமிர்ந்தவர்கள், ஏதோ மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஆள் எடுப்பதாக நினைத்துக்கொண்டு, அபத்தமாகவும், தொடர்ச்சியாகவும், மூன்று பேர்களும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வீசிய கேள்விகள் அனைத்தும், தொழில் நடைமுறைகளுக்குச் சம்மந்தம் இல்லாமல் இருந்தது. அவர்கள் கேள்விகளிலிருந்து, எனக்கு “இவர்கள் இந்தத் தொழில் தெரிந்தவர்கள் அல்ல. ஏதோவொரு வகையில் நிர்வாகத்தின் கைத்தடிகள்” என்பதைத் தெளிவாகவே புரிந்து கொண்டேன்.

நான் இருக்கும் சூழ்நிலை அவர்களுடன் விவாதம் பண்ணவா முடியும்? பத்து நிமிடம் ஆங்கிலத்திலே தொடர்ந்தவர்களிடம் மென்மையாகக் கேட்டேன்.

“நீங்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? “

அதன்பிறகே அவர்களும் சகஜ நிலைமைக்கு வந்தார்கள். ஓரே இடத்தில் குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருந்த அவஸ்த்தைகளினால் அவர்களும் அவசரமாய் இருந்தார்கள்.

" நல்ல இறக்குமதியாளர் கண்டுணர்ந்து, நீங்களே மொத்த நிர்வாகத்தை நடத்த வேண்டும். இப்போது நிர்வாகம் நிதி நெருக்கடியில் இருக்கிறது? உங்களால் முடியுமா?. "

இவர்கள் என்னிடம் எதிர்பார்ப்பது மொத்த நிர்வாகத்திற்கும் உண்டான பொது மேலாளர் பதவி. நான் இந்த பதவியை எதிர்பார்க்கவேயில்லை. ஏற்கனவே உற்பத்தி துறைக்கான அனுபவமும் இடையில் மாறிய நிறுவனங்கள் மூலம் பெற்றிருந்த அலுவலக அனுபவங்களும் இருந்த காரணத்தால் என்னிடம் எந்த தயக்கமும் இல்லை.

அடுத்து ஒரு மணி நேர நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தொழில் ரீதியான அனைத்து தகுதிகளும் என்னிடம் தேவைப்படும் அளவிற்கு இருப்பதை உணர்ந்து கொண்டனர். நான் கேட்ட அதிகப்படியான சம்பளத்தை மறுப்பே இல்லாமல் ஏற்றுக்கொண்டனர். திருப்பூர் வாழ்க்கையில் இந்த நிறுவன வாழ்க்கை என்னை வேறு விதமாக நகர்த்தத் தொடங்கியது.

நிறுவனத்தில் நுழைந்த இரண்டு நாட்களுக்குள் உள்ளேயிருந்த மொத்த பிரச்சனைகளும் எனக்குப் புரிந்து விட்டது. முதலாளியால் கவனிக்க முடியாத அளவிற்கு அவருக்கு பல தொழில்கள் இருந்தது. அவரின் மற்ற தொழிலின் நிர்ப்பந்தம். காரணமாக மனைவியின் தம்பியை முக்கியப் பொறுப்பில் இங்கே அமர்த்தி விட்டு நகர்ந்து விட்டார். ஆனால் மச்சினன் உள்ளே பணிபுரியும் பெண்கள் விசயத்தில் மட்டும் கவனமாக இருக்க, நிர்வாகம் முடங்கிப் போயிருந்தது. எடுத்த எந்த ஒப்பந்தங்களும் சரியான நேரத்தில் முடிக்காத காரணத்தாலும், தரம் இல்லாததாலும உள்ளேயே இருந்தது. நான் நுழைந்த முதல் வாரம் முழுக்க ஒவ்வொரு பிரச்சனைகளும் என்னை வந்து தாக்கிக் கொண்டேயிருந்தது. அதுவரையிலும் அமைதியாக இருந்த ஒவ்வொருவரும் தங்களின் கடன் தொகைக்காக என்னை வந்து பார்க்கத் தொடங்கினர். புதைகுழிக்குள் சிக்கியவன் போல தடுமாறிப் போனேன்.

தினமும் இரவு ஒரு மணிக்கு தங்கியிருந்த வீட்டின் உள்ளே நுழைந்து மறுபடியும் காலை எட்டு மணிக்கு நிறுவனத்திற்கு வந்து விடுவேன். தினந்தோறும் ஐந்து மணி நேரம் தான் ஓய்வு. இதற்கு மேலாக நிறுவனத்திற்குள் இருந்த மாபியா கும்பலை சமாளிக்க வேறு வழியே இல்லாமல் “அரசியல்” விளையாட்டுகளை காட்ட வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன். எதிரிகளை விட சற்று பலசாலி போல் காட்டிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தேன். முதலாளி நிறுவனத்திற்கு வராமல் காலையில் தினந்தோறும் தொலைபேசி வாயிலாக அன்றாட நடவடிக்கைகளை கேட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு மாதத்திற்குள் அவருக்கு என்ன தோன்றியதோ மொத்த பொறுப்புகளையும் என்னிடம் கொடுத்து விட்டார். நிறுவனத்தின் மொத்த பொறுப்புகளும் என்னிடம் வந்த போது உள்ளே இருந்த அத்தனை சாக்கடைக்க ழிவுகளையும் சுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை. இதன் காரணமாகவே பல பக்கங்களில் இருந்தும் கொலை மிரட்டல் வரைக்கும் வந்து கொண்டிருந்தது, ஒவ்வொரு இடத்திலும் கமிஷன் வைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் என்னுடைய நடவடிக்கைகளைப் பார்த்து கதிகலங்கிப் போனார்கள். சம்மந்தப்பட்ட ஒவ்வொரு நிறுவனங்களையும் நேரிடையாகவே வரவழைத்து ஒவ்வொன்றையும் முதலாளி பார்வைக்கு கொண்டு போக, உள்ளே இருந்தவர்களுக்கு என்னுடைய குணாதிசியங்கள் புரிந்து விட்டது.

ஒன்று முடிந்தால் அடுத்த பிரச்சனை என்று ஒவ்வொன்றின் பின்னாலும் ஓடிக் கொண்டிருந்தேன். உள்ளேயிருந்தவர்கள் என்னை துரத்துவதில் குறியாக இருந்தனர். மச்சினன் கூட ஒத்துழைப்பு கொடுக்க தயாராயில்லை. இவையெல்லாம் போக உள்ளே அடுக்கி வைத்திருந்து மூன்று கோடிக்காண எடுக்கப்படாத பெட்டிகள் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. புதிய ஒப்பந்தங்கள் எடுக்க வேண்டுமென்றால் பலரையும் நிறுவனத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். வருகின்றவர்களின் பார்வையில் இந்த பெட்டிகள் தான் முதலில் தென்படும். அதுவே பல பிரச்சனைகளை உருவாக்கும் என்று பெட்டிகளை எப்படியும் நகர்த்த வேண்டுமென்று அதற்கான ஏற்பாட்டில் இறங்கினேன்.

தரம் சரியில்லை என்று புறக்கணிக்கப்பட்ட பெட்டிகள். உள்ளுர் சந்தையின் மதிப்பில் ஐம்பது லட்சத்துக்கு கூட அலை மோத வேண்டிய சூழ்நிலையில் இருந்தது., ஆனால் ஏற்றுமதி மதிப்பு என்பது மூன்று கோடி, முதலாளியின் மச்சினன் செய்த சில்லறை விளையாட்டால் ஒரு நிறுவனமே ஸ்தம்பித்து போயிருந்தது. ஆனால் மச்சினனை சார்ந்திருந்த ஜால்ராக்களுக்கு மட்டும் சாதகமாக இருந்தது. அதுவும் தொடர்ந்து கொண்டிருந்தது. உள்ளேயிருந்த எவரும் நிறுவன வளர்ச்சியைக்குறித்து அக்கறைப்படவில்லை. தங்களுக்கு வந்து கொண்டுருக்கும் கமிஷன் தொகை நிற்கப் போகின்றதே? என்பதில் தான் கருத்தாய் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் உள்ளேயிருந்த முன்னூறு பணியாளர்களுக்கும் வாழ்வாதார பிரச்சனை. ஒவ்வொரு தொழிலாளர்களையையும் ஆறுதல் படுத்தி அவர்களை வேறு நிறுவனத்திற்கு நகர விடாமல் தடுப்பது எனக்கு பெரும்பாடாகயிருந்தது.

தொழிலாளர்களின் சிலர் தங்களின் வசதிக்காக நிறுவனத்தின் அருகே வீடு பார்த்து வந்திருப்பார்கள். சிலர் பல வருடங்களாக தொடர்ந்து வேலை செய்த காரணத்தால் வேறு இடங்களுக்கு மாறாமல் இந்த நிறுவனத்திலேயே கடைசி வரைக்கும் இருந்து விடுவோம் என்ற மனோ நிலைக்கு வந்துருப்பார்கள். தொழில் அனுபவம் உள்ள தொழிலாளிகள் கிடைப்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் குதிரைக் கொம்பாகவே இருக்கும். இங்கோ இருப்பவர்களை காப்பாற்றிக் கொள்வதே எனக்கு பெரும் பாடாக இருந்தது.

திருப்பூர் நிறுவனங்களில் நல்ல தொழிலாளிகள் இருப்பார்கள். ஆனால் அவர்களை மேய்க்கும் மேய்ப்பன் சுத்த சுரண்டலாகத்தான் இருப்பான். வேலை நடந்தால் போதும் என்று நிர்வாகமும் கண்டு காணாமல் இருக்கும். திடீரென்று அடுத்தடுத்த பிரச்சனைகள் நிர்வாகத்தை தாக்க திடீரென்று ஒரு நாள் வங்கியிலிருந்து ஓலை வரும். மொத்தமாக மூழ்கும் நிலையில் தான் சில நிறுவனங்கள் விழித்துக் கொள்வார்கள். ஆனால் அப்போது சிறப்பான தொழிலாளர்கள் எவரும் உள்ளே இருக்க மாட்டார்கள். மறுபடியும் ஜீரோவிலிருந்து தொடங்க வேண்டும்.. இந்தப் பாதையில் தான் இவர்கள் பயணித்து வந்தார்கள் என்று யாரையும் இங்கே உதாரண மனிதர்களாக காட்டவே முடியவில்லை. ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் வெவ்வேறு பாதைகள் வெவ்வேறு முறைகள்.

முதலாளி ஓழுக்கமே இல்லாதவனாக இருப்பார். ஆனால் நடத்திக் கொண்டிருக்கும் நிர்வாகம் ஓழுங்காக நடக்கும். காரணம் ஓழுகும் அத்தனை இடங்களும் அவருக்குத் தெரியும். இங்கு பக்திமார்க்கத்திற்காக பஜனை நடத்திக் கொண்டிருப்பவர்களின் நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களின் சம்பளத் தொகையை கொடுக்காமல் தொங்கலில் விடுவதுண்டு. மொத்தத்தில் சொல்லுக்கும் வாழும் வாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லாமல் வாழ்பவர்கள் இங்கு அதிகம். நான் பார்த்தவரையில் பணத்தாசை என்பது ஒருவரை எந்த அளவிற்கு கேவலமாக மாற்றும் என்பதற்கு இங்கு வாழும் முதலாளிகள் மிகச் சிறந்த உதாரண மனிதர்கள்.

இப்போது நடைமுறை வாழ்க்கையில் நான் பெற்ற எல்லாவித அனுபவங்களும் எனக்கு பல விதங்களிலும் பயன்பட்டது. ஒவ்வொரு படியாக கவனமாக ஏறிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நாள் முதலாளி உள்ளே வந்தார். என் தோள் மேல் கை போட்டு ஆதரவாய் பேசியவர் “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அவரிடம் என் மனதில் உள்ளதை அப்படியே ஒப்பிக்கத் தொடங்கினேன்.

இப்போதுள்ள நிர்வாகத்தின் உண்மை நிலவரங்கள்,, கடந்து வந்த பாதையில் கமிஷன் மூலம் சம்பாரித்த நபர்கள், இனி நடக்க வேண்டிய பாதையில் உள்ள தடங்கல்கள், என்று பட்டியலிட்டு காட்ட பல ஆண்டுகளுக்குப் பின்னால் முழித்துக் கொண்டார். பலத்த யோசனைப்பிறகு, நிர்வாகத்திற்கு ஒத்துவராத எவரையும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்க எனக்கு அனுமதி வழங்கினார். . வெளியே செல்லும் போது அவர் கொடுத்த நம்பிக்கை வார்த்தைகள் இன்னும் கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

“நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். என்னுடைய உறவு என்று பார்க்காமல் தேவையில்லாதவர்களை அப்புறப்படுத்துங்கள்”என்றார். முதலாளியின் கோபப் பார்வையை தாங்க முடியாத மச்சினன் தனது அனைத்து சண்டாளத்தனத்தையும் விட்டு நிர்வாகத்தை விட்டு வெளியேறினார். நான் இங்கு தொடங்கிய ஒவ்வொன்றும் இறுதியில் பழமாக விழுந்து கொண்டுருந்தது. உள்ளே ஒவ்வொரு வேலையும் எனக்காக காத்துக் கொண்டிருந்தது. அடுக்கி வைத்திருந்த அத்தனை பெட்டிகளையும் முதலில் கடத்த வேண்டும். அதில் கவனம் செலுத்தினேன்.

ஓப்பந்தம் கொடுத்திருந்த தரகர் அலுவலகத்திற்கேச் சென்று அவரைப் பார்த்தேன். அவர் செய்திருந்த அத்தனை கோல்மால்களைக் உணர்ந்து கொண்டு அமைதியாக திரும்பி வந்த போது அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பெரியசாமி என்பவரின் நட்பு கிடைத்து. அவர் மூலம் இறக்குமதியாளாரின் மின் அஞ்சல் முகவரி கிடைத்து நான் நேரிடையாகவே இறக்குமதியாளரிடம் பேசிய போது தான் தரகர் உருவாக்கிய அத்தனை கோல்மால்களையும் புரிந்து கொள்ள முடிந்தது. பிரச்சனையை மேலும் வளர்க்க விரும்பாமல் பெட்டிகளை இறக்குமதியாளர் விரும்பிய தள்ளுபடியுடன் அனுப்பிவிட்டு லாபத்தில் நட்டம் என்பதாக முதலாளியிடம் கணக்கு காட்டிய போது என் சட்டைப்பையில் பணத்தாள்களை திணித்துவிட்டு பாராட்டிவிட்டுச் சென்றார்.

இந்த ஒரு ஒப்பந்தத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மீதியுள்ள பணத்தை வரவழைத்து கொடுத்த போது நிறுவனத்திற்கு வெளியே என் பெயர் பரவ ஆரம்பித்தது. பயந்து கொண்டிருந்தது துணை நிறுவனங்கள் இப்போது என் மேல் நம்பிக்கை வைத்து தாங்களாகவே அடுத்த ஆடர் கேட்டு உள்ளே வரத் தொடங்கினர். என்னுடைய அடுத்த முயற்சியான திருப்பூருக்குள் இருந்த ஜெர்மன் நாட்டு நேரிடையான அலுவலகத்தின் வாசலை என்னுடைய தொடர்ச்சியான தட்டுதல்களால் திறந்தாகி விட்டது. அவர்களின் ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றாக உள்ளே வரத் தொடங்கியது. நீண்ட நாட்களாக எனக்குள் இருந்த உற்பத்தி துறை சார்ந்த அறிவும், மார்க்கெட்டிங் அனுபவமும் ஒன்றாக சேர்ந்து இப்போது பல வழிகளில் உதவத் தொடங்கியது.

பணியாளர்கள் முன்னூறு, அறுநூறாகி பணம் ஆறாகி விட, சமயம் பார்த்துக்கொண்டுருந்த முதலாளி மனைவி உள்ளே வரத் தொடங்கினார், நிர்வாகத்தில் உள்ள அனைத்து வரவு செலவுகளும் தணிக்கை செய்யப்பட்டு அந்தக் கூட்டத்தை திருப்தி செய்து நம்பிக்கை பெற்றுருந்தாலும், மனைவியிடமிருந்து தினந்தோறும் கேள்விகள் வந்து கொண்டேயிருந்தது, காரணம் நான் உள்ளே நுழைந்த தொடக்கத்தில் அவரின் உறவினர்கள் பலரையும் பணி நீக்கம் செய்துருந்தேன். இப்போது சமயம் பார்த்து பழிவாங்கத் தொடங்கினார். “உங்க சகவாசமே வேண்டாம்” என்று திடுமென்று ஒரு நாள் மொத்தத்தையும் ஒப்படைத்து விட்டு அந்த நிறுவனத்தை விட்டு வெளியே வந்த தினத்தில் தான் மாமனார் என்னைத் தேடி வந்திருந்தார்.

மாப்பிள்ளை என்று அழைத்து சென்று போனவரிடம் இதையெல்லாம் சொல்லமுடியுமா? திருமணம் குறித்த அக்கறையின்றி தொழில் வாழ்க்கையில் முன்னேறிய பிறகு செய்து கொள்ளலாம் என்ற என் எண்ணத்தை மாற்றியவர் நண்பர் பெரியசாமி. என் சொந்த ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தில் உள்ளவர். இங்கு வேறொரு துறையில் இருந்து கொண்டு எனக்கு அடிக்கடி எதிர்காலம் குறித்த ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார். அவர் சொன்னபடியே திரைப்படக் காட்சிகள் போலவே திருமணமும் நடந்து முடிந்தது. மொத்தத்தில் என் அம்மாவுக்கு பரம திருப்தி. வெகுநாளைக்குப் பிறகு அவருக்குப் பிடித்த மகனாக மாறியதில் அவரின் ஒரு கவலை தீர்த்தது. என் வாழ்வில் வந்து சேர்ந்த இரட்டைக்குழந்தைகள் மூலம் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் உருவானது. திருப்பூருக்குள் இருக்கும் ஏற்றுமதி நிறுவனங்கள் எந்த அளவிற்கு என் வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே அளவிற்கு குழந்தைகளின் பள்ளிக்கூடமும் அதிக அளவு யோசிக்க வைத்தது.

பள்ளிக்குச் செல்லத் தயாராகுவோம்....

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி