கட்டுரைகள்

Grand Unified Theory (GUT)


நட்சத்திரப் பயணங்கள் விண்வெளி அறிவியற் தொடரின் சென்ற பாகத்தில் பிரபஞ்சவியலிலும் (cosmology), பௌதிகவியலிலும் (Physics and Meta physics) கையாளப்படுகின்ற விஞ்ஞானமுறை தத்துவத்தின் (Scientific theory) இயல்பினையும் அது சிறந்த ஒன்றாக இருக்கத் தேவையான அம்சங்களைக் குறித்தும் விளக்கியிருந்தோம்.

மேலும் சிறந்த தத்துவத்திற்கு உதாரணமாக நியூட்டனின் அகில ஈர்ப்புக் கொள்கையையும் (Newton's law of universal gravitation) மற்றும் அதை விட திருத்தமான ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கையையும் (Relativity) கூறியிருந்தோம். சென்ற தொடரின் இறுதியில் இன்றைய விஞ்ஞானிகளின் இலக்காக முழுப் பிரபஞ்ச இயக்கத்தையும் விளக்கும் ஒரேயொரு சமன்பாட்டைக் கண்டு பிடித்தல் என்ற விடயம் இருப்பதாகவும் இதற்கான விஞ்ஞானிகளின் அணுகுமுறை இந்தத் தேடலை இரு பிரிவுகளாக்கிப் போட்டிருப்பதாகவும் கூறியிருந்தோம். அதன் தொடர்ச்சி இனி...

முதலாவது பிரிவு -

இது இப்பிரபஞ்சம் கால ஓட்டத்தில் எவ்வாறு மாற்றமடைந்து வருகின்றது என விளக்கும் விதிகள் பற்றியது. அதாவது ஏதாவது ஒரு காலத்தில் பிரபஞ்சம் எவ்வாறு இருந்தது என்று நாம் அவதானிப்புக்கள் மூலம் கூறினால் இவ்விதிகள் மூலம் இனி வரும் காலத்தில் அது எவ்வாறு இருக்கும் என எதிர்வுகூற முடியும்.

இரண்டாவது பிரிவு -

இது நம் பிரபஞ்சத்தின் ஆதி நிலை (தொடக்க நிலை) குறித்தது

சில அறிவியலாளர்களின் நம்பிக்கைப் படி விஞ்ஞானம் முதலாவது பிரிவுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இரண்டாவது பிரிவான பிரபஞ்சத்தின் ஆதி நிலை குறித்த விளக்கத்தை மதம் அல்லது மெட்டா இயற்பியல் (Meta Physics) மூலமே தெளிவு படுத்த முடியும் என்றே இவர்கள் கருதுகின்றனர். இவர்கள் கூற்றுப்படி சர்வ வல்லமை படைத்த கடவுள் தனக்கு விருப்பமான விதத்தில் பிரபஞ்சத்தைப் படைத்த போதும் அதன் இயக்கம் முற்றிலும் தன்னிச்சையாகவே நிகழ்வதாகக் கொள்ளப் படுகின்றது.

இந்நிலையில் வெளிப்படையாகத் தெரிவது என்னவென்றால் இப்பிரபஞ்சம் சில உறுதியான விதிகளைப் பின்பற்றியே ஒரு பொதுவான ஒழுங்கில் பரிணாமம் அடைந்து வருகிறது அல்லது கடவுள் அவ்வாறு அதைப் பணித்துள்ளார் எனும் கண்ணோட்டம் கிடைத்திருப்பதாகும். இதனால் பிரபஞ்சத்தின் ஆதி நிலையை அல்லது தோற்றத்தை நிர்ணயிக்கும் விஞ்ஞான விதிகளும் இருந்திருக்கலாம் (அது தன்னிச்சையாக இயங்கவில்லை) என்று ஊகிக்க உறுதியான காரணங்களும் எழுந்துள்ளன.

20 ஆம் நூற்றாண்டு தொடங்கியதிலிருந்து முழுப் பிரபஞ்ச இயக்கத்தையும் விளக்கும் பூரண கணித சமன்பாட்டைப் பெறும் இலக்கு அறிவியலாளர்களுக்கு மிகவும் சவாலாகவும் மிகக் கடினமானதுமான ஒன்றாகவே இருந்து வருகின்றது. இதனால் ஆரம்பத்தில் இப்பிரச்சினையைப் பல பகுதிகளாகப் பிரித்து சிறு சிறு பகுதி சார்ந்த தத்துவங்களை (partial theories) இயற்றினர். இந்த ஒவ்வொரு பகுதி சார்ந்த தத்துவங்கள் அனைத்தும் குறித்த சில முக்கிய அவதானங்களை விளக்குமாறும் ஏனைய புற அளவீடுகளின் (Quantities) தாக்கங்களை அலட்சியம் செய்து, அல்லது எளிய எண்களின் தொகுதியாகக் காட்டுமாறும் இருந்தன.

ஆனால் இந்த அணுகுமுறை சிலவேளைகளில் முற்றிலும் தவறாக இருக்கலாம் எனவும் தற்போது கருதப்படுகின்றது. இதற்குக் காரணமாக பின்வரும் கண்ணோட்டத்தைக் கூறலாம். 'இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஒழுங்குகளும் அவை வடிவமைக்கப் பட்டிருக்கும் விதம் அனைத்தும் எளிமையான அடிப்படை ஒன்றைப் பின்பற்றி இயங்குவதாக இருந்தால், அந்த அடிப்படை விதியை அணுகுவதற்குத் தனித்தனியாக பிரபஞ்சம் பின்பற்றும் ஒரு சில ஒழுங்குகளுக்கான விதிகளைப் பிரித்துப் பிரித்து ஆராய்வதன் மூலம் முயற்சிப்பது முடியாத காரியமாகும்.'

எனினும் நாம் இந்த தவறான பாதையையே உறுதியான வழியாகக் கருதி இதுவரை காலமும் பயணித்துள்ளோம். இதைச் சற்று விளக்குவதற்கு நாம் மறுபடியும் நியூட்டனின் அகில ஈர்ப்பு விதியைத் தான் எடுத்து நோக்க வேண்டியுள்ளது. அதாவது இரு பொருட்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை பொருட்களின் தன்மை அடிப்படையில் பார்த்தால் அவற்றின் திணிவிலேயே தங்கியுள்ளது. ஆனால் அப்பொருட்கள் எப்பதார்த்தத்தால் எக்கட்டமைப்பில் ஆக்கப் பட்டுள்ளன என்பதில் தங்கியில்லை. எனவே விண்ணில் உள்ள சூரியன் மற்றும் கிரகங்களின் ஒழுக்கைக் கணிப்பதற்கு அவற்றின் கட்டமைப்பு அல்லது வடிவம் குறித்த கொள்கைகள் தேவைப்படாது.

இதைப் போன்றதே பிரபஞ்சத்தின் அடிப்படை விதியை அறிவதற்கான முயற்சியும். சற்று ஒப்பிட்டுப் பார்த்தால் இது இலகுவில் புரியக் கூடியது.

நிகழ்காலத்தில் விஞ்ஞானிகள் பிரபஞ்ச இயக்கத்தை விளக்குவதற்கு பகுதி சார்ந்த இரு அடிப்படை விஞ்ஞான தத்துவங்களைப் பயன்படுத்துகின்றனர். அவையாவன,

1.பொதுச் சார்புக் கொள்கை (General Theory of Relativity)
2.குவாண்டம் பொறிமுறை (Quantum Mechanics)

இவ்விடயம் குறித்து நட்சத்திரப் பயணங்கள் தொடர் 3 இன் பிரபஞ்சத்தின் தோற்றத்தில் ஏற்கனவே கூறியிருந்தோம். அதற்கான இணைப்பு இங்கே -

நட்சத்திரப் பயணங்கள் : 3 (பிரபஞ்சத்தின் தோற்றம்)


வெளியை வளைக்கும் பொருள் (Special Relativity)

இவ்விரு கொள்கைகளும் தான் 20 ஆம் நூற்றான்டின் முற்பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட மனிதனின் அறிவுக்கூர்மை மிக்க தத்துவங்களாகும். இவற்றில் பொதுச் சார்புக் கொள்கை, ஈர்ப்பு விசை (Force of Gravity) மற்றும் பிரபஞ்சத்தின் பாரிய கட்டமைப்புக் (Large Scale Structure) குறித்த விளக்கங்களைக் கூறுகின்றது.

(பாரிய கட்டமைப்பு எனும் போது பூமியில் இருந்து சில மைல்கள் தூரத்திலிருந்து அதி உயர் தொலைக் காட்டிகள் மூலம் கூட நோக்கத் தக்க அதிகபட்ச தூரமான மில்லியன் மில்லியன் மில்லியன் மில்லியன் மைல் தூரத்துக்கு அப்பால் (1 * 10 இன் வலு 24 - அதாவது 1 இற்குப் பின் 24 பூச்சியம் மைல்கள்) தொலைவு வரை அகன்றிருக்கும் பிரபஞ்சத்தின் கட்டமைப்பு அல்லது Observable Universe பற்றிய மாதிரியாகும்.)Observable Universe

இன்னொரு பக்கத்தில் குவாண்டம் பொறிமுறை பிரபஞ்சத்தின் மிக மிக மிகச் சிறிய (ஒரு இஞ்சின் மில்லியனில் மில்லியன் பங்கு சிறிய) பாகங்களுடன் கணிப்புக்களை மேற்கொள்ளும் கல்வியாக விளங்குகின்றது.அணுக் கட்டமைப்பு (குவாண்டம் பொறிமுறை)

ஆனால் இவ்விரு துறைகளும் ஒன்றில் இருந்து இன்னொன்று மாறுபட்ட விளக்கங்களைக் கொடுக்கின்றன. அதாவது இவ்விரு கொள்கைகளுமே ஒரே நேரத்தில் சரி எனக் கொள்ள முடியாது. ஏதாவது ஒன்று தான் ஏற்றுக் கொள்ளப்பட முடியும். உதாரணத்துக்கு வெறுங்கண்ணுக்கு தெரியும் அளவில் பெரியதான சூரிய மண்டலத்தில் காணப்படும் கோள்களின் இயக்கம் கண்ணுக்குத் தென்படாத அணுக்களிடையே உள்ள கருக்களுக்கும் இலக்ட்ரோன்களுக்குமான இயக்கத்துடன் ஒத்ததல்ல. இரண்டும் வெவ்வேறு இயக்கங்கள் ஆகும்.

இன்றைய பௌதிகவியலின் மிக முக்கிய இலக்காக பிரபஞ்சம் முழுதுக்குமான ஒரே தியரியைக் கண்டுபிடிப்பது என்ற நோக்கம் இருப்பதாக முன்னர் கூறப்பட்டது. இந்த இலக்கு பெரியதை விளக்கும் பொதுச் சார்புக் கொள்கையிலும் சிறியதை விளக்கும் குவாண்டம் பொறிமுறையிலும் தங்கியிருப்பதால் இவ்விரண்டையும் இணைக்கும் புதிய கொள்கையை உருவாக்குவதன் மூலம் அந்த இலக்கை அடைய முடியும் என்ற வழி 20 ஆம் நூற்றாண்டில் பிறந்தது. இப்புதிய கொள்கை ஈர்ப்புக்கான குவாண்டம் கொள்கை (Quantum Theory of Gravity) எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளது. இதுவரைக்கும் நாம் இந்தக் கொள்கையை வரையறுக்கவில்லை. சிலவேளைகளில் இக்கொள்கையை உருவாக்கப் பல காலம் செல்லக் கூடும். எனினும் இக்கொள்கை கொண்டிருக்கக் கூடிய பல அம்சங்களை இப்போது நாம் அறிந்துள்ளோம்.


Quantum Theory of Gravity

இப்பிரபஞ்சம் தன்னிச்சையானது அல்ல, அது சில நிச்சயமான விதிகளைப் பின்பற்றுகிறது என நம்பினால், நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டியது பிரபஞ்ச இயக்கத்தை விளக்கும் பகுதி சார்ந்த அனைத்துத் தத்துவங்களையும் (Partial Theories) இணைத்து பிரபஞ்ச இயக்கத்தை முழுமையாக விளக்கும் ஒன்றிணைந்த தத்துவம்
(Unified Theory) ஒன்றை உருவாக்குதலாகும். ஆனால் இந்த முழுமையான Unified Theory ஐ உருவாக்குவதற்கு அடிப்படையான முரண்பாடு (Paradox) ஒன்றுள்ளது.

அடுத்த தொடரில் இது பற்றிய விவரங்களைப் பார்ப்போம். மேலும் பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் அடுத்த தொடரில் முடிவடைகின்றது என்பதையும் அறியத் தருகின்றோம்.

நன்றி - தகவலுதவி: 'A Breif History of Time' - Stephen W.Hawking

நீங்கள் நட்சத்திர பயணங்களுக்கு புதியவரா : முதல் பாகத்திலிருந்து வாசிக்க விரும்புகிறீர்களா? : இங்கு அழுத்துங்கள்

 

முன்னைய பதிவுகள் :

நட்சத்திரப் பயணங்கள் 18 (பிரபஞ்சவியல் 1, கரும் சக்தி)

நட்சத்திரப் பயணங்கள் 19 (பிரபஞ்சவியல் 2, கரும் சக்தி 2)

நட்சத்திரப் பயணங்கள் 20 (பிரபஞ்சவியல் 3, கரும் பொருள்)

நட்சத்திரப் பயணங்கள் 21 (பிரபஞ்சவியல் 4, கரும்பொருள் 2)

நட்சத்திரப் பயணங்கள் 22 (பிரபஞ்சவியல் 5, கரும்பொருள் 3)

நட்சத்திரப் பயணங்கள் 23 (பிரபஞ்சவியல் 6, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்)

நட்சத்திரப் பயணங்கள் 24 (பிரபஞ்சவியல் 7, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 2)

நட்சத்திரப் பயணங்கள் 25 (பிரபஞ்சவியல் 8, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 3)

நட்சத்திரப் பயணங்கள் 26 (பிரபஞ்சவியல் 9, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 4)

நட்சத்திரப் பயணங்கள் 27 (பிரபஞ்சவியல் 10, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 5)

நட்சத்திரப் பயணங்கள் 28 (பிரபஞ்சவியல் 11, பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் 6)

 

- 4 தமிழ் மீடியாவுக்காக: நவன்