கட்டுரைகள்

8. தெருவில் நிற்கும் தெய்வங்கள்  " வேலையிருந்தா போட்டுக்கொடுங்கண்ணே? "

என் அறையின் உள்ளே நுழைந்தவனைக் கண்டு சட்டென்று திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். பார்த்துக்கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டேன். அனுமதி பெறாமல், கண்ணாடி கதவை எப்படி திறக்க வேண்டும் என்று கூட தெரியாமல் உடைப்பது போல். உள்ளே வந்து நின்றான். அவனுக்கு வயது அதிகபட்சம் பதினான்கு இருக்கலாம். செம்பட்டை தலையும், அழுக்கான சட்டையில் மேல் பட்டனை ஊக்கு வைத்து இழுத்து நிறுத்தியிருந்தான்.

அப்போது தான் நேரிடையான கணினி வழித் தொடர்புக்கு ஒரே நேரத்தில் வந்த நார்வே, லண்டன் மக்கள் பழி எடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் பையன் உள்ளே வந்து இருந்தான்,. அதிகபட்சம் ஆறாவது படிக்க வேண்டிய வயது. ஆனால் வேலை கேட்டு என் முன்னால் நின்று கொண்டிருந்தான், உள்ளேயிருந்த நபர்களையும் தாண்டி எப்படியோ என்னுடைய அறைக்கு வந்து விட்டான்.

அவனை என் அருகில் அழைத்தேன். வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த மோரைக் கொடுத்து குடிக்கச் சொல்லி உள்ளே ஓரமாய் நிற்கச் சொல்லிவிட்டு, என்னுடைய அவசர வேலையை முடித்த போது முக்கால் மணி நேரமும் அசையாத சிலையாக நின்று கொண்டிருந்தான். எனக்கு வியப்பாக இருந்தது. வறுமையும், வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்ற எண்ணமும் அந்த சிறிய வயதில் அத்தனை வைராக்கியத்தை அவனுக்கு வளர்த்துவிட்டிருந்தது. அரைமணி நேரம் பொறுமையாக அவனைப் பற்றி கேட்டதும், அழத் தொடங்கி விட்டான். “வேலையோட வீட்டுக்கு போகலைன்னா என் அப்பா வீட்டுக்குள்ள விடமாட்டாருண்ணே”. என்ன செய்வது?

திருப்பூருக்குள் நான் உள்ளே நுழைந்த தொடக்க காலத்தில் பணி புரிந்து கொண்டிருந்த நிறுவனத்தில் நண்டும் சிண்டுமாய் உள்ளே ஒரு பெரிய கூட்டமே இருந்தது. இடுப்பு அளவுக்குக்கூட இல்லாதவர்கள் சிங்கமாய் நடு இரவு வரை பணிபுரிந்து விட்டு மறுநாள் அதே காலை எட்டு மணிக்கு மீண்டும் வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் வியந்து போன நாட்களது. இருபது வயது வரைக்கும் வெளியுலகம் பார்த்திராத எனக்கு திருப்பூரில் பார்த்துக் கொண்டுருக்கும் ஒவ்வொன்றும் புதிதாய் இருந்தது. பால் முகம் மாறாதவர்களின் வயதுக்கு மீறிய பேச்சுகள் என்னை பயமுறுத்தியது. இவர்கள் பார்க்கும் வேலையினால் கிடைத்த வாரச்சம்பளத்தின் மொத்த பணத்தையும் அவர்களால் எண்ணிப் பார்க்கத் தெரியுமா? என்று நான் பலமுறை யோசித்ததுண்டு. அந்த பணத்தாள்கள் அவர்களுக்கு எல்லாவிதமான கெட்ட பழக்கத்தையும் கற்றுக் கொள்ள வைத்தது.

குழந்தைத் தொழிலாளர்களை தொடக்கத்தில் ஒரு குடும்பம் போல் தான் அனைவருமே வளர்த்தார்கள். மொத்தத்தில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு செலவு மிச்சம். ஓரு குடும்பம் ஓரே நிறுவனத்தில் பணிபுரிந்தால் வேலைக்கு வந்தவர்களுக்கும், வேலை வாங்குபவர்களுக்கும். ரொம்பவே வசதியாக இருந்தது. ஒழுங்காக தினந்தோறும் வேலை செய்து, ஒழுக்கமாக வாழ்ந்து அவரவர் சொந்த ஊரில் வீடு கட்டி உயர்ந்தவர்கள் வரைக்கும் பல பேரை பார்த்துள்ளேன்.

அதிகபட்சம் ஒரு குடும்பத்தில் ஆறு பேர்கள் என்றால் அத்தனை பேர்களும் உழைக்கத் தயாராக இருந்தால் திருப்பூர் பணம் கொடுக்கும் அமுதசுரபி தான். அதில் சந்தேகமேயில்லை.. ஒவ்வொருவரும் உழைத்தால், உறங்காமல் உழைக்க தயார் என்றால், திருப்பூர் என்பது பணம் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் தான். இங்கு உழைத்து வசதியானவர்களும் உண்டு. வந்த இடத்தில் புதிய பாதையை தேர்ந்தெடுத்து அழிந்து போனவர்களும் உண்டு.

ஒவ்வொருவரும் அவரவர் ஊரில் உள்ள ஜாதி வித்யாசங்களால் உருவாகும் பிரச்சனைகளிலிருந்து தப்பித்து வருவதை விட முக்கால்வாசிப் பேர்கள் தாங்களுடைய கடன் தொல்லைகள் பொறுக்க முடியாமல் தான் திருப்பூருக்கு வருகிறார்கள். உள்ளுரில் வாழ எந்த தொழில் வசதிகளுமில்லை. ஒரு அளவிற்கு மேல் குழந்தைகளை படிக்க வைக்க வாய்ப்பு வசதிகளும் இல்லை. வேறு என்ன செய்ய முடியும். மொத்த குடும்பத்துடன் திருப்பூருக்குள் வந்து விடுகிறார்கள்.

உலகமயமாக்கல் தத்துவத்தில் இறக்குமதியாளரின் சட்டங்கள் ஒவ்வொன்றாய் திருப்பூருக்கு உள்ளே வர நிறுவன முதலாளிகள் தங்களின் வாலைச் சுருட்டிக் கொள்வதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை . நிறுவனங்களின் உள்ளே பணிபுரிபவர்களின் வயது கணக்கெடுக்கப்பட்டது. தொழிலாளிகளின் அடிப்படை வாழ்வாதார வசதிகள் சோதிக்கப்பட்டது. சோதித்த முடிவு சாதகம் என்றால் ஒப்பந்தம். இல்லையென்றால் நிறுவனங்களுக்கு பிரச்சனைகள். நிறுவனத்தின் கழிப்பறை சுத்தம் முதல் பணியாளர் வசதி வரை கண்கொத்தி பாம்பாய் இறக்குமதியாளர்கள் கவனிக்கும் போது முதலாளிகளால் என்ன செய்து விட முடியும்? இன்றைய நவீன வசதியில் நேரடி ஒலி ஒளி காட்சியாய் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு திருப்பூரில் உள்ள நிறுவனத்தின் மொத்த நிர்வாகத்தையும் தனக்குள் வைத்துக்கொள்ளும் இறக்குமதியாளர்களும் உண்டு.

இத்தனை பிரச்சனைகளுக்கிடையே இவனை உள்ளே நுழைத்தால் எனக்கு நானே சொருகிக்கொண்ட ஆப்பாகத் தான் இருக்கும். அவனை வெளியே அழைத்து வந்து பேச வைத்த போது; அவன் குடும்பம் திருப்பூருக்குள் வந்த இரண்டு வருடத்தில் வசதியில் திளைக்க ஒவ்வொருவரும் பாதை மாறிய பறவைகளாய் மாறி விட்டனர். அவன் அம்மாவுக்கு டைலர் தொடர்பு. அக்காவுக்கு சூப்ரவைசர் தொடர்பு. அண்ணாவுக்கு கஞ்சா தொடர்பு. அப்பாவோ தூங்கும் நேரத்தை தவிர அத்தனை நேரமும் டாஸ்மார்க் தொடர்பு. எல்லா தொடர்பும் அப்பாவைத் தான் இறுதியில் தாக்கியது. வேலைக்கும் செல்லாமல் குடும்பத்திலுள்ள எவரிடமும் காசு வாங்க முடியாமலும் இருக்க அவர் எடுத்த கடைசி ஆயுதம் பையன் எனப் புரிந்தது.

பள்ளி சென்றவனை நிறுத்தி வேலை கேட்க சொல்லிவிட்டு நிறுவனத்தின் நுழைவாயிலில் காவல் காத்துக் கொண்டிருந்தவரை காவலாளியிடம் சொல்லி அழைத்து வரச்சொன்னேன். கிறக்கமாய் வந்தவன் என்னைப் பார்த்ததும் உருக்கமாய் பேசினான். அவரிடம் என்ன பேசமுடியும்?

அறிவுரை என்பதே இரண்டு பக்க ஆயுதம் போல் தான். சில சமயம் கொண்டவனையே தாக்கி விடும். அவனை திருத்த வேண்டிய அவசியமும் எனக்கில்லை. திருந்தக்கூடிய “நிலை” யிலும் அவன் இல்லை. சற்று துணிவை வரவழைத்துக்கொண்டு சொன்னேன். "பையனோட மாற்றுச் சான்றிதழ் எடுத்துக்கொண்டு வா. அதில் வயதும் பேரும் சரியாக இருந்தால் நானே வேலை போட்டு கொடுக்கின்றேன் . அவன் கோபமாக பையனை கூட்டிக்கொண்டு சென்ற வேகமே எனக்குப் புரிந்து விட்டது.

இப்போது வேலை தேடி வந்த சிறுவனைப் போலவே நான் சந்தித்த கருணாகரனும் 14 வயதில் திருப்பூருக்கு ஓடி வந்தவன் தான். ஆனால் வாழ்க்கையின் நடைமுறை எதார்த்தங்களை புரிந்து ஓழுக்கத்துடன் வாழ் முடிந்த காரணத்தால் இளம் தொழில் முனைவோராக அவனால் மாற முடிந்தது. திருப்பூரில் உழைத்தால் உயரலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாகும் அவன் வாழ்க்கை.

கருணாவைச் சந்திக்க காத்திருக்க வேண்டும்.....

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

டாலர் நகரம் - 7

அண்ணன் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் என்றால், தம்பி கார்த்தியோ உழவன் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

சியான் விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கிவந்த இந்தப் பிரம்மாண்ட தயாரிப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.