கட்டுரைகள்
Typography

 

9. கருணா என்ற கூலி அதிகாலை வேளையில் என் வீட்டில் வந்து நின்றவனை பார்த்ததும் எனக்கு குழப்பமாய் இருந்தது. அவன் குரல் நினைவில் இருந்தாலும் முகம் மாறியிருந்தது.

"அண்ணே நாந்தான்னே கருணாகரன்" என்று உரிமையாய் என்னுடைய அழைப்பு இல்லாமல் வீட்டுக்குளே நுழைந்தான். எப்படி கண்டு பிடித்து உள்ளே வந்தானோ தெரியவில்லை? பரபரப்பாய் தான் கொண்டு வந்த மஞ்சள் பையில் இருந்து அவனின் திருமணப் பத்திரிக்கையை எடுத்து என்னிடம் நீட்டினான்.

ஏற்கனவே என் பெயரை எழுதி வைத்திருந்தான். நான்கு புறமும் மஞ்சள் தடவி பவ்யமாய் திசை பார்த்து நின்று கொடுத்து என்னை வணங்கி நின்றான். எனக்குத் திகைப்பாய் இருந்தது. அப்போது தான் லேசாக அவனைப் பற்றி யோசிக்க முடிந்தது. பத்து வருடத்திற்குள் முற்றிலும் மாறியிருந்தான். நான் உற்பத்தித் துறையில் உயர் பொறுப்பில் இருந்த போது டவுசர் சட்டையோடு நிறுவனத்தின் வாசலில் வந்து நின்றவன். காவலாளியின் எச்சரிக்கையைம் மீறி திமிறலோடு உள்ளே வர முயற்சித்துக் கொண்டுந்தவனை தூரத்தில் இருந்து பார்த்து உள்ளே அழைத்தேன். பேசிய போது உள்ளே காஜா பட்டன் அடிப்பதற்காக வேலை கேட்டு வந்தவன் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கான பெரிய நிறுவனங்களில் இது போன்ற சிறிய ஒவ்வொரு வேலைகளுக்கும் தனித்தனி நபர்கள் வெளியே இருந்து அழைக்கப்படுவார்கள். மாத, தினசரி சம்பளம் அல்லது ஒவ்வொரு ஆடைகளுக்கும் உண்டான கூலி என்பதாக பேசிக் கொள்வர். இதற்கென்று வருபவர்கள் தங்கள் படை பரிவாரங்களுடன் வந்து காரியத்தை கண்ணும் கருத்துமாய் முடித்துக் கொடுப்பர். சில நிறுவனங்கள் முறைப்படி அந்த வார சனிக்கிழமையில் வேலை முடிந்தவரைக்கும் கூலியை கொடுத்து விடுவர். பல நிறுவனங்கள் இவர்களையும் ஏமாற்றத் தயாராய் இருப்பார்கள்.

ஒவ்வொரு நிறுவனங்களும் முழுமையான ஆடை உருவாக்கத்திற்கு தேவைப்படும் எந்திரங்கள் ஒவ்வொன்றையும் நிறுவனத்தில் உள்ளே வைத்து இருப்பார்கள். சொந்தமாக வைத்துக் கொள்ள முடியாதவர்கள் இதற்காக வெளியே இருப்பவர்களை நாடிச் செல்வர். ஓப்பந்த அடிப்படையில் இது போன்ற வேலைகளுக்கு நிறுவனத்திற்குள் வருபவர்கள் அடுத்தவர் வரமுடியாத அளவிற்கு சாமர்த்தியமாக செயல்படுவார்கள். இது போன்ற பணிகளுக்கு உள்ளே வருபவர்களை கண்கொத்தி பாம்பாக நிறுவனங்கள் கவனித்துக் கொண்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே மிகப் பெரிய பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்த்துவிடும்.

பொதுவான தொழில் வாழ்க்கை என்பது கத்தி போலத்தான். எப்படி எங்கு எவரை கையாள்கிறோம் என்பதை பொறுத்து தான் விளைவுகள் உருவாகும். புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடிக்கு செல்லும் வழியில் முக்கிய சாலையில் இருந்து கீழே பிரிந்து செல்லும் மண்சாலையில் மூச்சு வாங்க நடந்து சென்றால் கருணாவின் கிராமத்துக்கு செல்லமுடியும். படிக்க வேண்டிய பாடத்தில் ஆங்கிலம் என்பதை துரத்தும் பேய் போல் பார்த்து குடும்பத்தினரிடம் சொல்லாமலே குருட்டு நம்பிக்கையில் திருப்பூருக்கு ஓடி வந்தவன்.

வாங்கி வந்த நண்பர்களின் முகவரிக்கு கையில் காசு இல்லாமல் நடந்தே சென்ற, அந்த ஒண்டுக்குடித்தனத்தில் உள்ளே தன்னை அடைத்துக் கொண்டவன். வந்து இறங்கிய நேரத்தில் தொழில் குறித்து எதுவுமே தெரியாது. டவுசர் போட்ட வயதின் காரணமே தையல் கடைக்கு கொண்டு போய் நிறுத்த இரண்டு மாதங்கள் கூட முழுமையாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை. ஆனால் திருப்பூர் பற்றியும், உள்ளே உள்ள நிறுவனங்களின் சூட்சுமத்தை பற்றியும் வந்து போனவர்களுடன் பேசிப் பேசி எப்படியோ ஒரு நிறுவனத்தில் உள்ளே நுழைந்து விட்டான்.

அந்த நிறுவனத்தில் இருந்த உள்நாட்டு தயாரிப்பு எந்திரத்தின் மூலம் தினக்கூலிக்கு காஜா பட்டன் அடித்து கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் போய்ச் சேர ஆறு மாதத்தில் பெற்ற பட்டறிவும் அவமானங்களும் தனியாக வேறொரு நிறுவனத்தை தேட வைத்தது. இரண்டு வருடங்களில் மாறிய நிறுவனங்களும் பெற்ற அனுபவங்களும் தனியாக கையூண்டி கரணம் போட வைக்க, நான் பணியிலிருந்த நிறுவன காவலாளியை தள்ளி விட்டு உள்ளே நுழைய தைரியம் தந்தது.

ஊர் பாசமும் அவனின் முரட்டு சுபாவமும் ஒன்று சேர்த்துப் பார்க்க அவனுக்கு வாய்ப்பு கொடுத்தேன். நான் அவனைப்பற்றி நினைத்தது எதுவும் வீணாகிப் போய்விடவில்லை. காரணம் உழைப்பவர்களிடம் இருக்கும் முன்கோபம் இயல்பான ஒன்று. அவனிடமிருந்த சுய கௌவரம் அளவிற்கு இடைவிடாத உழைப்பும் ஒன்று சேர அவனை விட்டால் ஆளே இல்லை என்கிற அளவிற்கு அவனின் ராஜபாட்டை தொடங்கியது. தொடக்கத்தில் ஒரு பட்டன் காஜா அடிக்க 16 பைசா. ஆனால் பத்து வருட இடைவெளியில் இன்று அதுவே 40 பைசா அளவிற்கு இந்த துறை வளர்ந்துள்ளது. காஜா பட்டன் எந்திரங்கள் வைத்திருக்காத நிறுவனங்கள் அத்தனை பேருமே இது போன்ற தனி நபர்கள் வைத்திருக்கும் இந்த உலகத்தைச் சார்ந்தே இருந்தாக வேண்டிய சூழ்நிலை.

சூட்டிகை என்று சொல்வார்களே அதற்கு மொத்த உதாரணமே இந்த கருணாகரன் தான். நிறுவனத்தில் உள்ளே நடக்கும் வேலைக்கு கூட்டிக் கொண்டு வரும் ஆட்களை வைத்து விட்டு வேலை தொடங்கியதும் அருகில் உள்ள நிறுவனங்களில் நுழைந்து அடுத்த வாய்ப்புகளை தேடத் தொடங்குவான். அவன் கொண்டு வந்த நபர்களால் வேலை எதுவும் தடைபடாத காரணத்தினால் இவனை எவரும் தேடுவதும் இல்லை.

இவ்வாறு தான் தான் தன் வாழ்க்கையைத் தொடங்கினான். இன்றைய சூழ்நிலையில் அவன் வசம் சிறிய பெரிய 60 நிரந்தர நிறுவனங்கள் இருக்கிறது. தன்னிடம் வேலை செய்வதற்காகவே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஊரில் இருந்து அழைத்து வந்த மாமன், மச்சான், சகலை, பங்காளி, மைத்துனர் என்று தொடங்கி விட்ட குறை தொட்ட குறையாக பள்ளிப்பருவத்தில் காதலித்த பெண் வரைக்கும் திருப்பூர் கொண்டு வந்து சேர்த்து விட்டான். ஆனால் இதையெல்லாம் விட மற்றொரு மகத்தான் சாதனை ஒன்று உண்டு.

நவீன காஜாபட்டன் அடிக்கும் BROTHER. JUKI போன்ற எந்திரங்கள் பதினைந்து இன்று அவனிடமுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ளது. தொடக்கத்திலேயே திருப்பூர் வளர்ச்சியை உணர்ந்து நகரின் வெளியே வாங்கிப்போட்ட ஆயிரம் சதுர அடி நிலத்தில் போடப்பட்ட கூரையாக இருந்த கட்டிடம் இன்று மாடிப்பகுதியில் அலுவலகம் போல் செயல்படும் அளவிற்கு வளர்க்க முடிந்துள்ளது. ஒவ்வொன்றையும் அவன் என்னிடம் சொல்லச் சொல்ல வியப்பாய் இருந்தது.

வருடாந்திர வரவு செலவு 10 கோடி என்று முதல் வருடம் கணக்கு காட்டி விட்டு அடுத்த வருடம் போட்ட ஆட்டத்தில் அதோகதியாகப் போன எந்த கேவலமான நடைமுறைகளும் கருணாகரன் வாழ்க்கையில் இல்லை. தனது வாழ்க்கையை கிராமத்து கலாச்சாரமாகவே பார்த்தவன். கருணாவின் வாழ்க்கையில் வெளியுலகம் எப்படி இயங்கிக் கொண்டுருக்கிறது?. யார் ஆள்கிறார்கள்? எவர் என்ன செய்கிறார்கள்? பதவியை வைத்துக் கொண்டு எத்தனை கோடி அடித்தார்கள்? எது குறித்தும் அக்கறையில்லை. தன்னுடைய வாழ்க்கை என்பது தன் கையில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவன். உழைப்பின் மூலம் கிடைத்த ஒவ்வொரு பைசாவையும் கிராமத்தில் முதலீடு செய்து விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கும் அண்ணனுக்கு உதவியாய் ஒரு பக்கம். மற்றொரு பக்கம் மாதச் சீட்டில் கவனம். வைத்து வாழும் வாழ்க்கையை முழுமையாக உள்வாங்கி வாழ்ந்து கொண்டிருப்பவன்.

இந்தியா முழுக்க வாழ்ந்து கொண்டுருக்கும் கருணா போன்ற நபர்களால் தான், பணக்காரர்களால் ஆளப்படும் இந்திய ஏழை ஜனநாயகத்திற்கு இன்றும் உயிர் இருக்கிறது. கருணாகரனின் வாழ்க்கையை நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். பத்திரிக்கை கொடுத்து விட்டு அவன் அப்போதே சென்றவிட்டான். இப்போது ஊரிலிருந்து வந்த என் அம்மா, வீட்டுக்குள் வந்து நுழைந்து கொண்டிருந்தார். அம்மா உள்ளே வந்த நேரம் என் வாழ்க்கையின் மற்றொரு மறுமலர்ச்சி அத்தியாயம் தொடங்கியது.

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

டாலர் நகரம் - 8

 

BLOG COMMENTS POWERED BY DISQUS