கட்டுரைகள்

 

11. நம்பி கை வை மதுரைக்கு தூங்கா நகரம், கோவில் நகரம், என்பது போலவே திருப்பூருக்கும் பல பெயர்கள் உண்டு. நிட் சிட்டி, டாலர் சிட்டி, பின்னாலாடை நகர், பனியன் நகரம் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

ஆயத்த ஆடைகளின் (HOSIERY GARMENTS) உற்பத்தியை நம்பி மட்டுமே இந்த நகர் இயங்கிக்கொண்டுருக்கிறது. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி அல்லது உள்நாட்டுக்கு தேவைப்படும் ஆடைகள் என்று இரண்டு விதங்களில் இங்குள்ளவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உலக நாடுகளில் உன்னத இடத்தை பிடித்து இருக்கும் இந்த திருப்பூர் இன்று வரையிலும் இந்தியாவிற்கு தேவைப்படும் அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் மரியாதையான ஊர். ஆனால் கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு பல்லடம் தாலூகாவில் இருந்த இந்த சிறிய கிராமம் தான் இன்றைய அசுர வளர்ச்சி பெற்றுள்ள ஏற்றுமதி நகரம். இன்றைய சூழ்நிலையில் அதிக பாதிப்பு அடைந்துள்ள இந்த திருப்பூர் இன்றைய சூழ்நிலையில் 11,500 கோடிகளை வெளிநாட்டுக்கும் 6000 கோடிகளை உள்நாட்டு வர்த்தகத்தின் மூலமாகவும் ஈட்டித்தந்து கொண்டிருக்கிறது.

திருப்பூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள அவிநாசியை நீங்கள் தொட்டு விட்டால் தேசிய நெடுஞ்சாலையில் உங்களை இணைத்துக் கொண்டு ஊத்துக்குளி வெண்ணெய் போல் வழுக்கிக் கொண்டு கோயமுத்தூர் வழியாக கேரளாவிற்குள் ஒரு மணி நேரத்திற்குள் நுழைந்து விடலாம். பெரியாரை பார்த்தது இல்லை. அவர் வாழ்ந்த ஈரோட்டுக்குள்ளாவது செல்ல வேண்டும் என்பவர்களுக்கு ஒரு மணி ஒதுக்கி ஒட்டமாக பறந்து விடமுடியும். திருப்பூரை சுற்றிலும் கடல் இல்லாத குறை மட்டும் தான்.

இங்கு உழைத்துக் கொடிருப்பவர்களுக்கு தூக்கமென்பது இரண்டாம்பட்சமே. உழைப்பு..உழைப்பு.. என இருபத்திநான்குமணிநேரமும் உழைத்துக் கொண்டிருப்பவர்கள் தொழிலாளிகள் மட்டுமல்ல, முதலாளிகளும்தான். அனைவரும் தூக்கம் மறந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பணம் சம்பாரிக்க என்பதெல்லாம் மீறி, உழைப்பென்பது ஏறக்குறைய ஒவ்வொரு மனிதர்களுக்கும் போதையாக  உடம்பில் ஒன்றிப் போய்விட்டது. தினந்தோறும் எட்டு மணி நேரம் தான் என்னால் உழைக்க முடியும்? என்பவர்கள் இந்த ஊர்ப்பக்கம் எட்டிப்பார்க்காமல் இருப்பது நல்லது.  தினந்தோறும் 16 மணிநேர உழைப்பு என்பது இங்கு சர்வசாதாரணம். ஆடைகளைச் சார்ந்த ஒவ்வொரு சார்பு தொழில்களை நம்பியே ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேறெந்த எந்த தொழிலுக்கும் வாய்ப்புமில்லை. வளரவுமில்லை.

நூல் என்பது ஆடையாக மாறுவதற்குள் எத்தனை துறைகள்?. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம்.இந்த ஒவ்வொரு துறைகளுக்குள் நூற்றுக்கணக்கான துறைகள். தினந்தோறும் ஆயிரம் ரூபாயை முதலீட்டை வைத்துக் கொண்டு முயற்சிப்பவர்கள் முதல் கோடிகளை வைத்துக் கொண்டு தங்கள் இலட்சியங்களை துரத்தும் நபர்கள் வரைக்கும் இந்த தொழிலில் உண்டு.

நூல் முதலில் துணியாக மாற (KNITTING MECHINES) அறவு எந்திரங்கள் உள்ள பகுதிக்குச் செல்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் உள்ளவர்களின் மார்பு அளவிற்கு ஏற்றபடி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட பல வித உருளைகள் (CYLINDERS) மூலம் துணியாக வெளியே வருகிறது. இதுவொரு தனியுலகம்.

தொடக்கத்தில் நூல் பைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல ஏராளமான மாட்டு வண்டி உலகம் ஒன்று இருந்தது. காலச்சக்கர சுழற்சியில் அத்தனையும் மறைந்து போய் இன்று நவீன நான்கு சக்கரங்கள் தெரு முழுக்க அலைந்து கொண்டிருக்கிறது.

மாடுகளுக்கு உணவாக கொடுக்கக்கூடிய தட்டை என்ற பசுந்தாவரம் என்பது மிகப்பெரிய லாபத் துறையாக எளியவர்களுக்கு இருந்தது. இன்று தட்டையும் இல்லை. தட்டை விளைந்த பூமிகளும் இல்லை.

கோயமுத்தூரில் தயாராகும் உள்நாட்டு அறவு எந்திரத்தின் விலை 50,000 முதல் தொடங்குகிறது. கால வளர்ச்சியில் ஜெர்மனியில் இருந்து வந்து இறங்கிக் கொண்டிருக்கும் அதிகபட்ச நவீனங்களைக் கொண்ட அதே இயந்திரத்தை  இரண்டு கோடி ரூபாய் விலையிக்க  வாங்குமளவிற்கு இந்தத் துறை வளர்ந்துள்ளது. ஒவ்வொரு வகையான துணிக்கும் பல விதமான எந்திரங்கள் உண்டு. நீங்கள் உடுத்தும் ஆடையில் உள்ள காலர் (COLLOR) பகுதிக்கென்று ஒரு எந்திரம். அதுவே கையில் உள்ள சதைப்பற்றை தனியாக காட்டும் அளவிற்கு புடைப்பாக தெரியவேண்டும் என்றால் கஃப் (CUFF) என்ற பகுதிக்குக்கென்று தனியான ஒரு எந்திரம்.

ஒரு ஆடையை முழுமையாக்க பல விதமான அறவு எந்திரங்கள் ஒன்று சேர்ந்து செயல்படுகின்றது. இங்கு பெரும்பாலான துறைகள் 24 மணிநேரமும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. பனியன் அல்லது ஜட்டி என்பதாகவிருந்த தொடக்க கால திருப்பூரில், பெரிய தொகையிலான முதலீடும் எதுவும் தேவை இல்லாமலிருந்தது. ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய முதலீடென்பது உழைப்பு மட்டுமே. ஆனால் இன்று உழைப்பு சிறியதாகவும் முதலீடெனக் கொட்டும் பணத்தின் அளவு மிகப் பெரிய அளவாகவும் மாறியுள்ளது. தொடக்கத்தில் கையால் இயக்கப்பட்டுக் கொண்டிருந்த எந்திரங்கள் மாறி இன்று கணினி கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருக்கிறது.

விதவிதமான பல வண்ண ஆடைகளின் வடிவமைப்பில் துணியாக இறங்கும் நேரம் ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தை காண்பது போலவே இருக்கும். அறவு செய்த துணியை கோராத் துணி ( CORA CLOTH ) என்கிறார்கள். உங்களுக்கு வெள்ளை அல்லது வானவில் நிறம் வேண்டுமென்றால் இந்த துணிகள் செல்லுமிடம் ( BLEACHING & DYEING) சாயப்பட்டறைகள், அன்றாடம் செய்தித்தாளில் நீங்கள் படிக்கும் துணுக்குச் செய்திகளில் வருவது போலவே இன்று வரைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் சாயப்பட்டறைகளின் பிரச்சனைகள் குறித்து பின் தனியாக பார்க்கலாம்.

“ இவர்கள் எங்கள் மண்வளத்தை பாழக்கி விட்டார்கள் ” என்று விவசாயிகளும், “அரசாங்கம் எங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை ” என்று சாயப்பட்டறை முதலாளிகளும் இன்று வரையிலும் இருவேறு பக்கங்களில்  மஞ்சுவிரட்டு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த பிரச்சனையில் இன்று வரையிலும் முடிவேதும் காணாமல் பல்லாயிரக்கணக்கான விவசாய பூமிகள் பாழானது தான் மிச்சம்.

சாயப்பட்டறைகளில் இருந்து வரும் இந்த ஆடைகளையும் இஸ்திரி செய்து விருப்பமான அளவிலும் தருகிறார்கள். அந்த துறைக்கு காம்பேக்ட்டிங் COMBACTING என்கிறார்கள்,. இதன் பிறகு வரும் துணியானது அளவு பார்த்து வெட்டித் தைக்க தொழிற் கூடங்களுக்கு வருகின்றது. துணிகளிலிருந்து இறுதியாக ஆடைகளாக மாறும் வரைக்கும் தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று இறுதியாக மனதை கவரும் ஆடைகளாக மாறுகிறது.

இப்போது இந்த டாலர் சிட்டிக்கு பெருநகரகங்களைப் போலவே தனி மாவட்டம் என்பதுடன் மாநகராட்சி என்ற தனி அந்தஸ்த்துக்கும் வந்துள்ளது. 6 நகராட்சி, 17 பேரூராட்சி, 73 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய இந்த உழைப்பாளர் மாவட்டத்தில் ஏறக்குறைய 19 லட்சத்து 33 ஆயிரம் மக்கள் (முந்தைய கணக்கின்படி) வாழ்கிறார்கள். கொங்கு மக்களை விட வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தான மிக அதிகமாக இருக்கிறார்கள். டெல்லி முதல் கன்யாகுமரி வரைக்கும் உள்ளே அத்தனை இந்தியர்களையும் உள்ளே வைத்திருப்பது இந்த ஊரின் மற்றொரு சிறப்பு.

தொழில் நகரத்திற்கென்றே உண்டான ஏராளமான பிரச்சனைகளும் இங்குண்டு. தினந்தோறும் பிழைப்புத் தேடி உள்ளே வந்து கொண்டிருப்பவர்களுடன், எப்போதும் வந்து போய்க்கொண்டிருக்கும் மக்களால் (FLOATING POPULATION) இந்த நகரின் ஜனத்தொகை எகிறிக் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு வார சனிக்கிழமையிலும்  காலை முதல் நடு இரவு வரைக்கும் நசுங்கிக் கொண்டு தான் சாலையில் நகர முடியும். அன்றுதான் தொழிலாளர்களுக்கு வாரச் சம்பள நாள்.  இத்தனை சிறப்புக்களைப் பெற்ற இந்த தொழில் நகரில் நாளுக்கு நாள் குற்றத்தின் குறியீடுகளும் ஒருபுறத்தில் ஏறிக்கொண்டேளயிருக்கிறது.

இங்கு காலை முதல் மாலை வரை எங்கு பார்த்தாலும் உழைப்பாளர்களின் தலைகளையும், களைத்தவர்கள் கூடும் டாஸ்மார்க் கூட்டத்தையும், ஆசை தீர பார்த்துக்கொண்டு உபி வாலா தரும் சமோசாவை உண்டு மகிழலாம்.

தனி மனிதனுக்கு வாழ்க்கையில் இலக்கு மிகவும் முக்கியம் என்பது போல இந்த நகரத்திற்கும் மேதைகள் ஒரு இலக்கை தீர்மானித்து இருந்தார்கள். 2010 ஆம் ஆண்டு திருப்பூர் ஏற்றுமதியின் இலக்கு 20 ஆயிரம் கோடியை தாண்ட வேண்டும் என்றார்கள். ஆனால் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாமல் இன்று மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகும் ஒரு இலக்கு உண்டு.

2015 ல் 40 ஆயிரம் கோடியை தொட வேண்டும் என்ற ஆசை நிராசையாக போகாதிருக்க அண்ணமார் சாமிக்கு படையல் வைத்துப் பிரார்த்தனை செய்து உழைத்துப் பார்க்கலாம் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள் திருப்பூருக்குள் இருக்கும் சிறிதும் பெரிதுமான 2500 ஏற்றுமதி நிறுவனங்களின் முதலாளிகளும், உழைப்பாளர்களும்.

15 ஆண்டுகளுக்கு முன்பு என்னைத்தேடி உறவினர்கள் உள்ளே வரும் போது ஒவ்வொரு முறையும் " இன்னொரு முறையும் இங்கு வரவேண்டும் போல் உள்ளது " என்பார்கள். காரணம் அவர்கள் வந்து இறங்கும் அந்த அதிகாலை வேலையில் குளிராக இருக்கும். பல மாதங்கள் இதே இந்த தட்பவெப்ப நிலை மதியம் வரைக்கும் இருக்கும்.

ஆனால் வளர்ந்த மக்கள் தொகையில் இப்போது சூடு வாட்டி வதக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. பத்து கிலோ மீட்டர் சாலையில் கடந்து செல்வதற்குள் ஊரில் உள்ள அத்தனை தெய்வங்களையும் வேண்டிக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. புகையே வாழ்க்கையாய், புழுதியே சுவாசமாய் மாறி பல வருடங்கள் ஆகி விட்டது.

மூடாத சாக்கடைக்குழிகளும், முடிவே தெரியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் சாலை மராமத்து பணிகள் என்று அத்தனையும் தாண்டி ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள வாகனங்களில் பறந்து கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு வகையில் இது வினோத கலவையான நகரம். கோயம்புத்தூர் என்றால் கல்விக்கு உள்ள முக்கியத்துவம் போல் திருப்பூர் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் பெற்ற ஊராக இருக்கிறது. இங்கு அடித்தட்டு மக்கள் முதல் அன்றாடங்காய்ச்சி வரைக்கும் கையில் உள்ள காசுக்கு ஏற்றபடி வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும் இங்கு பொழுது போக்கு சமாச்சாரம் குறைவு. நடுசாமம் வரைக்கும் உழைக்க மட்டும் தான் முடியும். வேறு எந்த வசதிகளோ, வாய்ப்புகளோ இல்லை.

உழைப்பவர்களின் அன்றாட தேவைகளுக்கான  தள்ளுவண்டி கலாச்சரம் எல்லா துறைகளிலும் உள்ளது. சட்டி முட்டி பாத்திரம் விற்பனை முதல் சமோசா வரைக்கும் அத்தனையும் இங்கு உண்டு. அத்தனையும் தொழிலாளர்களை குறிவைத்து இயக்கும் அடித்தட்டு விற்பனை. ஆனால் இதற்கெல்லாம் மேலாக திருவாளர் நடுத்தர வர்க்கத்திற்கு இப்போது வயிற்றில் உள்ள அதிக சதையை உறிஞ்சி,  உங்களை அடுத்த உலக அழிகியாக/அழகனாக மாற்ற உதவும் கருவிகள் உள்ள கடை வரைக்கும் வந்து விட்டது.

திருவாளர் நடுத்தர வர்க்கத்திற்காகவும் பல துறைகள் தினந்தோறும் புதிதாக உருவாகிக் கொண்டேயிருக்கிறது. ஆனால் முதலாளிமார்கள் மட்டும் கோயம்புத்தூரை தேடிச்சென்று கொண்டிருக்கிறார்கள். 20 வருடமாக தினந்தோறும் 12 மணி நேரம் கால்கடுக்க நின்று உழைத்து மாதம் 6000 வாங்கும் உழைப்பாளர்கள் முதல் அதே ஒரு மாதம் 2,50,000 வரை வாங்கும் அலுவலகப் பணியாளர்கள் வரைக்கும் உள்ள கலவையான ஊர் இது. இருவரின் உழைப்பும், பொறுப்பும் வெவ்வேறாக இருக்கிறது.

வெளிநாட்டுக்கு வேலை தேடி சென்றவர்கள் கூட வாங்க முடியாத சம்பளம் இங்கு வெளியே தெரியாமல் வாங்கிக் கொண்டிருப்பவர்கள் அதிகம். தொழிலாளர் முதல் பணியாளர் வரைக்கும் ஒவ்வொருவரும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் வளர்ச்சி செங்குத்தாக ஏறிக்கொண்டிருக்க உதவும் வரைக்கும் மட்டும் தான் இங்கு எல்லாமே நிரந்தரம்.

நம்பிக்கையுடன் முதலிட்டுழைத்த முதலாளிகளைப் போலவே, நம்பி இந்த தொழில் மேல் கை வைத்த எவரும் வீழ்ந்து போனதாக தெரியவில்லை. அப்படியே தொழில்ரீதியாக கீழே விழுந்து இருந்தாலும் காரணம் வேறாக இருக்கும். சர்வதேச சந்தைகளின் குறீயிடு இறங்கும் போது தான் இந்த உள்ளாடை உலகம் நாறத் தொடங்கி விடுகின்றது.

நாறும் பகுதிக்கு அடுத்த வாரம் செல்லலாம்...

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

டாலர் நகரம் - 10

சென்னையில் கொரோனா உச்சம் தொட்டிருக்கும் நேரம். இந்த வேளையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் செய்திருக்கும் காரியம் அவரை நோக்கிக் கவனம் திரும்பச் செய்திருக்கிறது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.