கட்டுரைகள்

12. நாறும் உள்ளாடைகள்  "எனக்கும் படிக்கனுன்னு தான் ஆசை. பனிரெண்டாம் வகுப்பில் நான் எடுத்த மதிப்பெண்கள் 980. எங்க கிராமத்து பள்ளிக்கூடத்துல எல்லோருமே பாராட்டுனாங்க. என்ன பிரயோஜனம். எங்க ஊர்லயிருந்து திருவண்ணாமலை போய் கல்லூரியில் சேர்றதுக்கு வழியுமில்லை. அப்பா கையில காசுமில்லை. அண்ணன் கல்யாணம் முடிஞ்ச ஒரு வாரத்துல தனியே போயுடுச்சு. தம்பியாவது படிக்கட்டும்ன்னு திருப்பூர் வந்துட்டேன்"

அந்த பெண்ணிடம் பதினெட்டு வயசுக்கான எந்த செழிப்பும் உடம்பில் இல்லை. கண்கள் குழி விழுந்து கருவிழிகளில் மையிடாத கோடுகளாய், கதுப்புகள் ஓட்டிப்போய், வாலிப இயல்பான குணங்கள் மாறிப் போயிருந்தது. தினந்தோறும் 12 மணிநேரம் நின்று கொண்டே பார்க்க வேண்டிய வேலையில் இருக்கிறார். தைத்து வரும் ஆடைகளில் நீட்டிக்கொண்டிருக்கும் பிசிர்களை வெட்டி, தரம் பிரித்து சோதித்து மற்றொருவரிடம் கொடுக்க வேண்டும். இங்கு எந்த முன் அனுபவமும் இல்லாமல் வருபவர்களுக்கென்று முதலில் ஒதுக்கப்படும் வேலையிது.. ஆடைகளை நிறம் அளவு பார்த்து கட்டிய கட்டில் தனிப்பட்ட எண் அடையாளமாக போடப்பட்டுருக்கும். பெட்டியில் ஏறுவது வரைக்கும் ஒவ்வொரு ஆடைகளையையும் மிகக் கவனமாக பார்க்கவேண்டும்.

தரத்தினை சோதிப்பவர்களின் கையில் ஒரு ஆடை கிடைத்தாலும் மொத்த நிகழ்ச்சியும் மாறிப் போய்விடும். மொத்தமாக உள்ளே பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு தவறு செய்தவர்கள் வேடிக்கைப் பொருளாக மாறிவிடுவார்கள். தயவு தாட்சண்யம் இல்லாமல் கேவலமாய் திட்டிவிடுவார்கள். வந்து விழும் வார்த்தைகள்.கேட்பவர்களை கூச வைத்துவிடும்.

காலை எட்டரை மணிக்கு உள்ளே நுழைய வேண்டும். வேலை இருந்தால் இரவு 9 மணிக்கு வெளியே வர முடியும். வேலை அதிகமென்றால் பின்னிரவு 1 மணி வரைக்கும் தொடரும். இன்னும் நெருக்கடி அதிகமாகும் போது அதிகாலை வரைக்கும் தொடரும்.

என்ன கிழமை? இப்போது என்ன நேரம்? எவருக்குத் தெரியும்?

பள்ளிக்கல்வியும் குறுகிய கிராம சிந்தனைகளையும் உடைய ஒவ்வொரு இளைஞர் யுவதிகள் தொடங்கி, வாழ்க்கையில் இனி எப்படி மீதி காலத்தை வாழப் போகிறோம் என்று இறுதியில் இருப்பவர்கள் வரைக்கும் தினந்தோறும் திருப்பூருக்குள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தங்களின் விளையாத நிலத்துடன் போராட முடியாமல், வீட்டு மனைக்காக விற்றுவிட்டு இங்கே வந்து விடுகிறார்கள். இந்த அவஸ்த்தை வாழ்க்கையை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு தங்களையும் மாற்றிக் கொண்டு வாழ்த் தொடங்குகிறார்கள்.

ஏற்றுமதிக்கான வேலையென்பதும், தொழில் நகர சமூகமென்பதும் எப்படி இருக்கும் என்பது தெரியாமலேயே ஆண்களும் பெண்களும் போராடிக் கொண்டுருக்கிறார்கள். . பள்ளிக்குச் செல்லாமல் டிமிக்கி கொடுத்து சம்பாரிக்கப்போறேன் என்று ஓடி வந்தவர்களும், படிப்பை தொடர முடியாதவர்களும் தினந்தோறும் வந்து கொண்டேயிருக்கிறார்கள். தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் முடித்து விட்டு குடும்பத்தினரின் திட்டுகளை மிச்சப்பபடுத்த உள்ளே வந்தவர்கள் படும்பாடுகள் தான் ரொம்ப அவஸ்த்தையானது. இரத்தம் உறியும் அட்டைப்பூச்சி போல் முறையற்ற நிர்வாகத்தில் நடக்கும் அநியாயங்களை தாண்டி ஒவ்வொருவரும் மேலேறி வரவேண்டும்.

ஒவ்வொரு தொழில் நகரத்திற்கும் வெவ்வேறு முகமுண்டு. பணம் அதிகமாக புழங்கும் இந்த திருப்பூரில் மனித மனத்தை தேடுவது முட்டாள்தனம். தொழிலாளர்களுக்கு கல்வித் தகுதி ஒரு பெரிய விசயமில்லை. உழைக்க வலு வேண்டும். அதையும் உண்மையாக தொடர்ச்சியாக காட்டவேண்டும். ஆனால் பட்டதாரிகள் தேடும் வாழ்க்கை தான் இங்கு பரிதாபத்தில் முடிகின்றது. குறிப்பாக தொழில் நுட்ப கல்லூரி பட்டதாரிகள், உயர் கல்வி கற்றவர்களின் மொத்த தகுதிகளும் இது போன்ற தொழில் நகரத்தில் தங்களின் வாழ்க்கையைத் தொடங்கும் போது தான் முழுமையாக புரிந்து கொள்கின்றார்கள்.

வந்து இறங்கும் பட்டதாரி மாணவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாமல் ஏற்றுமதி நிறுவன வேலையும் புரியாமல் கடனே என்று வாழ்க்கையாக வாழத் தொடங்குகிறார்கள். பல சமயம் ஆளை விட்டால் போதுமென்று தினந்தோறும் பதினெட்டு மணி நேர வேலைக்குப் பயந்து ஓடி விடுகிறார்கள்.

தென் மாவட்டத்தில் தொடங்கி தர்மபுரி சுற்றியுள்ள வறண்ட பிரதேசங்கள், தஞ்சாவூர் கிராமங்கள் முதல் இராமநாதபுரம் வரைக்கும் வாழும் மக்களுக்கு இந்த ஆடைகள் உலகம் என்பது அற்புதமான வாழ்க்கை தரும் உலகமாக இருக்கிறது. உழைக்க உழைக்க உயர முடிகிறதோ இல்லையோ உண்ண உறங்க உடுக்க பிரச்சனைகள் குறைகிறது.

பங்களாதேஷ், வியட்நாம், போன்ற நாடுகள் திருப்பூருக்கு சவாலாக மாறத் தொடங்கிய போதே இந்த உள்ளாடை உலகமும் சரியத் தொடங்கியது. இறக்குமதியாளர்களைப் பொறுத்தவரையிலும் குறைவான விலை. சமரசமில்லாத தரம். அவர்கள் எதிர்பார்க்கும் லாபத்தில் எந்த குறைவும் இருக்காது. ஆனால் உற்பத்தியாளர்களின் வாழ்க்கை தான் பாதிப்படைந்து விடுகின்றது. லாபத்தில் லாபம் என்பது மாறி இன்றைய சூழ்நிலையில் நட்டத்தில் நட்டம் என்பதாக ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களும் வங்கிகளுக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நிறுவனங்களும் துணை நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கித் தொகையை கொடுத்து முடிந்தால் முதலாளிகளின் மேலாடைகள் காணாமல் போய் விடும். இதற்கு மேலும் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை கட்டிமுடித்தால் அவரவர் அணிந்திருக்கும் உள்ளாடைகளும் காணாமல் போய்விடும்.

ஒரு நிறுவனத்தில் வேலையில்லை என்றாலோ, குறைவான பணியோ, என்றவுடன் தொழிலாளர்கள் மற்றொரு நிறுவனத்தில் சேர்ந்து விட முடியாது. வாரச் சம்பளத்தை வாங்கும் வரைக்கும் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். வார இறுதிக்குள் வாங்காவிட்டால் அதுவும் காந்தி கணக்கில் போய் சேர்ந்து விடும். ஒவ்வொன்றையையும் சகித்துக்கொண்டு போராடத் தான் வேண்டும். “இன்று வேலையில்லை. நாளை வந்து விடு?” என்றால் எதிர் பேச்சு பேசாமல் வீட்டுக்குள் வந்து முடங்கியிருக்க வேண்டும். தொழிலாளிகள் தங்கியிருக்கும் வீடென்பது ஓடுகள் வேயப்பட்ட வரிசை வீடுகளாக இருக்கும். இரண்டு வீட்டின் அளவு ஆறு வீடாக மாறியிருக்கும். வசதி என்பது மறந்து இரவில் ஒரு படுக்க இடம். அவ்வளவு தான்.

தொழிலாளர்களை ஒவ்வொரு கிராமங்களும் தொழில் நகரங்களுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் சிறு நகரங்களில் இருந்து பட்டதாரிகளை பணியாளர்களாக இந்த உள்ளாடை உலகம் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. நம்பி வரும் எவரையும் திருப்பி அனுப்பாத ஊர் என்பது இன்று வரைக்கும் உண்மையாகத்தான் இருக்கிறது. திருப்பூருக்குள் வந்து இறங்குபவர்கள் ஏற்றுமதி தொழிலுக்குத் தேவைப்படும் தந்திரங்களைக் கற்றுக் கொண்டு தங்களை மாற்றிக் கொண்டால், நிறுவனங்களுக்கு கற்றுக் கொடுப்பவர்களாகவும் மாறி விடுகிறார்கள்.

ஏற்கனவே உள்ளே வந்தவர்களின் தூரத்துச் சொந்தம், நண்பர்கள், தெரிந்தவர்கள் முகவரி வாங்கி வந்து முண்டியடித்துக் கண்டுபிடித்து உள்ளே வந்து தனக்கான இடத்தை கண்டு பிடித்தாக வேண்டும். படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று எந்த பாரபட்சமும் நிறுவனங்களில் பார்க்கப்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் பேரூந்து, ரயில் நிலையத்தில் தனியாக கும்பலாக, வந்து இறங்கிக் கொண்டிருக்கும் இவர்கள் நோக்கங்கள் ஒன்று மட்டுமே. பணக்காரன் ஆக வேண்டும், தொழில் அதிபர் ஆக வேண்டும் என்பதல்ல. வாழ்க்கை வாழ்வதற்கு தேவைப்படும் இந்த உயிர் உடம்பில் இருக்க உழைத்துதான் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஒன்று மட்டுமே. இந்த நோக்கத்திலேயே திருப்பூருக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையைத் தேடி வந்தவர்களை, வாழவைத்துப் பார்த்த இந்த ஆடைகள் உலகம் இப்போது நாறிக்கொண்டிருக்கிறது.

திருவாளர் ப.சிதம்பரம் நிதியமைச்சராக பொறுப்பேற்று, அவரின் பார்வை திருப்பூரில் பட்ட போது திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் வாழ்க்கை பட்ட மரமாக மாறத் தொடங்கியது. ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் கொடுத்துக்கொண்டிருந்த ஊக்கத்தொகையில் கைவைத்து அதை நிறுத்தி "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று வேறு பதவிக்குச் சென்று விட்டார். இப்போது ஜார்கண்ட் பிரச்சனையில் தவித்துக் கொண்டிருக்கிறார்.

தயாநிதி மாறன் ஜவுளித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது, "அரசாங்கத்தின் கொள்கைகள் தெளிவற்றதாக இருந்தால் ஒவ்வொரு நிறுவனமும் மூடு விழாவை நோக்கி நகரத் தொடங்கும்" என்று என் நண்பர் சாமிநாதன் சொன்ன வார்த்தைகள் இன்று உண்மையாகவே மாறிவிட்டது. காரணம் பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியினால் ஒவ்வொரு நிறுவனங்களும் முழி பிதுங்கிப் போய் நிற்கிறது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் பெரிய நிறுவன முதலாளிகள் இப்போது முழு நேர ஆன்மீகவாதியாக மாறிக்கொண்டுருக்கிறார்கள். ஆட்சியாளர்களை நம்புவதை விட அவதார உருவங்களாவது தங்கள் வாழ்க்கையை காப்பாற்றிவிடாதா என்ற ஏக்கத்தில் தினந்தோறும் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள்.மானத்தோடு வாழ வேண்டும் என்று ஆடை உலகத்தை நம்பி வந்தவர்களுக்கு மானத்தோடு மரியாதையான வாழ்க்கையையும் இந்த ஆடைகள் உலகம் தந்தது. ஆனால் வாழ வைத்துப் பார்த்தவர்களின் வாழ்க்கை இப்போது நாறத் தொடங்கி பல மாதங்கள் ஆகி விட்டது. கோடிகளில் புரண்டவர்களின் "தரமான" வாழ்க்கை இன்று தெருக் கோடிக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது?

ஏன்?

ஈழ விவகாரத்தில் அக்கறை செலுத்தியவர்கள், மாவேயிஸ்ட்களை அடக்குவதில் அதிக பிடிவாதம் காட்டுபவர்கள், இந்த நிமிடம் வரைக்கும் தொழில் நகர வளர்ச்சிகள் குறித்து அக்கறையின்றி இருப்பதன் காரணம் என்ன? என்னைப் போலவே இன்று வரைக்கும் திருப்பூருக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருப்பூருக்குள் தினமும் வந்து இறங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எந்த பாரபட்சமும் பார்க்காமல் ஒவ்வொருவரையும் இந்த திருப்பூர் வரவேற்றுக் கொண்டே தான் இருக்கிறது. ஆனால் நானும் ஜெயித்ததுக் காட்டுகின்றேன் என்று வந்து இறங்குபவர்கள், இங்கு எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? அவர்களின் வெற்றிக்கான நம்பிக்கைதான் என்ன..?

நம்பிக்கைகள் தொடரும்....

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

டாலர் நகரம் - 11

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பேச்சிலர்’படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இதே படக்குழு, பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ள ‘போதையில் தள்ளாதே’ ரொமான்டிக் சிங்கிள் தனியிசைப் பாடலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.