கட்டுரைகள்

13.  ஜெயித்துக் காட்டுகின்றேன். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது "இந்தியா டுடே" வில் ஒரு சிறப்புக் கட்டுரை வந்தது. திருப்பூர் ஏற்றுமதி நிறுவன அதிபர்கள் தாங்கள் ஜெயித்து வந்த கதைகளை, மிக ஆடம்பரமாக கட்டியுள்ள வீட்டின் மேலே நின்று கொண்டு, உள்ளே உருவாக்கி வைத்திருந்த புல்தரையில் படுத்தபடி, கட்டியுள்ள நீச்சல் குளத்தில் நின்று கொண்டு போஸ் கொடுத்து பேட்டி கொடுத்திருந்தார்கள். தங்கள் "ஆளுமைத்திறமை" யை சுதந்திரப் போராட்டத் தியாகிகள் போல் சொல்லியிருந்தார்கள்.

அப்போது கூட நான் அதை வெறும் செய்திகளாகத் தான் படித்து விட்டு நகர முடிந்ததே தவிர, எதிர்காலம் குறித்து எந்த நோக்கமும் என் மனதில் எழவில்லை. திருப்பூர் குறித்து எந்த மயக்கமும் உருவாகவில்லை. மேற்கொண்டு படிக்கவேண்டும் என்ற முக்கிய எண்ணமே காரணமாகயிருந்து. சந்தர்ப்பவசத்தால் ஏற்றுமதி நிறுவனத்தில் கால் வைத்த போது ஒவ்வொன்றாகப் புரியத் தொடங்கியது.

இந்த கொங்கு மண்ணில் தொடக்கத்திலிருந்தே உள்ளே வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு, மண்ணின் மைந்தர்கள் என்ற தகுதியைத் தவிர வேறொன்றும் இல்லை. வறப்பட்டிக்காடு என்று சொல்வோமே? அப்படித்தான் இருந்தது. அப்போது வளர்ந்து கொண்டிருந்த நகரம் கோயமுத்தூர். இங்கு நூற்பாலைகளே பிரதானமாக இருந்தது. நூற்பாலையின் பரிணாம வளர்ச்சி 1888 முதல் தொடங்குகிறது. கொங்கு மண்ணில் வாழ்ந்தவர்கள் விரும்புவதும், வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்வதும் இந்த நூற்பாலை சார்ந்த பணிகளே. விட்டகுறை தொட்டகுறையாக வளர்ந்த மற்ற தொழில்களும் இருந்தன.

தொடக்கத்தில் திருப்பூரில் படித்தவர்கள் மிகக்குறைவு. ஒவ்வொருவருக்கும் சொந்தமாக நிலங்கள் இருந்தது. கூடவே ஒவ்வொருவரின் மனதிலும் ஏராளமான ஆசைகளும் இருந்தது. தொடக்கத்தில் ஆடை ஏற்றுமதியைப் பற்றி தெரியாதவர்களின் வாழ்க்கை, பின்னாளில் இறக்குமதியாகும் கார்களில் தங்கள் பயணம் அமையப் போகின்றது என்பதை எவராவது உணர்ந்து இருப்பார்களா?

திருப்பூரின் புராண கதைகளை நாம் பார்த்தால் பனியன் ஜட்டி வியாபாரத்தையும், அதை தலையில் சுமந்து அலைந்து திரிந்தவர்களின் அலைச்சலையும் விரிவாக விவரிக்க வேண்டும். இப்போது அந்த தல வரலாறு அத்தனை முக்கிமில்லை. ஒவ்வொரு முதலாளிகளுக்கும் தாங்கள் கட்டியிருக்கும் கோவணமே அவிழ்ந்து கொண்டிருக்கும் இப்போதைய சூழ்நிலையில் அந்த உழைப்பை நினைத்து ஒரு பிரயோஜனமும் இல்லை. காலப்போக்கில் ஒவ்வொருவரும் தட்டுத்தடுமாறி ஏற்றுமதி பக்கம் காலை வைத்தார்கள். காரணம் வெளி மாநிலங்களில் இருந்து உள்ளே வந்தவர்கள் தான் இந்த ஏற்றுமதி துறையை இங்கே அறிமுகப்படுத்தினார்கள்.

உழைப்பை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டடிருந்த திருப்பூர் மக்களை பம்பாயிலிருந்து வந்தவர்கள் ஸ்ட்ரா இல்லாமல் உறிஞ்சிக் கொழுத்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் மூலமாக கிடைத்த ஓப்பந்தங்கள். அதிக லாபத்துடன் இருந்தது. இங்கிருப்பவர்கள் அவர்களுக்காக உழைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மூலம் வருகின்ற ஒப்பந்தங்களை தயார் செய்து கொடுத்து விட வேண்டும். வந்தவர்கள் அவர்கள் பெயரில் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார்கள். ஏற்றுமதி துறையில் கிடைத்த லாபம் இவர்களுக்கு மயக்கத்தை தந்தது. அதுவே இங்கிருப்பவர்களை மாற்று வழியை யோசிக்க வைத்தது. ஒவ்வொருவரின் தேடல்களும் நல்ல சூழ்நிலைகளை உருவாக்க காரணமாக இருந்தது. திருப்பூரில் இருந்தவர்களுக்கு ஆங்கில அறிவு இல்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் தெரிந்த பட்லர் இங்கிலீஸ் பயம் தந்தாலும் மனதிற்குள் இருந்த ஆசைகள் ஒவ்வொருவரையும் ஏற்றுமதி வாய்ப்புக்களைத் தேடி கடல் தாண்ட வைத்தது.

ஆடைகளின் தரம் குறித்தோ, அதற்கு தேவைப்படும் நவீன உபகரணங்கள் ஏதுமின்றி முழுக்க முழுக்க தங்களின் உடல் உழைப்பை வைத்துக் கொண்டு உழைக்கத் தொடங்கினார்கள். அந்த உழைப்பு இன்று ஒவ்வொருவரையையும் கோடீஸ்வரர்களாக மாற்றியிருக்கிறது.

மற்ற மாவட்டங்களில் உள்ள மனிதர்களும், அரசாங்க அதிகாரிகளும் திருப்பூர் என்றாலே உள்ளே பணம் காய்த்து தொங்கும் மரங்கள் இருப்பதாகத் தான் நினைக்கிறார்கள். ஆனால் தொடக்க கால திருப்பூருக்குள் வருபவர்கள் எவரும் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக தங்க மாட்டார்கள். திருப்பூருக்கு வட நாட்டில் இருந்து வருபவர்கள் வந்த வேலை முடிந்தவுடன் திரும்பி சென்று விடுவார்கள். காரணம் இங்கிருந்த தண்ணீர் பஞ்சம்.

15 ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்குள் போர்வெல் வசதி வாய்ப்பு இருந்தவர்கள் தண்ணீரை விற்று சம்பாரித்தே லட்சங்களை சர்வ சாதரணமாக பார்த்தார்கள். ஒவ்வொரு நிறுவனத்திற்கு தேவைப்படும் தண்ணீருக்கென்று டேங்கர் லாரிகள் ஓடிக் கொண்டிருந்தது. ஓடிய வாகனங்கள் உருவாக்கிய பள்ள மேடுகள் இப்போது தான் மெதுவாக மறையத்தொடங்கியுள்ளது. இதற்கு மேலாக வெளிநாட்டில் இருந்து வரும் இறக்குமதியாளர்கள் பம்பாய் டில்லியில் தான் வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை வரவழைக்கும் வடநாட்டு மக்கள் அங்கேயே பேசி முடித்து திரும்பி அனுப்பி விடுவார்கள். எந்த சூழ்நிலையிலும் திருப்பூருக்குள் அழைத்து வராமலேயே ஒவ்வொரு இறக்குமதியாளர்களையையும் தங்கள் பாதுகாப்பில் வட இந்திய மக்கள் வைத்திருந்தார்கள்.

வட இந்திய மக்களின் ராஜபோக வாழ்க்கையை இங்கிருந்தவர்கள் உடைப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.. வட நாட்டு மக்கள் உருவாக்கி வைத்திருந்த மாயவலையை தங்களின் தொழில் திறமையால் இங்கிருப்பவர்கள் ஒவ்வொன்றாக புரிந்து கொண்டு அறுத்து எறிய ஆரம்பித்தனர்.

இரண்டு நாடுகளுக்குள் நடக்கும் போர் என்பதில் மனிதாபிமானம் என்பது தேடிப்பார்த்தாலும் கிடைக்காது என்பது போல, தொழிலில் கூட அதுவே உண்மையாக இருக்கிறது. ஒருவர் வசதியாக வளர்ந்த பிறகு எத்தனை கதைகள் கட்டுரைகள் வேண்டுமானாலும் சொல்லலாம் எழுதலாம். ஒவ்வொருவரும் வந்த பாதையைப் பார்த்தால் மொத்தமும் அதுதான் ராஜதந்திரம் என்பதற்குள் முடிந்து விடும். வெற்றி பெற்றவர்களிடம் நீங்கள் எடுத்து வைக்கும் எந்த வெட்டிப் பேச்சும், விதாண்டாவாதமும் எடுபடாது. பணம் என்பது விரும்புவர்களை விட வெறியாக இருப்பவர்களிடம் தான் வந்து சேரும்.

அந்த வெறியுடன் உழைத்தவர்கள் இன்றைய நூறு கோடிகளுக்கு மேல் இருக்கும் பிரபல நிறுவனங்களாகும். இதைப் போல நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இங்கு உண்டு. இன்றைய திருப்பூர் ஏற்றுமதியில் முதன்மை இடத்தில் இருக்கும் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 700 முதல் 800 கோடிக்குள் உங்களுக்கு பிடித்த எண்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வருத்தப்படமாட்டார்கள்.

அப்படி என்றால் மொத்த திருப்பூர் ஏற்றுமதியின் அளவு?. அதை தனியாக பார்த்துக் கொள்வோம். இப்போதைய சூழ்நிலையில் இங்கு உழைப்பவர்களின் வயிறு எரிந்து கொண்டிருப்பதைப் போல உங்கள் வயித்தெரிச்சல் அடங்க சற்று அவசகாசம் எடுத்துக் கொள்ளுங்களேன்.

இன்றைய திருப்பூர் உத்தேசமாக ஐம்பது கிலோ மீட்டர் சுற்றளவு என்று எடுத்துக்கொண்டாலும் தொடக்கத்தில் இருந்த சாலை வசதிகளுக்கும் இன்றைக்கும் உள்ள நிலைமைக்கும் ஒரே ஒரு வித்யாசம் தான் இருக்கின்றது. மேல் பூச்சு பூசப்பட்ட தார் சாலைகள். அதுவும் மழை வந்தால் மேடும் பள்ளமுமாய் மாறி விடுகின்றது. அன்றைக்கு சாலை போடும் குத்தகைக்காரர்களுக்கு வருமானம் அளிக்காத இந்த ஊர் இன்று மாநகர தந்தை வரைக்கும் வளர்ந்து ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் மகத்தான வாழ்க்கையை வசதிகளை வழங்கிக் கொண்டுருக்கிறது.

புலம் பெயர்ந்து வாழச் சென்றவர்களின் அறிவு பல நாடுகளை இன்று உச்சத்தில் அமர்த்தி வைத்துள்ளது. இங்கும் பல கிராமங்களில் இருந்தும் வந்தார்கள். உயிர் வாழ வாழ்ந்தார்கள். இறந்தார்கள். ஒருவர் பின் ஒருவாராக உள்ளே வருவதும் உழைக்க முடியாதவர்கள் பின்னோக்கி சென்று விடுவதுமாய் இந்த பனியன் நகரம் பால் வடியும் பாலகன் வரைக்கும் விட்டு வைக்கவில்லை. உழைக்க வந்தவர்களுக்கு எத்தனையோ காரணங்கள். ஆனால் உழைப்பை உறிஞ்சியவர்களுக்கு ஒரே காரணம். மிகச் சிறந்த ஏற்றுமதி நிறுவனம். கௌரவம். அந்தஸ்து. பணம். பதவி. புகழ். கடைசியாக அரசியல். இதுவும் கைகூடா விட்டால் இறுதியில் ஒவ்வொரு நிறுவன முதலாளிகளும் கல்வித்தந்தைகளாக மாறிவிடுகிறார்கள்.

மலேசியாவில் மகாதீர் முகம்மது ஆட்சியில் இருக்கும் போதே எதிர்கால மலேசியா சந்திக்கக்கூடிய சவால்கள் என்று யோசித்து உருவாக்கிய புதிய பன்னாட்டு விமானம் முதல் அருகில் உள்ள சிங்கப்பூர் கட்டுமாணங்கள் வரைக்கும் எதுவும் இந்தியாவிற்குள் வந்து விடாது. மற்ற நாடுகளைப் பார்த்து நாம் திருந்துவதா? நாம் தான் வல்லரசாச்சே?

ஒவ்வொரு தொழில் நகரமும் வளர்ச்சியடையும் போதே வந்து இறங்கிக் கொண்டிருக்கும் மக்களை குறி வைத்து சாக்கடை முதல் சுடுகாட்டு நிலம் வரைக்கும் வீடாக தொழிற்சாலைகளாக மாற்றியதைப் போலேவே இங்கும் புற்றீசல் வீட்டு மனைகள் துரித கதியில் உருவாக்கப்பட்டது. எடுத்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார். கோட்டை விட்டவர்கள் குடிசையே போதுமென்று புறநகர் பகுதிகளில் ஒதுங்கிக் கொண்டார்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட புறநகர் பகுதிகளுக்கும் ஒரு ஜாதகம் உண்டு. தஞ்சாவூர் பகுதி மக்கள் என்றால் அவர்களுக்குண்டான இடம் என்று தொடங்கி தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் இங்கு வெவ்வேறு பகுதிகளாக உழைப்பவர்கள் களைத்துப் போய் வாழ பழகிக்கொண்டார்கள்.

வாழை மரம் போலவே ஆடைகள் சார்ந்த தொழிலும். பஞ்சு முதல் இறுதியில் ஆடைகளாக மாறுவது வரைக்கும் எதுவுமே வீணாகிப் போய் விடுவதில்லை. ஒன்றில் இருந்து மற்றொன்று. மிச்சமானதில் இருந்து வேறொன்றாக மாறி பணம் தரும் தொழிலாக இருக்கிறது. குப்பையாக விழுந்தாலும் அது பண மேடு. இது தான் உண்மை.

பஞ்சு என்பது விளைவிக்கும் இடத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்குவது முதல் அதுவே ஆடைகளில் பலவித ரூபங்களில் மாறும் வரைக்கும் உண்டான இறுதி நிலை வரைக்கும் இந்த தொழிலைச் சார்ந்து இந்தியாவில் நேரிடையாகவும், மறைமுகமாகவும், பத்து கோடி மக்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் அத்தனை பேர்களும் இந்த ஜவுளித்துறையில் தங்களை அடகு வைத்தவர்கள். . இந்த பஞ்சை நம்பித்தான் தங்கள் குஞ்சு கொழுவுகளை நம்பி வளர்த்துக் கொண்டுருக்கிறார்கள். இந்தியாவில் உற்பத்தியாகும் பஞ்சில் ஐம்பது சதவிகிதம் குஜராத்தில் தான் விளைவிக்கப்படுகிறது. பருத்தி விளைய பருவநிலை முக்கியமானது.

இந்தியாவில் உள்ள தொழில் சார்ந்த துறைகளுக்கு அந்த வாரியம், இந்த அமைப்பு, கவுன்சில், சங்கம், தெருப்புழுதி, மண்ணாங்கட்டி என்று எப்போதும் போல் அரசு சார்ந்த சாராத ஏராளமான நலச்சங்கங்கள் உண்டு. இதற்கெல்லாம் மேல் கட்டுக்கோப்பான நிறுவன அமைப்புகள் பலவும் உண்டு. இதற்கு மேலாக. ஏற்றுமதியை மேம்படுத்த, இறக்குமதியை கட்டுப்பட்டுத்த, தொழில் வளர்ச்சிக் கழகம், நிதி உதவி நிறுவனங்கள் என்று தொடங்கி ரிசர்வ் வங்கி வரைக்கும் ஆயிரமாயிரம் அமைப்புகள் கன்யாகுமரி முதல் டெல்லி வரைக்கும் இருக்கின்றது.

ஆனால் என்ன செய்தார்கள்? செய்துகொண்டிருக்கிறார்கள்? செய்யப்போகிறார்கள்? என்று கேட்டால் கேட்டவர்களின் செவி கிழிந்துவிடும். காரணம் அவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வெளிநாடு சுற்றுப்பயணம் செய்து கொண்டு இந்திய ஏற்றுமதி வளர்ச்சி மேம்பாட்டுக்கு உதவும் தகவல்கள் திரட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அறிக்கைகள் வரும் வரைக்கும் நாம் காத்திருக்க வேண்டும். நம் நாட்டின் நடைமுறைச் சிக்கலை சிறிய உதாரணம் மூலம் பார்க்கலாம்.

நாகராஜன் 15 வருடங்களாக பல் வேறு நிறுவனங்களில் தொழிலாளியாக இருந்தவர். இப்போது கேரளாவிற்கு காலர் சட்டைகளை தன்னுடைய சிறிய நிறுவனத்தில் தைத்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். இப்போது நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார். காரணம் தமிழ்நாட்டில் நிலவும் தொடர் மின் வெட்டு. தொழிலை விரிவுபடுத்தும் பொருட்டு நாகராஜன் சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தில் கடன் உதவி கேட்டு நின்ற போது அவர்கள் சொன்ன வாசகங்கள் மொத்ததிலும் நகைச்சுவையானது.

"எங்கள் நிதி உதவி என்பது நிறுவன அனுபவம் இல்லாமல், எந்த தொழிலும் தொடங்காமல், இப்போது தொடங்க முற்படுபவர்களுக்கு மட்டுமே" என்கிறார்கள். இவர்களின் சட்டதிட்டங்களின்படி தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தண்ணீர் இல்லை. இது தான் இந்திய ஜனநாயகம் உருவாக்கியயுள்ள சட்ட திட்டங்கள். அதிகார வர்க்கத்திடம் மோதும் சக்தி எந்த தொழில் அதிபர்களுக்கும் இருக்காது. காரணம் அவர்கள் வாங்கியுள்ள, எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வங்கிக் கடன்கள் பேசவும் விடாது.

இன்றைய பிரச்சனைகள் எங்கிருந்து தொடங்கியது?

"உள்நாட்டில் வாழும் விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அதிகார டெல்லி லாபியை பிரதமர் முதலில் துடைத்தொழிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனத்திற்காக குறு சிறு நிறுவனங்களில் குரல்வளையை நெறித்துக்கொண்டிருக்கும் இவர்களை இப்படியே வளர விட்டுக் கொண்டிருந்தால் இந்தியாவின் எதிர்கால தொழில் வளர்ச்சியே கேள்விக்குறியாகி விடும்?"

இப்படி ஒரு கண்டன அறிக்கையை தமிழ்நாட்டில் இருந்து வெளியிட்டிருப்பார்கள் என்று நினைத்தால், நீங்கள் இன்னமும் "கைப்புள்ள" தான். அநியாயத்திற்கு அப்பாவியாய் இருக்காதீங்க. இதையெல்லாம் விட இங்குள்ளவர்களுக்கு முக்கிய ஜோலிகள் பல இருக்கிறது. தனது அழுத்தமான வார்த்தைகளை அறிக்கையாக விடுத்தவர் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி.. காரணம் என்ன? பஞ்சில் இருந்து தொடங்கும் இந்த ஜவுளி வாழ்க்கை பயனாளிகளின் வாழ்க்கை, இன்று கஞ்சித் தொட்டி அவலம் முதல் தற்கொலை வரைக்கும் கொண்டு வந்து சேர்த்துள்ளது.

ஊரில் இருக்கும் இடத்தை விற்று விட்டு, பொண்டாட்டி புள்ளைகளை தவிக்க விட்டு பத்து வருசம் இதே திருப்பூரில் உழைத்து பல விசயங்களை நாம் கற்றுக்கொண்டுள்ளோம். நம்மால் இனி ஜெயிக்க முடியும் என்று அப்பாவி திருவாளர் நடுத்தர வர்க்கம் எப்படியோ கையூண்டி ஒரு சிறிய நிறுவனத்தை தொடங்கி விடுகிறார். ஆனால் இவர் இந்த தொழிலை விட்டு ஓட வைக்க எத்தனை பேர்களை இந்த இந்திய ஜனநாயகம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பதை அறிவீர்களா?

உள்நாட்டில் உற்பத்தியாகும் பஞ்சை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று குஜராத் விவசாயிகளுக்கு இந்திய நிதி அமைச்சகம் கட்டுப்பாடு விதித்தது. ஏற்றுமதி செய்யும் ஒரு டன் கச்சா பஞ்சுக்கு ரூபாய் 2500 வரியைப் போட கடந்த 2010 ஏப்ரல் ஒரு மாதத்தில் மட்டும் 2,000 கோடி ரூபாய் நஷ்டம். ஆகா இது நல்லது தானே? உள்நாட்டு தொழிலுக்கு செய்யும் மகத்தான் சேவை என்கிறீர்களா? அதற்கு முன்பு ஒரு இந்த ஜனநாயகவாதிகளின் வேலைகளையும் புரிந்து கொள்ளுங்கள்.

2010 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பருத்தி விளைச்சல் அமோகமாக இருந்தது. இந்தியாவில் பார்க்க வேண்டியவர்களை வெளிநாட்டில் இருந்து வந்த பல கணவானகள் வந்து பார்த்தார்கள். நூற்பாலைகளின் எதிர்ப்புகளையும் மீறி பஞ்சு ஏற்றுமதிக்கான கதவை அகல திறந்து வைத்தார்கள். பருத்தி ஏற்றுமதிக்கு தனிப்பட்ட ஊக்கம் கொடுத்து உற்சாகப் படுத்தினார்கள். சிகரம் வைத்தாற் போல ஆன்லைன் வர்த்தகமும் யுக பேரங்களும் சந்தி சிரித்தது. பல லட்ச குடும்பங்களின் வாழ்க்கை நடுத்தெருவுக்கு வந்தது. ஆன் லைன் வர்த்தகத்திற்கு எதிர்ப்பு உருவாக உடனடியாக மத்திய அரசாங்கத்திடம் இருந்து வந்தது ஆறுதல் அல்ல. எச்சரிக்கை மட்டுமே. என்ன பலன்?

இந்திய பருத்தியை எதிர்பார்த்து காத்துக்கொண்டுருந்த பன்னாட்டு நிறுவனங்களும், இடைத்தரகர்களும் உண்டு கொழுத்து உச்சத்தில் இருந்தார்கள். 16 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த பஞ்சின் விலை படிப்படியாக உயர்ந்து 30 ஆயிரம் ரூபாய்க்கு வந்தது. இன்றைய பஞ்சுத் தட்டுப்பாடு வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஒழுங்காக உற்பத்தி செய்து கொண்டடிருந்த நூற்பாலைகள் மூடப்பட, பல லட்சம் தொழிலாளர்கள் தெருவுக்கு வந்தனர். முதலாளிகள் வேறு என்ன செய்ய முடியும். தமிழ்நாட்டில் உள்ள மின்வெட்டு மீறி எப்படி தொழிலை நடத்த முடியும்? எத்தனை நாளைக்குத் தான் நட்டத்துக்கு நிறுவனத்தை நடத்த முடியும்? அவர்களும் முடிந்த வரைக்கும் காசு பார்க்க கிடைத்த வரை லாபம் என்று பஞ்சாக நூலாக ஏற்றுமதி செய்யத் தொடங்கினர்.

தொடக்கத்தில் பஞ்சு ஏற்றுமதி செய்ய ஊக்குவித்தவர்களுக்கு ஒரு காசு. இப்போது நூலை ஏற்றுமதி செய்ய தூண்டுபவர்களும் மற்றொரு காசு.

வாழும் மக்களுக்கு சன் டிவி தரும் தங்கக் காசுக்காக காத்து இருக்க வேண்டியது தான். தங்கம் விலை போல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நூல் விலையும் கிடுகிடுவென்று ஏறத் தொடங்கியது. கீற்றுக்கொட்டகையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி கைத்தறி தொழிலாளர்கள் முதல் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் வரைக்கும் வெட்ட வெளிக்கு ஆடையின்றி அம்மணமாக வரத் தொடங்கினார்கள்.

ஒரு பொருளுக்கு ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் போது, அல்லது இறக்குமதி செய்ய அவஸ்யம் என்று கருதும் போது மாநிலங்களின் குறிப்பிட்ட தொழில் சார்ந்த சாதக பாதகங்களையும் அலசி காயப் போட்டு முடிவு எடுப்பது யார்?

கடந்த ஆறு மாதமாக மூடுவிழா நடத்திக்கொண்டிருக்கும் சிறிய ஏற்றுமதி நிறுவனங்களிடம் "உங்களுக்கு என்னப்பா பிரச்சனை"? என்று தமிழ்நாட்டில் வந்து கேட்ட அமைச்சர் எவரெவர்? தமிழ்நாட்டில் ஜால்ரா சத்தத்தில் எதுவுமே வெளிவருவதில்லை. டெல்லியில் ஜவுளி, வர்த்தகம், விவசாயம், நிதித்துறை அமைச்சகங்களுக்கிடையே நடக்கும் போட்டா போட்டியில் தாலியை அடகு வைத்து "நானும் ஜெயித்துக் காட்டுகிறேன்" என்று சிறிய அளவில் நிறுவனம் தொடங்கிய அந்த அப்பாவி திருவாளர் நடுத்தரவர்க்கம் இருப்பது ஆற்காட்டார் விளக்கணைத்துத் தொடக்கி வைத்த கும்மிருட்டில்....

ஆனால் ஒரு விசயத்தில் மட்டும் சென்னை முதல் டெல்லி வரைக்கும் மிகுந்த ஒற்றுமையாய் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வந்து இறங்கிக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, கைகுலுக்கி, புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார்களே அவர்களுக்கு இந்தியா சுதந்திரம் பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று பாடுபட்ட சுபாஷ் சந்திர போஸின் "நெஞ்சுக்குள் வைத்திருந்த நெருப்பு" புரியவா போகின்றது....?

அவர்களுக்கு புரியவைக்க முயற்சித்தால் வருங்காலம் பிழைத்துக்கொள்ளும். மோடியை நம்புவதா? அல்லது இந்த மஸ்தான்கள் காட்டிக் கொண்டிருக்கும் குரளி வித்தையை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டுருப்பதா? எப்படியோ இவர்கள் ஆடி விட்டு ஓயட்டும். ஜட்டி போடாமல் இப்போதே பழகிக் கொள்ளுங்கள். அது பின்னால் உங்களுக்கு உதவுக்கூடும்.

யோசிக்கிறீர்களா..?

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

 டாலர் நகரம் - 1  நகரம் - 2  நகரம் - 3  நகரம் - 4   நகரம் - 5  நகரம் - 6  நகரம் - 7   நகரம் - 8  நகரம் - 9  நகரம் - 10  நகரம் - 11   நகரம் - 12

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘பேச்சிலர்’படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது இதே படக்குழு, பூர்னேஷ் மற்றும் ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ள ‘போதையில் தள்ளாதே’ ரொமான்டிக் சிங்கிள் தனியிசைப் பாடலை வெளியிட்டிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா முதல் அலையின் போதும் பில் கேட்ஸின் தலை உருண்டது. அதேபோல் தற்போதைய இரண்டாம் அலையில் கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த ஒரு விவாதம் வந்த பொழுது எப்படி அதில் பில்கேட்ஸ் சம்பந்தப்பட்டிருக்குறார் என்று ‘இல்லுமினாட்டி, கான்பிரேசி கோட்பாடு’என்றெல்லாம் சில நெட்டிசன்கள் இணையத்தில் கூக்குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவை நோக்கி தன்னுடைய அனுதாபப் பார்வையைத் திருப்பியிருக்கிறது. முதல் அலைக் கொரோனா தாக்குதலை ஓரளவுக்கு சமாளித்த இந்தியா, ஐந்து மாநிலத் தேர்தல்களை நடத்துவதில் அலட்சியம், கும்பமேளா போன்ற பிரம்மாண்ட சமய நிகழ்ச்சிகள் காரணமாக இரண்டாம் அலை கோரோனா 750 வகையான மரபுதிரிபுகளோடு வேகமாக பரவி வருகிறது.

உழைப்பாளர் தினத்தில் இலங்கையிலிருந்து வெளியாகியுள்ள கானொளிப்பாடல் கோமாளி (The Buffoon ). உழைக்கும் மக்களின் துயர், அதிகாரத்தின் அராஜகம், ஜனநாயகத்தின் ஏமாற்றம், மக்களின் விடிவு என்பன குறித்துப் பேசும் வரிகளுடனும், தனித்துவமான இசையுடனும் வெளிவந்திருக்கிறது.