கட்டுரைகள்

14. பஞ்சு முதல் பஞ்சமாபாதகம் வரைக்கும். என்னுடன் நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டடிருக்கும் உள்ளூர்வாசிகளுடன் பேசினால் " எங்கப்பா பஞ்சு மில்லில் வேலைபார்த்தவர்" என்பார்கள். எனக்கு அப்போது புரியவில்லை. அதென்ன பஞ்சுமில்? அரசி ஆலைகளையும், எண்ணெய் ஆலைகளையும் மட்டுமே பார்த்தவனுக்கு இந்த வார்த்தை புதிதாக இருந்தது.

பல்லடம், ஊத்துக்குளி சாலைகளில் இருந்த நூற்பாலைகளில் பணிபுரிந்து, வேலை நிறுத்தத்தினால் பணி இழந்து வேறு தொழிலுக்கு ஒவ்வொருவரும் மாறியிருந்ததை புரிந்து கொண்டேன். கடந்த 15 ஆண்டுகளில் இது போன்ற எத்தனையோ ஆலைகள் மூடப்பட்டு அதன் முடிவு தெரியாமல் காலம் கடந்தும் போய்விட்டது.

ஒன்று தாமதிக்கப்பட்ட நீதியில் உழன்று கொண்டிருக்கும். அல்லது ஜனநாயகத்தை பணநாயகம் வென்றிருக்கும். இறுதியில் அந்த ஆலைகள் இருந்த இடம் வணிக வளாகமாக மாறிப்போயிருக்கும். ஆனால் நூற்பாலைகளை நம்பி வாழ்ந்தவர்கள்...? அடுத்த தேர்தலுக்கு ஓட்டுப் போட தினசரி பத்திரிக்கைகளை டீக்கடையில் படித்து விவாதம் செய்து கொண்டு, நடந்ததை மறந்திருப்பார்கள்.

இன்று வரையிலும் மக்கள் சிந்தனையிலும் மாற்றமில்லை. ஒவ்வொருமுறையும் உருவாகும் அரசாங்கமும் இது குறித்து எந்த முன்னேற்பாடுகளிலும் அக்கறை செலுத்துவதுமில்லை. அரசியல்வாதிகளுக்கு ஒவ்வொரு பஞ்சு ஆலைகளை மூட ஒரு பேரம். மூடிய ஆலைகளைத் திறக்க ஒரு பேரம். காரணம் நாம் ஜனநாயகத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்திய குடிமகன்களின் முதல் தகுதியே இந்த சகிப்புத்தன்மைதான். அதுவே இன்று ஒவ்வொருவருக்கும் பயமாக மாறி எல்லாவற்றையும் மறக்கடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன் திருப்பூரில் உள்ள ஒவ்வொரு ஏற்றுமதி நிறுவனங்களும் சர்வதேச நிர்ப்பந்தங்கள் இல்லாமல் முன்னேறிக் கொண்டிருந்தது. அவரவர் விரும்பிய விலைகளும் எதிர்பார்த்த லாபங்களும் கிடைத்துக் கொண்டிருந்தது. தீபாவளியின் முந்தைய நாட்களில், நான் சாலைகளில் நடந்து செல்லும் போது ஒரு குரல் மட்டும் பகல் முழுவதும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டேயிருக்கும். ஆட்டோவில் கட்டப்பட்ட ஒலிப்பெருக்கியிலிருந்து அந்தக் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும். உள்ளே ஒலிவாங்கியில் ஒருவர் பேசிக் கொண்டுருப்பார். அவரின் அற்புதமான குரல் வளத்தில் கேட்பவர்களின் நாடி நரம்புகள் முறுக்கேறும். அந்தளவிற்கு அவரின் கணீரென்ற குரல் கேட்பவரின் செவிகளைத் தாக்கும்." உழைக்கும் வர்க்கமே ஒன்றுபடு. தொழிலாளர்களே போனஸ் உடன்படிக்கையை இன்னமும் அமுல்படுத்தாமல் இழுத்துக் கொண்டிருக்கும் முதலாளி வர்க்கத்திற்கு பாடம் புகட்ட பேரணியில் பங்கெடுப்பீர்" என்றவாறு ஒலிக்கும் அந்தக் குரல்.

அரசு அங்கீகாரம் பெற்றவர்கள் முதல் சந்து முனையில் கீற்றுக் கொட்டகையில் சங்கம் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டிருப்பவர்கள் வரைக்கும் தீபாவளிக்கு முந்தைய ஒரு மாத காலகட்டத்தில் மிகுந்த சுறுசுறுப்பாய் இருப்பார்கள். ஆனால் இப்போது?

கடந்த மூன்று வருடங்களில் இது போன்ற குரல்கள் அதிகம் ஒலிப்பதில்லை?. தொடக்கத்தில் தொழிற்சங்களின் செயல்பாடுகளைப் பார்த்து முதலாளிகளும் "ஆரம்புச்ட்டானுங்கப்பா..." என்று புலம்புவார்கள். காரணம் ஒவ்வொரு முதலாளிகளும் தங்களுடைய தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சதவிகித போனஸ் பணத்தை கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பார்கள். அந்த ஒரு மாத காலமும் முட்டலும் மோதலுமாய் நகரும். இரண்டு பக்கமும் திகிலூட்டும் மஞ்சுவிரட்டு போலவே இருக்கும். தொழிற் சங்கங்களின் கடைசி அஸ்திரமான கால வரையற்ற வேலைநிறுத்தம் வந்து சேர இரண்டு பக்கமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும். கண்ணும் காதுமாய் காரியங்கள் நடக்கும். எல்லாமே சுமூகமாக நடந்து முடிந்த பிறகு மீண்டும் நிறுவனங்களில் வேலைகள் எப்போதும் போலவே தொடங்கும். அன்று முதலாளிகளிடம் அள்ளிக் கொடுக்க காசு இருந்தது. ஒவ்வொருவரின் மனம் மட்டும் இருட்டாய் இருந்தது. இன்றைய சூழ்நிலையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கிள்ளிக் கொடுக்கக்கூட முடியாமல் தவித்துக் கொண்டுருக்கிறார்கள். கடைசியில் கொடுக்க வேண்டிய போனஸ் பணத்துக்காக கந்து வட்டி நபர்களிடம் சென்று மாட்டிக் கொண்டு காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.

பனியன் தொழில் என்பது முதலில் தோன்றிய இடம் கல்கத்தா. அறுபது ஆண்டுகளில் கல்கத்தா கொல்கத்தா என்று மாறி இன்று அதுவும் காணாமல் போய்விட்டது. ஆனால் திருப்பூரின் வளர்ச்சியில் அந்தத் தொழிலை நம்மவர்கள் கெட்டியாக பிடித்துக்கொண்டு இன்று வரைக்கும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய ஜவுளித்துறையில் மூன்று இடங்கள் தான் முக்கியமானது. அகமதாபாத் (குஜராத்), பம்பாய் (மகாராஷ்ட்ரா) இதற்கு அடுத்தபடி நம்முடைய கோயமுத்தூர். ஒரு வரி கேள்வி பதிலில் எளிதாக தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று எழுதி மதிப்பெண்கள் வாங்கியதை இப்போதைக்கு நீங்கள் நினைவு படுத்திக்கொள்ளலாம்.

இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு உருவான நெருக்கடி தான் இந்த ஜவுளித் துறை இங்கே உருவாக் காரணமாக இருந்தது. 1931 ஆம் ஆண்டு நம்ம காந்தி தாத்தா வெளிநாட்டு ஆடைகளுக்கு எதிராக சுதேசி இயக்கத்தை பலப்படுத்திய நேரம். இதற்கு முன்னால் 30 ஆண்டுகளுக்கு முன்னால் இதன் வளர்ச்சி தொடங்கப் பெற்றாலும் இதே காலகட்டத்தில் தான் அங்கங்கே பஞ்சாலைகள் உருவாகத் தொடங்கியது. 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் தொடங்க உள்ளுர் நூற்பாலைகள் முதல் மற்ற அத்தனை தொழில் சார்ந்த அமைப்புகளும், பிற சமூகங்களும் இந்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்டனர். உள்நாடு, வெளிநாடு என்று இரண்டு பக்கத்திலும் சந்தைக்கான நல்ல வாய்ப்பு. பஞ்சாலை தொழிலில் இறங்கியவர்களுக்கு லாபகரமாகவே இருந்தது.

தொடக்கத்தில் நீராவி மூலம் உருவாக்கப்பட்டுக் கிடைத்த சக்தியை வைத்துக் கொண்டு பஞ்சாலைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. நீராவி சக்தியால் ஓடிக்கொண்டிருந்த பஞ்சாலைகள் மின்சாரம் மூலம் மாற, சற்று வேகமாக இந்த பயணமும் மாறியது. 1940 ஆம் ஆண்டு பிரிட்டனின் இராணுவ தேவைகளுக்கு அதிகப்படியான ஜவுளிகள் தேவைப்பட அதே சமயத்தில் இங்கு நூற்பாலைகளின் நிர்வாகமென்பது கல்வி கற்றவர்கள் கைக்கு மாறியது. ஒற்றையடி பாதையில் சென்று கொண்டிருந்த பஞ்சாலைத் தொழில் சரியான சாலை பயணத்தில் வந்து சேர்ந்தது.

இது போன்ற தொழில் வளர்ச்சிக்கெல்லாம் காரணம் அரசாங்கம் தானே என்று அவசர தீர்மானத்தை மனதிற்குள் உருவாக்கிக் கொள்ளாதீர்கள். அன்றைய வெள்ளை அரசாங்கம் நேரிடையாக இந்திய வளத்தை கொள்ளையடித்து கப்பல் மூலமாக இங்கிலாந்து கொண்டு சென்றது. இப்போது ஜனநாயக அரசாங்கத்தில் உள்ள அரசியல் வியாதிகள் ஒன்று சேர்ந்து கொள்ளை அடிப்பதுடன், கொல்லைப்புறமாக வர யோசித்தவர்களையும், முன் பக்கமாக கூவிக் கூவி அழைத்து உள்ளே வரவழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் கூலியும் வங்கிக் கணக்காக ஸ்விஸ்க்கு கடல் தாண்டி போய்க் கொண்டுருக்கிறது. என்ன பெரிதான வித்யாசம்?

ஆரம்பத்தில் உருவான அத்தனை நூற்பாலைகளும் ஒவ்வொரு தனி மனிதர்களின் முயற்சிகள் தான் காரணமாக இருந்தன.. அன்றைய சூழ்நிலையில் பணம் வைத்திருந்தவர்கள் ஒன்று சேர பயந்தார்கள். பெரிதான எந்திரங்களைக் கண்டு யோசித்தார்கள். உள் நாட்டில் நிதி ஆதாரம் திரட்டித்தர ஆள் இல்லை. முட்டி மோதி ஜெயித்தார்கள். சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவர்கள் மதுரைப் பக்கம். முதலுக்கு பங்கம் வராமல் பணத்தை பெருக்கியவர்கள் கோயமுத்தூர் பக்கம். அதனால் தான் இன்று வரையிலும் படித்த பட்டதாரிக் கூட்டங்கள் கோவை பக்கம் படையெடுத்துக் கொண்டுருக்கிறார்கள்.

காரைக்குடியில் அழகப்பச் செட்டியார் கட்டியுள்ள அழகப்பா கல்விக்கூடங்கள் அத்தனையும் அவர் இந்த பஞ்சு தொழிலில் ஈடுபட்டு திரட்டிய சொத்துக்களே ஆகும். இந்தியாவில் ஒன்பது லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் 41 லட்சம் டன் பருத்தி விளைவிக்கப்படுகிறது. ஆனால் இன்று இந்த மொத்த நிலப்பரப்பையும் கைகளுக்குள் கொண்டு வந்து இருப்பவர்கள் யார் தெரியுமா? அமெரிக்காவில் உள்ள மான்சாண்டோ.

அவர்கள் கொடுத்த மரபணு மாற்றப்பட்ட விதைகளே இந்தியா முழுக்க ஆட்சி செய்கிறது. எப்படி பிடி கத்திரிக்காயைத் தான் நாம் உண்ண வேண்டும் என்றார்களோ அதைப்போலவே இந்த ஜவுளித்துறையின் தொடக்க அஸ்திவாரமான பஞ்சில் கையை வைத்த அவர்களின் திறமையை பாராட்டுவதா? இல்லை அவங்க நம்ம நல்லதுக்குத் தான் தருவாங்க. பயப்படாதீங்கப்பூ......... என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கும் நம்முடைய மத்திய அமைச்சர்களை பாராட்டுவீர்களா?

இன்று வரையிலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு துறைகளுக்கும் பஞ்சமில்லா திறமைசாலிகள் இருக்கிறார்கள். கல்பாக்கம் அணுமின் நிலையம் தொடங்கி உள்ளுர் கிராம விவசாய அபிவிருத்தி சங்கம் வரைக்கும் அத்தனை துறைகளிலும் பாடுபட்டு பாழாய் போய்க் கொண்டுருக்கும் எத்தனையோ மேதைகள் இங்கு இருக்கிறார்கள். என்ன பலன்?

விதை முதல் நாம் உடுத்தும் உடை வரைக்கும் அத்தனை இடங்களிலும் மேலை நாட்டு கணவான்களின் விருப்பம் தான் இங்கு மேலோங்கி நிற்கிறது. அவர்கள் சொல்வதை அட்சரம் பிறழாமல் கடைபிடித்து நிறைவேற்றிக் கொடுக்க நாம் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்கள் அங்கங்கே பாரபட்சம் இல்லாமல் கை கோர்த்து நிற்கிறார்கள். ஒவ்வொரு தாவரத்திலும் மரபணு மாற்றம் செய்து காசு பார்க்கும் மேலைநாட்டினர் இந்திய அரசியல்வாதிகளின் மரபணுகளை ஆராய்ந்து பார்த்தால் என்ன? எந்த மூலக்கூறில் இந்த பண வெறி இருக்கிறதோ அதை மட்டுமாவது நீக்கச் சொல்லிப் பார்க்கலாம்.

பங்களாதேஷ் நாட்டில் நூற்பாலைகள் குறைவு. சொல்லப்போனால் அவர்கள் எல்லாவிதங்களிலும் மற்ற நாடுகளைச் சார்ந்தே வாழவேண்டிய சூழ்நிலை. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாதது ஒருபுறம். இந்த நிமிடம் வரைக்கும் தன்னிறைவு என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்பதே தெரியாத தலைவர்களைப் பெற்ற நாடு ஆனால் இன்று பங்களாதேஷ் இந்திய ஜவுளித்துறைக்கு மிகுந்த சவாலாக இருக்கிறது. பங்களா தேஷ் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களும், நிறுவனங்கள் வைத்திருக்கும் முதலாளிமார்களும் போட்டிருக்கும் ஜட்டியே போதுமானது என்று நினைப்பார்களா? இல்லை தினந்தோறும் கிடைக்கும் மூணு வேளை ரொட்டியே அதிகம் என்று யோசிப்பார்களா? என்பதை யோசித்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

இறக்குமதியாளர்களிடம் அவர்கள் தயாரிக்கும் ஆடைகளுக்கு கேட்கும் விலையென்பது திருப்பூருடன் எந்த வகையிலும் ஒப்பிடவே முடியாது. நமது லாபம் இல்லா அடிப்படை விலையை விட கீழானது. காரணம் பங்களாதேஷ் அரசாங்கம் அங்குள்ள ஒவ்வொரு நிறுவன வளர்ச்சியையும் ஊக்கத் தொகை கொடுத்து தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு மேல் அந்த நாட்டிற்கு மற்றொரு ஆதாயம். "பாவம்ப்பா ஏழை மக்கள்" என்று ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் கொடுத்துள்ள சலுகைகள்.

பக்கத்தில் உள்ள பாகிஸ்தான் மனித வெடிகுண்டுக்கு ஆள் தேவைப்படாத சமயத்தில் தொழிற்சாலைக்கு செல்வபவர்களை வைத்துக்கொண்டே இன்று கண்ணாமூச்சி காட்டுகிறார்கள். இவர் நமக்கு இரண்டாவது பங்காளி.

வியட்நாம் பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை. நிறையும் இல்லாமல் குறையும் இல்லாமல் தானூண்டு தாங்கள் பிழைக்க தொழில் உண்டு என்று மிகக் குறைந்த ஊதியத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அருகேயுள்ள இலங்கையை இதில் கணக்கில் சேர்த்துக் கொள்ளவே வேண்டாம். இலங்கையில் நடந்த உள்நாட்டு போருக்குப் பிறகு மனித உரிமை மீறல் என்பதற்காக ஐரோப்பிய யூனியன் கொடுத்துள்ள ஆப்பு இப்போது ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது.

இத்துடன் இந்த நாடுகள் அத்தனை பேர்களையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பமிட்டதோடு இன்று இந்தியாவையும் எல்லாவிதங்களிலும் விழுங்க நினைக்கும் மொத்த பூதமான சீனா.

இந்த ஐந்து பேர்களுக்கும் தேவையான பஞ்சும் நூலும் எங்கிருந்து போகிறது? வேறெங்கே? எல்லாம் காந்தி தேசத்தில் இருந்து தான் ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது. இந்தியா என்ற மரத்தில் ஏறிநின்று கொண்டு மரத்தின் கிளைகளை சிலர் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். பலர் மரத்தின் தூர் பகுதியில் சுடுதண்ணி ஊற்றிக் கொண்டுருக்கிறார்கள். கட்டளை கொடுத்துக் கொண்டிருப்பது யார்? எல்லாமே நம்முடைய ஆக்ஸ்போர்டு, ஹாவார்டு பல்கலைக்கழக மேதைகள்.

"ஏழைகளே இல்லாத இந்தியா நாடு" என்று உருவாக என்ன செய்ய வேண்டும்?. ஏழைகள் அத்தனை பேர்களை துடைத்து ஒழித்து அழித்து விட வேண்டும். அதைத்தான் இப்போது சுருதி சுத்தமாக நம்முடைய தலைவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். பஞ்சை நம்பி வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் மொத்த மக்களின் தலைமுறைகளின் வாழ்க்கையையும், இந்த அரசியல் வியாதிகள் பஞ்சத்தில் கொண்டு போய் விட்டுத் தொலைச்சுருவாங்களோ..?

யோசித்திருங்கள்...

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

 

டாலர் நகரம் - 13

மலையாளத் திரையுலகில் ஆர்பாட்டம் இல்லாமல் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் படங்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அப்படியொரு வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி உடல் நலகுறைவால் காலமானார். ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.

எமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் (Milkyway Galaxy) மாத்திரம் பிரபஞ்சம் அல்ல என்றும் அதைப் போன்ற கோடானு கோடி அண்டங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்பதும் எப்போது ஊர்ஜிதமானது?

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.