கட்டுரைகள்

 தமிழகத்தின் தொழில் நகரமான திருப்பூருக்கு வரும் ஒரு கிராமத்து இளைஞனின் அனுபவத் தொடராகத் தொடங்கிய இந்தத் தொடர், ஒரு அனுபவத் தொடர் என்பதற்கு மேலான சமூக அக்கறை மிக்கத் தொடராக மாறியிருப்பதை,

இத்தொடரினைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள் அறிவார்கள்.  சிந்திக்கத் தெரிந்த ஒரு இந்தியனின்  எதிர்கால இந்தியா குறித்த ஏக்கம் தொனிப்பதைக் காண்பீர்கள் இத் தொடரின் இனிவரும் பகுதிகளில் காண்பீர்கள். தொடர்ந்து வாசியுங்கள். கருத்துக்களைப் பகிருங்கள்..

புதன்கிழமை தோறும் வெளிவரும் இத் தொடரின் இவ்வார அத்தியாயம் சில தவிர்க்கமுடியாத காரணங்களால், தாமதமாக இன்று வருகிறது. இதனால் வாசகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களிற்கு வருந்துகின்றோம்.-4Tamilmedia Team

15. சின்ன நூல் கண்டா நம்மை சிறைப்படுத்தும்?

இன்று திருப்பூரில் முதன்மையாக இருக்கும் பல ஏற்றுமதி நிறுவனங்களுக்கு சொந்தமாகவே நூற்பாலைகள் உண்டு. ஒவ்வொரு தொழில் அதிபர்கள் வைத்திருக்கும் அவர்களது வெளிநாட்டு வாகனங்களைப் போலவே அவர்கள் வைத்திருக்கும் நூற்பாலைகளில் உள்ள கதிர்கள் (SPINDLES) என்பது அவர்களின் கௌரவம் சார்ந்த விசயமாகும். 5000 கதிர்கள் முதல் ஒரு லட்சம் கதிர்கள் வரைக்கும் வைத்திருப்பார்கள். இது போன்ற நூற்பாலைகள் 90 சதவிகிதம் வங்கிக் கடன் தயவில் தான் உருவாக்கப்படுகின்றது.

ஒவ்வொரு நூற்பாலைகளும் தாங்கள் உற்பத்தி செய்யும் நூல் வகைகளை நேரிடையாக விற்பனை செய்வதில்லை. இடையில் ஒருவர் இருப்பார். அவர் தான் குறிப்பிட்ட நூற்பாலைகளுக்கு விற்பனை பிரதிநிதியாக இருப்பார். திண்டுக்கல் மாவட்டத்தில் தான் தொடக்க காலத்தில் அதிக அளவு நூற்பாலைகள் உருவாகத் தொடங்கியது. கொடைக்கானல் அருகே இருந்த காரணத்தாலும் அந்த மாவட்டத்தில் உள்ள தட்பவெப்ப நிலையுமே முக்கிய காரணமாக இருந்தது. அப்போது தான் நூற்பாலைகள் வளரத் தொடங்கிய நேரம். இன்றைய இறக்குமதியாளர்கள் எதிர்பார்க்கும் உச்சகட்ட தரம் என்பதெல்லாம் அன்று எவர் மனதிலும் இல்லை. ஒவ்வொருவரும் கடனில் தொடங்கி பஞ்சுகளை கடனுக்கே வாங்கி தொழில் செய்து கொண்டிருந்தார்கள்.

நூற்பாலைகள் ஆந்திரா முதல் மற்ற மாநிலங்களில் இருந்து வாங்கும் பஞ்சுப் பொதிகளை 30 முதல் 90 நாட்கள் வரைக்கும் கடனில் தான் வாங்கிக் கொண்டிருந்தார்கள். தாங்கள் உற்பத்தி செய்யும் நூல் வகைகளையையும் இது போன்றே கடனுக்குத் தான் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.. ஆனால் இன்றைய சூழ்நிலையில் வரைவு காசோலை எடுத்துக் கொடுத்தாலும் நூல்கள் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் அது தரமாக இருப்பது இல்லை. காரணம் உள்ளூரில் நூல் விற்பனை செய்தால் நூற்பாலைகளுக்கு குறிப்பிட்ட லாபம் தான் கிடைக்கும். வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து விட்டால் வங்கி பரிவர்த்தனைகள் முதல் அரசாங்க ஊக்கத் தொகை வரைக்கும் எத்தனையோ வகைகளில் நூற்பாலைகளுக்கு லாபமாக கிடைக்கின்றது.

இந்த இடத்தில் இந்திய ஜனநாயக காவல் தெய்வங்களை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நம்முடைய மத்திய அரசாங்கம் பஞ்சை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்றவுடன் நூற்பாலைகள் திண்டாட தொடங்கினர். எல்லா வகையிலும் தங்களின் எதிர்ப்புகளை காட்டத் தொடங்கினர். பிறகு இங்கு உற்பத்தியாகும் நூல் வகைகளையும் ஏற்றுமதி செய்யலாம் என்றவுடன் ஆடைத் தொழிலில் உள்ளவர்கள் பாடு திண்டாட்டமானது.

ஆடைத் தொழிலில் இருந்த ஏற்றுமதியாளர்களின் எதிர்ப்பு அதிகமாக அரசாங்கம் செய்த காரியம் என்ன தெரியுமா?

தடையை முற்றிலும் நீக்கவில்லை. பல்வேறு போராட்டத்திற்குப் பிறகு நூல் ஏற்றுமதி செய்தால் முதலாளிகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் ஊக்கத்தொகையை பெயருக்கேன்று குறைத்தது மட்டுமே. நூல் ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் ஊக்கத் தொகையை முற்றிலும் நீக்கி விடுங்கள் என்று திருப்பூரில் இருந்து கத்திக் கொண்டிருக்கிறார்கள். பாவம் டெல்லி தூரத்தில் இருப்பதால் இந்த குறைப்புக் குரல் மட்டும் எட்ட மாட்டேன் என்கிறது. ஏற்றுமதி செய்தால் அந்நியச் செலவாணி இருப்பு அதிகமாகும் என்பது ஒரு பக்கம் இருப்பது போல உள்நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்தால் இருப்பவர்கள் அத்தனை பேர்களும் வேலையில்லா திண்டாட்டத்தினால் களவாணியாக மாறி விடுவார்களே என்று அந்த மேதைகளுக்கு எப்போது புரியும்?

நூல்களும் எண்களால் தான் வகைப்படுத்தப் படுகின்றன. இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். சுருக்கமாக புரிய வேண்டுமென்றால் நூல் தடிமன் பொறுத்து எண்ணிக்கை ஏறி இறங்கிக் கொண்டே இருக்கும். எண்ணிக்கை ஏற ஏற பயன்படுத்தும் துணிகளில் தரம் மிளிரும். நூல் மெல்லிய கம்பி போல இருக்கும். போட்ட பனியன் சும்மா ஜம்முன்னு உடம்போடு ஒட்டியிருக்கிற மாதிரி இருக்கிறது என்றால் அது 40 வகை நூலில் செய்து இருக்கலாம். உருவாகும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒவ்வொரு சூத்திரம். அத்தனையும் பயன்படுத்தும் நூலில் தான் தொடக்கம் பெறுகிறது. நீங்கள் போடும் ஜட்டி, போர்வை போல கடினமாக இருந்தால் உங்கள் உறுப்புகளை உண்டு இல்லை என்று படுத்தி எடுத்தி விடாதா? குளிர் காலத்தில் போடக்கூடிய ஆடைகள் உள் உறுப்புகள் தெரியும் அளவிற்கு இருந்தால் எப்படியிருக்கும்? குளிர் நடுங்க வைத்து விடாதா?

இருபது எண்ணிக்கைகளுக்குள் இருக்கும் நூல்கள் மொத்தமும் போர்வை, படுக்கை விரிப்புகள் முதல் தொடங்கி பள்ளி ஆடைகள், மற்ற கனமான ஆடை வகைகள் என்று விதவிதமான உள் அலங்கார துணிகள் வரைக்கும் மாற்றம் பெறுகின்றது. பெரும்பாலும் உள்நாட்டுச் சந்தையை சார்ந்து இருப்பதும், கைத்தறி, தறி ஓட்டுபவர்கள் என்று தொடங்கி இந்த நூல்களை நம்பி திருப்பூர், அவிநாசி, பல்லடம், அன்னூர், சோமனூர், ஈரோடு, பவானி, பள்ளிபாளையம், திருச்செங்கோடு,சென்னிமலை ,கரூர், குமாரபாளையம் மற்றும் இதைச் சார்ந்து சுற்றியுள்ள அத்தனை பகுதிகளும் என்று ஏறக்குறைய சேலம் வரைக்கும் பல லட்சக்கணக்கான குடும்பங்களின் ஜீவாதார வாழ்க்கையே இதை நம்பித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

ஆயத்த ஆடைகள் போல் நெசவு மற்றும் கைத்தறி உலகத்தில் மெத்தப் படித்தவர்கள் எவரும் இல்லை. மேலாண்மை கல்வியைப் பற்றிக்கூட எதுவும் தெரியாது. ஒவ்வொருவரும் தினந்தோறும் உழைத்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.. டகடக என்ற சப்தம் அந்தியூர் வரைக்கும் நீங்கள் போனால் உங்கள் காதில் அந்த நடு இரவில் கூட ஒலித்துக் கொண்டே இருக்கும்.

சமூகத்தில் உள்ள ஏழை மற்றும் பணக்காரன் என்பது போல் இந்த நூல்களிலும் CARDED மற்றும் COMED என்று இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். குறைவான தரத்திலுள்ள பஞ்சின் மூலமாகவும், நல்ல தரமான பஞ்சின் மூலமாகவும் இந்த இரண்டு வகைகளும் நமக்கு கிடைக்கிறது. திருவாளர் நடுத்தர வர்க்கம் போலவே இங்கும் ஒரு அரைக்கிறுக்கன் உண்டு. அவர் பெயர் தான் SEMI COMED.

ஒரு வருடத்திற்கு முன்பு 20 வகை நூல் ஒரு கிலோ நூறு ரூபாய் இருந்தது. இப்போது அதன் விலை 230 ரூபாயைத் தாண்டி மேலேறிக் கொண்டேயிருக்கிறது. அப்படியென்றால் தயாரிக்கும் ஆடைகளின் விலையும் உயர்ந்து இருக்க வேண்டுமே? என்று நீங்கள் கேட்டால் விபரம் புரியாதவர் என்று அர்த்தம். அடுத்த நாடுகளின் அடிதடி போட்டிகளில் திருப்பூருக்கு வந்து கொண்டுருக்கும் வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் லாபமில்லா தொழிலாக இந்த ஆயத்த ஆடைத் தொழில் மாறிக் கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் மற்றொரு ஆச்சரியமும் உண்டு. சீனாவைப் பொறுத்தவரையில் கடின வடிவமைப்பு உள்ள ஆடைகளில் அக்கறை காட்டுவதில்லை. விலை குறைவாக இருக்க வேண்டும். ஆனால் மில்லியன் கணக்கான ஒப்பந்தங்கள் வேண்டும். இது போன்ற சீனா எதிர்பார்க்கும் அளவுகள் எல்லா நாட்டு இறக்குமதியாளர்களாலும் முடிவதில்லை. இறக்குமதியாளர்கள் எதிர்பார்க்கும் குறைவான விலை சீனாவில் கிடைத்தாலும் ஆடைகளின் தரமும் அந்த அளவிற்குத்தான் இருக்கிறது. இதன் காரணமாகவே ஒவ்வொரு வெளிநாட்டு இறக்குமதியாளர்களும் திருப்பூருக்குத் தான் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.

உள் நாட்டில் உள்ள தலைவர்கள் செய்யும் அடாவடியால் பாதிப்படையும் இந்த தொழிலுக்கு மற்றொரு சவாலும் உண்டு. படித்தவர்களால் கூட பல சமயம் புரிந்து கொள்ள முடியாத சென்செக்ஸ் குறியீடுகள். திங்கள் முதல் வெள்ளி வரைக்கும் சர்வதே சந்தையின் அடிப்படையில் மாறிக் கொண்டிருக்கும்.

தினந்தோறும் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும் வெளிநாட்டு பணமதிப்பு என்பது இங்குள்ள ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களையையும் படாய்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு ஏற்றுமதியாளர் மார்ச் மாதத்தில் ஒரு ஒப்பந்தம் எடுத்து இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் எடுத்துள்ள ஆடைக்கு அப்போதுள்ள அமெரிக்கன் டாலர் அடிப்படையாக வைத்து விலையை உறுதிப்படுத்தி இருப்பார். அடுத்த மூன்று மாதத்திற்குப் பிறகு ஏற்றுமதியாகும் போது தான் அவருக்கு பிரச்சனை ஆரம்பமாகும். அப்போதுள்ள பணமாற்றம் சில சமயம் ஏற்றத்தில் இருக்கும். அல்லது படுபாதாளத்தில் இருக்கும். இதற்காக வங்கியில் பலவிதமான நடைமுறைச்சட்டங்கள் உண்டு. பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் ஆசையினால் அது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில்லை. டாலர் மதிப்பு ஏறும் என்ற ஆசையினால் பலரும் தற்கொலைக்கு அருகே சென்றதை நான் பார்த்திருக்கின்றேன்.

இந்த தொழிலில் எதுவும் வீணாகிப் போய்விடுவதில்லை. நூற்பாலைகளுக்கு வரும் பஞ்சு நூலாக மாறும் போதும் உருவாகும் கழிவுப் பஞ்சுகள் வேறொரு பயணத்தை தொடங்குகிறது. குறைந்த எண்ணிக்கை உள்ள நூல்களுக்கு (LOW COUNTS) உதவுகின்றது. இதை தயாரிக்கும் குறு ஆலைகளுக்கு ஓ.இ என்று (OPEN END MILLS) என்று அழைக்கிறார்கள். தறிகள் ஓடும் போது கவனித்துப் பாருங்கள். மேலே ஒன்று குறுக்கே ஒன்று என்று இரண்டு நூல்கள் நடத்தும் பரதநாட்டியத்தின் மூலம் ஒரு புதிய ஆடைக் கலை அற்புதமாக அரங்கேற்றிக் கொண்டுருக்கும். அந்த நூல்களை வார்ப் (WARP) வெப்ட் (WEPT) என்கிறார்கள். இவற்றை தறியில் மாற்றி ஓட்டினால் ஓட்டுபவரின் ஜாதகமும் மாறிப்போய்விடும். தரமான பஞ்சை குறி வைத்த வெளிநாட்டினருக்கு இதன் மேலும் ஆசை வந்தது. அப்புறமென்ன? இங்கு நிறைவேற்றி வைக்க ஆள் இருக்க, கழிவுப் பஞ்சும் கடல் கடக்கத் தொடங்கியது. விசைத்தறியாளர்களின் வாழ்க்கையும் ஜலதரங்கம் போட்டு நாட்டியமாடத் தொடங்கியது. இதனை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டுருக்கும் வெள்ளக்கோவில், உடுமலை, பல்லடம், சோமனூர் மக்கள் வாழ்க்கையும் திண்டாடத் தொடங்கியது. ஒரு ஆண்டுக்கு உள்நாட்டு உற்பத்திக்கு தேவைப்படும் நூல்களின் கணக்கு எத்தனை கிலோ என்ற கணக்கை தெரிந்து கொள்ள விரும்பாத மத்திய அரசாங்கம் செய்த வேலை என்ன தெரியுமா?

"ஐயாமாருங்களா.... யார் யாரெல்லாம் வெளிநாட்டுக்கு நூல் ஏற்றுமதி செய்ய விரும்புகிறீர்கள்? உடனடியாக பதிவு செய்யுங்கள்" என்று அறிக்கை விட மொத்த வண்டவாளமும் தண்டவாளத்தில் ஏறத் தொடங்கியது.

இந்திய அரசாங்கம் கொடுத்த அறிவிப்பை பார்த்துவிட்டு 1,596 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,10,885 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்ய தயாராய் இருக்கிறோம் என்று முண்டியடித்துக்கொண்டு நூற்பாலை அதிபர்கள் வரிசையில் போய் நின்று பதிந்து காத்து இருக்கத் தொடங்கினர். இதற்காக மும்பையை தலையிடமாகக் கொண்டு அவசரமாக பத்து பதிவு மையங்கள் உருவாக்கப்பட்டது. உள்ளுரில் நூலை விற்று மொத்த பணமும் வருமா? இல்லை காந்தி கணக்கா என்று பயந்து காத்துக்கொண்டுருக்கும் நூற்பாலை முதலாளிகள் நாட்டுக்கு சேவை செய்கிறோம் என்று தயாராய் இருப்பார்களா?

பருத்தி விளைவித்தல், பயன்பாடுகளில் உள்ள வேலைகள், ஏற்றுமதி, இது தொடர்பான வர்த்தகம், பருத்தியை பதப்படுத்துதல் போன்ற இந்த துறைகளில் மட்டும் இந்தியாவில் நேரிடையாக மறைமுகமாக ஐந்து கோடி மக்கள் இருக்கிறார்கள். பருத்தியை வைத்து பயன்படுத்தும் தொழிலில் உலகளவில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 17 சதவிகிதமாக இருக்கிறது. ஆனாலும் இந்த தொழிலில் அதிக வளமாய் வாழ்பவர்கள் இடைத்தரகர்கள்.

தொடர் மின் வெட்டால் ஏற்கனவே ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்து இரண்டு மடங்கு செலவு செய்து அக்கப்போர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த பெருமுதலாளிகளுக்கு மத்திய அரசாங்கம் காட்டிய பச்சை விளக்கென்பது கலங்கரை விளக்காக காட்சி அளித்தது. ஆனால் ஏற்கனவே பஞ்சு ஏற்றுமதியினால் பாதிப்பு ஒரு பக்கம். நூல் ஏற்றுமதியால் மறுபக்கமென நடுவில் திண்டாடி திக்குத் தெரியாத திசையில் மாட்டிக் கொண்டவர்கள் இந்த தொழிலை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் குறு சிறு முதலாளிகளும் தொழிலாளிகளும் மட்டுமே. இந்தியாவில் சிறிய பெரிய என்று ஏறக்குறைய 3,300 நூற்பாலைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் திண்டுக்கல், வேடசந்தூர், உடுமலை, கோயமுத்தூர் பகுதிகளில் தான் மிக அதிக அளவில் இந்த நூற்பாலைகள் இருக்கின்றன. கடன் மூலமாகவே நடத்தப்பட்ட பஞ்சு மற்றும் நூல் தொழில்கள் இப்போது காசோலை, வரைவோலைகள் என்பதெல்லாம் தாண்டி இப்போது வங்கி மூலமாக நேரிடையான பணமாற்றம் வரைக்கும் கொண்டு வந்து விட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் இந்தியப் பகுதியில் இயங்கும் நூற்பாலைகளுக்கு ஆண்டுக்கு 90 லட்சம் பேல் பருத்தி தேவை. இந்த அளவுக்கு இருந்தால் தான் முழுமையான வேலை நேரத்தை தொழிலாளர்களுக்கு நூற்பாலைகளால் கொடுக்க முடியும். ஆனால் 2010 தொடக்க மாதங்களில் இந்தியாவில் விளைந்த பருத்தியின் அளவு 25 லட்சம் பேல்கள் மட்டுமே. தமிழ்நாட்டில் விளைந்த பருத்தி தரமாகவும், அதிக அளவும் கிடைத்த காரணத்தால் விவசாயிகளுடன் நூற்பாலைகளும் மகிழ்ச்சியில் இருந்தனர். உள்நாட்டு தேவை அளவுக்கு ஈடுகட்ட முடியாவிட்டாலும் மத்திய அரசாங்கம் பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தியிருந்தால் எத்தனையோ நல்லது நடந்து இருக்கும். ஆனால் இன்று வரையிலும் அக்கறை செலுத்தும் தலைவர்கள் எவருமில்லை. அரை நிர்வாண பக்கிரி என்ற பெயரைப் பெற்ற மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியை இங்கிலாந்து மன்னர் தான் இருந்த மாளிகையின் வெளியே வந்து அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் செல்லும் அளவிற்கு காந்தியின் ஆளுமை அன்று கடல் தாண்டி கொடி கட்டிப் பறந்தது. அவர் அப்போது உடுத்தியிருந்த ஆடை என்பது மானத்தை மறைக்க மட்டுமே. இன்றைய அரசியல்வாதிகள் போல கொளுத்தும் வெயிலில் கூட கோட் சூட் போட்டுக் கொண்டு கணவான் போல் காட்சியளிக்கவில்லை. அவரின் தரமே அங்கு ஒரு தராதரத்தை உருவாக்கியது.

காந்தி கதர் கிராம சர்வோதய சங்கம் என்று சாலையில் செல்லும் வழியில் நீங்கள் பார்த்து இருக்கலாம். கதர் என்பது உங்களுக்கு வேண்டாத ஆடையாக, கௌரவம் குறைச்சலானதாக இருக்கலாம். ஏறக்குறைய அரசாங்கமும் இவர்களை அப்படித்தான் நடத்துகிறது. மற்றவர்களின் மானத்தை மறைக்க உழைக்கும் நெசவாளிகளின் வாழ்க்கையை அரசாங்கம் கடந்து மூன்று ஆண்டுகளாக உண்டு இல்லை என்று படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறது.

உற்பத்தி செய்யப்படும் கதர் துணிகளுக்கு 20 சதவிகிதம் தள்ளுபடி அரசாங்கத்தால் வழங்கப்பட்டு அந்த தொகையை மானியமாக வழங்கப்படும். ஆனால் இந்த மானியம் தேவையில்லை என்று மத்திய அரசாங்கம் முடிவு எடுத்ததோடு, 2007 ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய மானியத் தொகையையும் தராமல் இழுத்தடித்துக்கொண்டு மெது மெதுவாக உழைப்பவர்களின் வாழ்க்கை நிலையை இருட்டுக்குள் தள்ளிக்கொண்டு இருக்கிறது. நம்முடைய நிதியமைச்சர் பிராணப் முகர்ஜி தலைமையில் கூட்டப்பட்ட உணவு பாதுகாப்புச் சட்டத்திற்கான கூட்டம் 2010ல் கூட்டப்பட்டது. அப்போது சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி சொன்ன ஒரு வாசகத்தைப் படித்து நாம் நல்ல தலைவர்களை பெற்ற இந்தியர்கள் என்ற விதத்தில் பெருமை கொள்ளலாம்.

“ 2005 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் உள்ள ஏழைகளின் எண்ணிக்கை 37 கோடி. இது 2011 ஆண்டு 40.5 கோடியாக உயரும்.” நம்முடைய தலைவர்கள் மக்களுக்ககாக என்று சொல்லிக் கொண்டு புதிதாக எந்த திட்டங்களையும் இங்கு கொண்டு வரத் தேவையில்லை, இந்தியாவின் உள்ளே இருக்கும் அடிப்படை வளத்தை இவர்களின் சுயலாபத்துக்காக ஏற்றுமதி செய்யாமல் இருந்தாலே போதுமானது. இயல்பாகவே இந்தியா நிஜமான வல்லரசு ஆகி விடும்.

 

காத்திருப்போம்...

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

டாலர் நகரம் - 14

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்