கட்டுரைகள்

17. வலையை விரித்தது யாரடா?அந்த நிறுவனம் அமெரிக்காவிற்கு பெண்கள் அணியும் உள்ளாடைகளை (பேண்டீஸ், ஜட்டி) அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இறக்குமதியாளருக்கும், நிறுவனத்திற்கும் இடையில் ஒரு பம்பாயைத் சேர்ந்த தரகர் ஒருவர் இருந்தார். இந்த தரகரிடம் பணி புரிந்தவர் என் சொந்த ஊரைச் சேர்ந்த லெஷ்மணன் என்பவர்.

ஒப்பந்தம் பெற்ற நிறுவனத்திற்கு அமெரிக்காவில் இருப்பவர்களைப் பற்றியோ அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றியோ முழுமையாகத் தெரியாது. ஏற்றுமதி தொழிலில். மின் அஞ்சல், தொலைபேசி, இதற்கு மேல் வங்கி பரிவர்த்தனைகள் ஏற்றுமதியாளர்களை இறக்குமதியாளர்களுடன் இணைத்து வைத்திருக்கும். இத்துடன் இருவரும் தொழிலில் கடைபிடிக்கும் நேர்மை தொடர வைக்கும்...

ஆங்கிலம் தெரியாத நிறுவன நிர்வாகியை தரகருக்குப் பிடித்துப் போய்விட்டது. தரகர் எதிர்பார்த்த மொத்த வசதிகளும் நிறுவனத்தில் இருக்க அவரின் சுய பாதுகாப்பும் அம்சமாய் அமைந்து விட அமெரிக்க ஒப்பந்தம் உறுதியானது. தரகருக்கு ஒவ்வொரு இரவும் ஜாலியான வாழ்க்கை. காரணம் மூன்று வருட ஓப்பந்தம் கிடைத்த நிறுவனம் கவனித்த கவனிப்பு அது.

ஒரு வருடம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை அன்று தூத்துக்குடிக்கு 12 லட்சம் ஆடைகள் சென்று கொண்டிருந்தது. ஒரு ஆடையின் அதிகபட்ச எடையே நூறு கிராம் கூட இருக்காது. நிறுவனத்திற்கு பாதிக்கு பாதி லாபம். இந்த பாதி லாபத்திற்குப் பின்னால் முள் ஒன்று உண்டு.. ஆனால் அதை அப்போது நிர்வாகியும் உணரவில்லை. உணர வைக்க வேண்டிய தரகருக்கும் அது குறித்த அக்கறையுமில்லை. மொத்தத்தில் இரு பக்கமும் ஜாலியோ ஜிம்கானாவாக நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது. நிறுவனத்தின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இன்றைய தொழில் போட்டிகள் இல்லாத நேரமது.. நிறுவனத்தில் மாடிகள் மளமளவென்று ஏறிக் கொண்டு இருந்தது.

பகவான் லேசாக கண் விழித்து பார்த்து விட்டு மறுபடியும் உறங்கத் தொடங்கினார். அமெரிக்காவில் இருந்து திடீர் என்று ஓலை வந்தது.

" இந்த திகதியில் உங்கள் நிறுவனத்திற்கு எங்கள் தலைமை துணை அதிகாரியோடு எங்களின் வடிவமைப்பு குழுவொன்று உங்கள் நிறுவனத்தை பார்வையிட வருகிறார்கள். புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. ஏற்கனவே நாம் போட்டுள்ள ஒப்பந்த வாசகத்தின்படி உங்கள் நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் என்று நம்புகிறோம். அப்போது மீண்டும் மூன்று வருடத்திற்கான ஒப்பந்தம் அன்றே உறுதிப்படுத்தப்படும்".

தகவல் கிடைத்த நாள் முதல் நிறுவன நிர்வாகிக்கு தலைகீழ் ஆட்டம் தான். தரகருக்கோ இரவும் பகலும் தூங்கினால் கிர்ர்ர்...... என்பது குறையவே மாட்டேன் என்கிறது. இறக்குமதியாளர் கூட்டம் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு கூட இரண்டு புத்திசாலிகளும் ஒன்றை மறந்து விட்டார்கள். போட்டுள்ள ஒப்பந்தப்படி நிறுவனத்தை தயார் செய்ய மறந்து விட்டார்கள்.

நிறுவன முதலாளிக்கு உள்ளூர் தொழிற்சங்கத்தில் செல்வாக்கு. அதிலும் நல்ல பொறுப்பு. நடத்திக் கொண்டிருக்கும் நிர்வாகத்தில் எப்போதும் அதிக கண்டிப்பு. முதலாளியாகயிருந்தாலும் எப்போதும் களத்தில் நின்று உழைக்கும் அயராத உழைப்பு. தினந்தோறும் இரவு ஒரு மணிநேரம் வரைக்கும் உழைத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் உழைப்பு என ஒவ்வொன்றும் நிறுவனத்தை உறுதியாக வளர்த்துக் கொண்டிருந்தது.

இறக்குமதியாளர் குறிப்பிட்ட அதே நாளில் கோவை விமான நிலையத்தில் உயர்தர வெளிநாட்டு பென்ஸ் கார் அவர்களை அழைத்து வர காத்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்த புகைப்படத்தில் உள்ள துணை தலைமை அதிகாரியை மட்டும் காணவில்லை. உடன் வந்தவர்களுக்கும் குழப்பம்.. உள்ளுக்குள் பேசி வைத்திருப்பார்களோ என்னவோ தெரியவில்லை. சற்று நேரம் காத்து இருப்பது போல் இருந்து விட்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இறங்கியவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு தரகர் வந்து சேர்ந்தார்.

அந்த வெளிநாட்டு பென்ஸ அலுங்காமல் குலுங்காமல் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தது, ஆனால் ,இவர்கள் வந்து சேர்வதற்குள் மொத்த நிறுவனமும் பூகம்பம் போல் குலுங்கி தடுமாறி நின்றது?

வெளிநாட்டு வாகனத்தில் வந்து இறங்க வேண்டிய துணை தலைமை அதிகாரி நிறுவன முகவரியை வைத்துக்கொண்டு விமான நிலைய டாக்ஸி மூலம் ஏற்கனவே நிறுவனத்திற்கு வந்து சேர்ந்திருந்தார். வந்தவர் அலுவலகத்தின் உள்ளே போகாமல் உள்ளே ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆராய்ந்து கொண்டிருந்தார்.

500 பேர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இவரை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அலுவலகம் என்பது மேல்மாடியில் இருந்தது. இப்படி ஒருவர் வந்து இருக்கிறார் என்பதை காவலாளியும் சொல்ல மறந்து விட்டார்.

பகவான் சோம்பலுடன் எழுந்து உட்கார்ந்தார்.

வந்தவர் நிறுவனத்தில் உள்ள துறை சார்ந்த பகுதிகளை ஒவ்வொன்றாக பார்த்து விட்டு கடைசியில் சென்றது தொழிலாளர்கள் பயன்படுத்தும் பொது கழிப்பறைகள் உள்ள பகுதி. அப்போது தான் அலுவலகத்தில் உள்ளவர்கள் கிடைத்த தகவலின்படி பதறியபடி இவரைத் தொடர ஆரம்பித்தனர்.

கழிப்பறைக்குச் செல்ல விரும்புகிறோ? என்றபடி பின்னால் இருந்தவர்கள் "ஐயா சுத்தமான கழிப்பறை மேலே இருக்கிறது. அங்கே போகலாம்" என்றவர்களை பார்த்து சிரித்தபடி உள்ளே நுழைந்து பார்த்தவிட்டு மேலே வந்தார். எவருக்கும் ஒன்றுமே புரியவில்லை.

நிறுவன நிர்வாகியை விட தரகருக்கு உள்ளும் புறமும் ததிகிணந்தோம் ஓடிக்கொண்டிருந்தது.. அப்போது தான் தரகருக்கு ஒப்பந்த வாசகங்கள் ஒவ்வொன்றாக மனதிற்குள் மறுபடியும் ஞாபகத்திற்கு வந்தன.

மொத்த நிறுவன பகுதிகளையையும் பார்த்து முடித்த இறக்குமதியாளர் கடைசியாக அலுவலகப் பகுதிக்கு வந்து சேர்ந்தார். முதலாளியின் குளிர்சாதன அறைக்கு வந்து நின்றவர் சொன்ன அமெரிக்க ஆங்கிலத்தை தரகர் மொழிபெயர்த்து நிறுவன நிர்வாகியிடம் சொன்ன போது..." உன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளையும் நீ செய்யவில்லை. என்னுடைய ஆடைகளைத் தைக்கும் எந்த எந்திரமும் சரியாக பராமரிக்கப்படவில்லை. ஒவ்வவொன்றிலும் எண்ணெய் பிசுக்கும் அழுக்குமாய் இருக்கிறது. தொழிலாளர்களின் கையிலும் கையுறை இல்லை. தைக்கும் போது உடையும் ஊசிகளை பாதுகாக்கும் எந்த வசதிகளுமில்லை.. துணியை வெட்டிக் கொண்டிருப்பவர்கள் பயன்படுத்தும் உயர்ரக அழுத்த மின்சார சாதனங்களுக்கு உரிய பாதுகாப்பு கூட எதுவும் இல்லை. ஒரு வருடமாக இதை தைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை சரியான முறையில் வழிநடத்துபவர்களும் எவரும் உள்ளே இல்லை. எந்திரம் முதல் கழிப்பறை வரை அழுக்கு அசிங்கம். இந்த நிமிடம் முதல் உன்னிடம் உள்ள அத்தனை ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படுகிறது. தயாரிப்பில் இருக்கும் ஆடைகளும் எங்களுக்குத் தேவையில்லை. நன்றி. வணக்கம். டாடா பைபை..........."

கமல்ஹாசனுக்கு அபிராமி தந்த சுற்றல் வசனம் போல நிர்வாகியை சுற்ற வைத்தது ஆச்சரியமல்ல. அசராத நிர்வாகி லஷ்மணனிடம் சொன்ன வசனம் தான் மொத்ததிலும் சிறப்பு.

" இவன் என்ன சுத்த மசக்காட்டானா இருப்பான் போலிருக்கு. கக்கூஸ் போறவனுக்கெல்லாம் நான் போய் நின்னு கழுவிவிட்டுகிட்டா இருக்க முடியும். இத்தன மொதல போட்டுட்டு கழுவுறதையும் துடைக்றதையும் போய் நானா பார்க்க முடியும்? " என்றார்.

உலகத்தில் அமெரிக்காவால் பாதிக்கப்படாத நாடே இல்லை. அப்படி ஒரு நாடு இருக்கிறதென்றால் அந்த நாட்டில் அமெரிக்காவுக்கு தேவைப்படும் எந்த அடிப்படை வளமும் இல்லையென்று அர்த்தம். அமெரிக்காவின் சர்வதேச அரசியல் கொள்கைகளும் அங்குள்ள தொழில் அதிபர்களின் கொள்கைகளும் வெவ்வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். ஒரு ஆன்டர்சன் நடத்திய நிறுவனமும் தொங்கலில் விட்ட என்ரான் நிறுவனமும் இங்கு நமக்குத் தேவையில்லாதது.

காரணம் அதன் அத்தனைக்குப் பின்னாலும் நம்முடைய அடிவருடிகள் உண்டு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். திருப்பூரில் தொழில் மூலமாக கெட்டு அழிந்தவர்கள் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அமெரிக்கர்களால் அழிந்தவர்கள் குறைவு. அப்படி அழிந்தவர் இருந்தால் மேற்படி கொழுப்பு என்று அர்த்தம். பேசியபடி நடந்திருக்கமாட்டார்கள். ஆசையினால் அத்தனை அக்கிரமத்தையும் செய்து இருப்பார்கள். ஆப்பு கழட்ட முடியாத அளவிற்கு சொருகப்பட்டிருக்கும்.

இரண்டு காரணங்கள். அமெரிக்க அரசாங்கம் உருவாக்கும் அணு ஆயுத ஒப்பந்தமாகட்டும் மற்ற தொழில் சார்ந்த எந்த ஒப்பந்தமாகட்டும். எல்லாவற்றிலும் வெளிப்படையான அவர்களின் அணுகுமுறையை நம்மால் எளிதாக கவனிக்க முடியும்.

நான் இப்படித் தான். இது தான் எனக்கு வேண்டும். உனக்கு என்ன தேவை? அப்படியா? இது தான் என்னால் முடியும்? உனக்கு வாய்ப்பு இருக்கா இல்லையா? சரி இதை வைத்துக் கொள்? இதுதான் இதற்கான சட்டதிட்டம். மாறாதே........ நீ மாறினால் நானும் வேறு பக்கம் மாற்றிக் கொள்வேன். எளிமையான சட்டதிட்டம். அதற்கு நீங்கள் சுயநலம், பொதுநலம் போன்ற எத்தனை பெயர்களை வைத்துக்கொண்டாலும் அவர்கள் கவலைப்படுவது இல்லை.

ஆமாய்யா நான் இப்படித்தான். நீ என்ன பண்ணுவ?

பிடித்தால் தொடரலாம். லாம் என்ன? தொடர்ந்து தான் ஆக வேண்டும். அதிக வாங்கும் திறன் படைத்த அவர்களை விட்டால் வேறு ஆள் ஏது? இந்தியாவில் உருவாக்கப்படும், எந்த ஒப்பந்தத்தையும் அரசியலில் உள்ள முதல் தலைகளுக்கே தெரியுமா என்பதே ஆச்சரியம். இந்திய அதிகார வர்க்கத்திற்குள்ளேயே அத்தனை புரிந்துணர்வும் உருவாக்கப்பட்டு கையெழுத்து போடப்படும் சமயத்தில் தான் பத்திரிக்கைகளுக்கே தெரியும். இது இந்திய நிலவரம். ஆனால் அமெரிக்காவில் கூறு கிழிச்சு தொங்க விட்டு தான் அதிபரிடம் போய்ச் சேரும். விதிவிலக்குகளைத் தவிர.

தொடக்கத்தில் எந்த வெளிநாட்டு நிறுவனங்களும் இங்கு மிகப்பெரிய கெடுபிடிகளை உருவாக்கவில்லை என்பதையும் முக்கியமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கும் சட்டதிட்டங்கள் என்பது ஒரு கத்தி போலத்தான். பொதுநலமும் சுயநலமுமாய் சேர்ந்த சானை தீட்டப்பட்ட கத்தியது.

நீ தயார் செய்யப்போகும் ஆடைக்கான அடக்கவில்லை. உன்னுடைய நடைமுறை செலவீனங்கள். உன்னுடைய லாபம். அதற்கு மேல் தொழிலாளர்களின் நல்வாழ்வு என்று பக்கம் பக்கமாக அடிக்கப்பட்ட ஒப்பந்தம் வழங்கப்படும். நடைமுறை வரைவு சாசனம் உருவாக்கப்பட்டு இருபக்கமும் கையெழுத்து இடப்படும். நம்மவர்கள் எப்போதுமே நல நிதி என்பதை தம்முடைய நிதியாக கருதுபவர்கள். இறுதியாக திருப்பூரைச் சுற்றியுள்ள பொட்டக்காடுகள் முழுக்க வளைத்துப்போட்டது தான் மிச்சம். பத்துவருடம் தொடர்ந்து நடந்து லாபம் பார்க்க வேண்டிய தொழில்களை அப்படியே அள்ளிக்கட்ட வேண்டிய அவசரத்தினால் இன்று அதோகதியாக்கியது தான் மிச்சமானது.

ஆனால் இதே இந்த பன்னாட்டு சட்ட திட்டங்கள் இன்று எத்தனை உள்ளது தெரியுமா? ஐ,எஸ்,ஓ தரச் சான்றிதழ்கள், ராப் சான்றிதழ், செடக்ஸ், எஸ்ஏ8000 என்று தொடங்கி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனத்திற்கும் அவர்கள் விரும்பும் அளவிற்கு ஏராளமான சட்டதிட்டங்கள் வைத்துருக்கிறார்கள். அவர்கள் விரும்பும் ஒரு மாய வட்டத்திற்குள் கொண்டு வந்தும் நிறுத்தி விட்டார்கள்.

வெளிநாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஆய்த்த ஆடை தொழில் தொடர்பை உருவாக்க வேண்டுமென்றால் அவர்கள் விரும்பும் அடிப்படை வசதிகளுடன் அவர்கள் கேட்கும் சான்றிதழ்கள் பெறும் அளவிற்கு இங்குள்ள முதலாளிகள் ஒவ்வொன்றையும நிறுவனத்திற்குள் உருவாக்கியிருக்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி ஓட்டப்பந்தயத்தில் நீங்கள் வென்று வந்தால் இறுதிக்கட்டம் ஒன்று உள்ளது. தயாரித்த ஆடைகளை குறிப்பிட்ட நிறுவனம் தரம் பார்த்து அவர்கள் சரி என்று சொன்னால் தான் கப்பலில் ஏற்ற முடியும். சரி அவர்கள் விரும்பிய அத்தனையும் உருவாக்கியாச்சு. இதற்கென்று ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஏராளமான முதலீட்டையும் முடக்கியாச்சு. தரத்திற்கேற்ற தகுதியான விலையாவது கிடைக்கும் என்கிறீர்களா?

முதலும் போச்சு. இப்போது மூச்சும் போய்க் கொண்டுருக்கிறது. வலையை விரிக்க அனுமதித்ததும் நாமே. அதில் வலியப்போய் மாட்டிக் கொள்வதும் நாமே.

ஏன் இத்தனை கெடுபிடி? இத்தனை கெடுபிடிகள் இல்லாவிட்டால் அந்த தரத்தை நம்மால் கொடுக்க முடியாதா? இந்த இடத்தில் தான் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளை வளர்ந்த நாடுகள் பண்டாரமாக மாற்றுவது தொடங்குகிறது? பன்னாட்டு நிறுவனங்கள் அடிப்பது ஒரு கல்லில் இரு மாங்காய் அல்ல. ஒரு மரமே சாய்ந்து விடும், காரணம் பன்னாட்டு நிறுவனங்களின் முக்கிய ஆதாரமே விளம்பரங்கள் தான். அதற்கு கொட்டிக் கொடுக்கும் மில்லியன் கணக்கான டாலர்களை உற்பத்தி செய்பவர்களுக்கு கொடுக்க மனமிருக்காது.

இன்றுவரையிலும் இந்தியாவில் எந்த விளம்பரங்களும் தேவையில்லாமல் எத்தனையோ சிறு தொழில்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறத்தை அடிப்படையாக வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ஆடைகளின் உலகம் எப்படி இருக்கிறது ?

சற்றுப் பொறுத்திருங்கள் பார்க்கலாம்...

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

டாலர் நகரம் - 16

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள் என பலரையும் விட்டு வைக்காமல் பதம் பார்த்து வருகிறது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

சென்னையில் உள்ள அடையாறு திரைப்படக் கல்லூரியில் படித்து இந்தி சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது