கட்டுரைகள்

18. சந்தைக்கு போகலாம் வாரீங்களா ? காரைக்குடியில் ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் என்றொரு ஜவுளிக்கடை இருக்கிறது. தினந்தோறும் காலை ஒன்பது மணிக்கு கடையைத் திறப்பார்கள். முதலாளி உள்ளே நுழைந்து குளிர குளிர சாம்பிராணி புகையெல்லாம் போட்டு கல்லாப்பெட்டியில் உட்கார்வதற்குள் வெளியே காத்துக் கொண்டுருக்கும் கிராமத்து மக்கள் அத்தனை பேர்களும் திமுதிமுவென்று உள்ளே குறிப்பிட்ட பகுதிகளுக்குள் செல்வார்கள். இரவு கடை மூடும் வரைக்கும் கூட்டம் அம்மிக் கொண்டிருக்கும். கடையை மூடும் போது உள்ளே இருக்கும் அத்தனை பேர்களையும் கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறையாக கெஞ்சி வெளியேற்றுவார்கள்.

ஒவ்வொரு நாளும் இப்படித்தான் இருக்கும்.. தீபாவளி மற்ற பண்டிகையென்றால் சொல்லவே வேண்டாம். தலையா இல்லை அலையா என்பது போல் இருக்கும்.

இந்த நிறுவனம் இப்போது காரைக்குடியில் மூன்று கடைகளாக மாற்றம் பெற்றுள்ளது. சிறுவர்களுக்கு மற்றும் ரெடிமேட் ஆடைகளுக்கென்று தனித்தனியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்போதும் போல தலைமை நிறுவனம் தனியே என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரங்களில் தமன்னா சிநேகா தேவையில்லை. ஏன் முடிந்து போன சிம்ரன் கூட இல்லை. மொத்தத்தில் ஊடக விளம்பரங்களே தேவையில்லாமல் பிட் நோட்டீஸ் கூட இல்லாமல் இயல்பான லாபத்தில் நிறைவான சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களால் எப்படி இன்னமும் தாக்குப் பிடித்து முன்னேற முடிகின்றது?

இன்றைய தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஜவுளிக்கடைகளின் விளம்பரங்களை தினமும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள்? அவர்கள் தரும் தரமும் விலையும் நீங்கள் அறிந்தது தானே?

ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் கடைக்குள் நுழையும் எந்த கிராம மக்களும் ஏதோ ஒரு வகையில் முழுமையான திருப்தியுடன் தான் வெளியே வருவார்கள். அவர்கள் விரும்பும் தரம், விலை, உபச்சாரம் இதற்கெல்லாம் மேல் அந்த கடை ராசி என்ற ஒரு சொல் அவர்களை அங்கே இன்று வரையிலும் இழுத்துக் கொண்டிருக்கிறது.. தமிழர்களிடம் உள்ள முக்கியப் பிரச்சனையே இது தான். தலைவரோ, கடையோ பிடித்து விட்டால் போதும்? தலைகீழாக நின்றாலும் அந்த எண்ணத்தை மாற்றவே முடியாது. சிறந்த இரண்டு உதாரணங்கள். எம்.ஜி.ஆர் மற்றும் வேலுப் பிள்ளை பிரபாகரன்.

என்னுடன் ஐந்தாம் வகுப்பு வரை உடன் படித்து பிரிந்து போன சொக்கலிங்கம் சென்னையில் இருந்து தாத்தா பாட்டியைப் பார்க்க ஊருக்கு வரும் போது ஒரு தடவை காரைக்குடிக்கு என்னை அழைத்துச் சென்றான். அவன் வாழ்ந்த வடலூரில் படிக்கும் போது பெற்ற காதல் சகவாசத்தால் பனிரெண்டில் கோடடித்து சென்னைக்கு வேலைக்குச் சென்றவன். நான் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த போது சென்னையில் தோல் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தான். அவன் பார்த்துக் கொண்டிருந்த புதிய கலாச்சார வாழ்க்கையில் நான் அணிந்திருந்த உடைகள் எரிச்சலை தர ஐயப்பா டெக்ஸ்டைக்கு அருகே உள்ள பாம்பே டையிங் ஷோரூம் அழைத்துச் சென்றான். தபால் பெட்டியோடு என்னுடன் சுற்றியவன் தான், ஆனால் இப்போ அவன் சென்னைவாசி.

திட்டிக் கொண்டே ஒரு பேண்ட் சட்டை எடுத்துக்கொடுத்தான். வீட்டில் உதைப்பார்களே என்ற பயம் இருந்தாலும் அந்த துணி, நிறம், தரம் அடுத்த பத்தாண்டுகள் விட முடியாமல் என்னுடனே இருந்தது. ஐயப்பா போல் மூன்று மடங்கு விலை. ஆனால் உழைத்த காலத்தைப் பார்த்தால் பல மடங்கு விலை குறைவு. இன்று வரைக்கும் நுஸ்லிவாடியா சொந்த நிறுவனத்தில் தயாராகும் துணிகளை விட வெளியே சிறிய நிறுவனங்களில் உற்பத்தி செய்து தரம் பார்த்து தங்களுடைய பெயர் வைத்து விற்பது தான் அதிகம். இது எப்படி முடிகிறது?

அவனுடன் சென்னை வந்த போது அமிஞ்சிக்கரையில் இப்போது இடிக்கப்பட்ட அருண் ஹோட்டல் பின்னால் உள்ள இடுக்குச் சந்தில் உள்ளே சென்ற போது சிறிய வீடுகளுக்குள் தையல் எந்திரங்கள் போட்டு நிறைய பேர்கள் உழைத்துக் கொண்டிருந்தார்கள். மலேசிய ஆண்கள் விரும்பி அணியக் கூடிய பேத்திக் பிரிண்ட் (BATIK PRINT) வகையிலான துணிகள். அத்தனையும் அப்போது பாம்பே டையிங் கடைகளில் சிறப்பாக விற்றுக் கொண்டிருந்தார்கள். அதைப் போட்டுக் கொண்டு சாலையில் நடந்தால் நாய் துரத்துமோ என்று பயமாக இருக்கும். ஆசை யாரை விட்டது?

காற்றுக் கூட புக முடியாமல் இருக்கும் அந்த சிறிய இடங்களுக்குள் தைத்துக் கொடுத்துக் கொண்டிருப்பது இந்திய அளவில் உள்ள பல முக்கிய (BRANDED LABELS) நிறுவனங்களுக்கு. துணியாக தேவைப்படும் அளவிற்கு வெட்டி உள்ளே வரும். தைத்து மட்டும் கொடுப்பார்கள். அவர்களுக்கு கிடைப்பது தையல் கூலி மட்டுமே. சிலர் நிறுவனங்கள் விரும்பும் மொத்த வேலைகளையும் முடித்துக் கொடுப்பார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த கூலியை நிறுவனங்களில் விற்கப்படும் விற்பனை விலையையும் பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரமாக இருந்தது. எதனால் இப்படி?

திருப்பூருக்குள் இரண்டு வகையிலான தொழில் வாழ்க்கை வாழ்பவர்கள் உண்டு. ஆடைத் தொழிலுக்குத் தேவைப்படும் அத்தனை விசயங்களை கட்டி மாரடித்துக் கொண்டு அவஸ்த்தைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம். வடநாட்டில் இருந்து இங்கு வந்து தொழிலுக்கு தேவைப்படும் அத்தனை துறைகளையும் பல்வேறு விதமாக பயன்படுத்திக் கொண்டு ஹாயாக பத்துக்கு பத்து அறையில் இருந்து கொண்டு பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர்கள் மறு பக்கம். இவர்களால் எப்படி ஜெயிக்க முடிகிறது?

ஒரே ஒரு வார்த்தை தான் இதற்கு பதிலாக இருக்க முடியும்?

சந்தைப்படுத்துதல் (MARKETING) என்ற வார்த்தை தான் மந்திரச் சொல் போல் பல நிறுவனங்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. திருப்பூரில் இருப்பவர்களுக்கு இன்றுவரையிலும் எப்படி உழைக்க வேண்டும் என்பதைக் கூட கற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள். டெல்லியில் இருந்து இங்கு வந்து உட்காருபவர்கள் இங்குள்ளவர்களை வேலைவாங்கி முடிந்த அளவிற்கு புத்திசாலித்தனமாய் தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரே காரணம் இந்தியா முழுக்க இருக்கும் தொடர்பும் வெளிநாட்டுத் தொடர்புகளுமே காரணமாகும்.

கடந்த மூன்று வருடங்களாகத்தான் திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களின் நிர்வாகம், படித்த இளம் தலைமுறையினர் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். தொடக்கம் முதல் ஒவ்வொரு நிறுவனத்திற்குள்ளும் புழங்கிக் கொண்டுருந்த சொல் கணக்கு புள்ள. இங்குள்ள எந்த ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும், எந்த பதவி என்றாலும் கணக்கு புள்ள என்று அழைத்தார்கள். கூறுகெட்ட முதலாளிகளும் இப்படித்தான் அழைத்தார்கள். கூலியாட்களைப் போலத்தான் நடத்துவார்கள். எப்படி வேலை வாங்க வேண்டும் என்பது கூட தெரியாமல் எப்போதும் ஏதாவது ஒரு வேலையை செய்ய வைக்க வேண்டும் என்று ஏதோவொரு வேலையை கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். முதலாளிகளின் பார்வைக்கு அத்தனை பேர்களும் திருடனாகத்தான் தெரிந்தார்கள். இவர்களின் அக்கிரமத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் வந்தவர்கள் ஒவ்வொருவரும் திருடத்தான் செய்தார்கள். .ஆனால் எந்த முதலாளியும் தொடக்க காலத்தில் தங்களது நிறுவன நிர்வாகத்தில் கவனம் செலுத்தியதேயில்லை.

நிறுவனத்திற்கு ஏதோவொரு வழியில் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் உள்ளே வந்து விடும். அதை சரியான முறையில் செய்து அனுப்ப வேண்டுமென்று தோன்றாமல் கோட்டை விட்டவர்கள் தான் அதிகம். இறக்குமதியாளர்கள் போட்ட எல்லைக் கோடுகளைத் தாண்டி உதைபட்டவர்களும் உண்டு. கடைசியில் சொத்தை இழந்தது தான் மிச்சம். தொடக்கத்தில் உள்ளே வந்து கொண்டிருந்த இறக்குமதியாளர்கள் அள்ளிக் கொடுத்தார்கள். இவர்களால் வளர்த்துக் கொள்ள முடியாத அறிவைப் பார்த்து பிறகு கிள்ளிக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

இப்போது திருப்பூர் படித்த தலைமுறைகளின் கைகளில் வந்துள்ளது. ஆனால் உள்ளே வரவேண்டிய பல வெளி நாட்டு நிறுவனங்கள் இன்றும் கூட தயங்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள். எதைச் செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? இந்த மூன்றும் கேள்வியாக எழுமானால் இங்கே வெற்றிடம் தான் மிஞ்சும். காரணம் சந்தைப்படுத்துதல் எப்படி என்பதை விட மற்றவர்களை சங்கடப்படுத்துதல் எப்படி என்பதில் தான் இங்குள்ள முதலாளிகளுக்கு கவனம் அதிகம்.

கிராமம் சார்ந்த நிறுவனங்களுக்கு தரம் முக்கியம். அது மட்டுமே போதுமானது. ஆனால் பெரிய நகரங்களில் தரத்தைத் விட கூவி அழைத்தல் முக்கியமானது. அது ஏற்றுமதி நிறுவனமாக இருக்கட்டும். அல்லது ஜவுளிக்கடையாக இருக்கட்டும். சந்தைப்படுத்துதலில் கவனம் இல்லாம் விட்டால் தொழில் விரைவில் சங்கடப்படப் போகிறது என்று அர்த்தம்.

கிராமங்களில் அதிக மக்கள் வாழ்கின்ற வரைக்கும் அவர்களின் அடிப்படையான நம்பிக்கைகள் சிதையாத வரைக்கும் விளம்பரம் என்பது தேவை இல்லாமல் இருந்தது. ஒரு சொல் போதும்., " ஒரு தடவை செட்டியார் கடையில வாங்கிப்பாரு. வருஷம் வருஷம் நகை எடுத்துக்கிட்டே இருப்பே." "அந்தக் கடையில மளிகை சாமான் வாங்கினால் மூணு மாசம் ஆனாலும் புழு புடிக்காது. நாத்தம் வராது. " இது போன்ற பல வாய் வழியே பரவும் விளம்பரங்களுக்கு எந்த செலவும் தேவை இல்லை.

கிராம வாழ்க்கை சிதைய ஒவ்வொன்றும் மாற ஆரம்பித்து,. விவாசயம் செழிப்பாக இருந்தால் ஏன் வெளியே கிளம்பப் போகிறார்கள்? வானம் பார்த்த பூமியே அவர்களை எங்கங்கோ விரட்டி இன்று திருப்பூர் முழுக்க கிராமத்து மக்களால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எந்த அமைச்சரும் இது குறித்து கவலைப்பட மாட்டார்கள். காரணம் விவசாயிகளுக்கு உதவி செய்தால் எந்த பிரயோஜனமும் இருக்காது. அதுவே வெளியே வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உதவினால் பல வகையிலும் ஆதாயம் கிடைக்கும். புரிந்தவர்கள் தலைவர்கள். புரிந்தும் பணத்துக்கு ஓட்டுப் போடுபவர்கள் மக்கள்.

இன்று நீங்கள் எந்த தொலைக்காட்சி, வானொலி எதைப் பார்த்தாலும் கேட்டாலும், யாரோ ஒருவர் ஆடிக்கொண்டு பாடிக்கொண்டு சில சமயம் கத்திக்கொண்டு நம்மை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். நாமும் நாகரிகம், கவர்ச்சி, கௌரவம் போன்ற கண்ட கருமாந்திரத்தையும் வைத்துக் கொண்டு காசை மனங் கோணாமல் போய் கொடுத்து விட்டு வருகிறோம். எந்த காதிகிராப்ட் கடையில் விளம்பரம் செய்கிறார்கள். கண்றாவி ஷாம்புக்கு யாரோ ஒருவர் ஆடுகிறார். நாமும் தேடித்தேடி ஓடுகிறோம். சீயக்காய் தூளைப் பார்த்தால் ச்சீ என்று முகத்தை திருப்பிக் கொள்கிறோம். முடியெல்லாம் உதிர்ந்த பிறகு முடி ஒட்டும் வல்லுநரிடம் போய் தலையைக் கொடுக்க யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

தனி மனிதனின் மனம் தான் தரமில்லாத அத்தனையையும் வளர்க்க காரணமாக இருக்கிறது. தொடக்கத்தில் மானத்தை மறைக்க இந்த ஆடை தேவையாய் இருந்தது. அதுவே இன்று நாகரிகம் என்ற பெயரில் மனித நாகரிகத்தின் அடிப்படை விதிகளையே மாற்றிவிட்டது. இன்று உலகம் முழுக்க இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் எத்தனை இருக்கிறது தெரியுமா?

விவசாய துறைக்கு அடுத்த முக்கியத்துவமே இந்த ஜவுளித் துறையே? வால்மார்ட், கே மார்ட், பேமிலி டாலர், எஸ் ஆலிவர், ஹெச்.எம் என்று தொடங்கி பாகாசுர நிறுவனத்தின் ஆதிக்கம் இல்லாத நாடுகளே இல்லை என்கிற அளவிற்கு எங்கெங்கு காணினும் பல்வேறு பெரிய நிறுவனங்கள் இருக்கிறது. ஆடைத் தொழிலில் முக்கியமான அத்தனையையும் தீர்மானிப்பவர்கள் இவர்களே. உங்கள் குடும்பம் என்ன மாதிரியான உடைகள் உடுத்த வேண்டும் என்று தொடங்கி உங்கள் நிற விருப்பம் போன்ற பலவற்றையையும் இவர்கள் தான் நேரிடையாகவோ மறைமுகமாகவோ தீர்மானிக்கிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்கள் போலவே இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு நிறுவனங்கள் மட்டும் தான் லாபகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அடி முதல் நுனி வரை உழைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்போதும் போல ஓடாய் தேய்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த லேபிள் உள்ள ஆடையை அணிந்தால் தான் சிறப்பு. இந்த கதாநாயகி சொன்ன உடை இது என்று எப்போது உங்கள் மனதில் தோன்றிவிட்டதோ அன்றே நீங்கள் பலரின் வாழ்க்கையையும் மறைமுகமாக கெடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். காரணம் அவர்கள் சந்தையை நன்றாக புரிந்து கொண்டவர்கள்.

இவர்கள் சந்தையில் ஆட்டம் காட்டும் வித்தை இருக்கிறதே? ஐயன் திருவள்ளுவர் வந்தால் கூட இவர்கள் ஒரு வருட ஒப்பந்தத்தில் ஒட்டுத் துணியோடு நடிக்க வைத்துவிடுவார்கள்? எப்போதும் போல உழைத்துக் கொண்டிருப்பவர்கள் கட்டிய துணியையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் சுயநல ஆசையால் எதிர்கால சமூகமே அழிந்து போய்விடும் போலிருக்கிறது.

யோசிப்போமா..?

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

டாலர் நகரம் - 17

நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடிகை’யை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானர் 35 வயது இயக்குநர் நாக் அஷ்வின்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது