கட்டுரைகள்

மனித இனத்தின் அறிவுத் தேடலில் இப்பிரபஞ்சத்தின் மிகச் சிறிய கூறுக்களான அணுக்களில் (Atoms) இருந்து மிகப்பெரிய அண்டங்கள் (Galaxies) வரை இரு துறைகளும் முக்கியமாக உள்ளடக்கப் பட்டுள்ளன.

இன்றைய நவீன யுகத்தில் நாம் அணுக்களில் மேலும் பிரிக்க முடியாத அதாவது மிகச் சிறியதன் (கரு, புரோட்டன் மற்றும் இலத்திரன்கள்) இருப்பை அறிந்துள்ளோம்.

ஆனால் நம் கண் பார்வைக்குத் தெரிந்த பூமியின் தரையில் உள்ள ஒரு பூங்காவில் இருந்து நவீன விண்தொலைக் காட்டிகளால் அவதானிக்கப் படக்கூடிய மிகப் பெரிய வெளியான (Observable Universe) அண்டங்களின் கூட்டு (clusters of galaxies) வரை அமைந்துள்ள ஒவ்வொரு விண் பொருட்களினதும் பருமன் ஒப்பீடு எத்தகையது என கேள்விப் பட்டிருக்க மாட்டோம்.

நட்சத்திரப் பயணங்களின் இன்றைய இறுதிப் பாகத்தில் இந்த ஒப்பீடை நாம் 13 படங்களின் ஊடாக விளக்கவுள்ளோம். ஒவ்வொரு படமும் முன்னைய படத்தினை விட 100 மடங்கு பரப்பளவு உருப்பெருக்கம் உடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

(நட்சத்திரப் பயணங்கள் வானவியல் கட்டுரைத் தொடரின் முன்னைய பகுதிகளை இக்கட்டுரையின் இறுதியில் உள்ள இணைப்புக்களை அழுத்துவதன் மூலம் அங்கு சென்று பார்வையிட முடியும்...)

படம் 1 :


16 மீட்டர் (52 அடி) விட்டமுடைய ஒரு பூங்காவில் மனிதன் ஒருவன் அமர்ந்திருக்கும் இந்தப் படம் தெளிவாக எமது பார்வை வீச்சத்துக்கு உட்பட்டது.

படம் 2 :

முன்னையதை விட 100 மடங்கு பரப்பளவு உருப்பெருக்கிய இந்தப் படம் 1.60Km (1 mile) விட்டமுடையது. USGS எனப்படும் அமெரிக்க புவியியற் திணைக்களத்தால் எடுக்கப் பட்ட இப்படத்தில் முந்தைய படத்தில் காட்டப் பட்டுள்ள எமது கண் பார்வைக்குட்பட்ட மரங்கள் சிறிய பாதை மற்றும் மனிதன் ஆகியோர் மறைந்து விட்டாலும் நம் அன்றாட வாழ்வில் பரிச்சயமான கல்லூரி வளாகம், வீடுகள், பாதைகள் என்பன தெளிவாகத் தெரிகின்றன. மேலும் இந்த ஒரு மைல் தூரத்தினை நாம் சில வேளைகளில் நடந்தே சென்றிருப்போம் என்பது முக்கியமானது.

படம் 3 :


சுமார் 160Km விட்டமுடைய இந்த புகைப்படம் நாசாவின் அகச்சிவப்புப் புகைப் படக் கருவியால் (Nasa infrared photograph) எடுக்கப் பட்டது. இதில் எமது கண் பார்வைக்கு உட்பட்ட பகுதிகளும், பல்கலைக் கழக வளாகம் வீதிகள் என்பன மறைந்து விட்டன. எனினும் புவியியற் கூறுகளான நதிப் படுக்கைகள், மலைத்தொடர்கள், ஏரிகள் பள்ளத்தாக்குகள் என்பன தென்படுகின்றன.

படம் 4 :

எமது கண்பார்வை வீச்சுக்கு உட்பட்ட பூங்காவில் (16 மீட்டர் விட்டம்) இருந்து சுமார் 1 மில்லியன் மடங்கு பெரிதாக பூமி அமைந்துள்ளது. (12 756 Km விட்டம்) நமது பூவி மேற்பரப்பில் வளி மண்டலத்தின் தடிப்பு வெறும் சில நூறு கிலோ மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் 5 :


படம் 4 ஐ விட 100 மடங்கு உருப்பெருக்கம் செய்யப் பட்ட இப்படத்தில் நமது பூமியும் அதன் துணைக் கோளான சந்திரனும் சிறு புள்ளிகளாகக் காணப் படுகின்றன. இந்தப் படத்தின் விட்டம் 1 600 000 Km ஆகும். பூமியின் விட்டத்தின் 1/4 பங்கு சந்திரனின் விட்டம் என்பதுடன் பூமியில் இருந்து 380 000 Km தூரத்தில் அது பூமியைச் சுற்றி வருகின்றது.

படம் 6 :

படம் 5 ஐ விட 100 மடங்கு பெரிய இந்தப் படத்தில் முன்னர் காட்டப் பட்ட பூமியும் சந்திரனும் ஒரு சிறு புள்ளிக்குள் அடங்கி விடுவதுடன் சூரிய குடும்பத்தில் அதற்கு அண்மையாகச் சுற்றி வரும் வெள்ளியும், புதனும் உள்ளே வந்து விடுகின்றன. இதன் விட்டம் (1.6 * 10 இன் வலு 8) Km ஆகும் இப்போது நாம் AU (Astronomical Unit) எனப் படும் புதிய அலகைப் பாவிப்போம். (1AU = சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான சராசரித் தூரம் அல்லது 1.5 * 10 இன் வலு 11 m ஆகும்.) சூரியனுக்கும் புதனுக்குமான தூரம் 0.39 AU மற்றும் சூரியனுக்கும் வெள்ளிக்குமான தூரம் 0.7 AU உம் ஆகும்.

படம் 7 :


நமது பார்வை வீச்சத்துக்கு உட்பட்ட பூங்காவான படம் 1 ஐ விட 6 மடங்கு அதாவது ஒரு டிரில்லியன் மடங்கு (10 இன் வலு 12 மடங்கு) பெரிது நமது முழு சூரிய குடும்பமும் ஆகும். இதில் நாம் முன்னர் பார்த்த சூரியனுக்கு அருகிலுள்ள கோள்களான புதன்,வெள்ளி மற்றும் பூமி,சந்திரன் என்பன மையத்தில் சிறு புள்ளியில் அடங்கி விடுகின்றன. இவற்றுக்கு அப்பால் 1.5 AU தூரத்தில் செவ்வாய் அமைந்துள்ளது. சூரியனிலிருந்து பூமிக்கு ஒளி வர 8 நிமிடங்களும் ஆனால் சூரியனில் இருந்து மிகத் தொலைவிலுள்ள நெப்டியூனுக்கு ஒளி சென்று சேர 4 மணித்தியாலங்களும் எடுப்பதாகவும் கணிப்பிடப் பட்டுள்ளது.

படம் 8 :


சூரிய குடும்பத்தை உள்ளடக்கிய முன்னைய படத்தை இன்னமும் 100 மடங்கு பெரிதாக்கினால் தெரிவது வெறும் சூரியனே ஆகும். இதன் விட்டம் 11 000 AU என்பதுடன் பிரபஞ்சத்தில் பில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருப்பினும் அவற்றில் ஒன்று கூட இப் புகைப் படத்தில் வரவில்லை. இதற்குக் காரணம் அவை சூரியனை விட இன்னமும் மிகத் தூரத்தில் அதாவது பல ஒளியாண்டுகள் (ஒளி ஒரு வருடத்துக்குப் பயணிக்கும் தூரம் 10 இன் வலு 13 Km அல்லது 63 000 AU ஆகும்) தொலைவில் அமைந்திருப்பதனால் ஆகும். நமது சூரியனில் இருந்து மிக அருகில் உள்ள நட்சத்திரமான Proxima Centaury கூட 4.2 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இது நமது அடுத்த புகைப்படத்தில் உள்ளடக்கப் படுகின்றது.

படம் 9 :


படம் 8 ஐ விட 100 மடங்கு பெரிய இப்புகைப் படத்தில் சூரியன் காட்டப் படுவதன் நோக்கம் அதன் நிலையைக் குறிப்பதற்கேயாகும். மேலும் இதிலும் சூரியன் மையமாகக் கொண்டே கணிக்கப் பட்டுள்ளது. இப்புகைப் படத்தின் விட்டம் 17 Ly ஒளி வருடங்கள் (1 மில்லியன் AU ஐ விட அதிகம்) இதில் Proxima Centaury உட்பட சூரியனுக்கு அண்மையில் உள்ள சில நட்சத்திரங்கள் காட்டப் படுகின்றன. இப்படத்தில் நட்சத்திரங்களின் பருமன் (தடிப்பம்) அவற்றின் நிஜமான அளவை அல்லாது பிரகாசத்தையே குறிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

படம் 10 :


படம் 9 ஐ விட 100 மடங்கு பெரிய இப்புகைப்படம் உருவகப் படுத்தப் பட்ட ஒன்றாகும். சுமார் 1700 Ly ஒளி வருடங்கள் விட்டமுடைய இப்படத்தில் சூரியனுடன் அதன் அருகிலுள்ள நட்சத்திரங்கள் மறைந்து விட மெல்லிய குழுக்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான ஏனைய நட்சத்திரங்கள் காணப் படுகின்றன. இவற்றுக்கிடையே Clouds எனப் படும் மெல்லிய வாயுப் படைகள் உள்ளன. இவ்வாயுப் படலம் நமது பார்வைக்குத் தெரியாதது என்பதுடன் பூமியில் உள்ள மிகச்சிறந்த வெற்றிடத்தை விட மெல்லியவை எனவும் கூறப்படுகின்றது. இது போன்ற ஒரு Cloud இல் இருந்தே 5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நமது சூரியன் தோன்றியது எனவும் கூறப்படுகின்றது.

படம் 11 :


படம் 10 ஐ விட 100 மடங்கு பெரியது நமது சூரியன் உட்பட 100 பில்லியன் நட்சத்திரங்களைக் கொண்டுள்ள பால்வெளி அண்டமாகும் (Milkyway Galaxy). இதன் விட்டம் 75 000 Ly ஒளி வருடங்கள் ஆகும். நமது சூரியன் இதனுடன் ஒப்பிடுகையில் மிக மிகச் சிறிது என்ற போதும் அதன் நிலை பால்வெளி அண்டத்தின் மத்தியில் இருந்து 2/3 பங்கு தூரத்தில் அதன் சுருளில் அமைந்துள்ளது எனக் கணிக்கப் பட்டுள்ளது. அண்டம் எனப் படுவது (Galaxies) நட்சத்திரங்கள், வாயுப் படை மற்றும் தூசுகள் இணைந்த மிகப் பெரிய முகில் அல்லது இவற்றின் மொத்த ஈர்ப்பு விசையின் மையம் ஆகும். இவை 1500 தொடக்கம் 300 000 Ly விட்டங்களைக் கொண்டிருக்கும் என்பதுடன் வடிவமும் வேறுபடும்.

படம் 12 :


பால்வெளி அண்டத்தின் பருமனை விட 100 மடங்கு பெரிய 17 மில்லியன் Ly விட்டம் கொண்ட வெளியைக் கருதினால் அதில் நமது அண்டம் மிகச் சிறிய புள்ளியாக ஏனைய அண்டங்களின் கூட்டில் (Cluster) இன்னும் சில அண்டங்களுடன் அமைந்து இருக்கும். தற்போது வானியலாளர்களை மர்மத்தில் ஆழ்த்தி வரும் விடயங்களில் ஒன்று அண்டங்களில் பல சுருள் வடிவிலும், சில ஏனைய வடிவங்களிலும் இன்னும் சில சிதைவடைந்தும் காணப் படுவது ஏன் என்பதாகும்.

படம் 13:அதியுயர்ந்த தொலைக் காட்டிகளுக்குக் கூட எட்டாத பிரபஞ்சத்தின் இறுதி உருவக வடிவம் இதுவாகும். இதில் தெரியும் மிகப் பெரிய வலையமைப்பு (Network) இல் அடங்கியிருப்பது அண்டங்களின் கூட்டு (Clusters), சூப்பர் கிளஸ்டர்ஸ் (Super Clusters), மற்றும் கிளஸ்டர்க்ளின் கூட்டு (Clusters of Clusters) ஆகியவை ஆகும். இவற்றின் எல்லைகள்(edge), சுவர்கள் (wall), இழைகள் (Filaments), சுழியங்கள் (Voids) என்பன இணைந்து கிட்டத்தட்ட அனைத்து பில்லியன் கணக்கான அண்டங்களினதும் வெற்றிட வெளியாகவும் இவை விளங்கும். இவற்றின் கட்டமைப்புக்களை அறிய முற்படும் போது நாம் மனித அறிவின் முதல் நிலையில் இருப்போம் என வானியலாளர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை இந்த பில்லியன் கணக்கான அண்டங்கள் அவற்றுக்கு உள்ளே பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களில் பூமிக்கு ஒப்பாக உயிர்வாழ்க்கையோ அல்லது மனிதனுக்கு ஒப்பான அறிவுடைய உயிரினமோ இருப்பதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்கலாம் எனவும் ஆனால் இவற்றை உறுதி பட அறிவது மிகச் சிரமம் எனவும் அறிவியலாளர்கள் கூறி வருகின்றனர்.

விரைவில் நட்சத்திரப் பயணங்கள் தொடரைப் புதிய வடிவில் வாராந்தம் எதிர் பாருங்கள்....

நன்றி - தகவலுதவி, Horizons (Michael.A.Seeds)

 

முன்னைய பதிவுகள் :

நட்சத்திரப் பயணங்கள் 31 (பிரபஞ்சவியல் 14, காலமும் வெளியும்)

நட்சத்திரப் பயணங்கள் 32 (பிரபஞ்சவியல் 15, காலமும் வெளியும் 2)

நட்சத்திரப் பயணங்கள் 33 (பிரபஞ்சவியல் 16, காலமும் வெளியும் 3)

நட்சத்திரப் பயணங்கள் 34 (பிரபஞ்சவியல் 17, காலமும் வெளியும் 4)

நட்சத்திரப் பயணங்கள் 35 (பிரபஞ்சவியல் 18, காலமும் வெளியும் 5)

நட்சத்திரப் பயணங்கள் 36 (பிரபஞ்சவியல் 19, காலமும் வெளியும் 6)

நட்சத்திரப் பயணங்கள் 37 (பிரபஞ்சவியல் 20, காலமும் வெளியும் 7)

நட்சத்திரப் பயணங்கள் 38 (பிரபஞ்சவியல் 21, காலமும் வெளியும் 8)

நட்சத்திரப் பயணங்கள் 39 (பிரபஞ்சவியல் 22, காலமும் வெளியும் 9)

 

- 4 தமிழ்மீடியாவுக்காக: நவன்

நடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள்  இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன. 

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.