கட்டுரைகள்

 

20. பணம் துரத்திப் பறவைகள் நான் தினந்தோறும் அந்த குடியிருப்பை கடந்து தான் செல்ல வேண்டும். நான் குடியிருக்கும் நவீன குடியிருப்புகளுக்கு அருகே தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வீடுகளும் இருக்கிறது. ஒவ்வொன்றும் தனித் தனியாக கட்டப்பட்ட வீடுகளாகும்.

நான் ஒவ்வொரு முறையும் அந்த குடியிருப்பை கடந்து தான் என் வீட்டுக்குள் வர வேண்டும். நான் வீட்டுக்குள் வந்து சேரும் போது தினந்தோறும் ஏதோவொரு சண்டை அந்த வீடுகளுக்குள் நடந்து கொண்டேயிருக்கும். இடைவிடாமல் நடுசாமம் வரைக்கும் கேட்டுக் கொண்டேயிருக்கும். அவர்களின் சண்டையில் அத்தனை செந்தமிழ் வார்த்தைகளும் தொடர்ச்சியாக என் வீடு வரைக்கும் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

அவர்கள் உரக்கப் பேசும் வார்த்தைகளில் ஒழுக்கம் இல்லாமல் அத்தனை வார்த்தைகளும் தீயாய் வந்து என் காதுகளில் கேட்கும். ஆண் குரலில் தொடங்கி உள்ளேயிருக்கும் அத்தனை பெண்மணிகளும் கலந்து கடைசியில் அடிதடியுடன், ஒப்பாரிகளும் ஓலமுமாய் முடியும். அந்த குடியிருப்பை தாண்டி வாகனத்தில் கடந்து போய்க்கொண்டிருப்பவர்களுக்கும், சாலையில் நடந்து போய்க் கொண்டிருப்பவர்களுக்கும் இதுவொரு இயல்பான நிகழ்ச்சியாகும்.

இந்த வீடுகளின் அமைப்பு வினோதமாக இருக்கும். நீள்வாக்கில் செவ்வக வடிவில் இருக்கும். அந்த இடத்தில் இருந்த பள்ளத்தை மூடி கட்டப்பட்ட வீடுகளாகும். வரிசையான ஓட்டு வீடுகள். கொங்கு பூமியில் பாறைக்குழி என்றொரு வினோத அமைப்பு உண்டு. வெடிகுண்டி வைத்து தாக்கினாலும் தகர்க்க முடியாத இறுக்கமான பாறைகளை உடைத்து மாற்றி அந்த இடத்தில் வீடு கட்டியிருப்பார்கள். இது போன்ற பாறைக்குழியில் தான் இந்த வீடுகளும் கட்டுப்பட்டு இருந்தது. இது போன்ற இடங்களில் கட்டப்பட்ட எளிமையான வீடுகளில் தான் தொழிலாளவர்க்கங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வரிசைக்கு பத்து என்று கணக்கில் இரண்டு வரிசையில் மிக குறுகிய இடத்தில் இருபது வீடுகள் கட்டப்பட்டு இருக்கும்.. வினோதமான வடிவமைப்பில் வாஸ்து தேவைப்படாத பத்துக்கு பத்தில் இருக்கும்படியான ஒரே ஒரு அறை மட்டுமே இருக்கும். இதுவே தான் அவர்களுக்கு வரவேற்பறை முதல் படுக்கையறை வரைக்குமாய் இருக்கிறது. ஒரே அறையுள்ள அந்த வீடுகள் ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சொர்க்கம்.

தட்டுக்கடை, வண்டிக்கடை, காய்கறி தள்ளுவண்டி என்று தொடங்கி ஏற்றுமதி நிறுவனங்களில் காவலாளிகளாக பணிபுரிவோர்கள் வரைக்கும் இது போன்ற வீடுகளில் தான் வசித்துக் கொண்டுருக்கிறார்கள். மாதம் 5000 ரூபாய்க்கு கீழே வருமானம் பார்க்கும் அத்தனை மனிதர்களுக்காகவே உருவாக்கப்பட்டது தான் இது போன்ற காளான் குடியிருப்புகள்.

தொழில் நகரங்களில் வரைமுறையில்லாமல் வளர்ந்து கொண்டிருக்கும் புறநகர் குடியிருப்புகளில் எந்த அடிப்படை வசதிகளும் இருப்பதில்லை. ஆள்பவர்களுக்கும் அது குறித்து அக்கறை இருப்பதுமில்லை. ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வரும் போதும் அவரவர்களுக்கு உண்டான தனித்தனி அரசியல் கணக்குகள் இருக்கும். தலைவர்களின் அரசியல் கணக்குகள் முடிவுக்கு வரும் போது சில சமயம் முழித்துக் கொண்டு வந்து விசாரிப்பதுண்டு. ஆனால் இறுதித் தீர்வென்று எப்போதும் கிடைப்பதில்லை. இது போன்ற வீடுகளைச் சுற்றி வழிந்தோடும் சாக்கடைகளும், வந்து போய்க் கொண்டிருக்கும் தொற்று நோய்களையும் இங்கு வசிப்பவர்கள் பொருட்படுத்திக் கொள்வதில்லை.

ஒவ்வொரு மனிதனின் மனமென்பது தங்களுடைய அடுத்த போராட்டத்திற்கு தயாராய் இருக்கும் போது அவரவர் உடம்பும் எதையும் ஏற்றுக் கொண்டு விடுகின்றது.

தொடக்கத்தில் இது போன்ற வீடுகளின் மாத வாடகை 300ல் தொடங்கியது. இப்பொதேல்லாம் 1500 கொடுத்தாலும் ஐந்து மாதம் கழித்து வா? என்கிறார்கள். ஆனால் ஒவ்வொருவரும் இது போன்ற வீடுகளுக்காக வரிசை கட்டி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கிராமங்களில் வாழ்ந்த பெண்களுக்கு நகர்புறங்களில் வந்து வாழத் தொடங்கும் போது மிகுந்த பிரயாசைப்பட்டே தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் கிராமத்து உழைப்புக்கும் இங்கு வந்து ஏற்றுக் கொண்ட நகர் வாழ்க்கை உழைப்பிற்கும் பெரிதான வித்யாசங்கள் இருப்பதில்லை.

கணவன், அண்ணன், தம்பி, மகள், மகன் என்று குடும்ப சகிதமாக உழைத்துக் கொண்டிருந்தாலும் ஒவ்வொருவரின் ஆசைகளும் தினந்தோறும் இங்கு 18 மணி நேரம் வேலை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது. ஊரில் செலுத்த வேண்டிய கடன்களுக்காகவும், பொறுப்பில்லாமல் திரியும் கணவனையும் தாண்டி ஆயிரக்கணக்கான பெணக்ள் இந்த திருப்பூருக்குள் உழைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

பெண்களின் பணி நேரமென்பது ஒவ்வொரு நாளும் காலை எட்டு மணிக்குள் நிறுவனத்திற்குள் இருக்க வேண்டும். காலை ஐந்து மணிக்குள் சமையல் செய்தாக வேண்டும். இதற்கிடையே பெண்களின் மற்றொரு வேலையில் கவனம் வைத்தாக வேண்டும். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அவசரமாய் டப்பாவில் காலைக்கும் மதியத்திற்கும் சேர்த்து உணவை அடைத்துக் கொள்ள வேண்டும். இரவு ஒரு மணி வரைக்கும் வேலையென்றால் நிறுவனங்களுக்கருகே கிடைக்கும் இரண்டு புரோட்டாக்கள் தான் உணவாகயிருக்கும்.

நடு இரவு வேலை முடித்து வந்தாலும் மறுநாள் காலை எப்போதும் போல காலை ஐந்து மணிக்கு எழுந்து தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் காலை எட்டு மணி வேலைக்கு செல்லமுடியாது. இரவு எத்தனை மணிக்கு வேலை முடிகின்றது என்பது முக்கியமல்ல. மறுநாள் காலை எட்டு மணிக்கு நுழைவது தான் முக்கியமாக இருக்கும். அரை மணி நேரம் தாமதம் என்றாலும் உள்ளே அனுமதிக்கமாட்டார்கள்.

இதற்கெல்லாம் மேல் ராத்திரி குடித்து விட்டு புரண்டு கிடக்கும் கண்வன் என்ற தெய்வத்தை கண்டும் காணாமல் கடந்து செல்ல வேண்டும். கைபட்டு கால்பட்டு கண் முழித்து விடடால் அன்று பஞ்சாயத்து முடிய மதியம் ஆகிவிடும். நிறுவனங்களில் கூட்டிப் பெருக்குபவர்கள் முதல் தைப்பவர் வரைக்கும் கலந்து கட்டி அடிக்கும் கலாச்சார வாழ்க்கையில் வாழ்பவர்கள் அத்தனை பேர்களும் இது போன்ற குடியிருப்புகளில் தான் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு தான் ஒவ்வொருவரும் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.

அம்மா வேலைக்குச் சென்றதும் தனக்குத் தானே உதவியாய் பைக்கட்டை சுமந்து அருகே இருக்கும் அரசாங்கப் பள்ளியில் எதிர்கால கனவுகளுடன் உள்ளே நுழையும் குழந்தைகளுக்கு எந்த பிடிமானமும் இருக்காது. பள்ளி முடிந்து மாலை திரும்பி வரும் போது மறுபடியும் தனக்குத் தானே உதவியாய் கழுவாத பாத்திரங்களுடன் பார்த்து எடுத்து பசியாறி அம்மாவுக்காக காத்திருக்க வேண்டும். அறிவை வளர்க்க வேண்டிய புத்தகங்கள் பல நாட்கள் ஏதோவொரு மூலையில் அனாதையாய் கிடக்கும். மொத்த குடும்பமும் ஏதோவொரு நிறுவனத்தில் துணியோடு துணிவோடு போராடிக் கொண்டு இருப்பார்கள்.

சில சமயம் வேலை முடித்து ஒன்பது மணிக்கு உள்ளே நுழையும் அம்மாவின் குரலை பாதி தூக்கத்தில் காதுகள் கேட்கும். குழந்தைகளின் மூளை உணராது. 12 மணி நேரமும் நின்று கொண்டே பார்த்த வேலையில் பாதி உயிருடன் வந்து நிற்கும் அம்மாவுக்கும் மூலைக்கொன்றாய் புரண்டு கிடக்கும் குழந்தைகளின் பாசத்தை விட அவளின் உயிர் கேட்கும் பசியே பிரதானமாய் இருக்கும். குழந்தைகள் கொட்டி கவிழ்த்து இருந்தால் கூட திட்ட முடியாமல் இருப்பதை உண்டு ஓரமாய் சுருள வேண்டும். காலையில் எழும் போது காதுக்குள் கேட்கும் இரைச்சல் காணாமல் போயிருக்கும்.

நாம் வாழ வேண்டிய வாழ்க்கையை அதன் போக்கிலேயே பழகிவிட்டால் கட்டாந்தரை கூட பஞ்சு மெத்தை போலவே மாறிவிடும். இது போன்ற வீடுகளில் வந்து வசிப்பவர்கள் எவரும் வறுமைக் கோட்டுக்குள் இருப்பவர்கள் என்று அவசரப்பட்டு முடிவு செய்து விடாதீர்கள். வாழ்ந்த, வாக்கப்பட்ட ஊரில் காற்றோட்டமான வீடுகளிலும், வயலும் வரப்புகளுடன் வாழ்ந்தவர்கள் தான் இது போன்ற அலங்கோலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காலம் செய்த கோலத்தில், கட்டிய கணவன் உருவாக்கிய அக்கிரமத்தில் அவசரமாய் இது போன்ற நகருக்குள் வந்து சேர்ந்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். எஞ்சிய நாட்களையும் வாழ்ந்து தான் ஆகவேண்டுமென்று இந்த நரகத்தில் தினந்தோறும் சொர்க்கத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது போன்ற வீடுகளை உருவாக்கியவர்களை நீங்கள் எந்த வார்த்தைகள் கொண்டும் பாராட்டலாம். குறுகிய இடத்துக்குள் உருவாக்கிய சிக்கன புத்திகாரர்களுக்கு மாதமானால் பல லட்சங்களை வருமானமாக தந்து கொண்டிருக்கிறது. இது போன்ற இடங்களில் வந்து வாழ விரும்புபவர்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரம் முதல் வைத்துள்ள சம்சாரம் வரைக்கும் சரியான முறையில் காபந்து செய்து வாழ பழகியிருக்க வேண்டும். காரணம் இப்போதெல்லாம் பத்திரிக்கைகளுக்கு அதிக தீனி போடுவதே இந்த கள்ளக்காதல் செய்திகள் தான்.

சென்னை கூவம் அருகே வாழ்ந்து கொண்டிருப்பவர்களை விட ஒரு படி மேல். இது நொய்யல் ஊர். நொந்நு வாழ்ந்தாலும் தினந்தோறும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் திரு ஊர். பத்து வீடுகள் என்றாலும் ஒரே ஒரு கழிப்படவசதி தான் இருக்கும் அதன் பக்கத்திலேயே மேல் கூரை இல்லாத குளியல் அறை. அவசரம் என்றாலும் ஆத்திரம் வந்தாலும் அடக்கி அடங்கி வாழ பழகுதலின் முதல் பயிற்சிக் களமே இது போன்ற மக்களுக்கு இங்கிருந்து தான் தொடங்குகிறது.

ஒரு வாரத்திற்குத் தேவைப்படும் மொத்த தண்ணீரும் சேகரித்த டப்பாக்களில் அந்த குடியிருப்பு முழுமையும் இருக்கும். நாம் உள்ளே எவரையாவது தேடிச் சென்று தவறி விழுந்தாலும் ஏதோ ஒரு தண்ணீர் டப்பாவில் தான் முட்டிக் கொள்ள முடியும். வாரத்தில் எந்த நாளில் பொதுக் குழாயில் குடிதண்ணீர் வரும்மென்று இங்குள்ள மாநகர மேயருக்கும் தெரியாத ரகஸ்யமாய் இருக்கிறது. உடைபட்ட குழாய்கள் தாண்டி, ஒழுகிய தண்ணீர் போக வரக்கூடிய தண்ணீர் வாரவாரம் என்பது மாறி சில சமயம் மாதம் கூட ஆகலாம்.

அதனால் என்ன?

நாலு சந்து தாண்டிப் போனால் நடு சாமத்தில் அமைதியாய் பிடித்து வர வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு தெம்பு இருக்கிறது. இவர்களிடம் ஓட்டு வாங்கி அடுத்து முறையும் ஆட்சியைப் பிடித்து விடலாமென்று ஊரெங்கும் கழுதை கூட திங்க முடியாத ப்ள்க்ஸ் போர்டு கட்ட அரசியல்வாதிகளிடம் பணமும் இருக்கிறது.

ஜனநாயகவாதிகள் என்பவர்கள் இங்கு கட்டப் பஞ்சாயத்து காப்பாளர்கள். அடித்தட்டு மக்கள் முதல் உழைத்து மேலே வரும் தொழில் அதிபர்கள் வரைக்கும் கடைசியில் வந்து சிக்குவது இவர்களிடம் தான். இது போன்ற கட்டை பஞ்சாயத்து மக்களிடம் சிக்கிவிட்டால் அத்தனையும் தீர்த்து விடும் சர்வ ரோக நிவாரண மனிதர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு வாழும் அடித்தட்டு மக்களுக்கு எப்போதும் எதுவும் தேவையில்லை. அதிகப்படியான எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையாகவே வாழ்ந்து முடித்து விடுகிறார்கள். இவர்களின் அதிகபட்ச ஆசையென்பதே பல சமயம் சில நூறு ரூபாய்க்குள் முடிந்து விடுகின்றது. ஒவ்வொரு நடுத்தர மக்களுக்கோ முதலில் தங்கள் குடும்பத்தைக் காத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.

அடித்தட்டு வர்க்கமோ, நடுத்தர வர்க்கமோ எவராகயிருந்தாலும் தங்களை நம்பி வாழ்பவர்களுக்காகவே ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறார்கள். அளவான வருமானம் வாழ்க்கை முழுக்க அமையப் பெற்ற அத்தனை பேர்களும் ஆயுள் முழுக்க ஒரு விதமான அடிமைகள் தான்.

எத்தனை காரணங்கள் தத்துவங்கள் சொன்னாலும் இந்த வாழ்க்கையென்பதை மகளுக்ககாக, மகனுக்காக, மனைவிக்காக, தாய் தந்தையர்களுக்காக என்று ஒவ்வொருவரும் வாழ்ந்து தான் தொலைக்க வேண்டியுள்ளது. நல்லவர்கள் போல் வேடம் போட்ட தலைவர்கள் நாட்டை ஆள, வேஷம் போட்டவர்கள் தத்துவம் பேச மௌன சாட்சியாய் நாம் அத்தனையையும் கடந்து செல்ல வேண்டியுள்ளது. தினந்தோறும் பத்திரிக்கைகள் தரும் செய்திகள் வைத்து புரிந்து கொண்டு காத்திருக்கும் அன்றாட கடமைக்குள் மறந்து விட வேண்டியதாய் இருக்கிறது.

இந்திய நாட்டுக்கு ஜனநாயகமே சிறப்பு என்பதை அந்த குடியிருப்பில் ஞாயிறு தோறும் கேட்கும் கலகலப்பில் என்னால் உணரமுடிகின்றது. தினந்தோறும் பணம் துரத்தி எனக்கு உருவாகும் அத்தனை கவலைகளும் அவர்களின் வாழ்க்கையைப் பார்த்து மறைந்து போய்க் கொண்டுருக்கிறது. அவரவர் ஊரில் வாழும் கஷ்ட ஜீவனத்தை மனதில் கொண்டு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து வேலையைத் தேடி வரும் தொழிலாளர்களுக்கு திருப்பூர் வேலையைத் தருவதுடன் வாழ்க்கையில் பல தேவையில்லாத அறிமுகத்தையும் கொடுத்து காசுக்காக எந்த எல்லையையும் தாண்டலாமென்ற நோக்கத்தையும் உருவாக்கி விடுகின்றது.

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

டாலர் நகரம் - 19

இயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது